தமிழ் சினிமா ஸ்டிரைக்



ஏன்... எதற்கு..?

விரிவான அலசல்


கோலிவுட்டில் இப்பொழுதே கொளுத்தும் கோடை. அத்தனை சினிமா யூனியன்களிலும் அனலாய் அவசர மீட்டிங்ஸ்  பரபரக்கின்றன. புதுப் படங்கள் வெளியாகவில்லை. புதுப்பட பூஜை, இசை வெளியீட்டு விழாக்கள், போஸ்ட்  புரொடக்‌ஷன் வேலைகள், வெளிமாநில / வெளிநாடுகளில் திட்டமிடப்பட்ட ஷூட்டிங்ஸ் என சினிமாவின் நாடி  நரம்புகள் அத்தனையும் இந்த திடீர் ஸ்டிரைக்கால் திக்குமுக்காடுகிறது. தமிழ் சினிமாவில் என்ன பிரச்னை? ஏன்  ஸ்டிரைக்? எப்போது முடிவுக்கு வரும்? சம்பந்தப்பட்டவர்களிடம் பேசினால், அதிர்ச்சியும் ஆச்சரியமும் குவிகின்றன.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடந்தது. அதில் இந்த மார்ச் ஒன்றாம்  தேதியில் இருந்து புதுப்படங்களின் வெளியீடுகள் நிறுத்தப்படும் என்பது உட்பட பல தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டன.  சங்கத்தில் மீட்டிங் நடப்பதும், தீர்மானங்கள் நிறைவேற்றப்படு வதும் வழக்கமான ஒன்றுதான் என ரிலாக்ஸாக  இருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி. நிஜமாகவே, ஒன்றாம் தேதியில் இருந்து புதுப்படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. தமிழகத்தில்  உள்ள 1069 (அதில் 900 தியேட்டர்கள் க்யூப் வசதி என்கிறார்கள்) திரையரங்குகளிலும் கூட்டம் வராததால், பல  தியேட்டர்கள் தங்கள் ஷோக்களை குறைத்தன.

இந்நிலையில், தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நியாயமான கோரிக்கைகளை / உரிமைகளை  நிறைவேற்றவும் மார்ச் 16 முதல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள், புதிய திரைப்படங்களின்  படப்பிடிப்பை தொடங்குவது உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் நிறுத்தி வைப்பது என  தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தவுடன், ஸ்டிரைக் தீவிரமானது. தயாரிப்பாளர்களின் இந்த முடிவுக்கு பெப்சியும் தன்  ஆதரவை அளித்துள்ளது.

புதுப்படங்கள் ரிலீஸ் ஆகாததால் மக்கள் தியேட்டர்களுக்கு படையெடுக்கவில்லை. எனவே தியேட்டர்கள்களில்  காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் வேறு ஒரு  டாபிக்கில் போராட்டத்தில் குதித்தது.  அவர்களும் அவர்கள் பங்குக்கு பல தீர்மானங்களை நிறைவேற்றினர். கடந்த 16ம்  தேதியில் இருந்து சென்னையில் மல்டிபிளக்ஸ் தவிர மற்ற திரையரங்குகளில் பல ஸ்டிரைக்கில் பங்கேற்று  வருகின்றன.

உண்மையில் தயாரிப்பாளர்களின் பிரச்னைதான் என்ன என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளரான  எஸ்.ஆர்.பிரபுவிடம் கேட்டோம்.
 
‘‘இது தயாரிப்பாளர்களுக்கும், க்யூப்புக்கும் இடையிலான பிரச்னை என்று சுருக்க முடியாது. வேறு பல சிக்கல்களுக்கும்  தீர்வு காணும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும். ஒரு தியேட்டரில் 70 நாட்கள் ஒரு படம் ஓடுவதாக வைத்துக்  கொள்வோம். இதற்கான லாபக் கணக்கை கேட்டால் சொல்ல மறுக்கிறார்கள். சரியான தகவல்கள் தயாரிப்பாளர்களுக்கு  வந்து சேர்வதில்லை. டெக்னாலஜி இன்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு முன்னேறியுள்ளது. 2K தரத்தில்  உள்ள ஒரு முழுப்படத்தையும் சில மணிநேரங்களில் நம் ஊருக்குள் க்யூப் வழியே அனுப்பிவிட முடியும்.

