ஃப்யூஷன் சேலைகள்!



தொடர்பே இல்லாத இரு விஷயங்களை இணைப்பதுதான் ஃப்யூஷன் (Fusion).இது ஃபேஷனில் மட்டும் வராமல் இருக்குமா என்ன..? ஜீன்ஸ் மேல் புடவை கட்டுவது, ஜாக்கெட்டுக்கு பதில் டி ஷர்ட் அணிந்து புடவை உடுத்துவது... என உலகம் எங்கெங்கோ பறக்கிறது.

இதில் லேட்டஸ்ட் இணைப்பு ஃப்யூஷன் சாரீஸ்! பொதுவாக புடவைகள் எப்படி உருவாகும்? காட்டனில், ஜார்ஜெட்டில், சிந்தடிக்கில், பட்டில் அல்லது வேறு ஏதோ ஒன்றில்...இதற்கு மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட மெட்டீரியல்ஸ் - அதாவது காட்டனும் ஜார்ஜெட்டும் அல்லது காட்டன் + சிந்தடிக் + பட்டு என... உருவாவதுதான் ஃப்யூஷன் புடவைகள்!

“ஜார்ஜெட் பயன்படுத்தினா உடல்ல ஒட்டிக்குமோ இல்லைனா காட்டன் உடுத்தினா இன்னும் குண்டா தெரிவோமோனு சில வெயிட்டான பெண்கள் நினைப்பாங்க.சில ஒல்லியான பெண்களோ எங்க மெல்லிசா புடவை கட்டிக்கிட்டா இன்னும் ஒல்லியா தெரிவோமோனு பயப்படுவாங்க. இந்த அச்சம் வந்துட்டா அவ்வளவுதான். எப்படிப்பட்ட டிசைன்ஸ் இருந்தாலும் சம்பந்தப்பட்ட மெட்டீரியலை தவிர்த்துடுவாங்க.
 
உடைகளைப் பொறுத்த வரை நம்ம பெண்கள் அந்தளவுக்கு பிடிவாதமானவங்க.காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டாங்க.இதுக்கான தீர்வுதான் ஃப்யூஷன் சாரீஸ்...’’ என்கிறார் ப்ரியா ரேகன். ‘‘உதாரணமா ஜார்ஜெட்ல வேற ஒரு மெட்டீரியலை இணைச்சுட்டா குண்டான பெண்களும் பயப்படாம உடுத்தலாம். இப்படித்தான் ஃப்யூஷன் புடவைகளை பெண்களோட உளவியலுக்கு ஏற்ப அதேசமயம் ஃபேஷனையும் விட்டுக் கொடுக்காம தயாரிக்கறோம்.

ஆனா, ஒண்ணு. ஃப்யூஷன் சாரீஸை கடைகள்ல வாங்கறதை விட பொட்டிக் ஷோரூம்ஸ்ல நீங்களே விருப்பப்பட்ட மெட்டீரியல்ஸை இணைச்சு புடவைகளை உருவாக்கித் தரச் சொல்லி கேட்கலாம். இப்படி நமக்கான புடவைகளை நாமே டிசைன் செய்யறப்ப தனித்தன்மையாவும் இருக்கும். ‘நாமே உருவாக்கினது’னு பெருமிதமும் கிடைக்கும். ஒரே டிசைனை நூறு பெண்கள் கடைல வாங்கறாங்க இல்லையா... அதுமாதிரியான நிலை - பத்தோடு பதினொண்ணா நிக்கற நிலை - ஏற்படாது.

இங்க பிங்க் கலர் புடவை இருக்கு இல்லையா... அது காட்டனும் ஜார்ஜெட்டும் மிக்ஸ் ஆனது. பச்சை நிற ஸாரி க்ரெம்ப் மெட்டீரியலோட கலம்காரி காட்டன் கலந்தது...’’ என ஃபேஷன் டிசைனரான ப்ரியா முடிக்க... ‘‘இதுக்கு சாதாரண வகை கவரிங் இல்ல தங்க நகைகளை பயன்படுத்தறதை விட ஆன்டிக், டெரகோட்டா இல்லைனா ஆக்ஸிடைஸ்ட் ஆக்சசரிஸ்ஸை போட்டுகிட்டா பிரமாதமா இருக்கும்...’’ என்றபடி இது குறித்து பேச ஆரம்பித்தார் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஜெயந்தி.
 
‘‘மேக்கப்புலயும் ஃப்யூஷன் இருக்கு! வெஸ்டர்ன் லுக் கண் மேக்கப்பை ஃப்யூஷன் புடவை உடுத்தினதும் போட்டுக்கலாம். பொதுவா டிரெடிஷனல் லுக்னா வெளிர் பிங்க் இல்லைனா உதட்டு நிறத்துல லிப்ஸ்டிக் பூசிப்போம். ஆனா, ஃப்யூஷன் புடவைகள் உடுத்தறப்ப வெஸ்டர்ன் ஸ்டைலான அடர் சிவப்பு நிறத்தை உதட்டுல பூசினா... வாரே வாவ்... அள்ளிக்கும்!’’ என்கிறார் ஜெயந்தி.

மாடல்: ஆரோஹி அனிஸ்
உடைகள்: இவள் (@IvalinMabia)
மேக்கப் & ஸ்டைலிங்: ஜெயந்தி குமரேசன்
நகைகள்: Fine Shine Jewellery                                         

- ஷாலினி நியூட்டன்
படங்கள் : Shutter Spark Studio S2