மிடில் பென்ச் மாணவர்களின் கதை!




‘‘கேரளாவில் புது இயக்குநர்கள் படங்கள் ரிலீஸாகும்போது அங்குள்ள பெரிய ஹீரோக்கள்ல இருந்து அத்தனை பிரபலங்களும் ஒண்ணு சேர்ந்து அதோட புரமோஷனுக்கு தானா முன்வந்து உதவுவாங்க. அப்படி நம்ம ஊர் ஸ்டார்களும் என்னோட படத்தை புரமோட் பண்ண என்ன வழினு யோசிச்சப்ப தோணினதுதான், கிஃப்ட் ஸாங் ஐடியா. 

‘மாற்றம் ஒன்றே மாறாதது... be happy’ என்ற வரிகள்தான் படத்தோட கான்செப்ட். தட்டுங்கள் திறக்கப்படும் மாதிரி சூர்யா, பிரகாஷ்ராஜ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஆர்யானு அத்தனை பேர்கிட்டயும் கேட்டுப் பாத்தோம். சந்தோஷமா சம்மதிச்சாங்க.

நாம தினம் பாக்குற பூக்காரம்மா, ரோட்டுல இளநீர் விக்குறவங்கனு கூட்டத்தில் ஒருத்தரா உள்ள சாதாரண மக்கள்ல இருந்து இன்னிக்கு ஆயிரத்தில் ஒருத்தரா மின்னும் நம்ம நட்சத்திரங்கள் வரை பலரும் அந்த ‘கிஃப்ட் ஸாங்’ மூலம் ‘கூட்டத்தில் ஒருத்தனை’ மக்கள்கிட்ட கொண்டு சேர்த்திருக்காங்க...’’ முகமெல்லாம் மகிழ்ச்சியில் பூரிக்க உரையாடத் தொடங்குகிறார் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ இயக்குநர் த.செ.ஞானவேல். பத்திரிகையாளர், டயலாக் ரைட்டரில் இருந்து இயக்குநராக புரமோஷன் ஆனவர்.

அதென்ன ‘கூட்டத்தில் ஒருத்தன்’?
இது மிடில் பென்ச் பையனோட கதை. படத்தை பார்க்கற எல்லாருக்கும் ‘இது நம்ம கதை’னு தோணும். கூட்டத்தில் ஒருத்தராக இருக்கும் எல்லோர்க்குள்ளும் நம்பிக்கை விதையை தூவும் படமா வந்திருக்கு. கதையை சொல்லப் போகும் போது படத்தோட புரொட்யூசர்ல இருந்து டெக்னீஷியன்கள் வரை எல்லாருமே தாங்களும் கூட்டத்தில் ஒருத்தனா இருந்ததை ஃபீல் பண்ணினாங்க.

அசோக்செல்வன், ப்ரியா ஆனந்த், நாசர், சமுத்திரக்கனி, ஜான் விஜய், பாலசரவணன்னு நிறைய ஸ்டார் காஸ்ட். ‘அட்டகத்தி’, ‘குக்கூ’ கேமராமேன் பி.கே.வர்மா ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘தெகிடி’, ‘சேதுபதி’ நிவாஸ் கே.பிரசன்னா இசையமைச்சிருக்கார். ‘சூது கவ்வும்’ லியோ ஜான்பால் எடிட்டிங். இப்படி நல்ல டெக்னீஷியன் டீம் அமைஞ்சிருக்கு. ‘மாயா’, ‘ஜோக்கர்’னு நல்ல படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் இதை தயாரிக்கறது பெரிய சந்தோஷம். படத்தோட கிளைமேக்ஸ் கண்டிப்பா எல்லோராலும் பேசப்படும்.
 
ஹீரோவும், ஹீரோயினும் என்ன சொல்றாங்க..?
இது ஒரு ஆவரேஜ் பையனுக்கான கதை. அசோக் செல்வன் ரொம்ப பொருத்தமா தெரிஞ்சார். ‘என் அக்கா ரொம்ப பிரைட். எங்க வீட்டை சுத்தி இருக்கறவங்க என் அம்மா, அப்பாவை எப்படி கூப்பிடுவாங்க தெரியுமா? அக்கா பெயரை சொல்லித்தான். அதாவது அபிநயா அம்மா, அபிநயா அப்பானு. அசோக் அம்மானு சொல்ல மாட்டாங்களான்னு ஏங்கியிருக்கேன்’னு சொன்னார்.

