குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விஷயம் உண்மை!



குழந்தை இலக்கியத்துக்கான நடுவண் அரசின் ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது பெற்றிருக்கும் வேலு சரவணனுடன் ஓர் உரையாடல்

வேலு சரவணன், குழந்தைகளின் ‘செல்ல’ மாமா. இந்தியாவின் பிரத்யேக குழந்தைகள் நாடகக்கலைஞர். படைப்பு இயல்பில் எப்போதும் தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கும் மாபெரும் கலைஞன். நம் குழந்தைகளின் நலனுக்காகவே துடித்துக் கொண்டிருக்கும் பரிபூர்ண இதயம்.

குழந்தைகளின் மனக்கதவை ‘இதோ, இதோ’ எனத் திறந்து காட்டும் வேலு சரவணனுக்கு நடப்பாண்டின் குழந்தை இலக்கியத்துக்கான நடுவண் அரசின் ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது கிடைத்திருக்கிறது. அது இவரின் உன்னத மனதிற்கு கிடைத்த பெரும் பரிசு. தன்னை அணுகுகிறவர்களை கனிந்த அன்பில் கரம்பற்றும் வேலு மாமாவின் இனிய பகிர்தல் இது.

சின்ன அறிமுகமாக நீங்கள் நாடகக்காரராக உருவான விதம்...
புதுகை மாவட்டத்திலிருக்கிற கம்பர்கோவில் என் கிராமம். அம்மா வழித் தாத்தா லாவணி பாடல்கள் பாடுவார். மேல்நிலைப் பள்ளி படிக்கும்போது தந்தை காலமானார். தொடர்ந்து படிக்க விருப்பம் இல்லை. ஆனாலும் படிக்க வேண்டியதிருந்தது. அருப்புக்கோட்டை கல்லூரியில் படிக்கும்போதுதான் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன்.

அப்புறம் புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளிக்கு விண்ணப்பித்தேன். நடிப்பு கற்றுவிட்டு திரைப்படத்துறைக்கு போய்விடலாம் என்ற ஆசை அப்போது இருந்தது. படித்து முடிக்கும்போது திரைப்படம் மீதான விருப்பம் வடிந்து அதனைவிட நாடகம் முக்கியம் என்ற எண்ணம் உதயமாகிவிட்டது. என்னை பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி தான் குருவாக இருந்து வழி நடத்தினார்.

எங்கேயிருந்து நாடகத்திற்கான தளங்களை உருவாக்குகிறீர்கள்?
சூரியன் கடலுக்குள் போய்விட்ட பிறகும் இரவுகளில் காட்டுப்புறா கூடுகளில் குஞ்சுகள் விழித்திருக்கின்றன. புறாக்கள் புதிரான உலகின் கதைகளைப் பேசுகின்றன. குஞ்சுகள் கேள்விகள் கேட்கின்றன. பனியுடன் பொழுது விடியும்போது தாயோடும் தன்னையொத்த குட்டிகளோடும் கொஞ்சி, பதுங்கி, முறைத்து, துள்ளிக் குதிக்கின்றன நாய்க்குட்டிகள்.

இவற்றின் செயல்கள் கலையா, இயல்பா? வியப்பாக இருக்கிறது. இந்த உயிர்களிடமெல்லாம் நடிப்புக் கலையின் அதிசயத்தை உணர்கிறேன். குழந்தைகள் நாடகமும் அப்படித்தான். உலகக் காட்சிகள் பலவும் கற்பனையில் விந்தையான நிகழ்வாக மாற்றம் கொள்வதே குழந்தைகள் நாடகத்தின் ரகசியம். குழந்தைகள் மனம் உலகைக் கற்கும் தருவாயில் கனவுமயமானது.

அவ்வியல்பின் பின்னணியில் உருவாகும் குழந்தைகள் நாடகமும் குதூகலமும், கொண்டாட்டமும் கொண்டதாகவே இருக்கும். மனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் அதற்குப் பாத்திரங்கள். என் சொந்தக்கதை, கேட்ட கதை... நாடகங்களுக்கான கருவாகிறது. என் தாத்தா ‘கடல் பூதம்’ கதையைச் சொன்னபோது எனக்கிருந்த ஆச்சரியம் இப்போதுள்ள குழந்தைகளுக்கும் இருக்கிறது. ‘பாட்டி வடை சுடும்’ கதை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உயிர் வாழப்போகும் அற்புதக்கதை. இப்பொழுது உள்ளவர்களில் யாராவது அதுபோன்ற ஒரு கதையை எழுத முடியுமென்று நினைக்கிறீர்களா?

குழந்தைகளின் நாடகக் கலைஞராக உருவானது எவ்விதம்?
பட்டாம்பூச்சி, கொட்டாங்கல்லு, ‘ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு ராஜா இருந்தான்’னு கேட்ட கதை, நம் கற்பனையைத் தாண்டி இருந்த தேசத்தில் இருந்த ராஜாக்கள், ராணிகள், குட்டி இளவரசர்கள், இளவரசிகள் என பாட்டி சொன்ன கதைகளையெல்லாம் சேட்டிலைட் கம்பிகள் பிடுங்கி எறிந்துவிட்டன. இரும்புக்கை மாயாவி பறந்துவரும் கனவுக்காடுகளில், கௌபாய் சண்டை நடக்கும் மெக்ஸிகன் மலைப்பாதைகளில்...

