COFFEE TABLE



-குங்குமம் டீம்

உயிர்க்கொல்லியாக மாறும் ஆன்டிபயாட்டிக்

உலக அளவில் ஆன்டிபயாட்டிக் மாத்திரிகைகள் சரியாக பயன் தராததால் வருடத்துக்கு 7 லட்சம் மக்கள் இறப்பதாக ஒரு அதிர்ச்சி புள்ளி விவரத்தை வெளியிட்டிருக்கிறது ஆய்வு ஒன்று. இது இப்படியே சென்றால் இன்னும் 30 வருடத்துக்குள் சுமார் 1 கோடிப்பேர் இறக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை செய்துள்ளது. ‘‘இந்த நிலைக்கு முக்கிய காரணம் நாம் உணவுக்காக வளர்க்கப்படும் கோழி போன்ற உயிரினங்களுக்கு ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளைக் கொடுத்து வளர்ப்பதுதான்’’ என்று குற்றம் சாட்டுகிறது அந்த ஆய்வு.

ஆம்; ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளால் வளரும் இந்த உயிரினங்களை உண்ணும்போது நம் உடலிலும் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளின் எச்சங்கள் தங்கிவிடும். இதனால் ஏதாவது நோய் தாக்கும்போது ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் வேலைசெய்யாமல் போகும். இது மரணத்தில்தான் முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

ரீடிங் கார்னர்

வாங்க பேசலாம் செல்லம்ஸ்

இளங்கோவன் கீதா [படி வெளியீடு, 6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர் மேற்கு, சென்னை - 600 078. விலை ரூ.100/- தொடர்புக்கு : 87545 07070] இளங்கோவன் முகநூலில் எழுதிய குறிப்புகள் வானத்திற்குக் கீழான அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசுகின்றன. வகைப்படுத்த முடியாதபடிக்கு ஆவேசமும், அன்பும், கருணையும், விவாதமும் கொண்ட பகுதிகள்.

மெல்லிய புன்னகையோடு, ரொம்பவும் உள்புகுந்து வருத்தாமல் செல்கிற சுலபமான பத்திகள். எல்லோருடைய வாழ்க்ைகக்கும் சம்பந்தம் உடைய பகுதிகளைப் பற்றி பேசுவதால் நமக்கு நெருக்கமாகிவிடுகின்றன. எப்போதுமே உண்மைக்கு அருகில் இருப்பவை சுவாரஸ்யம் நிரம்பியவை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாகப் பார்த்து, முன்பின்னாய் யோசித்துப் பார்த்து எழுதப்பட்டவை.

காதலர் தின முடிவில் ஆரம்பித்து, குடும்பம் என்னும் சுரண்டல் நிறுவனம் என்று பரவி சகலத்தையும் பேசுவதால், ஒரே புத்தகத்தில் பல கற்றுக் கொள்ளுதல் நடக்கிறது. எதையும் அறிவுரை போன்ற தோரணையில் சொல்லிவிடாமல் சம பகிர்தலோடு, தோளில் கை போட்டு சிநேகமாய் சொல்வதுபோலவே இருப்பதுதான் இதில் அழகு. ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டு அவரது அடுத்த பதிவுக்கு எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்.

ஹேப்பி த்ரிஷா

ஒரு விதத்தில் இந்த ஆண்டு த்ரிஷாவுக்கு லக்கி இயர். சத்தமே இல்லாமல் கைவசம் ஏழு படங்களில் பொண்ணு பிஸி. ‘மோகினி’, அரவிந்த்சாமியுடன் ‘சதுரங்க வேட்டை 2’, ‘கர்ஜனை’, விஜய் சேதுபதியுடன் ‘96’, விக்ரமுடன் ‘சாமி 2’ தவிர மலையாளத்தில் இரண்டு படங்கள் என்கிறது கோலிவுட். இதில் ‘கர்ஜனை’யில் ஆக்‌ஷன் அவதாரம், ப்ளஸ் சம்மர் ரிலீஸ் என்பதால் த்ரிஷா செம ஹேப்பி.