ஆனா, ப்ரியா ஆனந்த், ஃபர்ஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட். பாட்டு, டான்ஸ்னு கலக்கின பொண்ணு. ‘என் கூட படிச்ச நிறைய கிளாஸ்மேட்ஸோட பெயர் கூட எனக்கு தெரியாது. நல்லா படிக்கற பசங்களத் தெரியும். கலாட்டா பண்ற பசங்களையும் தெரியும். இந்த ரெண்டுக்கும் நடுவே உள்ள பசங்க நினைவுல இல்லை. இந்தக் கதை அவங்களை கனெக்ட் பண்ணுது’னு சொன்னாங்க.

நான் பத்திரிகையாளரா இருந்தப்பவே நாசர் சாரைத் தெரியும். ‘உங்க மேல நம்பிக்கை இருக்கு. நல்ல கதையாகத்தான் இருக்கும்’னு வந்தார். அதே மாதிரி சமுத்திரக்கனி அண்ணன். ‘கால்ஷீட் அதிகமா வேணும்னாலும் தர்றேன். உனக்கு திருப்தியாகுற வரை எடு தம்பி. வெல்வோம் தம்பி’னு உற்சாகப்படுத்தினார். இப்படி என்னைச் சுத்தி பாசிட்டிவ்வான நல்ல மனிதர்கள் இருக்காங்க. அதனாலதான் இப்படி ஒரு நல்ல படத்தை கொடுக்க முடிஞ்சிருக்கு.

படம் ரிலீஸ் வரை புதுப்புது கிஃப்ட் வீடியோக்கள் ரிலீஸ் பண்ணுவீங்க போலிருக்கே..?
நிறைய ஐடியாக்கள் வச்சிருக்கோம். கம்பராமாயணத்துல ஒரு கடவுள் வாழ்த்து பாடல் உண்டு. கடவுளுக்கு ஒரு காணிக்கை குடுக்கலாம்னு கம்பர் யோசிப்பார். கடவுளுக்கு என்ன பரிசு குடுக்கறது? அவர்கிட்ட இல்லாத பொருளாகவும் இருக்கணும். அதே சமயம் தன்னால கொடுக்கக் கூடிய பரிசாகவும் அது இருக்கணும்.. அதான் தனித்துவமான கிஃப்ட்டா இருக்கும்னு கம்பர் நினைப்பார்.

கடவுள் எல்லாம் அறிந்தவர். அவர்கிட்ட எல்லாமே இருக்கும். இல்லாதது எதுனு யோசிக்கும் போது, அறியாமை ஒண்ணுதான் கடவுள்கிட்ட இல்லாததுனு கம்பருக்கு தோணும். தன்கிட்ட நிறைய இருக்கறது அறியாமைதான். எனவே கடவுளே, உன்கிட்ட இல்லாத அறியாமையை உனக்கு நான் பரிசாகத் தர்றேன்னு அவர் சொல்றதா அந்த வாழ்த்துப் பாடல் இருக்கும்.  

இதுல இருந்து இன்ஸ்பையர் ஆனதுதான் கிஃப்ட் ஸாங் கான்செப்ட். காஸ்ட்லியான ஒரு ஜுவல்லரி பாக்ஸ் மாதிரி கிஃப்ட் பாக்ஸ் ரெடி பண்ணினோம். எல்லாருக்கும் பொதுவான பரிசா என்ன கொடுக்கலாம்னு சீரியஸாகவே யோசிச்சோம். இந்த உலகில் புன்னகையை விட விலை மதிப்பில்லாத பரிசு எது?

அதனால கிஃப்ட் பாக்ஸ் மேல ‘உலகின் விலைமதிப்பில்லாத பரிசு உள்ளே’னு எழுதினோம். அந்த ஐடியா ரொம்பவே ஒர்க் அவுட் ஆகிடுச்சு. படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை ஒண்ணு சேர்த்து கபிலன் இந்த கான்செப்ட்டை பாடலா கொண்டு வந்திருக்கார்.

கூட்டத்தில் ஒருத்தனா இருந்து ஆயிரத்தில் ஒருத்தனா ஜெயித்த மனிதர்களுக்கான போட்டிகள், மிடில் பென்ச் மாணவனா இருந்து வாழ்க்கையில் சாதித்த மனிதர்கள் ‘எது வெற்றி?’னு சொல்வது, ‘லைஃப்ல நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’னு எதுக்கெடுத்தாலும் ஃபீல் ஆகறவங்களோட கதைனு அடுத்தடுத்து ப்ரொமோ இருக்கும்! 

-மை.பாரதிராஜா