அப்படியிருக்க, படம் ஓடியதற்கான மொத்த வசூல் கணக்கும் எவ்வளவு என்று இ மெயில் அனுப்ப மறுக்கிறார்கள்.  இப்படியொரு மெயில் அனுப்ப 2kb டேட்டா கூட ஆகாது.  மார்ச் 1ம் தேதி முதல் பேச்சு வார்த்தை நடக்கிறது.  இச்சூழலில் ஸ்டிரைக்கை திசை திருப்பும் நோக்கத்துடன் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டுமென்று தியேட்டர்  உரிமையாளர்கள் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்! ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகும் திரையரங்குக்கு கூட்டம்  வரத்தானே செய்கிறது? இன்னும் சிலர் புத்திசாலித்தனமாகக் கேட்பதாக நினைத்து, ‘இது தென்னிந்திய தயாரிப்பாளர்கள்  சேர்ந்து நடத்தும் ஸ்டிரைக்தானே? பிறகு ஏன் கர்நாடக தயாரிப்பாளர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை..?’ என்று  கேட்கிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு கட்டமைப்பு இருக்கிறது. அதன்படி அவர்களது நடவடிக்கைகள் / போராட்டங்கள்  தொடர்கின்றன. இன்னொரு விஷயம், ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் தரும் வர்த்தகமாகத்தான் திரையுலகை நம்  அரசாங்கம் பார்க்கிறது. இதற்குப் பின்னால் பல லட்சம் தொழிலாளர்களின், அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரங்கள்  அடங்கியிருக்கின்றன. இதை அரசாங்கம் மறந்துவிடுகிறது. இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கத்தான் இந்த ஸ்டிரைக்...’’  என்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

இதை ஆமோதித்தபடி தொடர்கிறார் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவரான  ஆர்.கே.செல்வமணி.

‘‘முன்பு தமிழகம் முழுக்க 2500 திரையரங்குகள் இருந்தன. அதில் 1000 தியேட்டர்கள் ஏ சென்டர், 800 தியேட்டர்கள்  பி சென்டர், 600 - 700 தியேட்டர்கள் சி சென்டர் என பிரிக்கப்பட்டிருந்தன. தங்கள் பொருதாளாதார நிலைக்கு ஏற்ப  மக்களாலும் படங்களைப் பார்க்க முடிந்தது. ஆனால், இப்போது மொத்தமே ஆயிரம் தியேட்டர்கள்தான் இருக்கின்றன.  இவை அனைத்துமே மேல்தட்டு மக்களுக்கானவை. இப்படியிருந்தால் குறைந்த டிக்கெட்டில் படம் பார்க்க நினைக்கும்  அடித்தட்டு மக்கள் எப்படி தியேட்டருக்கு வருவார்கள்? திரைப்படத் தொழிலை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு  இருக்கிறது.

நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் சினிமாவை நம்பி இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு (2017) திரைப்படங்களின் சக்சஸ் ரேட் 11% உயர்ந்திருக்கிறது. 22 படங்கள்தான் வெற்றி என்கிறார்கள்.  ஆனால், அந்தத் தயாரிப்பாளர்களுக்கு லாபம் போய்ச் சேரவில்லை. 200க்கும் குறைவான தயாரிப்பாளர்கள்தான்  இப்போது படங்களை எடுத்து திரையுலகை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வரிச்சலுகை, மானியம் என தற்காலிக  நிவாரணம் சார்ந்து கவனம் செலுத்துவதை விட,  இந்தத் தொழிலைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என்று யோசிப்பதே  புத்திசாலித்தனம்.

அரசு இந்த முயற்சியில் இறங்க வேண்டும்...’’ என்கிறார் ஆர்.கே.செல்வமணி. தயாரிப்பாளர் தனஞ்செயன்  முக்கியமான விஷயத்தை பதிவு செய்கிறார். ‘‘ஃபிலிம் இருந்த காலத்தில் தியேட்டர்களுக்கு பிரிண்ட் அனுப்புவோம்.  அப்போது திரையரங்க உரிமையாளர்கள் புரொஜக்டரும் வைத்திருந்தார்கள். கன்டன்ட் மட்டும் அனுப்பினால் போதும்  என்ற நிலை இருந்தது. இப்போது அப்படியில்லை. தியேட்டர்களில் புரொஜக்டர் வைத்திருப்பதற்கும் சேர்த்து  தயாரிப்பாளர்களிடமே பணம் வாங்குகிறார்கள். திருட்டு டிவிடி, மொபைல்ல டவுன்லோடு, ஜிஎஸ்டி என ஏற்கனவே  சினிமா பல பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் முழி பிதுங்கி நிற்கிறது.

