காங்கிரஸில் இருந்து பெரியார் விலக காரணமாக இருந்தவர் இவர்தான்!



தமிழ்நாட்டு நீதி மான்கள் - 24

கோமல் அன்பரசன்

எஸ்.சீனிவாச அய்யங்கார் அரசியல் தலைவர் ஒருவரின் செயல்பாடுகளால் அரசாங்கத்திற்கு தலைவலி ஏற்படுகிறது. அரசுக்கு எதிரான மக்களின் எழுச்சிக்கு அவரது இயக்கம் தீனி போடுவது போல அமைகிறது. அடுத்தது என்ன நடக்கும்? தலைவர் மீது வழக்கு பாய்ந்தது. அரசாங்கத்தின் சார்பில் இந்த வழக்கில் வாதாட வேண்டியவர் அட்வகேட் ஜெனரல். அவர், வழக்கை நுணுக்கமாக படித்துப் பார்த்தார்.

இப்படியொரு வழக்கு போட்டதே தவறு என்று கொஞ்சமும் தயங்காமல் சொன்னார். ‘அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது எந்தவகையிலும் சட்டவிரோதம் அல்ல. இதற்கெல்லாம் வழக்கு போட்டால் என்னாவது?’ அட்வகேட் ஜெனரலின் கருத்தைக் கேட்டதும் அதிர்ந்து போனது அரசு. வேறு வழியின்றி வழக்கு கைவிடப்பட்டது.

சம்பவம் நடந்தது எப்போது தெரியுமா? சர்வ வல்லமையோடு அடக்கி ஆண்ட ஆங்கிலேயரின் ஆட்சியில், அவர்களால் அட்வகேட் ஜெனரலாக்கப்பட்ட இந்தியர் ஒருவர் இப்படி கறாராக கருத்து தெரிவித்தார். இன்றைய சுதந்திர இந்தியாவில், அதிலும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அப்படியொரு சம்பவத்தை நினைத்துக்கூட பார்க்க முடியுமா?

பதவிகளுக்கு உண்மையான மதிப்பீடுகள் இருந்த அந்தக் காலத்தில் துணிச்சலான அரசு தலைமை வழக்கறிஞராக செயல்பட்டவர் எஸ்.சீனிவாச அய்யங்கார். அன்னிபெசன்ட் அம்மையார் மீது ஆங்கிலேய அரசு தொடர்ந்த வழக்கில்தான் அத்தகைய கருத்தினை தெரிவித்திருந்தார். தென்னிந்தியா முழுக்க பரந்து விரிந்திருந்த பழைய மெட்ராஸ் மாகாணத்தின் அட்வகேட் ஜெனரலாக சீனிவாச அய்யங்கார் நியமிக்கப்பட்டபோது, அவருக்கு வயது 41. அதற்கு முன்பும் பின்பும் இத்தனை வயதில் அப்பொறுப்புக்கு யாரும் வந்ததில்லை.

அப்படியானால் வக்கீல் தொழிலில் எவ்வளவு திறமைமிக்கவராக அவர் இருந்திருக்க வேண்டும்?! முதல் தலைமுறையாக வழக்கறிஞர் பணிக்கு வந்த அய்யங்கார், ராமநாதபுரம் பெருநிலக்கிழாரான சேஷாத்ரியின் மகனாக 1874, செப்டம்பர் 11ல் பிறந்தார். பள்ளிக்கல்வியை மதுரையில் முடித்துவிட்டு, சென்னை மாநிலக்கல்லூரியில் பட்டம் பெற்றார். பிறகு சட்டம் படித்தார்.

அப்போது சென்னையின் பிரபல வழக்கறிஞரான வி.பாஷ்யம் அய்யங்காரின் மூன்றாவது மகள் ரங்கநாயகிக்கும் சீனிவாசனுக்கும் திருமணம் நடந்தது. வக்கீல் படிப்பு முடித்தவுடன் மாமனாரிடமே தொழில் பழகுநராகப் பணியாற்றினார். 1898ல் வழக்கறிஞராகப் பதிவு பெற்ற அவர், அடுத்த சில ஆண்டுகளிலேயே தனியாக வழக்குகளை நடத்துமளவுக்கு ஆற்றல் பெற்றார்.

