களிமண் பூக்கள்!



-ஷாலினி நியூட்டன்

குட்டிக்குட்டி மலர்கள், செடிகள், கொடிகள், குரோட்டன்ஸ் என வண்ணமயமாக காட்சி யளிக்கிறது சுபஸ்ரீயின் வீடு. அடடே எனத் தொட்டுப்பார்த்தால் அத்தனையும் ‘க்ளே’ என ஆச்சர்யம் கொடுத்தார். “சொந்த ஊர் பெங்களூரு. கல்யாணத்துக்குப் பிறகு சென்னைல செட்டிலாகிட்டேன். படிச்சது பிஈ, எம்பிஏ. பன்னாட்டு நிறுவனத்துல வேலை பார்த்தேன்.

ஆனா, கிராஃப்ட் மேல எப்பவும் எனக்கு ஈடுபாடு உண்டு. 10 வயசுல இருந்தே எம்சீல், சில க்ளேஸ் வைச்சு நிறைய சிலைகள், பூக்கள் செய்வேன். இந்த சூழல்லதான் ஆன்லைன்ல கோல்ட் போர்ஸ்லெயின் (Cold Porcelain) க்ளே பத்தி தெரிய வந்துச்சு. அந்த க்ளேயை நானே வீட்ல ரெடி பண்ணிடுவேன்.

வேலைக்கு இடைல லீவு எடுத்து பூக்கள், செடிகள்னு நிறைய செய்தேன்...’’ என்று சிரிக்கும் சுபஸ்ரீ இன்று பெங்களூரு, சென்னை என பறந்து கொண்டிருக்கிறார். வாரம்தோறும் ஒருநாள் வகுப்பு எடுக்கிறார். ‘‘இந்த க்ளேயை வைச்சு பொம்மைகளும் சிலைகளும் கூட செய்யலாம். ஆனா, என் டார்கெட் பூக்களும், செடிகளும்தான்.

ஒண்ணு தெரியுமா... இன்னிக்கி நிறைய கார்ப்பரேட், ஐடி கம்பெனிகள் இந்த குட்டிக் குட்டிக்ளே செடிகள் மேல ஆர்வம் காட்டறாங்க. டேபிள் மேல, வரவேற்பறைல... இப்படி அலங்கரிக்க என்கிட்ட ஆர்டர் கொடுக்கறாங்க. ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை செடிகள் இருக்கு. சுவர்ல தொங்கற டைப், தொட்டிகள்ல வளர்றா மாதிரி எல்லாம் செய்தவ இப்ப ஒரு கம்பெனிக்காக 3டி க்ளே செடி செய்து தர்ற அளவுக்கு வந்திருக்கேன்!

ஒரு ப்ரேம், அதுல கொஞ்சம் வெளிய தனியா வந்து நிற்கற செடி மாதிரி ஓர் அமைப்பு... இதை சுவர்ல மாட்டினா பார்க்க டப்பா உள்ள செடி இருக்கிறா மாதிரி இருக்கும்...’’ என்று சொல்லும் சுபஸ்ரீ தன் வேலையை விடவில்லை. ‘‘எதுக்கு விடணும்? வேலை நேரம் போகத்தான் இதை செய்யறேன். தவிர, க்ராஃப்ட்னு வந்துட்டா தூக்கத்தை மறந்துடுவேன்.

நைட் எல்லாம் கண்விழிச்சு என்னால செய்ய முடியும். குடும்பத்துக்கும் வேலைக்கும் எப்படி நேரம் ஒதுக்கறேனோ அப்படி க்ளேக்கும் நேரம் ஒதுக்கறேன்...’’ என்ற சுபஸ்ரீ, இந்த க்ளே மென்மையானது என்கிறார். ‘‘மத்த க்ளேஸ் கடினமா இருக்கும். அதுல நாம யோசிக்கிற டிசைன்ஸ் வரும்.

ஆனா, கொஞ்சம் கனமா இருக்கும். இந்த க்ளே அப்படியில்ல. நாம நினைக்கிற அளவுகள்ல எவ்வளவு மெல்லிசா வேணும்னாலும் செய்துக்கலாம். ஃபேப்ரிக் இல்லைனா அக்ரிலிக்... இந்த ரெண்டு கலரைத் தான் நான் பயன்படுத்தறேன்...’’ என்று சொல்லும் சுபயின் அடுத்த திட்டம் க்ளே பொக்கேக்களாம்! 

படங்கள்: செந்தில்