தியேட்டர் உரிமையாளர்களுக்கும் டிஜிட்டல் புரொஜக்‌ஷன் உரிமையாளர்களுக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதால்  தயாரிப்பாளருக்கு நியாயமாக வர வேண்டிய பணம் வருவதில்லை. திரையரங்குகளில் காட்டப்படும் விளம்பரத்  தொகையை அவர்கள் இருவருமே பிரித்துக் கொள்கிறார்கள். விளம்பரங்களைப் பார்க்கவா மக்கள் தியேட்டர்களுக்கு  வருகிறார்கள்? படம் பார்க்கத்தானே! தயாரிப்பாளர்கள் கன்டன்ட் கொடுத்தால்தானே விளம்பரங்கள் வழியே சம்பாதிக்க  முடியும்? எனவே, விளம்பரங்கள் வழியே வரும் தொகையிலும் தயாரிப்பாளர்கள் ஷேர் கேட்கிறோம்.

முக்கியமான விஷயம். ஆன்லைன் வழியே டிக்கெட் புக் பண்ணுவதற்கான கட்டணத்தைக் குறைத்தே ஆக வேண்டும்.  டிக்கெட் விலை ப்ளஸ் ஆன்லைன் சார்ஜஸ் என மொத்தமாக ஒரு டிக்கெட்டுக்கு ரூ.204 கொடுக்கும் நிலையில்  மக்களின் வாழ்வாதாரம் இல்லை. டிக்கெட் கட்டணம் குறைந்தால்தான் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள்...’’  என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

இதே கருத்தைத்தான் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்  தலைவரான டி.ஏ.அருள்பதியும் வலியுறுத்துகிறார்.

‘‘இது நியாயமான போராட்டம். சினிமா டிஜிட்டலுக்கு மாறியதும் திரையரங்கங்களும் அத்தொழில் நுட்பத்துக்கு  மாறியது. QUBE, UFO, PXD மாதிரியான நிறுவனங்கள் தியேட்டர்களில் டிஜிட்டல் புரொஜக்டர்களை நிறுவினார்கள்.  இதற்கான VPF கட்டணத்தை தியேட்டர்களிடம் இருந்து வசூலிக்க மாட்டோம் என்றார்கள். ஆனால், க்யூப்  இத்தொகையை மறைமுகமாக தயாரிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கத் தொடங்கியது. இப்படி நடப்பதே இரண்டு /  மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் அனைவருக்கும் தெரிந்தது.

அதிர்ச்சியடைந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டபோது அவர்கள் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை.  ‘நாங்க மும்பைல கேட்டுத்தான் சொல்ல முடியும். எங்க ஹெட் ஆபீஸ் தில்லில இருக்கு. அவங்களைத்தான்  கேட்கணும்...’ என சாக்குப்போக்கு சொல்லத் தொடங்கினார்கள். இவை எல்லாம் நடக்கும்போதும் தயாரிப்பாளர்களிடம்  இருந்து அவர்கள் வசூல் செய்வதை நிறுத்தவில்லை. இதுபோக யூ டியூப், ஆன்லைன் சேவை, புக்கிங் சேவை என்று  சொல்லி மேலும் சுரண்டத் தொடங்கினார்கள்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி தயாரிப்பாளர்களும் இப்போது ஒன்று சேர்ந்து போராட்டம்  அறிவித்த பிறகுதான் இறங்கி வந்து பேச்சுவார்த்தைக்கே வருகிறார்கள். பத்து வருடங்களுக்கு மேலாக  புரொஜக்டருக்கான தொகையை தயாரிப்பாளர்கள் செலுத்திய பிறகும், தேய்மானம், கழிவு போக விலைக்கு தரும்படி  கேட்டும் க்யூப் நிறுவனம் அதை விற்கத் தயாராக இல்லை. ‘உங்க இன்ஸ்ட்ரூமென்ட் வேண்டாம். நாங்க சோனி மாதிரி  வேற பிராண்ட் வைச்சுக்கறோம்’ என திரையரங்க உரிமையாளர்கள் சொன்னபோதும் க்யூப் அதற்கு  செவிசாய்க்கவில்லை.

இந்த ஸ்டிரைக்கால் விநியோகஸ்தர்களுக்கு வெறும் 5% பாதிப்புகள்தான். தயாரிப்பாளர்களுக்குத்தான் மொத்த பாதிப்பும்.  தயார் நிலையில் இருக்கும் படங்கள் வெளியாகாததால் அதற்கான வட்டி எகிறும். இப்படிப்பட்ட சூழலிலும்  தயாரிப்பாளர்கள் போராடுகிறார்கள் என்றால் எந்தளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதைப் புரிந்து  கொள்ளலாம்...’’ என நிதர்சனத்தை கண்முன் நிறுத்துகிறார் அருள்பதி.  

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளரான பன்னீர்செல்வம் வேறொரு தகவலை சொல்கிறார்.

