கவிதை வனம்



சாயல்

தூங்கும் நேரங்களில் மட்டுமே
வீட்டிற்குள் வருகிறாள் அம்மா
பகல் உணவு மரத்தடியிலும்
இரவு உணவு திண்ணையிலும்
எனக் கழிகின்றன நாட்கள்
உறவினர்களின் இழவுக்கும் போவதில்லை
பேரனின் கைகள்
கிடைக்கும் போதெல்லாம்
இறுகப் பற்றிக்கொள்கிறாள்
சற்று வளைந்த மணிக்கட்டும்
தனித்து நிற்கும் சுண்டு விரலுமாய்
அப்பாவின் சாயலில் இருப்பதால்
அவன் கால்தடங்களிலேயே
காத்திருக்கிறாள் எப்போதும்

- ஆண்டன் பெனி

இயலாமை

உன் நினைவுகள் தரும்
அழுத்தத்தினால்
என் இதயம் கிழிந்து விடுமோ
என பயந்து சாகிறேன்
என் பயத்தையெல்லாம்
ஒரு பையில் வைத்து
உன் வீட்டு வாசலில்
வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல்
வரும் என் காதலை
உன் ஓரப்பார்வை சத்தமில்லாமல்
கொன்று தின்பதை
இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

- பிரியதர்ஷினி செல்வக்குமார்