1930 முதல் இன்று வரையிலான கர்நாடக இசைக் கச்சேரிகளை பதிவு செய்து வைச்சிருக்கேன்!



கலெக்டர்ஸ்

மார்கழி மாதம் என்றால் ஆண்டாளின் திருப்பாவையும் திருவெம்பாவையும் மட்டுமல்ல... கர்நாடக சங்கீத கச்சேரிகளும்  நம் நினைவுக்கு வரும். வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள், நடனங்கள் என சென்னையிலுள்ள அனைத்து சபாக்களும்  இம்மாதத்தில் களை கட்டும். வழிவழியாக நடந்து வரும் இந்த கொண்டாட்டத்துக்கான பதிவுகள் ஏதும் உள்ளதா?இதற்கு என்ன பதில் சொல்வது என பலரும் யோசிப்பார்கள்.

இனி அப்படி யோசிக்கத் தேவையில்லை. காரணம், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நரசிம்மன். 1930 முதல்  இன்று வரை பிரபலமாக இருந்த / இருக்கும் அனைத்து வித்துவான்களின் மேடைக் கச்சேரிகளையும் டிஜிட்டல்  முறையில் பதிவு செய்திருக்கிறார். ‘‘கிட்டத்தட்ட 88 வருட பொக்கிஷங்கள்.... ஒவ்வொன்றாக டிஜிட்டலைஸ்  செய்துட்டு வரேன்...’’ உற்சாகமாக பேசத் தொடங்கினார் நரசிம்மன்.

‘‘பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் இதே திருவல்லிக்கேணிலதான். நுண்கலைகள் மேல ஆர்வம் ஏற்பட என்  குடும்பச்சூழல்தான் காரணம். புலவர் கீரனும் நவீன சிறுபத்திரிகை கவிஞருமான ஞானக்கூத்தனும் அப்பா கூட ஒரே  வகுப்புல படிச்சவங்க. என் பெரியப்பா 1930கள்ல ஹரிகதா இசை சொற்பொழிவுகளுக்கு முன்னோடியா திகழ்ந்தார். இப்படி எங்க குடும்பத்துல எல்லாருமே இசை, நடனம், நாடகங்கள்ல ஆர்வமுள்ளவங்களா இருந்தாங்க.  திருவல்லிக்கேணி ஆர்ட்ஸ் அகாடமி, 120 வருட பழமை வாய்ந்த பார்த்தசாரதி சபா... இதுல எல்லாம் அப்பா முக்கிய  பொறுப்புல இருந்தார். இந்த சபாக்கள்ல நடக்கிற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போவார். கூடவே நானும் போவேன்.  அப்படித்தான் எனக்கும் கலை மேல ஆர்வம் வந்தது.

கலை பத்தின தகவல்களை அகழ்வாராய்ச்சி மூலமாதான் தெரிஞ்சிருக்கோம். தஞ்சை பெரிய கோயில், மகாபலிபுர  சிற்பங்கள், கல்வெட்டுகள் மூலமா விவரங்கள் கிடைக்குது. இப்படி தரவுகள் இருந்தும் சர்வதேச அளவுல நமக்கு ஏன்  அங்கீகாரம் கிடைக்கலை? இந்தக் கேள்வி என்னை துரத்திட்டே இருந்தது. ஏதாவது செய்யணும்னு நினைச்சப்ப பதிவு  செய்யலாமேனு தோணிச்சு.அப்ப எனக்கு 14 வயசு. விளையாட்டா, பொழுதுபோக்கா கச்சேரிகளை பதிவு செய்ய  ஆரம்பிச்சேன்...’’ என்று சிரிக்கிறார் நரசிம்மன்.

‘‘அப்ப இதுக்கான பொருளாதார வசதி எல்லாம் கிடையாது. பதிவு செய்ய கருவிகளும் இல்ல. அவ்வளவு ஏன்,  1980கள்ல கூட பதிவு செய்ய தரமான கருவியை வெளிநாட்டு லேந்துதான் வரவழைக்கணும். இந்த சூழல்ல பர்மா  பஜார்ல கிடைக்கிற சின்னச் சின்ன ரெக்கார்டர்ல கச்சேரிகளை பதிவு செய்ய ஆரம்பிச்சேன். சின்னப் பையன் இப்படி  ஆர்வத்தோட செய்யறானேனு பெரியவங்க எல்லாம் ஊக்குவிச்சாங்க.

