காற்று வெளியிடை..



-குங்குமம் விமர்சனக்குழு

சிறையில் இருந்துகொண்டு கார்த்தி ஆயிரம் காரணங்களோடு செலுத்தும் நினைவுப் பயணம்தான் படத்தின் கதை. போர் விமான பைலட்டாக கார்த்தி. சுயநலம், கோபம், தன்னை மட்டுமே  நேசிக்கும் பொறுப்பற்ற இளைஞன். ராணுவ மருத்துவமனையின் டியூட்டி மருத்துவராக அதிதி ராவ். அடுத்தவர்கள் மீதான அன்பு, அக்கறை, உயிர்காக்கும் வேலை, ஆழமான காதல் கொண்ட இளம்பெண்.

இவர்கள் இருவருக்குள்ளும் துளிரும் காதல் வளர ஆரம்பிக்க, கார்த்தியின் ஈகோ ஊடாடி பெரிதாக நிற்கிறது. இதற்கிடையில் கார்த்தி கார்கில் போரில் நடக்கும் சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொள்கிறார். கார்த்தி மீண்டும் திரும்பி வந்தாரா? அதிதியின் காதல் கார்த்தியை மாற்றியதா? மணிரத்னத்தின் ஸ்பெஷல் எமோஷனல் க்ளைமேக்ஸ்தான் மீதிக்கதை.

‘சாரி, ஐ ஃபர்காட் பேபி’ என கொஞ்சமும்  அலட்டிக் கொள்ளாமல் ரிஜிஸ்டர் ஆபீஸில் இருக்க வேண்டிய நேரத்தை கடந்து போவதும், அதில் அதிதியை வெறுப்ேபற்றுவதும், துடிக்கும் அதிதியை ‘போகாதடி என் செல்லக்கிளியே’ என கடுப்பேற்றுவதும், கெஞ்சுவதுமாக டிஸ்டிங்ஷன் தட்டுகிறார் கார்த்தி. ஆனால் தாடி மீசையில் அப்படியே பருத்திவீரன் கெட்டப். எனினும் முரட்டு, அசால்ட், ஸ்டைலிஷ் கார்த்தி.

கார்த்தியிடம் காதலைச் சொல்லி அவரை அப்படியே உயிர்க்காதலோடு நோக்கும் அதிதி, ‘கத்தலாமா’ எனக் கேட்டுவிட்டு யோசித்து கத்துவது கிறக்கமூட்டும் கவிதை.  ‘நான் டாக்டர். எனக்கு பாத்துக்கத் தெரியும்’ என கோபத்தோடு சொல்லி கிளம்புவதுமாக படம் முழுக்க அதிதியின் அட்டகாசம். புரிந்துகொண்டு அதிதிக்கு மட்டுமே அதிகமாக குளோசப் காட்சிகள்.

கண்களால் காதல் பேசும் சவால்கள் என அந்த டாக்டர் லீலாவை மறக்க நாளாகும்.  மென்மையான, அதே வேளை  அலைதலுக்குள்ளான உள்ளத்தை  கொள்ளை  அழகோடு காட்சிப்படுத்துகிறார் அதிதி. அவருக்கு இணையாகவோ துணையாகவோ யாரையும் சொல்ல முடியாது. நம் மனம் பரபரப்பாகத் தேடினால் ஏமாறுவோம். அடுத்து என்ன நடக்கும் என்ற மனநிலையில் படம் பார்க்கக்கூடாது. ஏனெனில் இது ஒருவகையான Romantic Melody Drama.

சிக்சர் கமென்ட்களில் சிதறடிக்கும் ஆர்.ஜே பாலாஜிக்கு இதுவரை இல்லாத புது ரோல். அதனால் வாய்த்துடுக்கில் அடங்கி குளோசப்பில் சிரமப்படுவது தெரிகிறது. ஜாலி நடனப் பெண்ணாக ருக்மணிக்கு சிம்பிள் கேரக்டர் என்றாலும் மிளிர்கிறார். ‘உங்களுக்கு லீலாவைப் பிடிக்கும், லீலாவுக்கு வி.சியைப் பிடிக்கும், ‘வி.சிக்கு ‘வி.சி’யை மட்டுமே பிடிக்கும்’, ‘உனக்காக ஏழுமலை தாண்டி ஏழு கடல் தாண்டி வந்திருக்கேன்’, ‘ஏதாவது வித்தியாசம் தெரியுதா? தொட்டுப் பார்க்கவா’ இப்படிப் பல மணிரத்னம் ஸ்பெஷல்கள் படம் முழுக்க, பாகிஸ்தான் சிறையிலிருந்து ஜாலியாக எஸ்கேப் ஆவதெல்லாம் எந்த லாஜிக்கிலும் வராது.

பார்டரில் கால் வைத்தாலே கொன்றுவிடும் அளவுக்கு ரிஸ்க் இருக்கும்போது கார்த்தி அண்ட் கோ தப்பிப்பது தமாஷ்! அவ்வளவு சுலபமா கார்கில் பார்டர்? கொளுத்தும் வெயிலுக்கு காஷ்மீரின் அற்புதங்களும், மரவீடுகளுமாகக் காட்சிப்படுத்தி கண்களில் நிற்கிறது ரவிவர்மனின் கேமரா, அவரின் பிரமாதமான விஷுவல் டேஸ்ட்டே படத்தின் அடித்தளம். ‘வான் வருவான்’, ‘நல்லை அல்லை’ மனதை கரைக்கும் மாடர்ன் மெலோடி. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி பெரும்  தாலாட்டு. அதிரடி, வசீகரிப்பு என பல இடங்களில் பரவசம். சம்மரிலும் காதல் சிலுசிலுக்கும் காற்று!