புதுசு கண்ணா புதுசு



செல்போனுக்கு டாப் அப் பண்ணுவது போலத்தான் கோலிவுட் புதுமுக ஹீரோயின்களின் எண்ணிக்கையையும் பட்டியலிடுவது. ரெண்டுமே நான் - ஸ்டாப் கொண்டாட்டம்! அப்படி நம் மனதில் இடம் பிடித்த புதுசு, இளசுகள் எக்கச்சக்கம். அதில் சிலரின் Sweet Details இனி...

காலா ஹூமா குரேஷி

ரஜினியின் புது ஜோடி ஹூமா குரேஷி. ‘‘டெல்லி என் ஃபேவரெட் பிளேஸ். அப்பா அங்க நிறைய ரெஸ்ட்டாரன்ட்ஸ் வைச்சிருக்காங்க. அப்பாவுக்கு உதவியா என் பிரதர்ஸ் இருக்காங்க. டெல்லிலதான் டிகிரி படிச்சேன். அப்புறம் மும்பை வந்துட்டோம். தியேட்டர் ஆக்டர் ஸ்கூல்ல சேர்ந்தேன். பிறகு மாடலிங் பண்ணினேன். நிறைய டாகுமென்ட்ரி புராஜெக்ட்ஸ்ல ஒர்க் பண்ணியிருக்கேன்.

‘சாம்சங்’ மொபைல் விளம்பரத்துல நடிக்கிறப்பதான் அனுராக் காஷ்யப் அறிமுகமானார். அதுக்கு அப்புறம் என் வாழ்க்கையே வேற லெவலுக்கு போயிடுச்சு. தொடர்ந்து மூணு படங்கள் அவர் இயக்கத்துல நடிக்க கமிட் ஆனேன். சமீபத்தில் நடிச்ச ‘ஜாலி எல்எல்பி’ இந்தில பெரிய ஹிட். அதோட ஃபங்ஷனுக்காக பெர்லின் ஃபிலிம் ஃபெஸ்டிவல் போயிட்டு வந்தது மறக்கமுடியாத அனுபவம். மும்பைக்கு வருவேன், நடிகை ஆவேன்னு எப்பவும் நினைச்சதில்லை. லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!’’ கண் சிமிட்டுகிறார் ஹூமா.              

வனமகன் சாயிஷா சைகல்

‘‘தமன்னாவிற்குப் பிறகு ஒரு சின்ஸியரான பொண்ணு சாயிஷா. தமிழ் கத்துக்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க. அவங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு...’’ என ஜெயம் ரவியால் குட் சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்டவர் சாயிஷா சைகல். பிரமாதமான டான்ஸர் + பாலிவுட் நடிகர் திலீப்குமாரின் பேத்தி.

‘‘அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஆக்டர்ஸ். ஆனாலும் நான் நடிக்கப் போறேன்னு சொன்னதும் என்னை என்கரேஜ் பண்ணலை. தாத்தா திலீப்குமாரோட வாழ்வதை ஆசீர்வாதமா நினைக்கறேன். அஜய்தேவ்கனுடன் நடித்த ‘ஷிவாய்’ பார்த்து ‘வனமகன்’ வாய்ப்பு வந்தது. அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’வில் நடிக்கறேன்!’’ என்கிறார் சாயிஷா.

காற்று வெளியிடை அதிதி ராவ் ஹைதரி

‘‘மணி சார் டைரக்டர் மட்டுமல்ல; பெரிய ஆளுமையும் கூட. ‘காற்று வெளியிடை’ வெறும் அனுபவமல்ல... அது பாடம்...’’ சில்லென சிலிர்க்கிறார் பாலிவுட் பைனாபிள் அதிதி ராவ் ஹைதரி. அஸாம் மாநில முன்னாள் கவர்னரின் கொள்ளுப் பேத்தி... ஹைதராபாத் மாகாணமாக திகழ்ந்த போது பிரதமராக இருந்தவரின் பேத்தி... ராஜ குடும்பத்து வாரிசு... என ராயல் இன்ட்ரோ அதிதிக்கு உண்டு.

‘‘ஆறு வயசுல பரதம் கத்துக்க ஆரம்பிச்சேன். ஸ்கூல் படிச்சது ஆந்திரால. காலேஜ் முடிச்சது நியூடெல்லில. அப்பா ஆந்திரா. அம்மாவோட பூர்வீகம், கொங்கணி. மாடலிங் வழியா சினிமாவுக்கு வந்தேன். அறிமுகமானது மலையாளத்துல. தமிழ்ல ‘சிருங்காரம்’ முதல் படம். அப்புறம், இந்தில பிசி. மணி சார் படத்துல நடிப்பது கனவு. அது ‘காற்று வெளியிடை’ மூலம் நிறைவேறியிருக்கு...’’ என்ற அதிதி, ஒரு pet lover. பூனை + நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார்.