அகில இந்திய வானொலி நிலையம் வெளியிட்ட ‘வானொலி’ புத்தகத்துல எங்க, யாரோட கச்சேரி நடக்கும் என்கிற  அட்டவணை இருக்கும். அதுல பலரோட பெயர்கூட எனக்குத் தெரியாது. ஆனாலும் யார் கச்சேரி நல்லா இருக்கும்னு  கேட்டு அங்க போய் பதிவு செய்வேன். அடையாறு ஐஐடி வளாகத்துல கச்சேரி நடக்கும். அப்ப எல்லாம் காடாதானே  இருக்கும்? அந்த இருட்டுல சைக்கிள்ல போவேன். நரி, கீரிப்பிள்ளை எல்லாம் குறுக்க ஓடி பயமுறுத்தும்...’’ என்று  நினைவுகூர்ந்த நரசிம்மன், டேப்புக்காக மட்டும் பல லட்சம் ரூபாய்களை செலவு செய்திருக்கிறார்.

‘‘1980கள்ல டிஜிட்டல் முறை கிடையாது. டேப்புலதான் பதிவு செய்யணும். இரண்டரை மணிநேரம் கச்சேரி நடக்கும்.  ஒரு டேப்புல ஒரு மணிநேரம்தான் பதிவு செய்ய முடியும். ஆக, ஒரு கச்சேரிக்கு மூணு டேப் வரை ஆகும். ஒரு டேப் ரூ.35. இது அந்தக்காலத்துல பெரிய தொகை. பாடகர்கிட்டயே அவரோட பதிவு செய்யப்பட்ட கச்சேரியின்  ஒரு பிரதியை கேட்பேன். சிலர் தருவாங்க. பலர் மறுப்பாங்க. இதையெல்லாம் மீறி என் வேலையை செஞ்சேன்.தொடர்ச்சியா கச்சேரிகளுக்கு போய் கேட்டுக் கேட்டு எனக்குள்ள இசை பத்தின தெளிவு கிடைச்சது. இது கிடைக்கவே  பத்து வருஷங்களாச்சு...’’ என்ற நரசிம்மன், பதிவு முறைகளைப் பற்றி விவரித்தார்.

‘‘80களுக்கு முன்னாடி வரை கிராமஃபோன்தான். இதுல 33, 45, 78 ஆர்.பி.எம்.னு பல வகைகள் உண்டு. அப்புறம்  வயரிங் முறை. செப்புக் கம்பி மூலமா பதிவு செய்யறது. இதுக்கு அப்புறம் ஸ்பூல். ஒரு பக்கத்துல இரண்டு மணி நேரம்  வரை பதிவு செய்யலாம். அடுத்து ஸ்பூலின் சிறிய பிரதி கேசட்டுகளானது. உலகம் டிஜிட்டல் மயமானதும் சிடி, மெமரி  கார்ட், ஹார்ட்டிஸ்க், க்ளவுட்ஸ்னு பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கு. அடிப்படைல நான் தொழில்நுட்ப ஆர்வலன்.  ஸோ, என் பதிவுகளையும் அதுக்குத் தகுந்த மாதிரி மாத்திட்டு வரேன்.

இப்ப என்கிட்ட இருக்கிற பல ஆயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை ஹார்ட்டிஸ்க், க்ளவுட்ஸ்ல மாத்திட்டு வரேன்...’’  என்ற நரசிம்மன், பதிவு செய்வதற்காகவே பல ஜமீன்களுக்கு சென்றிருக்கிறார். ‘‘யார் பாடலை கேட்டாலும் அவங்க  குரு எப்படி பாடுவாங்கனு யோசிப்பேன். அதே மாதிரி கச்சேரி கச்சேரியா நான் பதிவு செய்யறதைப் பார்த்து பலரும்  தங்களுக்கு தெரிஞ்ச விவரங்களை சொல்வாங்க. இதன் வழியா என்கிட்ட இருக்கறதை விட பல பதிவுகள் இருக்குனு  புரிஞ்சுது.

