ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 20

ஆங்கிலத்தில் அவ்வளவு புலமையில்லாத ஓமந்தூரார், அதற்காகக் கூச்சமோ வருத்தமோ படவில்லை. ஒருமுறை மத்திய அரசு ஒரு பிரச்னை குறித்து முதலமைச்சர் ஓ.பி.ஆரிடம் கருத்து கேட்கிறது. அலுவல் தொடர்பான அவ்விஷயத்தில் கருத்துச்சொல்ல விழைந்த அவர், ‘இன் மை ஒப்பீனியன்’ என்று ஒரு கடிதத்தை எழுத முற்படுகிறார். அவர் எழுதிய அக்கடிதத்தில் எழுத்துப் பிழைகள் மிகுந்திருக்கின்றன.

அதைக் கண்ட அவருடைய நேர்முக உதவியாளர் பி.வி. கிருஷ்ணய்யா, ‘உங்கள் கடிதத்தில் பிழைகள் இருக்கின்றன. குறிப்பாக ஒப்பீனியன் என்ற வார்த்தையில் ஸ்பெல்லிங் தப்பாக இருக்கிறது. மாற்றிவிடட்டுமா?’ எனக் கேட்கிறார். ‘பரவாயில்லை. நான் எழுதிய படியே டைப்படித்து அனுப்பிவிடு. அவர்கள் என்னுடைய ஒப்பீனியனைத்தானே கேட்கிறார்கள். ஒப்பீனியன் என்பதற்கு எனக்கு ஸ்பெல்லிங் தெரியுமா என்று கேட்கவில்லையே?’ என்றிருக்கிறார்.

முதலமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர், தன்னுடைய உதவியாளர் சொல்லியும் தவறான தன்னுடைய ஆங்கிலப் பிரயோகத்தை ஏன் மாற்ற வேண்டாமெனச் சொன்னார் என்பதிலுள்ள மர்மத்தைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. தான் தவறாக எழுதியிருக்கிறோம் எனத்தெரிந்திருந்தும் திருத்திக்கொள்ள ஏன் ஒப்புக்கொள்ளவில்லையோ? ஒருவேளை ஆங்கிலப் புலமைமிக்க தன்னுடைய உதவியாளர், இதையே காரணமாகக் காட்டி தன்னுடைய இதர வேலைகளிலும் குறுக்கீடு செய்யக்கூடும் எனக் கருதினாரோ தெரியவில்லை.

தமிழகத்தின் அடிப்படை கட்டுமானங்கள் குறித்து அதிகம் சிந்தித்தவராகக் காமராஜர் அறியப்படுகிறார். அவருக்கு முன்பாகவே ஓமந்தூரார் அவ்வழியே பயணப்பட்டிருக்கிறார். ஏரி, குளங்களை ஏற்படுத்துவதிலும் ஆறுகளை அகலப்படுத்துவதிலும் நீர்த்தேக்கங்களை உண்டாக்குவதிலும் உறுதியோடு இருந்திருக்கிறார்.

என்ன கொடுமையென்றால், காமராஜரும் ஓமந்தூராரும் ஏற்படுத்திய ஆறு குளங்களிலிருந்துதான் இன்றைய ஆட்சியாளர்கள் மணலைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். லோடு லாரிகளில் மணலை ஏற்றிக்கொண்டிருந்தவர்கள், தற்போது அதே லாரிகளில் ஆறுகளையும் ஏற்றுமதி செய்துவிடலாமா என ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். மணலை அள்ளுவதில் என்ன தவறு, மணலை அள்ளுவதால் ஆறு ஆழப்படுகிறதே, அதனால் தண்ணீரை அதிகமாகத் தேக்கமுடியுமே என்று பொதுப்பணித்துறை அமைச்சரே கேட்டதாக ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன் ஒரு விழாவில் பகிர்ந்துகொண்டார்.

