ஊஞ்சல் தேநீர்



தலைவர் வந்தவுடன் உணவருந்தலாம் என்றிருந்த நிலையில், வெவ்வேறு ஊர்களில் கூட்டத்தை முடித்துக்கொண்டு காமராஜர் மிகத் தாமதமாக வருகிறார். வந்ததும் வராததுமாக விருந்து ஏற்பாட்டாளர்கள் ‘‘இலையை விரிக்கலாமா’’ எனக் கேட்கிறார்கள். பதிலேதும் சொல்லாத காமராஜர், அவர்கள் கேள்வியை முடிப்பதற்குள், சட்டென்று அடுக்களைக்குள் தலையை நீட்டி, ‘‘சைவமா? அசைவமா?’’ எனக் கேட்கிறார்.

விருந்து ஏற்பாட்டாளர்கள் மிகுந்த சந்தோசத்தில் ‘‘அசைவ உணவு தான்’’ என்கிறார்கள். தலைவரின் பாராட்டைப் பெறப் போகிறோம் எனும் தொனியில் அவர்கள் சொல்லியதும் “அதுசரி, சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு என்ன இருக்கிறது?” என்கிறார். “வெள்ளை சாதமும் ரசமும் இருக்கிறது” என்கிறார்கள்.

“அது மட்டும்தான் இருக்கிறதா?” எனக் கேட்ட காமராஜருக்குக் கோபம் வந்துவிடுகிறது. “என்னைப்போலவே ஊர் ஊராக காங்கிரஸுக்காக சுற்றிவரும் இவர்களுக்கு வெள்ளை சாதமும் வெறும் ரசமும் போதுமா? அப்படியானால் இவர்கள் ஒசத்தியில்லையா? உடனே, மாமிசம் சாப்பிடாதவர்களுக்குக் கறிகாய்களைக் கொண்டுவந்து சமையுங்கள். அதன்பின் உணவருந்தலாம்!” என்று கடிந்துகொள்கிறார்.

அதுவரை அசைவ உணவென்றால் என்னவென்றே தெரியாத கோமலுக்கும் இன்னபிறருக்கும், தாங்கள் சொல்லாமலே தங்களுக்காக பேசிய காமராஜரைப் பிடித்துவிடுகிறது. அடுத்தவர்களின் வயிறையும் இதயத்தால் பார்க்கத் தெரிந்த காமராஜர், அந்நிகழ்ச்சியில் சைவ உணவு தயாராகும்வரை சாப்பிடாமல் காத்திருந்திருக்கிறார். இதை ஏதோ சாப்பாட்டுப் பிரச்னை என்பதாகப் பார்க்க முடியவில்லை.

தகுதி வாய்ந்த தலைவர் ஒருவரின் தன்மையைக் காட்டக்கூடிய ஒரு சோற்றுப்பதமாகவே பார்க்கத் தோன்றுகிறது. தன்னைப் போலவே பிறரும் கவனிக்கப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என எண்ணிய காமராஜரை, தன் தலைவர்களில் ஒருவராக கோமல் கருதியதில் வியப்பில்லை.

கோமல் சுவாமிநாதனின் திரைத்துறை அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினால் சொல்லிக்கொண்டே இருக்கலாம். சுவையும் சுவாரஸ்யமும் நிரம்பிய அவருடைய அனுபவங்கள், பிரபல இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடமிருந்து தொடங்குகிறது. கே.எஸ்.ஜியிடம் உதவி இயக்குநராக கோமல் பணிபுரிந்த காலத்தில், சினிமாவின் இயல்புகள் முற்றிலும் வேறுமாதிரி இருந்தன. படக் கம்பெனிகள் முழுக்கவும் ஜோதிட வலையில் சிக்கியிருந்தன.

ஒரு கதையைச் சொன்னால், அக்கதையைச் சொன்னவரின் ஜாதகத்தை வைத்துதான் அக்கதையைப் படமெடுக்கலாமா, வேண்டாமா என முடிவெடுத்திருக்கிறார்கள். கோமல் சொன்ன ஒரு கதை கே.எஸ்.ஜி.க்கும் அதைத் தயாரிக்க விரும்பிய வி.கே.ராமசாமிக்கும் பிடித்துவிடுகிறது. ஆனாலும், அப்படக் கம்பெனியை நிர்வகித்து வந்த வி.கே.ராமசாமியின் சகோதரர் முத்துராமலிங்கமோ ஜோசியக் குறிப்பை வைத்துதான் முடிவெடுப்பார்.

