இவன் தந்திரன்



இன்ஜினியரிங் படித்து விட்டு தகுந்த வேலை கிடைக்காமல் பழைய செல்போன், லேப் டாப் விற்கும் கடை நடத்துகிறார்கள் நண்பர்கள் கௌதம் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி. அவர் வாழ்க்கை முதற்கொண்டு மற்ற மாணவர்களின் வாழ்க்கையை பணத்துக்காக சிதைக்கிறார் அமைச்சர்.

தொடர்ந்த அவரின் சூழ்ச்சிகளுக்கும், சூதுகளுக்கும் மத்தியில் கௌதம் அவர்களை வேரறுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றாரா என்பதே கதை! காணும் இடந்தோறும் முளைத்துக் கொண்டிருக்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள். அவை சரியான முறையில் அமைக்கப்படுகிறதா, குறைந்தபட்ச வசதிகளாவது அதில் இருக்கிறதா...

அரசு கண்காணிப்பாவது அதில் நடைபெறுகிறதா? அரசியல்வாதிகளின் மனம் கொள்ளாத பணத்தாசைக்கு கடைசி வரை என்னதான் முடிவு? சாமான்ய மக்களின் ஏக்கங்களை, பரிதவிப்பை உணர்ந்து கேள்விகளை முன்வைக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். ஆரம்ப கதை சொல்லலுக்குத் தக்கவாறு பவர்ப்ளே ஏரியா அமைந்து விட்டது. அதையே உள்வாங்கிக் கொண்டு திரைக்கதை சூடு பறக்கிற அளவிற்கு உழைத்திருக்கிறார் டைரக்டர்.

நிறைய முன்னேறி விட்டார் கௌதம். ஆரம்பப் படங்களில் தடுமாறியவர், இப்போது கணிசமாக கேரக்டரின் தன்மையில் பொருந்திப் போகிறார். நவரச நாயகன் என அப்பா பெயரெடுத்ததை, இப்போதுதான் காதில் வாங்கி போட்டுக் கொண்டிருக்கிறார் போல! நண்பனாக கை கொடுக்கிறார் பாலாஜி.

துடுக்குப் பேச்சிலும், அடுத்தடுத்து உதிர்க்கும் ஜோக்குகளிலும், நகைச்சுவையிலும் கெட்டி. பல இடங்களில் மனிதர் செம ஸ்கோர்! அல்லு சில்லு வசனங்களில் அடிக்கடி எஃபெக்ட் கொடுக்கிறார் பாலாஜி. குடும்ப குத்துவிளக்காகவே இருக்கிறார் ஸ்ரத்தா. சொல்லிக் கொள்கிற மாதிரி நடிக்காவிட்டாலும், பாந்தமான அழகில் மனதில் நிற்கிறார்.

நிலைத்து நிற்க வேண்டுமென்றால் இன்னும் நடிப்பில் சிரத்தை காட்டுவது அவசியம். கௌதம் அடிக்கடி இடையூறாக வந்து டார்ச்சர் கொடுக்கும்பொழுதெல்லாம் எரிச்சல் ஆவது, வகை தொகை இல்லாமல் விறைப்பு காட்டுவது என வில்லனாக சூப்பர் சுப்பராயன் கச்சிதம். எந்த நிலையிலும் பதறாமல் எதிராளியின் சைக்காலஜி யை சிதைப்பதாகட்டும், கோபத்தில் வெடிப்பதாகட்டும், பக்கா வில்லன்.

அரசியல்வாதியின் தகிடுதித்தங்களை நவீன கேமரா வளர்ச்சியில் கொண்டு போய் நிறுத்தி கண்டுபிடிப்பது சுவாரஸ்யம். அதில் விஞ்ஞானம்
கலவையாக சேர்ந்திருப்பது தமிழுக்கு கொஞ்சம் புதுசு. எஸ்.எஸ்.தமனின் பின்னணி இசை பரபரப்பு. ஆனால், பாடல்களில் வித்தையை காட்ட மறந்து விட்டார். படத்திற்கான டெம்போவை தக்க வைக்கிறது பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு.

ஒரு சின்ன வீட்டின் முகப்பிலேயே நடக்கும் அந்த சண்டையே அவரது திறமைக்கு சான்று. முதல் பாதியில் மாணவர்களின் எதிர்காலம், கல்வித்துறை கலங்கி நிற்கும் விதம் என எடுத்துச் சென்று இரண்டாம் பாதியில் அவ்வப்போது சுணங்கி நிற்கிறது. ஆளாளுக்குப் பேசுகிற வசனங்கள் பக்கம் பக்கமாய் நீள்கிறது.

இருந்தாலும் கல்வித்துறையின் முறைகேடுகளை அழுத்தமாக பதிவு செய்தவகையில் கண்ணனுக்கு சலாம்! மாணவர்களின் ஆதார நலத்திற்கு, நல்வாழ்க்கைக்கு கேடு விளைவிப்பவர்களை அடையாளம் காண்பதால், புத்தியைத் தீட்டச் சொல்வதால், ‘தந்திரன்’ கவர்கிறான்.

-குங்குமம் விமர்சனக்குழு