ரங்கூன் சனா மகபுல்

டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர வேண்டும் என்ற கனவுடன் கோலிவுட் பஸ் பிடித்து வந்திருக்கிறார் சனா மகபுல். ‘‘மும்பைல பிறந்து வளர்ந்தேன். அம்மாவோட பூர்வீகம் கேரளா. காலேஜ் படிக்கும்போதே மாடலிங், விளம்பரப் படங்கள் பண்ணியிருக்கேன். நிறைய பியூட்டி கான்டெஸ்ட்ல கலந்திருக்கேன். மிஸ் இண்டியா போட்டில ஃபைனல் வரை வந்திருக்கேன். ஃபெமினா மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் அவார்டு கிடைச்சிருக்கு.

என் விளம்பரப் படங்கள் பார்த்து ‘ரங்கூன்’ வாய்ப்பு வந்தது. முருகதாஸ் சார் தயாரிக்கிறார்னு தெரிஞ்சதும் ஓகே சொல்லிட்டேன். டோலிவுட், கோலிவுட்ல ப்ரொஃபஷனல் டெக்னீஷியன்ஸ் இருக்காங்க. சென்னை பிடிச்சிருக்கு. அடுத்தடுத்து படங்கள் கிடைச்சா தமிழ் கத்துக்குவேன்...’’ என புல்புல்தாரா வாசிக்கிறார் மகபுல்.                

புரூஸ் லீ கிர்த்தி கர்பன்டா


‘என்னாது அப்படி ஒரு படம் வந்ததா?’ என்று கேட்காதீர்கள். ஜி.வி.பிரகாஷ் நிஜமாகவே ‘புரூஸ் லீ’ ஆகிவிடுவார். அந்த படத்துக்குப் பிறகு கிர்த்தி தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என கோலிவுட்டே எதிர்பார்த்தது. ஆனால், அவர் கன்னடம், இந்தியில் பிஸியாக இருக்கிறார். ‘‘பூர்வீகம் புதுடெல்லி. பெங்களூர்ல செட்டிலாகிட்டோம். காலேஜ் படிச்சதெல்லாம் அங்கதான்.

ஃபேமிலில யாரும் சினிமால இல்லை. காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல அதிகம் கலந்துக்குவேன். அந்த ஆர்வம்தான் மாடலிங், சினிமானு அடுத்தடுத்து நகர வைச்சது. நடிகையா அறிமுகமானது தெலுங்குல. பிசியா இருக்கறது கன்னடத்துல. ஐ லவ் கிச்சன். வீட்ல இருந்தா சமையலறைதான் என் உலகம். தமிழ்ல சூர்யா சார், மணிரத்னம் சார் படங்கள் பண்ணணும். அதான் டார்கெட்!’’ என கிறுகிறுக்கிறார் கிர்த்தி. 
            

இவன் தந்திரன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

கன்னட ‘யூ டர்ன்’ பொண்ணு. ‘காற்று வெளியிடை’யில் கார்த்தியை காதலிக்கும் கிரிஜா கபூராக வந்தவர். ‘இவன் தந்திரன்’ ரிலீஸ் ஆகும் முன்பே, நிவின் பாலியுடன் ‘ரிச்சி’, விஜய் சேதுபதியுடன் ‘விக்ரம் - வேதா’ என ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் சினி கிராஃப் உயர்ந்து கொண்டிருக்கிறது. ‘‘அப்பா ஆர்மி ஆபீசர். பிறந்தது ஜம்மு - காஷ்மீர்ல. அம்மா ஸ்கூல் டீச்சர். செகந்தராபாத்ல ப்ளஸ் டூ முடிச்சேன்.

அப்புறம் பெங்களூரு ஷிஃப்ட் ஆனோம். அங்கதான் சட்டம் படிச்சேன். ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனில லீகல் அட்வைசரா வேலை பார்த்தேன். இடையிடையே விளம்பரப்படங்கள். ‘கோஹினூர்’ மலையாளப் படத்துல அறிமுகமானேன். கன்னடத்து ‘யூ டர்ன்’ நிஜமாகவே ஷ்ரத்தா யாருன்னு இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டிச்சு!’’ என்கிறார் புன்னகைப் பூவாக!    
                       
சர்வர் சுந்தரம் வைபவி சாண்டில்யா

சந்தானத்துக்கு ஜோடியாக அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கும் மராத்தி மல்கோவா வைபவி சாண்டில்யா. ‘‘பேஸிக்கா நான் மராத்தி ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்ட். பரதம் அண்ட் கதக் டான்ஸர். மராத்தில நிறைய படங்கள் பண்ணியிருக்கேன். தமிழ் இண்டஸ்ட்ரியில நிறைய திறமைசாலிகளை வெளிக் கொண்டு வர்றாங்க. ‘சர்வர் சுந்தரம்’ல நான் கமிட் ஆகுறதுக்கு முன்னாடி மூணு மாசமா அவங்க ஹீரோயினை தேடிட்டு இருந்தாங்களாம்!

சந்தானம் அவரோட அடுத்த படமான ‘சக்கபோடு போடுராஜா’விலும் நடிக்கறேன். சென்னை ரொம்ப பிடிச்சிருக்கு. தென்னிந்திய உணவுகள் ரியலி சூப்பர். டயட் பார்க்காம எல்லாத்தையும் ரசிச்சு சாப்பிடறேன்!’’ சிரிக்கிறார் வைபவி சாண்டில்யா.   

-தொகுப்பு: மை.பாரதிராஜா