இளைப்பது சுலபம் வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?



அனுபவத் தொடர் - 2

பேலியோவுக்குள் நுழைவதற்கு முன்னால் பிள்ளையார் சுழி மாதிரி ரொம்ப முக்கியமாக, அழுத்தந்திருத்தமாக மனத்துக்குள் எழுதி வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. அது, பேலியோ என்பது ஒரு டயட் அல்ல என்பதுதான். இது ஒரு பலான வாழ்க்கை முறை. கேட்டால் ஆதி மனிதன் இப்படித்தான் சாப்பிட்டான் என்று வரலாறு புவியியலில் இருந்து ஆரம்பிப்பார்கள்.

நமக்கு அதெல்லாம் வேண்டாம். டயட்டுக்கும் வாழ்க்கை முறை என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை மட்டும் தெரிந்துகொண்டால் போதும். டயட் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சில வித உணவுகளை நீக்கி அல்லது குறைத்து, வேறு சில உணவு வகையைச் சேர்த்து சாப்பிட்டுப் பார்ப்பது. வாழ்க்கை முறை என்பது, உணவு முறையை முற்றிலும் மாற்றி அமைப்பது.

இதுவரை நாம் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவுகளை மொத்தமாக நகர்த்தி வைத்துவிட்டு, ஆத்மசுத்தியோடு மதம் மாறுவது. பேலியோ உணவு முறையைத் தமிழகத்துக்கு அறிமுகம் செய்த நியாண்டர் செல்வன், ஆரம்பத்தில் சுத்த சைவ உணவு உண்பவராக இருந்தவர். பிறகு ஏதோ ஒரு அமெரிக்க ஆலமரத்தடியில் அவருக்கு ஞானம் மாதிரி என்னவோ சித்தித்து, படு தீவிர அசைவ உணவாளராக மாறிப் போனார்.

ஒரு சமயம் அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘என்றாவது ஒருநாள் உங்களை நான் மீண்டும் சைவ உணவுப் பக்கம் திருப்பி மதமாற்றம் செய்தே தீருவேன்’ என்று சொன்னேன். ‘நீங்க வேற சார். நானே இப்பத்தான் தாய்மதம் திரும்பியிருக்கேன். இன்னொரு தடவை சான்சே இல்ல’ என்றார் சிரித்தபடி.

ஒன்றை ஒப்புக்கொள்வோம். மனித குலத்தின் ஆதி உணவு அசைவம்தான். இந்தியாவில் ஜைன மதம் வேரூன்ற ஆரம்பித்த பிறகுதான் கொல்லாமை, புலால் உண்ணாமை போன்ற கருத்தாக்கங்கள் வலுப்பெறத் தொடங்கின. என்ன பெரிய வலு? இன்றளவும் தயிர்வடை தேசிகன் அளவுக்கான வலுவில்தான் வெஜிடேரியனிசம் உள்ளது. உலக அளவிலேயே சைவ உணவு என்பது மிகச் சிறுபான்மையினரின் உணவுப் பழக்கம் மட்டுமே.

எம்பெருமான் என்னை அச்சிறுபான்மை சமூகத்தில் கொண்டுபோய்ப் படைத்து வைத்தான். அவனை யார் கேள்வி கேட்பது? ஆனால், தாவர உணவு என்பது குலமோ, குடும்பமோ என்மீது திணித்ததல்ல. நிச்சயமாக அல்ல. எங்கள் வம்சத்தில் அசைவம் உண்கிற பிரகஸ்பதிகள் பலரை அறிவேன். நாளைக்கே என் மனைவியோ, மகளோ முட்டை சாப்பிடப் போகிறேன் என்றால் எனக்கு அதில் எந்தப் பிரச்னையும் இராது. நிச்சயமாக நான் அவர்களது உணவு முறையில் தலையிட மாட்டேன்.

என் சிக்கல், தனிப்பட்ட முறையில் வள்ளலார் என்னை ஓரெல்லை வரை கருத்து ரீதியில் பாதித்திருக்கிறார். திருவள்ளுவர் கொஞ்சம் அதிகமாகவே பாதித்திருக்கிறார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுகிற ஜென்மமாக என்றைக்காவது நாமும் உருப்பெற மாட்டோமா என்கிற சிறு வயது விருப்பமே என்னை நிரந்தரத் தாவர உணவாளியாக்கியது.

இதனால்தான் பேலியோ என்பது முற்றிலும் அசைவம் சார்ந்த ஓர் உணவு முறை என்றதும் சற்று சோர்வு ஏற்பட்டது. ஆனால், சைவ உணவிலும் இதனை முயற்சி செய்து பார்க்கலாம் என்று நண்பர்கள் சிலர் சொன்னார்கள். அசைவ உணவு தருகிற அளவுக்குப் பெரிய பலன் இருக்குமா என்று தெரியாது; ஓரளவு லாபம் கிடைக்க வாய்ப்புண்டு என்று தெரிந்தது.

