அதிகம் விரும்பத்தக்க பெண்! ( COFFEE TABLE )



இந்தியாவின் டாப் மோஸ்ட் மாடலான ஸ்ரீநிதி ரமேஷ் ஷெட்டிக்கு மேலும் ஒரு மகுடம். ஆம்; 2016ம் ஆண்டின் இந்தியாவில் அதிகம் விரும்பத்தக்க பெண்ணாக ஸ்ரீநிதி தேர்வாகியிருக்கிறார். மிஸ் சூப்பர்நேஷனல் 2016, மிஸ் ஆசியா & ஓஷனியா 2016 என்ற இரண்டு பட்டங்களையும் ஒரே வருடத்தில் ஜெயித்த குதிரை ஸ்ரீநிதிதான்.

கன்னடத் திரையுலகிலிருந்து பொண்ணுக்கு ஆக்ட்டிங் ஆஃபர்ஸ் வந்து குவிகிறதாம். ‘‘நடிப்பு என் கேரியர் இல்ல. நான் நல்லா நடிப்பேன்னு எனக்கு நம்பிக்கையும் இல்ல. ஆனா, ‘ஸ்ரீநிதிதான் இந்த கேரக்டருக்கு 100% பொருத்தமா இருப்பா’னு பெரிய இயக்குனர்கள் தேடி வந்தால், ‘நோ’ சொல்ல மாட்டேன்!’’ எனச் சொல்லி சிரிக்கிறது பொண்ணு.

ரீடிங் கார்னர்

போர்ஹேயின் வேதாளம் / நுண்கதைகள் ஹெச்.ஜி.ரசூல்
[கீற்று வெளியீட்டகம், 1/47A அழகிய மண்டபம், முளகுமூடு அஞ்சல், குமரி மாவட்டம் - 629167. விலை: ரூ.120. தொடர்புக்கு: 97919 54174) தொடர்ந்து இயங்கி வருவதும், அதிலும் குறிப்பிடும்படியாக உலவி வருவதும் சுலபமல்ல. ரசூல் எப்பொழுதும் எல்ேலாரும் கவனிக்கத்தக்கபடிதான் எழுதி வந்திருக்கிறார். அவரை நம்பி புத்தகத்தை கையில் ஏந்தினால் ஏமாற்றமாட்டார். இதெல்லாம் அவரது பேரனுபவத்தின் விளைவு.

இந்தத் தடவை நுண்கதைகளுக்கு இடம் அளித்திருக்கிறார். நாம் எதிர்கொள்கிற அவசர உலகத்திற்கு இந்தப் புத்தகம் சுலபமாக இருக்கிறது. எழுதப்பட்ட விதம், புதுவகை அமைப்பில் அவ்வளவு சீராக இருக்கிறது. அருஞ்ெசாற்பொருள் சொல்லி நீதிபோதனை எல்லாம் இல்லை. ஆனால், மூடியிருந்த கதவெல்லாம் திறக்கிறது.

நிச்சயமாக ரசூலின் கடும் உழைப்பைக் கோரி பெற்றிருக்கிறது இந்த நுண்கதைகள். எப்போதுமே மலிவுப் பொருள்தான் மனித புத்திக்கு உடனே சென்று சேர்கிறது. நல்லவைகளும் வந்தடைவதற்கு ரசூல் காரணம். காய்த்தல், உவத்தல் இல்லாமல் படிக்கலாம். பெரும் சித்திரப்புனைவில் குறுங்கதைகள் நெய்யப்பட்டிருக்கின்றன. உள்ளங்கை பனித்துகள் போல பொலபொலவென கரையும் வேகம்.

‘என்னவொரு நுணுக்கம்’ என சில கணங்கள் கண்களை மூட வைக்கும் வித்வத்துவம். குறிப்பிட்ட வகையில் இல்லாமல் மீறிச் செய்யும் கலை உத்தி இருக்கிறது. ஒவ்வொரு கதையிலும் ஒரு ஹார்மனி இருக்கிறது. இந்த வகை எழுத்தில் மேலும் அவர் தொடர்ந்தால் புதையல்கள் வெளிவர வாய்ப்பிருக்கிறது. ‘நான் சொல்றேன், நீ கேட்டுக்கோ’ என்ற தொனி இல்லாமல் சிநேகிதமான வாசிப்பில் நகர்கிறது. அதனாலும் முக்கியமான நூல்.

சீனாவைப் பின்னுக்குத் தள்ளும் இந்தியா!