நம்முடைய பொதுப்பணித்துறை அமைச்சர்கள் பொது அறிவு எந்த அளவுக்கு இருக்கிறது எனப் பார்த்துக்கொள்ளுங்கள். ஓமந்தூரார் ஒருவர்தான், நீர்நிலைகள் மீது அக்கறையில்லாத அரசால் விவசாயத்தைப் பெருக்கவோ பஞ்சத்தை குறைக்கவோ முடியாதென்று திடமாக நம்பியவர்.

நீர் நிலைகளைப் பராமரிக்கவும் மராமத்து செய்யவும் பொது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தவர். அதே சமயத்தில் புதிய கிணறுகளை வெட்டும்படி விவசாயிகளை ஊக்குவித்தவர். ஒரு கிணறு வெட்ட இரண்டாயிரம் ரூபாய் செலவாகிறது என்றால் அரசு ஐநூறு ரூபாயை மானியமாக வழங்கும் என்றார். மீதமுள்ள ஆயிரத்தி ஐநூறு ரூபாயை பத்து ஆண்டுகளில் விவசாயிகள் கட்டினால் போதுமென்றும் அறிவித்து ஆணை பிறப்பித்தார்.

அதன் விளைவாக ஒரே ஆண்டில் ஒரு லட்சம் கிணறுகள் தமிழகமெங்கும் தோண்டப்பட்டன. ஏறக்குறைய நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் நீர் வளம் பெற்றன. ஆற்றுப் பாசனம், ஏரிப் பாசனம் இவற்றுடன் நிலத்தடி நீரையும் விவசாயத்திற்கு பயன்படுத்தும்படி விவசாயிகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால், இன்றைக்கோ மத்திய, மாநில அரசுகள் மீத்தேன் வாயு எடுக்கவும் ஹைட்ரோகார்பன் எடுக்கவும் தனியார் பெரு முதலாளிகளுக்கு கிணறுவெட்டும் வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

கிணறுவெட்ட பூதம் கிளம்பும் என்னும் பழமொழி வழக்கொழிந்து ஊர்தோறும் பன்னாட்டு நிறுவனங்கள் கிணறுகளை வெட்ட மக்கள் புரட்சிகள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. நில வளம், நீர் வளம் இரண்டையும் சூறையாடி தங்கள் வாழ்வையும் வசதியையும் உயர்த்திக்கொள்ள எண்ணுபவர்களுக்கு ஓமந்தூரார் போன்றவர்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிக்குத்தான் நாமெல்லாம் அடித்துக்கொள்கிறோம் என்பதாவது தெரியுமா?

எந்தத் துறையை எடுத்தாலும் அந்தத் துறையின் ஆரம்பக்கட்ட வேலைகளை அவரே ஆரம்பித்து வைத்திருக்கிறார். ஒரு தலைவர் எனப்படுபவர் கை சுத்தம், வாய் சுத்தம், கெளபீனச் சுத்தம் கொண்டிருக்க வேண்டும் என அவர் கருதியிருக்கிறார். தன் கை மட்டுமல்ல, தன்னை நம்பியிருக்கும் மக்களின் கைகளும் சுத்தமாக இருக்கவேண்டும் எனவும் கருதியிருக்கிறார்.

இல்லையென்றால், இந்தியாவிலேயே முதல்முறையாக குஷ்ட நிவாரண நிலையத்தை அவரால் ஆரம்பித்திருக்க முடியாது. வள்ளலாரைப் பின்பற்றிய ஓமந்தூரார் ரமண மகரிஷியின் பக்தராகவும் இருந்திருக்கிறார். தனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்க இருக்கும் செய்தியறிந்த அவர், தொடக்கத்தில் தயங்கியிருக்கிறார். ரமணரின் ஒப்புதல் கிட்டிய பிறகே பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

பதவியை ஏற்றுக்கொள்வதில் தயங்கிய அவர், அப்பதவியை கெளரவப்படுத்தும்விதமாக செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எந்தத் துறையிலும் தயக்கத்தோடு அடியெடுத்து வைப்பவர்களே பின்னாட்களில் அத்துறையில் தனித்துத் தெரிகிறார்கள். ஓமந்தூராரை நான் வியந்தபடியே இருக்க இன்னுமொரு காரணம், அவரே பாரதியின் பாடல்களை நாட்டுடமையாக்கியவர். பாரதி விடுதலைக் கழகம் என்னும் அமைப்பு 1948ல் கவிஞர் ச.து.சு.யோகியார் தலைமையில் ஒரு மாநாட்டை நடத்தியது.