சீனிவாச அய்யங்காரின் ஆங்கிலப் பேச்சு அதிவேகமாக இருக்கும். நீதிமன்றத்தில் வாதாடத் தொடங்கிவிட்டால், அருவி கொட்டுவது போல சர மாரியாக வார்த்தைகள் வந்துவிழும். நீதிபதிகள் பல நேரங்களில் திணறிப்போவார்கள். இதனால் அய்யங்கார் வாதிட வருகிறார் என்றாலே, நீதிமன்றங்களில் ஒன்றுக்கு இரண்டு பேராக சுருக்கெழுத்துக்காரர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஒருவர் குறிப்பெடுக்க தவறியதை இன்னொருவராவது குறிப்பார்கள் அல்லவா? அதேபோல தன்னுடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத ஜூனியர்களை ‘ஸ்டுப்பிட்’ என கோபங்காட்டுவார். ஆனால், அய்யங்காரிடம் புடம் போட்டுத் தயாராகிவிட்டால், நிச்சயம் உயர்ந்த நிலைக்கு வரலாம் என்ற எண்ணம் அன்றைக்கு இருந்தது.

கே.ராஜா அய்யர், கே.பாஷ்யம் போன்றவர்கள் இவரிடம் தொழில் கற்று பிற்காலத்தில் வெற்றி முகட்டைத் தொட்டவர்கள்தான். ஜூனியர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமூகத்தின் மேன்மைக்காகவும் அய்யங்கார் சிந்தித்தார். வெள்ளைக்கார பாரீஸ்டர்களின் ஆதிக்கம் இந்திய நீதிமன்றங்களில் உச்சத்தில் இருந்தபோது, இந்தியர்கள் வழக்கறிஞர்களாக மேலே எழுந்து வருவதற்கு ஆயிரமாயிரம் தடைக்கற்கள் இருந்தன.

கறுப்பு அங்கியை அணிவதே அவ்வளவு சவாலானது. அந்த நேரத்தில் நம்மவர்களும் வக்கீல் தொழிலில் கோலோச்ச வேண்டும் என்ற எண்ணத்தோடு, முதன் முறையாக சென்னை மாகாண வழக்கறிஞர்கள் மாநாட்டைக் கூட்டினார். வரலாற்றில் பதிந்து போன அம்மாநாடு, சென்னை பச்சையப்பன் கல்லூரிக்குப் பக்கத்திலுள்ள குஷால் தாஸ் கார்டனில் 1920ம் ஆண்டு நடைபெற்றது.

வழக்கு கட்டணம் வாங்குவதில் அய்யங்கார் தனிக்கொள்கை வைத்திருந்தார். ஏழை, எளியவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் வழக்கிற்காக வந்தால் அவர்களிடம் கரிசனம் காட்டுவார். பணத்தைப் பற்றி கவலைப்படாமல் வழக்கை எடுத்துக்கொள்வார். ஆனால், செல்வந்தர்கள், ஜமீன்தார்கள் போன்றவர்கள் வழக்காட வந்தால், கட்டணத்தைத் தெளிவாகப் பேசி ஒரு ரூபாய் கூட குறைக்காமல் வாங்கிவிடுவார்.

41 என்கிற குறைந்த வயதில் அட்வகேட் ஜெனரல் ஆவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே பார் கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அது போக, சென்னை மாகாண செனட் உறுப்பினர், ஆளுநரின் கவுன்சிலில் உறுப்பினர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தார். இதையெல்லாம் தாண்டி அரசியல் ஆர்வமும் நாட்டுப்பற்றும் அவருக்குள் அதிகமாகவே இருந்தது.

சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்கு வி.கிருஷ்ணசுவாமி அய்யருடன் சென்று வந்தார். ஆனாலும் முழுநேர அரசியலுக்கு வராமல் இருந்த அய்யங்காரை ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ உலுக்கிவிட்டது. அரசு தலைமை வழக்கறிஞர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளையும் உதறிவிட்டு, முழு நேர அரசியலுக்கு வந்தார். ஆங்கிலேய அரசு கொடுத்த பட்டங்களைத் திருப்பிக் கொடுத்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.

பிறந்தது முதல் செழிப்பில் வளர்ந்த அய்யங்காரின் செயல்பாடுகளில் அதன்பிறகு பெரிய மாற்றங்கள் தெரிந்தன. வாழ்க்கை முறையை எளிமையாக்கிக்கொண்டார். வெறுந்தரையில் படுத்து, போராட்டக் களங்களுக்கு உடலையும் மனதையும் பழக்கினார். தொடர்ச்சியான, ஈடுபாடு கொண்ட உழைப்பினால் கட்சியில் கிடுகிடுவென வளர்ந்தார். ஆறு ஆண்டுகளில் அசாம் மாநிலம், கவுகாத்தி நகரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டிற்குத் தலைமை தாங்குமளவுக்கு உயர்ந்தார்.