இன்னும் ஏழு வருடங்களில் இந்தியா ஒரு சாதனையை நிகழ்த்தவிருக்கிறது. சீனாவை முறியடித்து, உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா என்பதுதான் அந்த சாதனை. சீனாவின் இப்போதையை மக்கள்தொகை சுமார் 140 கோடி. இந்தியாவின் மக்கள்தொகை 134 கோடிக்கு அருகாமையில் இருக்கிறது.

‘‘2024ம் ஆண்டில் இந்தியா 144 கோடியை எட்டிவிடும். அப்பொழுது சீனாவின் மக்கள்தொகை நம்மைவிட குறைவாகத்தான் இருக்கும்!’’ என்கிறது ஓர் ஆய்வு. இந்த நிலையில் ‘‘இந்தியாவில் குழந்தை பிறப்பின் சராசரி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதனால் மக்கள்தொகை உயராமல் கட்டுக்குள் வரும்...’’ என்று ஆறுதலளிக்கிறார்கள் நிபுணர்கள்.

சைலண்ட் கார்னர்

மகாபாரதம் (கதை மாந்தர்கள்) பிரபஞ்சன்
(நற்றிணை பதிப்பகம், 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600005. விலை: ரூ.300. தொடர்புக்கு: 9486177208) மகாபாரதத்தின் மிகச் சிறந்த கதை மாந்தர்களைப் பற்றிய நூல் இது. பிரபஞ்சனைப் பொறுத்தவரை அவருக்கு எப்போதும் லட்சிய ஆளுமைகளின் மீது மிகுந்த ஈர்ப்புண்டு.

உலகத்தின் முதல் பயோகிராஃபி என எழுதத் தொடங்கி மிக முக்கிய கதாபாத்திரங்களின் தன்ைம, இயல்பு, அவர்களின் பெருந்தன்மை, குற்றம், விபரீதம், வக்கிரம் என அபூர்வமான வடிவில் எழுதிச் செல்கிறார். மனிதர்களின் அத்தனை உள் வகைகளையும், முகங்களையும், மறுபக்கத்தையும் மகாபாரதத்திலேயே பார்த்துவிட முடிகிறது.

மொத்தமான மகாபாரதத்தை உள்வாங்கி, பிறகு தனித்து ஒவ்வொருவரின் சாயல்களையும், இயல்பையும் அவ்வளவு கணித்து நெய்திருக்கிறார். வேடிக்கையான விஷயம் இல்லை, மிகுந்த யத்தனம் தேவைப்படும் எழுத்து. அத்தனையும் மனத்திரையில் ஓடவிட்டு எடுத்து, எடுத்து கோர்க்க வேண்டிய உழைப்பு.

திரௌபதி, பீஷ்மர், காந்தாரி, கர்ணன், அர்ச்சுனன், கிருஷ்ணன்... என மென்மேலும் பரந்து செல்லும் மனிதர்களின் பக்குவ சித்தரிப்பு. ஐம்பது கதாபாத்திரங்களின் மன அமைப்பை விரல் நுனியிலும், மன ஓட்டத்திலும் வைத்துக்கொண்டு எழுதிவிடுவது சாதாரண வேலையில்லை. நல்ல இலக்கியங்கள் என்பதே போதனா இலக்கியங்களாகத்தான் அமையும். அப்படிப்பட்ட மகாபாரதத்தையே நம் புத்தி கொள்முதலாக மாற்றி எடுத்துக் காட்டுவது தெளிவும், தீர்க்கமும் கலந்தது. பிரபஞ்சனால் மட்டுமே இது முடியும்.

100 விதமான அசத்தல் நடை!

அமெரிக்காவின் போர்ட்லாண்ட் நகரில் வசித்து வரும் கெவின் பாரி ‘stop-motion’ அனிமேஷனில் புகழ் பெற்றவர். வேடிக்கையான செயல்களில் ஈடுபட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பது அவரது ஹாபி. சமீபத்தில் ட்ரெட்மில்லில் நூறு விதமான நடை நடந்து அதை வீடியோவாக்கி தனது யூ டியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது சமூக வலைத்தளங்களை ஆச்சரியத்தில் அதிர வைத்திருக்கிறது. சிம்பன்ஸியின் நடை, கோபக்கார மனிதனின் நடை, முதியவரின் நடை, இருட்டில் நடப்பவன், சோம்பேறியின் நடை, தூக்க கலக்கத்தில் நடை... என கலந்துகட்டி நடந்திருக்கிறார் மனிதர். அந்த வீடியோவை ஃபேஸ்புக்கின் ‘NTD Life’ பக்கத்தில் ‘100 Walks-which one are you?’ என்ற தலைப்பில் பதிவிட, 31 லட்சம் பேர் பார்த்தும், 55 ஆயிரம் பேர் ஷேர் செய்தும் மகிழ்ந்துள்ளனர்.

-குங்குமம் டீம்