“திரையரங்குகளுக்கு அரசு 8% கேளிக்கை வரி விதித்துள்ளது. இதை முற்றிலும் நீக்கவேண்டும் என  வலியுறுத்துகிறோம்.  திரையரங்குகளுக்கான லைசென்ஸ் இப்போது வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது.  அதனை 3 வருடங்களுக்கு ஒருமுறை என மாற்ற வேண்டும். போலவே திரையரங்குகளில் உள்ள இருக்கைகளைக்  குறைத்துக் கொள்ளவும் அரசு அனுமதி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசும் ஒப்புக் கொண்டிருக்கிறது.  ஆனால், இதுவரை இதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் தியேட்டர்களை மூட முடிவு  செய்துள்ளோம். மற்றபடி ஸ்டிரைக்கின் தீவிரம் பற்றி  மீண்டும் சங்க கூட்டத்தில் பேசிய பின்தான் சொல்ல  முடியும்...’’ என்கிறார் பன்னீர்செல்வம்.

இப்படி ஒட்டுமொத்தமாக அனைவரும் க்யூப் நோக்கி குற்றம்சாட்டும் நிலையில், அவர்கள் என்ன சொல்கிறார்கள்?  விவரம் அறிய க்யூப்பின் இணை நிறுவனரான ஜெயேந்திராவிடம் பேசினோம்.

‘‘ஆந்திரா, கர்னாடகா, கேரளா, தமிழ்நாடு என தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் எங்களிடம் 25% டிஸ்கவுன்ட்  கேட்டார்கள். நாங்களும் சம்மதித்து
டிஸ்கவுன்ட் கொடுத்தோம். தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் ஸ்டிரைக் இல்லை. அங்கெல்லாம் திரையரங்குகள்  மூடப்படவில்லை. இங்குதான் விடாப்பிடியாகப் போராடுகிறார்கள். ஒரு விஷயத்தை மனதில் கொள்வது நல்லது.  உலகம் முழுக்கவே திரையரங்க விளம்பரங்களில் வரும் தொகையில் ஒரு பகுதியை - ஷேரை - தயாரிப்பாளர்களுக்கு  கொடுப்பதில்லை.

இன்று சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் தியேட்டர்கள் எப்படி இருக்கின்றன என்பது அனைவருக்குமே தெரியும்.  மக்களும் அமேசான், நெட்ஃபிளிக்ஸ், யூ டியூப் என இருந்த இடத்திலிருந்தே படங்களை சவுகரியமாக பார்க்கப் பழகி  விட்டார்கள். இந்நிலையில் தியேட்டர்களை மூடினால் மறுபடியும் கூட்டத்தை திரையரங்குக்கு வரவைப்பது சிரமம்.  எனவே ஸ்டிரைக் வேண்டாம் என எங்கள் தரப்பில் சொல்கிறோம். தரமான பட குவாலிட்டி, சவுண்ட் குவாலிட்டி உள்ள  தியேட்டர்களுக்குத்தான் மக்கள் வருகிறார்கள்.

சென்னையைத் தாண்டி வெளியூர்களில் சிங்கிள் தியேட்டர்களில் டிஜிட்டல் புரொஜக்டர் சரியில்லை என்றால் எவ்வளவு  பெரிய படமாக இருந்தாலும் வரும் மக்கள் எண்ணிக்கை குறையும். தியேட்டரில் இருக்கை சரியில்லை... ஏசி இல்லை  போன்ற குற்றச்சாட்டுகள் எழாமல் இருக்க வேண்டுமானால் திரையரங்கை பராமரிக்க தியேட்டர் ஓனர்களுக்கு பணம்  தேவை. அதை தயாரிப்பாளர்களிடமா கேட்க முடியும்? விளம்பர வருவாய் வழியே வரும் தொகையை வைத்துத்தான்  இதையெல்லாம் அவர்களால் சரிசெய்ய முடியும். அடிப்படையான உண்மை ஒன்று இருக்கிறது.

திரையரங்க உரிமையாளர்கள் எங்கள் பக்கம் நிற்கிறார்கள். அவர்களுக்கு சாதகமில்லாத ஒப்பந்தங்கள் / நிபந்தனைகள்  இருந்தால் எங்களுடன் எப்படி கைகோர்ப்பார்கள்? இதிலிருந்தே நியாயத்தைப் புரிந்து கொள்ளலாம். வி.பி.எஃப்.  விஷயத்தைப் பொறுத்தவரை எல்லா தியேட்டர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை நாங்கள் வாங்குவதில்லை.  அது சாத்தியமும் இல்லை. மும்பையில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப் படத்துக்கு அங்குள்ள கட்டமைப்புக்கு ஏற்ற மாதிரிதான்  கட்டணம் வாங்க முடியும்...’’ என தங்கள் தரப்பு நியாயத்தை அடுக்குகிறார் ஜெயேந்திரா.

- மை.பாரதிராஜா