அந்த மாநாட்டின் வாயிலாகத்தான் எழுத்தாளர் வ.ரா., நாரண துரைக்கண்ணன், அ.சீனிவாசராகவன், திருலோக சீத்தாராம், வல்லிக்கண்ணன் போன்றோர் பாரதி பாடல்களை நாட்டுடமையாக்கும் கோரிக்கையை முன் வைத்தார்கள்.சுதந்திரக் கவியாகச் சுற்றிவந்த பாரதியின் பாடல்கள் அப்போது ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரிடம் சிறைப்பட்டிருந்தன. அன்று புகழ்பெற்றிருந்த நாடக நடிகர் டி.கே.சண்முகம் இவ்விஷயத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்டதை மறுப்பதற்கில்லை.

தன்னுடைய நாடகங்களில் பாரதியின் பாடல்களை பயன்படுத்த முடியாமலிருந்த துக்கத்தை ‘எனது நாடக வாழ்க்கை’ என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதுவரை பாரதியின் பாடல்களை ஒலிபரப்புவதற்கும் அச்சிடுவதற்குமான உரிமையை ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரே வைத்திருந்தார். அவர் அவ்வுரிமையை ரூபாய் இருபத்தைந்தாயிரத்துக்கு பாரதியின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து
பெற்றிருந்தார்.

என்றாலும், அரசு ஆர்வம் காட்டியதை அடுத்து தனக்கு எந்தத் தொகையும் திருப்பித்தரத் தேவையில்லை என்று ஏவி.எம். செட்டியார் காமராஜர் மூலம் அரசுக்குத் தெரிவிக்கிறார். உரிய தஸ்தாவேஜுகள் நாரண துரைக்கண்ணன் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டன. அதன்பின்பு எல்லா இடத்திலும் பற்றிப்பரவும் தீயாக பாரதியின் பாடல்கள் பெருகின. இன்றைக்கு பாரதியின் பாடல்கள் உலகமயமாகக் காரணம் ஓமந்தூராரே என்பதுதான் வரலாறு.

பாரதி தன் பாடல்களால் வாழ்கிறார் என்றால் அப்பாடல்களை நாட்டுடமையாக்கியதால் ஓமந்தூராரும் அப்பாடல்களில் வாழ்கிறார் என்று விளங்கிக்கொள்ளலாம். அதேபோல அரசவைக் கவிஞர் என்னும் பதவியும் அவர் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரால் முன்மொழியப்பட்ட நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.

அன்றைக்கு சென்னை மாகாணத்தோடு இணைந்திருந்த பகுதிகளில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டு வந்தன. எனவே, சட்ட ஆலோசகர்களின் கருத்துக்களுக்கு இணங்க, அந்தந்த மொழிகளில் யார் யாரை அரசவைக் கவிஞராக நியமிப்பது என்னும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் ரெட்டியார் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் என்றே விமர்சிக்கப்பட்டார்.

அவர் தமிழரில்லை, தமிழ் மொழியைக் காக்கக் கூடியவரில்லை என்னும் கருத்துக்கள் தமிழ்த் தேசியவாதிகளால் பரப்பப்பட்டன. அதையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. சமயம் வரும்பொழுது பதில் சொல்லலாம் என்று காத்திருந்தார். அதற்கேற்ப ஒருமுறை திருப்பதிமலைக்குச் சென்ற ஓமந்தூரார் பிரார்த்தனை முடித்து திருமலையிலிருந்து கீழே இறங்குகிறார். இவ்வளவு தூரம் வந்த நாம், நகரிலுள்ள ஓலைச்சுவடி நிலையத்தைப் பார்வையிடலாமே எனச் செல்கிறார்.

