மரங்களை வெட்டி ஏரிகளை ஆக்கிரமிச்சா வெப்பம் அதிகரிக்கத்தான் செய்யும்!
தகிக்கும் கோடை
-ஷாலினி நியூட்டன்
எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் வெயில் வாட்டி வதைக்க என்ன காரணம்? அடுத்தடுத்த வருடங்களில் இன்னும் அதிகரிக்குமா? வானிலை ஆய்வாளர் ரமணனிடம் கேட்டோம். ‘‘2003ம் ஆண்டு தமிழகத்துலயே அதிகமா 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் சென்னைல பதிவாகியிருக்கு. அதற்குப் பிறகு இப்ப வரைக்கும் 45 டிகிரி வெப்பநிலை பதிவாகலை. மக்கள் தொகை பெருக்கம்.
 நகரமயமாதல், மரங்கள் அழித்து கட்டடங்கள் அதிகரித்துக் கொண்டே போவது... மாதிரி பல காரணங்கள் இருக்கிறதால இனி வெப்பம் குறைய வாய்ப்பில்லை. இன்னும் அதிகரிக்கும்னு வேணா சொல்லலாம்...’’ என்ற ரமணன் தமிழகத்தின் வெப்பம் எதன் அடிப்படையில் இருக்கும், எப்படி தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“இன்னமும் கோடைகாலமே வரலை. நிலக்காற்று வீச ஆரம்பிக்கிற நிலையைத்தான் கோடை காலமா கணக்குல எடுத்துப்போம். கடல் காற்று மிதமான வெப்பநிலையா இருக்கும். நிலக்காற்று ஏப்ரலுக்குப் பிறகுதான் ஆரம்பிக்கும். கடல் சார்ந்த பகுதிகள்ல வெப்பநிலை மிதமாகவும், மற்ற இடங்கள்ல அதிகமாகவும் இருக்கும்.
 சென்னையைப் பொறுத்தவரை நிலமையே வேற. இங்க 10 குடித்தனம் இருக்கிற இடத்துல 100 குடித்தனம் இருக்கு. ஏரி, நீர்நிலைகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கு. இதெல்லாம்தான் இங்க வெப்பத்தை தீர்மானிக்குது. காலை 10.30 மணிக்கு முன்னாடி கடல்காற்று வீச ஆரம்பிச்சா அன்னிக்கான வெப்பநிலை 36 டிகிரியா இருக்கும். கடல் காற்று வீச தாமதமானா வெப்பநிலை உயரும்.
கடல்காற்றுக்கு முன்னாடியும் பின்னாடியும் தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் தவிர்த்து வேறு எந்த அமைப்பு அல்லது மீடியா வானிலை கருத்துகளை அறிவிச்சாலும் அதை நம்பாதீங்க. மார்ச் மாசம் கனமழை இருக்கிறதாகவும் நாசா அப்படி சொன்னதாகவும் ஒரு வதந்தி இருந்தது. நாசாவுக்கும், வானிலை மையத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்ல.
அந்தந்த மாநில வானிலை மையங்கள் கொடுப்பதுதான் சரியான அறிவிப்பா இருக்கும்...’’ என்று சொல்லும் ரமணன், முடிந்தவரை வீடுகளுக்கு வெள்ளைப்பூச்சு அடிக்கச் சொல்கிறார். மாடிகளிலும், வீட்டைச் சுற்றிலும் செடிகள் வளர்ப்பதை பரிந்துரைக்கிறார். வீட்டின் மேற்கூரைகள் உயரமாக இருக்க வேண்டும் என்கிறார்.
‘‘தேவையில்லாம சில சமூக வலைத்தளங்கள்ல வதந்திகள் பரவுது. எதையும் நம்பாதீங்க. மனிதன் நாகரீகம் அடைய அடைய, காடுகளை அழிக்க அழிக்க வெப்பம் அதிகரிக்கத்தான் செய்யும். இப்படியே போச்சுன்னா நமக்கு அடுத்து வர்ற தலைமுறைகள் இதைவிட அதிக வெப்பநிலையை சந்திக்கும்!’’ என எச்சரிக்கிறார்.
|