வாவ் பெயின்ட்டிங்

மெக்ஸிகோவில் வாழும் ஹைபர் ரியலிஸ்டிக் பெயின்டிங் எக்ஸ்பர்ட்டான உமர் உர்டிஸ் (omar ortiz) மனித உடல்களின் மீது தத்ரூபமாக ஓவியங்கள் தீட்டுவதில் வல்லவர். சமீபத்தில் முப்பரிமாண எஃபெக்ட்டில் ஒரு பெண்ணின் உச்சி முதல் உள்ளங்கால் வரை வரைந்த 3டி ஓவியத்தை ஃபேஸ்புக்கின் மீடியா சர்வைவர் பக்கத்தில் சின்னதொரு வீடியோவாக தட்டிவிட்டுள்ளனர்.

(nude modelling ஓவியங்களிலும் கலக்கி வரும் உமரின் பெயின்ட்டிங்ஸ் என்றாலே லைக்ஸ் அள்ளும் என்பது தனிக்கதை.) அந்த 3டி ஓவியத்தை 41 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 2 லட்சம் லைக்குகள், ஐந்தரை லட்சம் ஷேர்கள் என செம வைரல் ஆகியுள்ளது. ‘Simply amazing. Would love to see him make all types of women’ என ஃபாரீன் மாடலிங் மயில்களின் கமென்ட்களும் குவிகின்றன.

சைலன்ட் கார்னர்

பயணம் சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி...

சமர் யாஸ்பெக் / தமிழில் : ஸ்ரீதர் ரங்கராஜ் [எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642 002. விலை ரூ.320/- தொடர்புக்கு : 99425 11302] சிரியாவில் பிறந்து வளர்ந்த  சமர் யாஸ்பெக்கின் மிக முக்கியமான பதிவு. போர்ச் சூழலில், கொஞ்சமும் நிச்சயமற்ற சூழலில் இருந்து  தப்பி வந்து பாரீஸில் தஞ்சம் புகுந்தவர். சிரிய மக்கள் படுகிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

ஈரமுடைய எவர் மனசுக்கும்  பொறுத்துக்கொள்ள முடியாதபடிக்கு அங்கே எல்லாமுமே நடக்கிறது. சொந்த நாட்டிலேயே அகதிகளாய் வாழும் பெரும் சோகம் மக்களுக்கு நேர்கிறது. சிரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர், பயம் இன்றி மீண்டும் சிரியாவிற்குப் போய் அங்கே நடப்பவற்றை பதிவிடுவது சாதாரண விஷயமில்லை. முன்பு போல் சிரியா சொர்க்க பூமி இ்லை. ரணகளமும், மரண வெறி கொண்ட தீவிரவாதக் குழுக்களுக்கும், காட்டுமிராண்டித் தனமான அரசுக்கும் இடையில் சிக்கிச் சீரழியும் நாடு.

மிகவும் உயிர்ப்பான புத்தகம். மரண பீதியோடு ஒரு பயணமும், அதுவும் நிச்சயமற்ற பயணமும் மேற்கொள்வது யாவருக்கும் சாத்தியமானதல்ல. இறுக்கமும், உண்மையும், அதிபயங்கரமும், போர் அரக்கனின் கொடுமையையும் காண நேர்வதும், அதை அக்கறையோடு தயவு தாட்சண்யமின்றி பதிவிடுவதும் பிரமிக்க வைக்கிறது.

எதையும் செய்யாமல் வேடிக்கை பார்க்கும் உலகிற்கு ஆகச் சிறந்த சவால் இந்தப் பயணம். மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீதர் ரங்கராஜ் வணக்கத்திற்குரியவர். ஆன்மாவை உள்ளிழுத்து மொழி மாற்றம் செய்திருக்கிறார். தமிழில் இது மாதிரியான நிஜப்பயணம் காணக் கிடைக்கச் செய்த எதிர் வெளியீட்டுக்கு வந்தனம்.