அதன்படி, மேற்கு மாம்பலத்தில் வசித்துவந்த காகபுசுண்டரிடம் அழைத்துப்போய் கோமலின் நாடி ஜோதிடத்தை முத்துராமலிங்கம் கணித்திருக்கிறார். அப்போது அந்த ஜோதிடர், சம்பந்தப்பட்ட ஜாதகங்களில் தோஷமிருந்ததாகவும் காகபுசுண்டருக்கு ஆயிரம் ரூபாயில் பிராயச்சித்தம் செய்தால் கதையைப் படமாக்கலாம் எனவும் சொல்லிவிடுகிறார். அதை காகபுசுண்டரே சொன்னதுபோல் கருதிய முத்துராமலிங்கம், நிவர்த்தி செய்தெல்லாம் கதையைப் படமாக்கத் தேவையில்லை என கோமலுக்கு டாட்டா காட்டிவிடுகிறார்.

கார்ல் மார்க்ஸை படித்திருந்தாலும்கூட, சினிமா என்று வந்துவிட்டால் காகபுசுண்டரின் காலையும் பிடித்தாக வேண்டிய நிலை அப்போதிருந்ததை ‘காகபுசுண்டரும் கார்ல்மார்க்ஸும்’ கட்டுரையில் கவலையுடன் பதிந்திருக்கிறார். ஜோதிடத்தால் தன் ஆரம்ப வாய்ப்பை இழந்த அதே கோமல் சுவாமிநாதன் தன் இறுதிக்காலங்களில் ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளதாகவும் தெரிவித்ததை மறைக்க முடியாது.

ஒன்றைத் தெரிந்துகொள்வதில் அவருக்கிருந்த தாகம், சித்த மருத்துவத்தையும் ஜோதிடத்தையும் கற்க வைத்திருக்கிறது. கற்றதிலிருந்து நம்பிக்கைகளை உருவாக்கிக்கொள்வதே அவருடைய பண்பாக இருந்திருக்கிறது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘கற்பகம்’, ‘கைகொடுத்த தெய்வம்’, ‘பேசும் தெய்வம்’ போன்ற படங்களில் வசன உதவியாளராக பணிபுரிந்த கோமல், ‘பாலூட்டி வளர்த்த கிளி’, ‘பெருமாளே சாட்சி’, ‘நவாப் நாற்காலி’ போன்ற படங்களுக்குக் கதை வசனம் எழுதியிருக்கிறார்.

அப்படங்கள் போதிய கவனத்தைப் பெறவில்லை. என்றாலும், அவர் எழுத்து முயற்சிகள் எங்கேயும் தடைபடவில்லை. நாடகங்களாக பெரும் வெற்றி பெற்ற அவருடைய கதைகள், திரைப்படமாக எடுக்கப்படுகையில் ஏனோ மக்களால் கொண்டாடப்படவில்லை. அவரே இயக்கிய ‘யுத்தகாண்டம்’ திரைப்படமும் ரசிகர்களால் கண்டுகொள்ளப்படாதது துக்கமே.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனோடு பணியாற்றிய போதுதான் குருதத்தின் அறிமுகம் கோமலுக்குக் கிடைக்கிறது. கே.எஸ்.ஜி. இயக்கிய ‘கை கொடுத்த தெய்வம்’ திரைப்படம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, அதை இந்தியில் தயாரிக்க அதன் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் விரும்பியிருக்கிறார்.

எஸ்.எஸ்.ஆர். நடித்த கதாபாத்திரத்தில் குருதத்தை போடலாம் என முடிவெடுக்கப்படுகிறது. அப்போது இந்தி சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக குருதத் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார். ‘பியாசா’, ‘காகஸ் கி ஃபூல்’, ‘சாஹிப் பீபி அவர் குலாம்’ போன்ற படங்கள் வெளிவந்திருந்தன. ஓர் ஆண்மீது இரண்டு பெண்கள் காதல் வயப்படுவதை மையமாகக் கொண்ட அத்திரைப்படங்களை இந்திய ரசிகர்கள் வரவேற்றார்கள்.

வடக்கிலும் தெற்கிலும் அவருடைய படங்கள் வசூலை வாரிக் குவித்துக்கொண்டிருந்தன. அத்திரைப்படங்களால் கவர்ந்திழுக்கப்பட்டவர்கள், அதுபோல்தான் குருதத்தின் வாழ்வும் அமைந்திருந்தது என்பதை அறிந்திருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் கீதா தத்தும், வஹிதா ரஹ்மானும் குருதத்தின் காதல் சோகத்துக்குள் சிக்கியிருந்தார்கள்.

அசலான கலைஞனாக அறியப்பட்ட குருதத்தின் இயற்பெயர் சிவசங்கர் படுகோன். கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர், காதலின் சோகத்தை தத்ரூபமாக வெளிப்படுத்தக் கூடியவர். சொந்த வாழ்வில் எத்தனையோ சறுக்கல்களையும் சிக்கலைகளையும் சந்தித்த அவரை இந்தித் திரையுலகம் கைவிடாத காலம் அது. அவர் நடித்த, இயக்கிய, தயாரித்த அத்தனை படங்களுமே கிளாசிக் என்று சொல்லத்தக்கவை.

