மணக்கும் மல்லிகை விவசாயம்!



சென்னை அருகே ஓர் ஆச்சரிய கிராமம்
 
மல்லி என்றாலே மதுரைதான் மனதில் நிழலாடும். ஆனால், சென்னை மாநகரிலும் அதே மல்லி வாசம் மணக்கிறது  ஒரு கிராமத்தில்! நம்ப முடியாதவர்களை அன்புடன் வரவேற்கிறது கவுல் பஜார். சென்னை விமானநிலையத்திற்குப்  பின்புறம், அடையாற்றின் கரையில் அமர்ந்திருக்கிறது இச்சிறு கிராமம்.பரபரப்பான மாநகரச் சூழலுக்கு மத்தியில்  அமைதியாக மல்லி மற்றும் முல்லைப் பூக்கள் விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இங்கு மாநகர வாடை  துளியும் இல்லை.

கையெட்டும் தூரத்தில் விமானங்கள் பறக்கின்றன. ஒரு பக்கம் மல்லியும் முல்லையும் என்றால் இன்னொருபக்கம்  பாலைக் கீரையும், அரைக்கீரையும் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே புடலங்காய், பாகற்காய்,  பீர்க்கங்காய், அவரைக்காய் கொடிகள் களைகட்டுகின்றன.‘‘சென்னைல பூ விவசாயம்னு சொன்னாலே அது கவுல்  பஜார்தான். அந்தளவுக்கு இங்க மல்லியும் முல்லையும் பயிரிடறோம். ஒரு காலத்துல ஓகோனு நடந்த விவசாயம்,  இன்னைக்கு குறைஞ்சு போச்சு...’’ மல்லியை கையில் கிள்ளி எடுத்தபடியே நம்மிடம் பேசினார் விவசாயி அருள்.  தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

‘‘எங்கப்பாவுக்கு 85 வயசு. அந்தப் பக்கமா அவர் விவசாயம் பார்த்துட்டு இருக்கார். அவருக்கடுத்து இப்ப நான்  பார்க்கறேன். எனக்குப் பிறகு என்னோட பசங்க பார்ப்பாங்களானு தெரியல. எனக்கு ஒத்தாசையா மனைவி இருந்தாங்க.  இப்ப அவங்களுக்கு உடம்பு முடியல. அதனால, பூவை விட காய்கறிகள் நிறைய போட்டிருக்கிறேன்...’’ என அருள்  சொல்லும்போதே, கூடை கூடையாக தலையில் அவரைக்காய்களைச் சுமந்து கொண்டு பெண்கள் வருகிறார்கள்.‘‘இவங்கெல்லாம் இந்திராநகர் பகுதியிலிருந்து கூலிக்கு வர்றாங்க...’’ என்ற அருள் தொடர்ந்தார்.

‘‘மல்லியைப் பொறுத்தவரை மார்ச் தொடங்கி செப்டம்பர் வரை விளையும். வெயில் காலங்கள்ல நிறைய கொடுக்கும்.  மழை வந்துட்டா மல்லி அடங்கிடும். ஆனா, முல்லை அப்படியில்ல. பிப்ரவரியிலிருந்து டிசம்பர் வரை எல்லா  சீசன்லயும் கிடைக்கும். மழை எவ்வளவு பெஞ்சாலும் பூத்துட்டே இருக்கும். நாங்க இந்தப் பூக்களை பறிச்சு  கோயம்பேட்டுக்கு அனுப்பிடுவோம். முன்னாடியெல்லாம் பூவா கட்டி அனுப்புவோம். இப்ப பூ கட்ட ஆட்கள் இல்ல.300 கிராம் பூவை ஒரு எடை அல்லது ஒரு சேர்னு சொல்வோம்.

அந்தக் கணக்குல பூக்கள் போகும். நாளுக்கு ஒரு ரேட் இருக்கும். அங்க வியாபாரிங்க வித்தபிறகுதான் எங்களுக்குப்  பணம் கொடுப்பாங்க. ஒரு நாளைக்கு இங்கிருந்து குறைஞ்சது 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் கிலோ பூக்கள்  கோயம்பேட்டுக்குப் போகுது...’’ என்றார்.அடுத்து, புடலங்காய்களை ஒரு சட்டியில் அடுக்கி எடுத்து வரும் சுரேஷ் என்ற  இளைஞரைச் சந்தித்தோம். பத்தாவது வரை படித்தவர்.

‘‘விவசாயம் ரொம்பப் பிடிக்கும். அதனால, தாத்தா, அப்பாவிற்குப் பிறகு நானும் விவசாயம் செய்றேன். என்கிட்ட ஆறு  பேர் வேலை பார்க்கறாங்க. புடலங்காய் தவிர, கத்தரிக்காய், பாகற்காய், கீரைகள் எல்லாம் போடறோம். ஒவ்வொரு  நாளும் விளையறதை பல்லாவரம், பம்மல், பொழிச்சலூர் கடைகள்ல கிலோ பத்து ரூபானு போட்டுடுவோம்.
தினமும் 50 கிலோ அறுப்போம். நடுவுல மல்லி, முல்லைப்பூ வேலையும் நடக்கும். இங்க பூ மட்டும் விவசாயம்  பண்ணினா வருமானம் பத்தாது. காய்கறி இருக்கிறதாலதான் ஓரளவு தாக்குப்பிடிக்க முடியுது...’’ என்றார்.