நியாண்டர் செல்வன், தாவர உணவாளிகளுக்கும் பேலியோவின் சாத்தியங்களை விவரித்து எழுதி வைத்திருந்த குறிப்புகளை வாசித்துப் பார்த்தேன். காசா பணமா? ஒரு முயற்சி செய்து பார்த்துவிடலாம் என்று அதன் பிறகுதான் முடிவு செய்தேன். ஆங்கிலத்தில் இதனை Low Carb High Fat Diet என்று சொல்லுவார்கள். சுருக்கமாக LCHF. மனுஷகுமாரனாகப்பட்டவன் - நிற்க, நடக்க, ஓட, ஆட, உத்தியோகம் பார்க்க, சிந்திக்க, தூங்க, மூச்சுவிட, இன்னபிற சகல காரியங்களையும் செய்து ஜீவித்திருப்பதற்கு உடம்புக்கு ஐந்து விதமான சத்துகள் தேவை.
கார்போஹைடிரேட் என்கிற மாவுச்சத்து முதலாவது. கொழுப்பு இரண்டாவது. புரோட்டின் என்கிற புரதம் மூன்றாவது. விட்டமின்களும் மினரல்களும் அடுத்தவை. வாய் வழியே நாம் மத்தியப் பிரதேசத்துக்கு அனுப்புகிற எந்த ஒரு உணவிலும் இந்த ஐந்துமோ, ஐந்தில் சிலவோ, குறைந்தது ஏதேனும் ஒன்றோ நிச்சயம் இருக்கும். இருந்தால்தான் அது உணவு.

இந்த ஐந்தில், உணவுக்கு அதிக ருசி கொடுப்பதும் அடிக்கடி தின்றுகொண்டே இருக்கச் சொல்லுவதுமான திருப்பணியைச் செய்வது கார்போஹைடிரேட் என்கிற மாவுச்சத்து. சைவ உணவைப் பொறுத்தவரை, கார்போஹைடிரேட் என்பது காற்று மாதிரி. கடவுள் மாதிரி. அது இல்லாத உணவுப் பொருளே இல்லை. சுண்டைக்காயில் ஆரம்பித்து ஸ்வீட் கார்ன் வரை.

சாம்பார் சாதத்தில் ஆரம்பித்து சர்க்கரைப் பொங்கல் வரை. வீச்சு பரோட்டாவில் ஆரம்பித்து வெஜிடபிள் புலாவ் வரை அனைத்திலும் உண்டு. அதிக அளவில் உண்டு. எத்தனை சாப்பிட்டாலும் இன்னும், இன்னும் என்று கேட்க வைக்கிற இந்திரஜால யட்சிணியான இந்த மாவுச்சத்தை உணவில் ஆகக் கணிசமான அளவில் குறைத்துவிட்டு, அந்த இடத்தைக் கொழுப்புச் சத்தால் நிரப்புவதே பேலியோ.

ஐயோ கொழுப்பா என்று உடனே அலறத் தோன்றுகிறதல்லவா? ஆனால், அது அவசியமில்லை. ஒரு சின்ன விஷயத்தை யோசித்துப் பார்த்துவிட்டால் கொழுப்பு அச்சமூட்டாது. மனித உடலின் அதி அத்தியாவசியமான உறுப்புகளான மூளையும் இதயமும் முற்றிலும் கொழுப்புப் பந்துகள்தாம். இந்த இரண்டும் இல்லாவிட்டால் நாம் யார்?

ரமணர் ரூட்டில் யோசித்தால், அது வேறு ‘நாம் யார்’. நமக்குத் தெரிந்த வழியில் சிந்தித்தால், மூளையும் இதயமும் இல்லாவிட்டால் இது வெறும் கட்டை. ஆக, இரு பெரும் உடல் உறுப்புகளே கொழுப்புப் பந்துகளாக இருக்கும்போது கொழுப்பு சாப்பிட்டு எப்படி செத்துப் போவோம்? கொழுப்பில் எதைச் சாப்பிடுகிறோம், எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதில் இருக்கிறது சூட்சுமம்!

(தொடரும்)                                  

பேலியோ கிச்சன்

புது வீட்டுக்குக் குடிபோகுமுன் பெருக்கிக் கழுவிக் கோலம் போடுவது மாதிரி மங்களகரமாக வயிற்றைச் சுத்தப்படுத்துகிற ஒரு ஜூஸோடு ஆரம்பிப்போம். இது கீரை ஸ்மூத்தி. ஏதேனும் ஒரு கீரை அரைக்கட்டு எடுத்துக்கொள்ளுங்கள். கொதித்த நீரில் உருவிப் போட்டு இரண்டு நிமிடம் மூடி வைத்துவிட்டு, நீரை வடித்துவிட்டால் பச்சை வாசனை போய்விடும் (கீரையோடு சேர்த்துக் கொதிக்கவைக்கக்கூடாது).

ஆச்சா? ஒரு பிடி கொத்துமல்லி, அரைப்பிடி புதினா, ஒரு பத்து கருவேப்பிலை, அரை மூடித் தேங்காய், ஒரு தக்காளி, ஏழெட்டு மிளகு, ஒரு துண்டு இஞ்சி, நாலு சிறு வெங்காயம், நாலு பல் பூண்டு. இவற்றை மேற்படிக் கீரையுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் கொழகொழவென்று ஒரு சமாசாரம் கிடைக்கும். அதன் தலையில் அரைமூடி எலுமிச்சை பிழிந்து உப்புப் போட்டு அருந்திப் பாருங்கள். வாரம் ஓரிரு முறை காலை உணவுக்கு பதில் இந்தக் கீரை ஸ்மூத்தியை அருந்தினால் வயிற்றுப் பிரச்னைகளே வராது. மலச்சிக்கல் அறவே இருக்காது.

-பா.ராகவன்