அப்படியான ஒருவரை தங்களுடைய படத்தில் நடிக்க வைக்க ‘கை கொடுத்த தெய்வம்’ படக்குழுவினர் மும்பைக்குப் போயிருக்கிறார்கள். அந்தப் பயணத்தில்தான் முதல்முதலாக கோமல் சுவாமிநாதன் விமானத்தில் பயணிக்கிறார். ஒருபக்கம் குருதத்தை சந்திக்கும் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் விமானப் பயணம். இரண்டுமே பதற்றம் நிறைந்ததாக அவருக்கு இருந்திருக்கிறது.

மிகுந்த நம்பிக்கையோடு போன படக்குழுவினரிடம் குருதத் சொல்கிறார். “சிவாஜி கணேசன் நடிப்புச் சக்கரவர்த்தி. அவர் போல என்னால் நடிக்க இயலாது. அவர் நடித்திருப்பதில் கால்பங்கைக்கூட நான் தாண்டமாட்டேன். ஒரு மாபெரும் கலைஞன் நடித்த பாத்திரத்தில் என்னை நீங்கள் நினைத்துப்பார்த்தது மகிழ்ச்சி. ஆனால், அந்த ரோலுக்கு என்னைக்காட்டிலும் ராஜ்கபூர்தான் பொருத்தமாயிருப்பார்.

வேண்டுமானால் நானே பேசி கால்ஷீட் வாங்கித் தருகிறேன். இதற்குப் பிறகும் இந்தப் படத்தில் நான் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் எஸ்.எஸ்.ஆர். செய்த ரோலை நான் செய்கிறேன்!” என்றிருக்கிறார். குருதத் போன்றவர்களே வியந்த அப்படியான சிவாஜிக்கு, இறுதிவரை சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படவேயில்லை. தான், நடுவர் குழுவில் இருந்தும்கூட அவ்விருதை சிவாஜிக்கு பெற்றுத் தர இயலவில்லை என்னும் வருத்தம் கோமல் சுவாமிநாதனுக்குக் கடைசிவரை இருந்தது.

கோமல் சுவாமிநாதன், வியாபார சினிமாவில் பணியாற்றிக் கொண்டே மாற்று சினிமாவைப் பற்றிய கனவிலிருந்தவர். சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’யைப் போல தமிழிலும் சினிமாக்கள் வரவேண்டும் என விரும்பியவர். ‘‘‘பதேர் பாஞ்சாலி’யை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் ஒவ்வொரு மாதிரியான அர்த்தங்களைக் கொடுக்கிறது. முப்பதாண்டுகளாக அப்படத்தை அவ்வப்போது பார்த்துவருகிறேன்.

என்றாலும், அப்படத்தின் முழு அர்த்தத்தையும் நான் விளங்கிக்கொண்டேனா எனத் தெரியவில்லை!” என்றிருக்கிறார். காலங்கடந்த படைப்புகளை உருவாக்கக்கூடிய கலைஞன், ஒருகட்டத்தில் தன்னை ரசிப்பவர்களையும் கலைஞனாக்கி விடுகிறான். அவனுக்கு வேறு எதுவுமே முக்கியமில்லை. சோறோ, சுகமோ, கொள்கையோ, கோட்பாடோ அவனுக்குக் குறுக்கே நிற்பதில்லை.

அவன் கண்டதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறான். பகிர்ந்து கொள்வதன்மூலம் மேலும் சில படைப்புகள் உருவாகும் என நம்புகிறான். பன்முக அடையாளங்களைப் பெற்றிருந்த கோமல் சுவாமிநாதனின் நிஜமான அடையாளமாக நான் கருதுவது, இலக்கியவாதிகளோடு அவர் ஏற்படுத்திக்கொண்ட நெருக்கம்தான்.

தி.ஜானகிராமன், க.நா.சுப்ரமணியம், திருலோக சீதாராம், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், ப.சிங்காரம், சுந்தரராமசாமி, சண்முகசுந்தரம், விக்ரமாதித்தியன், கலாப்ரியா, வண்ணதாசன், சி.எம்.முத்து, இராஜேந்திரசோழன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன் என அவர் பழகாத எழுத்தாளர்களே தமிழில் இல்லை.

நீண்ட வாசிப்பையும் நெடிய தொடர்புகளையும் பேணிவந்த அவர், யார் ஒருவர் குறித்தும் புகாரோ புலம்பலோ வைக்கவில்லை என்பதுதான் இதிலுள்ள விசேஷம். தன்னை உணர்ந்தவர்கள் அகத்தையும் முகத்தையும் அழகாக வைத்திருக்கிறார்கள். கோமல் சுவாமிநாதனைப் போன்றவர்கள், அடுத்தவர்களின் அகத்தையும் முகத்தையும்கூட அழகாக்கிவிடுகிறார்கள். அதிருப்தியில் இருந்துதான் அரிது உண்டாகிறது. இப்போதைய சிறுபத்திரிகைச் சூழலிலும் ஒரு கோமல் சுவாமிநாதன் இருந்தால் தேவலாம்.
                 
(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்

யுகபாரதி - 32