சம்மர் நோய்கள்



-வெங்கட் குருசாமி

தகிக்கும் கோடை

இப்போதைய சூழலில் அனைத்து காலங்களிலும் சூரியன் சுட்டெரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் குளிர் காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கியுள்ளது. இப்படி மாறி மாறி வரும் பருவ காலங்கள், அதற்கே உரித்தான நோய்களையும் சேர்த்தே அழைத்து வருவது இயற்கை.

அவ்வகையில் சுமார் ஆறு மாதங்கள் நீளும் இக்கோடை காலத்தின் நோய்களையும், அதை கையாளும் முறைகளையும் பட்டியலிடுகிறார் ஆயுர்வேத மருத்துவரான பாலமுருகன். ‘‘கோடையில் அதிக வெப்பத்தின் காரணமாக வேர்க்குரு, வேனல் கட்டி, அரிப்பு, படர் தாமரை, வழக்கத்திற்கு மாறான அதிக சோம்பல், உடல் பலவீனம், அம்மை வகைகள் ஆகிய நோய்களும், வியர்வை அதிகம் வெளியேறுவதால் பெரியவர்களுக்கு கிட்னிக்கு செல்லும் நீர் குறைந்து நீர்க் கடுப்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீரகக் கல் போன்றவையும், குழந்தைகளுக்கு சளி, இருமல் உள்ளிட்டவையும் ஏற்படும்.

இதில் மக்களை பெரிதும் அச்சுறுத்தும் நோய்களில் முதன்மையானது அம்மை. வெப்பத்தை தாங்கும் வைரஸ்கள், வெப்பத்தை தாங்கவியலாத வைரஸ்கள் என இரண்டு வகையுண்டு. இதில் வெப்பத்தை தாங்கக்கூடிய வைரஸ்களில் முக்கியமான ஒன்று வேரிசில்லா சோஸ்டர். இந்த வைரஸ்தான் சின்னம்மையை ஏற்படுத்தக்கூடியது.

சாதாரண பருவ காலங்களிலும் பரவக்கூடிய இவ்வைரஸ் கோடை காலத்தில் அதிக வீரியம் கொண்டதாக மாறிவிடும். இதனால்தான் கோடை காலம் வரும் முன்பே அம்மை நோயின் தாக்கம் பரவத் தொடங்கிவிடுகிறது. தட்டம்மை, பொண்ணுக்கு வீங்கி போன்ற அம்மை நோய்களுக்கு கோடைகாலம் ஒரு சிறந்த ப்ளாட்பார்மாக உள்ளது...’’ என்றவரிடம் வருமுன் காப்பது எப்படி என்று கேட்டோம்.

‘‘பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப உணவு முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே ஆயுர்வேதத்தின் அடிப்படை தத்துவம். கால மாற்றம் என்பது இயற்கையான நிகழ்வு. அதற்கேற்றாற்போல் இயற்கையும், கால நிலைக்கு ஏற்ற உணவுகளையே அளிக்கிறது. அதாவது வேப்பிலை, வெள்ளரி, நுங்கு, பதனீர் ஆகியன பங்குனி, சித்திரையில்தான் அதிகம் கிடைக்கிறது.

ஆகவே, கோடையில் இயற்கையாகவே கிடைக்கும் உணவுகளை உட்கொண்டாலே கோடை நோய்களிலிருந்து தப்பிக்கலாம். திட உணவுகளைத் தவிர்த்து கூழ் போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். உடலுக்கு வெப்பத்தை தரும் உணவுகளையும், புளிப்பு, உப்பு, உறைப்பு போன்றவற்றையும்  தவிர்த்தல் அவசியம். மது மற்றும் உடலுறவை முடிந்த வரை குறைக்க வேண்டும்.

கோடையில் பகல் அதிகமாகவும் இரவு குறைவாகவும் இருப்பதால் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது பகலில் தூங்கவேண்டும். காற்றோட்டமான இடத்தில் இருத்தல் வேண்டும். தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடிக்க வேண்டும். முடிந்த அளவு மண்பாணையில் சமையல் செய்து சாப்பிட வேண்டும். உடல் குளிர்ச்சிக்காக அளவிற்கு மீறி குளிர்பானங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிக அளவு வியர்வையை வெளியேற்றும் வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும்...’’ என்கிறார் மருத்துவர் பாலமுருகன்.

படங்கள்: ஆண்டன் தாஸ்