அருகிலிருந்த தோட்டத்தில் கோபால், டில்லிபாபு என்ற இரு இளைஞர்கள் விளைந்த காய்கறிகளை எடை போட்டுக் கொண்டிருந்தனர். அதை பெண்கள் கவர்களில் அடுக்கிக் கொண்டே இருக்கின்றனர்.‘‘எங்களுக்குச் சொந்தமா 50 சென்ட்  நிலம் இருக்கு. இன்னும் கூடுதலா ஆறரை ஏக்கர் லீசுக்கு எடுத்து விவசாயம் பண்றோம். பாலைக் கீரை, சிறுகீரை,  அரைக்கீரை, புளிச்சகீரை, கத்திரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், மல்லி, முல்லைனு நிறைய விளைவிக்கிறோம். 12 பெண்கள் ரெகுலரா வேலை பார்க்கறாங்க. அவங்க உதவியோடு விவசாயம் சிறப்பா நடக்குது. காய்கறிகளை பாக்கெட் போட்டு நாங்களே விற்போம்.

பக்கத்துல உள்ள கடைகளுக்கும் அனுப்புவோம். நாட்டுக்காய் ஃப்ரஷ்ஷா  கிடைக்கிறதால நிறைய பேர் வாங்கறாங்க. மாசம் ரூ.50 ஆயிரம் வரை கிடைக்குது. செலவுகள் போக நானும், தம்பியும்  பகிர்ந்துப்போம்...’’ என்றவரை அடுத்து, அரைக்கீரையை தன் மகனுடன் சேர்ந்து அறுத்துக் கொண்டிருந்தார் மணி.‘‘கீரையைப் பொறுத்தவரை இங்க எல்லோரும் ஒரே மாதிரி விதைக்க மாட்டாங்க. ஒருத்தர் அரைக்கீரை போட்டா  இன்னொருத்தவர் பாலைக்கீரை போடுவாங்க. இன்னொருத்தர் சிறுகீரை விதைப்பாங்க. எல்லோரும் ஒரே கீரை போட்டா  விலை கிடைக்காதே! அதனால நாங்களே பேசி அதுக்கேத்த மாதிரி பயிரிடுவோம்.

நானும் ஒரு ஏக்கர் நிலம் ஒரு லட்சம்னு குத்தகைக்கு எடுத்துதான் விவசாயம் பண்றேன். விதை போட்டு 30 நாட்கள்ல  கீரை விளையும். அப்புறம், 15 நாட்களுக்கு ஒரு தடவை அறுக்கலாம். லோக்கல்ல ஒரு கட்டு 7 ரூபாய்க்குப்  போடறோம். அவங்க வெளில 15 ரூபாய்க்குக் கொடுப்பாங்க. வெளிய வேலைக்குப் போனா மாசம் பத்தாயிரம்தான்  கிடைக்கும். விவசாயம் செஞ்சா தினமும் 500, 600 ரூபா சம்பாதிக்கலாம்...’’ என்றார்.மீண்டும் மல்லித் தோட்டம்.  நிறைய பெண்கள் மல்லியைக் கிள்ளி சாக்குப் பையில் நிறைத்துக் கொண்டிருந்தனர்.

‘‘இங்க வேலை செய்ற பெண்களுக்கு ஒரு நாளைக்கு சாப்பாடு, டீ செலவு போக 250ல இருந்து 350 ரூபா வரை  கொடுக்கறோம். காலைல 7 மணிக்கு வந்துட்டு மாலை 5 மணிக்குப் போவாங்க...’’ என்றார் அங்கிருந்த விவசாயி  பாபு.‘‘எங்களுக்கு உர மானியம் கிடைக்கறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. பட்டா காட்டி, அதிகாரிகள் கையெழுத்து  எல்லாம் வாங்கிக் கொடுத்து பெறவேண்டியிருக்கு. இதை சரிசெஞ்சா இன்னும் எங்களால சிறப்பா விவசாயம் செய்ய  முடியும்...’’ என்றார் அருள் நிறைவாக!    l

கவுல் பஜார் டேட்டா


* ஒரு காலத்தில் இங்கே 500 ஏக்கரில் விவசாயம் நடந்தது. 100 ஏக்கர் வரை ஏர்போர்ட் விரிவாக்கத்திற்குப்  போய்விட்டதால் இப்போது 400 ஏக்கரில் விவசாயம் செய்கிறார்கள். இதில், 300 ஏக்கர் மல்லி, முல்லை என்றால் மீதி  100 ஏக்கரில் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன.
* கிணற்றுப் பாசனத்தை நம்பியே விவசாயம் நடக்கிறது.
* முன்பு சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் விவசாயத்தை நம்பி இருந்தன. இப்போது போதிய வருமானம் இல்லாததால்  ஆயிரம் குடும்பங்களாகச் சுருங்கிவிட்டது.
* மல்லிக்கான நாற்றை ராமேஸ்வரம் அருகிலுள்ள தங்கச்சிமடத்திலிருந்து வாங்கி வருகின்றனர். அதுதான்  கவுல்பஜாரின் களிமண்ணுக்கு ஏற்றதாக உள்ளது.
* இதை மதுரை மல்லி என்றே குறிப்பிடுகின்றனர். முப்பது வருடங்களுக்கு முன்பு நாட்டு மல்லி பயிரிட்டுள்ளனர்.  மகசூல் குறைந்ததாலும், நாட்டு மல்லி இந்த மண்ணுக்கு சரியாக வரவில்லை என்பதாலும் மதுரை மல்லியை  நடுகின்றனர்.  

- பேராச்சி கண்ணன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்