அம்மாநாட்டில் இந்து- முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி அவர் கொண்டு வந்த தீர்மானம் சிறப்பு மிக்கது. அதன் மூலம் இரு மதங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் தற்காலிக உடன்பாடு காண வழிவகுத்துத் தந்தார். சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராகி, தென்னிந்தியாவில் அக்கட்சியை ஆழமாக வேரூன்ற வைத்தார். ‘தென்னாட்டு சிங்கம்’ என கட்சியினரால் கொண்டாடப்பட்டார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தீரர் சத்திய மூர்த்தி போன்றவர்களை காங்கிரசில் தலைவர்களாக வளர்த்தெடுத்தார்.

இதில் சத்தியமூர்த்தி இவரிடம் ஜூனியராகப் பணியாற்றியவர். சென்னை, மயிலாப்பூர், எண்.30, லஸ் சர்ச் சாலையில் இருந்த இவரது வீடு எப்போதும் காங்கிரஸ்காரர்களால் நிரம்பி வழியும். ‘அம்ஜத் பாக்’ என்ற பெயரிலான அந்த பெரிய பங்களாவுக்குள், கட்சிக்காரர்கள் தங்குவதற்காகவே தனிப் பகுதியைக் கட்டி வைத்திருந்தார் என்றால் பாருங்களேன்!

வளர்ச்சியும் செல்வாக்கும் அதிவேகத்தில் இருக்கும் போது, அதற்கேற்ப எதிர்ப்புகளும் அதிகமாவது இயல்புதானே! அய்யங்காருக்கும் அதுவே நேர்ந்தது. காந்தியடிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவருக்கு எதிரணியில் கொஞ்ச நாள் இருந்தார். பின்னர் சென்னை மாகாண சுயராஜ்ஜிய கட்சியை உருவாக்கினார்.

அந்தக் கட்சி 1926 தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருந்தும், அய்யங்காரால் ஆட்சியமைக்க முடியவில்லை. எதிர்க்கட்சித்தலைவராக செயல்பட்டார். காங்கிரசிலிருந்து விலகினாலும் நேரு, நேதாஜி போன்ற தலைவர்களுடன் அய்யங்கார் நெருங்கிய நட்பு வைத்திருந்தார். 1928ல் இந்திய விடுதலைக்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட ‘இந்தியன் இண்டிபெண்டென்ஸ் லீக்’ என்ற அமைப்புக்கு அய்யங்கார் தலைமை ஏற்றார்.

நேருவும் நேதாஜியும் செயலாளர்களாக இருந்தனர். 1930 வாக்கில் இந்தியாவுக்கு முழுச் சுதந்திரம் வேண்டுமா அல்லது சுயாட்சி அதிகாரம் பெற்று ஆங்கிலேய ஆட்சியின் கீழ் தொடருவதா என காங்கிரசில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் வெறுப்புற்ற சீனிவாச அய்யங்கார், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். வழக்கறிஞர் தொழிலில் மீண்டும் முழு ஆர்வங்காட்டினார்.

இந்து மத சாத்திரங்களில் தேர்ச்சி பெற்றிருந்த அய்யங்கார், ஜான் டி மெயின் என்ற ஆங்கிலேய பாரீஸ்டர் எழுதிய இந்து சட்டப்புத்தகத்தில் காலத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்து வெளியிட்டார். இப்புத்தகம் இன்றளவும் முக்கியமானதாகத் திகழ்கிறது. 1927ல் ‘சுவராஜ் கான்ஸ்டிடியுஷன்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகமே, சுதந்திர இந்தியாவுக்கான கூட்டாட்சி சட்ட, திட்டங்களை வகுப்பதற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தது.

‘தி ஹிந்து’, ‘சுதேசமித்திரன்’, ‘இண்டியன் பேட்ரியாட்’ போன்ற பத்திரிகைகளில் புத்தம் புதிய சிந்தனைகள் நிரம்பிய அற்புதமான கட்டுரைகளை எழுதினார். இந்திய சமூகத்திற்குத் தேவையான சீர்திருத்தங்களைப் பற்றி அவரது எழுத்துகள் பேசின. குடும்பச் சொத்து உள்ளிட்ட எல்லாவற்றிலும் பெண்களுக்கும் சம பங்கு கொடுக்க வேண்டும் என்று தீர்க்கதரிசனத்தோடு குரல் கொடுத்தார்.