போனால், கூடியிருந்தவர்கள் ஓமந்தூராரைச் சொற்பொழிவாற்றச் சொல்கிறார்கள். சரியென்று அவர் தமிழில் பேச ஆரம்பிக்கிறார். உடனே கூடியிருந்தவர்கள் தெலுங்கில் பேசுங்கள் எனக் கத்துகிறார்கள். ‘நான் தமிழன். தமிழில் மட்டுமே என்னால் பேசமுடியும். தெலுங்கில் ஏதோ சில வார்த்தைகள் தெரியும் என்பதற்காக நான் தெலுங்கனாகிவிட மாட்டேன்.

என் அம்மாவுக்கு முந்நூறு அல்லது நானூறு கொச்சையான தெலுங்கு சொற்கள் தெரியும். அதனால், அவர் பெற்ற பிள்ளையான நான், என்னுடைய தாய்மொழி தெலுங்கென்று சொல்லிக்கொள்ள மாட்டேன். என் மொழி தமிழ் என்பதையும், நான் தமிழன் என்பதையும் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்’ என்று அக்கூட்டத்தில் பேசி, தன்மீது பரப்பப்பட்டு வந்த அவதூறுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

பதவியில் இருக்கும் பொழுது மட்டுமில்லை, பதவியிலிருந்து விலகி ஊருக்குக் கிளம்பும் கடைசி நொடிவரை ஓமந்தூரார் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்திருக்கிறார். பதவியை இழந்தவுடனேயே, தான் தங்கியிருந்த கூவம் மாளிகையை அவர் பிற்பகலுக்குள் காலி செய்து கொடுக்கிறார். வங்கியில் சேர்த்துவைத்திருந்த தன் சொந்தப் பணமான ஆயிரத்தி நூறு ரூபாயை எடுத்துவரச் சொல்லி, தமக்கு கார் ஓட்டியவருக்கும் சமைத்தவருக்கும் மற்ற பணியாளர்களுக்கும் திரிபுரா முதல்வராக இருந்த மாணிக் சர்க்காரைப் போல பிரித்துக் கொடுக்கிறார்.

கலங்கிய கண்களோடு ஊழியர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஓமந்தூரார் சிரித்துக்கொண்டே விடைபெறுகிறார். அதுவரை தான் பயன்படுத்தி வந்த பொருட்களை எல்லாம் சொந்த ஊருக்கு எடுத்துப்போக அவருக்குக் கார் தேவைப்படுகிறது. அரசாங்கக் காரை இனியும் பயன்படுத்தக்கூடாது என எண்ணிய அவர், தன்னுடைய நண்பரான முலசூர் மாதவ ரெட்டியார் மூலம் புதிதாக பதவியேற்றிருக்கும் முதல்வர் குமாரசாமிராஜாவைச் சந்தித்து, ஊர்வரை காரை எடுத்துச்செல்ல அனுமதி கேட்கச் சொல்கிறார். நண்பரும் புதிய முதல்வரிடம் உதவி கேட்கிறார்.

புதிய முதல்வரோ பதறிப்போய் ‘இதென்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அவர் அரசாங்கக் காரை ஒருமாத காலம் வரை வைத்துக்கொண்டு திரும்பித் தரலாம். எந்தத் தடையுமில்லை’ என்கிறார். கார் கிளம்புகிறது. அப்படி கிளம்பிய கார் மறுநாளே உரிய வாடகையுடன் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இப்படியான முதல்வரைக் கொண்டிருந்த தமிழ்நாடுதான் நம்முடையது என்று சொன்னால், இப்போதைய நிலைமையை யோசித்து நீங்களும் நானும் சிரித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்