மனம் மாய வண்டாகிப் பறக்கற அனுபவத்தை இன்றைய குழந்தைகள் இழந்து விடுவது தலைமுறைத் துயரம். கூட்டாஞ்சோறு ஆக்கி விளையாடாமல், ‘கண்ணாமூச்சி ரேரே’னு பாடாமல் ஒரு தலைமுறையே வளர்ந்து விட்டதே என்ற அதிர்ச்சி, இப்பொழுது எல்லா நேரத்தையும் குழந்தைகளுக்காக செலவிட மனதை மாற்றிவிட்டது. நம்முடைய ரசனையை அவர்கள் மேல் திணிக்கிறோம்.

நமக்கான படங்களை அவர்களைப் பார்க்க வைக்கிறோம். ‘எங்கே ஏ.பி.சி.டி. சொல்லு... ரைம்ஸ் சொல்லு... ஒன் ப்ளஸ் ஒன் எத்தனை?’ என ஒரு குழந்தைக்கு கல்வி புகட்டுகிற அவசரத்தில், நம் தவிப்பையும் பதற்றத்தையும் அவர்கள் தலைமேல் வைக்கிறோம். நான் சின்னப் பிள்ளையாக இருந்தபோது ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி, குருவிகளோடு திரிந்தேன். இப்பொழுது என் செல்லக் குழந்தைகள் எல்லோரும் தொலைக்காட்சிக்கு முன் இருக்கிறார்கள்.

குழந்தைகளுக்காக என்னை மாத்திக்கிட்டேன். ஐரோப்பா, சுவிஸ், ஜெர்மன் பள்ளிகளில் என் கால் படாத இடமே இல்லை. ‘மூணு பேர் குல்லா போட்டா அழகா இருக்கும். அது நேரு, எம்.ஜி.ஆர்., வேலு சரவணன்’ என சுஜாதா எழுதினார். என் நாடகம் பார்த்துவிட்டு முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன் ‘ஒன்ஸ்மோர் வேலு மாமா’னு சொன்னார். நான் எல்லா புகழையும் குழந்தைகளுக்கு அர்ப்பணித்தேன்.

நம்மை, அவர்கள் பக்குவத்திற்கு  அழைத்து அரவணைக்கும்போது நாமே அதை கண்டுகொள்ளத் தவறுகிறோம். குழந்தைகளே நமக்கு நிறைய கற்றுத் தருகிறார்கள். அது வாத்தியார் - மாணவர் உறவு போன்று கண்டிப்பானதல்ல; ஒரு நண்பனிடம் தோளில் கை போட்டுப் பேசுவது போன்றது. நான் அவ்விதமே இருப்பதால் அவர்களோடு பழக்கமாக இருக்கிறேன். சும்மா ஊர் சுற்றிக்கொண்டு திரிந்த என்னை இந்த குழந்தைகள்தான் ஊரறிய, உலகறிய வைத்தார்கள்.

ஒரு நாடக மனிதனுக்கும் இந்த உலகத்துக்குமான தொடர்பு என்ன?
நாடகம் கலை மட்டுமல்ல, மிகப் பெரிய அறிவியல். கூட்டுக்குடும்ப நிலை மாறி தனித்தனி தீவுகளாக மனிதர்கள் வாழும் நிலை ஏற்பட்டுவிட்டது. கூட்டாக வாழும் மகிழ்ச்சியை இழந்த மனிதன் தனிமையின் துயரங்களைச் சேகரித்து வருகிறான். மனித நாகரிகத்தின் தெளிவான கண்ணாடியாக விளங்கும் நாடகம் மனிதர்கள் கூட்டாக சங்கமிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அது வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருகிறது.

‘இனி நாடகக்கலையே மிகச் சிறந்த கல்வியியல் வடிவமாக இருக்கும்’ என ஒருமுறை சொன்னீர்கள்... பள்ளிக்கூடங்களும், வகுப்பறைகளும் சூட்சுமம் மிகுந்த புதிர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. எழுத, படிக்க, வீட்டுப்பாடம், மனப்பாடம் செய்ய மட்டும் குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கூடத்தில் தங்களுக்காக காத்திருக்கும் புதியவற்றுக்காகவும், ஒருவரை ஒருவர் சந்திப்பதற்காகவும்
வருகிறார்கள்.

கற்பித்தலை நிகழ்த்தும் ஆசிரியர்களுக்கு ஏராளமான திறன்கள் தேவைப்படுகின்றன. வெறும் மேடையில் தோன்றி அம்மேடையை கடலாகவும், மலையாகவும் தன் குரல், உடல் அசைவுகள் மூலம் மாற்றும் நாடகக் கலைஞனின் திறன்கள் பள்ளி ஆசிரியரின் கற்பித்தல் திறனை சிறப்பிக்கச் செய்யும். குழந்தைகளை வெறுப்பேற்றும் பள்ளி, வகுப்பறை சூழல் மாறும். குழந்தைகளின் வளர் இதயம், மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடையும்.

உயரத்திலிருந்து குதித்து, விழுந்து, புரண்டு, தாவி, நீந்தி, சிரித்து, அழுது, மீண்டும் தன்நிலைக்கு திரும்பி மகிழ்வதே குழந்தைகளின் நடிப்பின் பொதுவான குணம். குழந்தைகளின் அழகே அப்படி இருப்பதுதான். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விஷயம் உண்மை. உண்மையாக இருப்பவர்களை அவர்கள் உடனே பின்பற்றுவார்கள். அன்பாகிவிடுவார்கள். அவர்களது வளரும் கற்பனையும் நமது கற்பனையும் சேர்ந்து புரியும் விளையாட்டுகள்தான் குழந்தைகள் நாடகம்.       
  
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

-நா.கதிர்வேலன்