ஓய்வு நேரங்களில் தமக்கு மிகவும் பிடித்த துப்பறியும் நாவல்களை விரும்பிப் படித்தார். உலகளவில் சிறந்த எழுத்தாளர்களின் நூல்களைத் தேடித்தேடி வாசித்தார். தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த நிலையில், 1938ல் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிட்டார். அவரை வெற்றி பெற வைப்பதற்காக மீண்டும் காங்கிரசுக்குச் சென்றார் அய்யங்கார். நேதாஜி வென்றாலும் அவரால் தலைவர் பதவியில் நீடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. அதில் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு இந்தியா உதவுவதா, அவர்களது எதிரிகளுக்கு உதவுவதா என்ற விவாதம் எழுந்தது. அக்காலக்கட்டத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அய்யங்கார், 1941ம் ஆண்டு கோடையில் ஓய்வு எடுப்பதற்காக தன்னுடைய கொடைக்கானல் பங்களாவுக்குச் சென்றார். அங்கு உடல்நலம் மேலும் மோசமாகி, சென்னைக்குத் திரும்பி, மே 29ம் தேதி உயிரிழந்தார்.

‘சீனிவாச அய்யங்கார், தேர்ந்த வழக்கறிஞர் மட்டுமல்ல; அரசியல் யோசனைகளின் தொழிற்சாலை’ என்று வெள்ளைக்கார உளவுத்துறை அதிகாரி ஒரு முறை அரசாங்கத்திற்கு எழுதி அனுப்பிய குறிப்பு மிகப்பொருத்தமானது என்றே வரலாறு சொல்கிறது!

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்

துறவியான மகன்

சீனிவாச அய்யங்காருக்கு பார்த்தசாரதி என்ற மகனும் அம்புஜம்மாள் என்ற மகளும் இருந்தனர். பார்த்தசாரதி தந்தையைப் போலவே வக்கீலுக்குப் படித்து சில காலம் வழக்குகளை நடத்தினார். பிறகு அதனை விட்டு விட்டு, ‘பிருத்வி இன்சூரன்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார். அதுவும் வெற்றிகரமானதாக இருந்தது.

ஆனால், தன்னுடைய இளைய மகன் மின்சாரம் தாக்கி இறந்து போனது உள்ளிட்ட சில சம்பவங்களால், மனம் வெறுத்த பார்த்தசாரதி திடீரென துறவியானார். சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் ஆசிரமம் அமைத்த அவர் தன் பெயரையும் சுவாமி ரங்கநாதானந்தா என்று மாற்றி வைத்துக்கொண்டார்.

மகள் அம்புஜம்மாள் காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டே சமூக சேவைகளையும் செய்தார். பெண்களின் மேம்பாட்டுக்காக ஆழ்வார்பேட்டையில் சீனிவாச காந்தி நிலையம் என்ற நிறுவனத்தையும் அவர் நடத்தினார்.

என்னை ஏன் கூப்பிட்டீர்கள்?

மனதில் பட்டதைப் பளிச்சென பேசும் பழக்கமுடையவர் சீனிவாச அய்யங்கார். ஒரு முறை இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தார். அங்கு பேசிய அவர், ‘வக்கீல்கள் யாரும் இசைக்கலைஞர்களைத் தங்களுடைய நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க கூப்பிடுவதில்லை. ஆனால், இசை ஞானமே இல்லாத என்னைப் போன்றவர்களை இசை நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்க கூப்பிடுவது இப்போது நாகரீகமாகி இருக்கிறது. புனிதமான இசைக்குள் அரசியலையோ, மதத்தையோ எப்போதும் நுழைக்காதீர்கள். உங்களில் திறமைசாலிகளை அங்கீகரியுங்கள்’ என்று அதிரடியாகப் பேசினார்.

பெரியாரும் அய்யங்காரும்

1925ல் சென்னை மாகாண காங்கிரஸ் மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு கேட்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென பெரியார் ஈ.வே.ரா கோரிக்கை வைத்தார். ஆனால், அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சீனிவாச அய்யங்கார், பெரியாரின் கோரிக்கையை ஏற்க மறுத்தார்.

இதனால் தேவையற்ற சாதி சச்சரவுகள் உருவாகும் என்று அவர் கூறினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு மாநாட்டில் இருந்து பெரியார் வெளியேறினார். பிறகுதான் அவர் நீதிக்கட்சியில் இணைந்து, பிற்காலத்தில் அதற்கு திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டி நடத்தினார்.