தேவக்கோட்டைல கந்தசஷ்டி விழா 15 நாட்கள் கோலாகலமா நடக்கும். இதன் பதிவுகள்; திண்டுக்கல்லுல அங்குவிலாஸ் என்பவர் சேகரிச்சிருக்கிற நாதஸ்வர வித்வான் காரைக்குடி அருணாச்சலத்தின் கச்சேரி பதிவுகள்; பொம்மிலி  ராஜா குடும்பத்துகிட்ட அவங்க சமஸ்தானத்துல கச்சேரி நடத்தின வித்துவான்களோட பதிவுகள்; நெல்லை,  கல்லிடைக்குறிச்சி, மாயவரம், மன்னார்குடில தனித்தனியா சிலர் சேகரிச்சிருந்த பதிவுகள்...

இதையெல்லாம் தேடித் தேடி எனக்குனு தனியா பதிவு செஞ்சுகிட்டேன். உண்மையை சொல்லணும்னா 1930 முதல் 60  வரை இதனோட முக்கியத்துவம் யாருக்குமே தெரியலை. பல நல்ல கச்சேரிகளை பதிவு செய்யாமயே விட்டிருக்காங்க.1960க்குப் பிறகுதான் இந்திய நல்கலை சங்கம், தமிழிசைச் சங்கம் எல்லாம் பதிவுகள் செய்ய ஆரம்பிச்சது. அப்படியும்  அதுல பத்து சதவிகிதம் வரைதான் இப்ப மீட்க முடிஞ்சிருக்கு. மீதியெல்லாம் அழிஞ்சுடுச்சு...’’ என வருத்தப்படுகிறார்  நரசிம்மன்.

‘‘30களோட இசை வடிவங்கள் இப்ப இல்ல. இசையின் பரிமாணங்கள் பல மாற்றங்களைக் கண்டிருக்கு. இந்த  வளர்ச்சிக்கான பதிவுகள் நம்மகிட்ட இல்ல. இது பெரிய குறை. அதே மாதிரி பல இசைக்கருவிகளும் அழிஞ்சுடுச்சு.  வில்லுப்பாட்டுல ஐயா சுப்பு ஆறுமுகம் மட்டும்தான் இப்ப இருக்கார். கும்மி, பின்னல் கோலாட்டம் மட்டுமில்ல, பல  நாட்டிய வடிவங்களும் மறைஞ்சுடுச்சு. ஜலதரங்கம், தில்ரூபா மாதிரியான இசைக்கருவிகளையும் இப்ப யாரும் பயன்படுத்தறதில்ல. பாவைக் கூத்து, பொம்மலாட்டம் எல்லாம் மெல்ல மெல்ல அழிஞ்சுட்டு வருது.

நமக்கு பாலமுரளி கிருஷ்ணாவைத் தெரியும். ஆனா, அவர் குரு பாருபள்ளி ராமகிருஷ்ணாய பந்துலுவைத் தெரியாது.  இப்படி நிறைய மேதைகளை சுத்தமா மறந்துட்டோம்.இன்னிக்கி இணையம் வரப்பிரசாதமா இருக்கு. யார் கச்சேரி எங்க  நடக்குதுனு சட்டுனு பார்த்துடலாம். அந்தக் காலத்துல ஒருத்தரை தொடர்பு கொள்வதே சிரமம். இந்த சூழல்ல என்னை  மாதிரி ஊருக்கு ஊர் இருக்கிற ஆர்வலர்கள் வழியாதான் விவரங்கள் தெரிஞ்சு அங்கங்க நடக்கிற கச்சேரிகளுக்கு போய்  பதிவு செய்தேன்.

சில சேகரிப்புகளை வாங்க குண்டும் குழியுமான சாலைகள்ல பயணம் செய்திருக்கேன். மாநிலம் விட்டு மாநிலம்  போயிருக்கேன். வெறும் ஒலிப்பதிவுகள் மட்டுமில்ல... அந்தப் பாடல் வரிகளை எப்படி உச்சரிக்கணும் என்கிற இசைக்  கோர்வையையும் (notation) பதிவு செய்து வச்சிருக்கேன். நான் நேரடியா பதிவு செய்த கச்சேரிகள் மட்டுமே 10  ஆயிரத்துக்கு மேல இருக்கும். இதுபோக பலரிடம் இருந்து சேகரிச்சது சில ஆயிரங்கள்...’’ என்று சொல்லும் நரசிம்மன்  அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப வல்லுனர்.

‘‘15 வருஷங்கள் விளம்பரத்துறைல வேலை பார்த்தேன். இப்ப மொபைல் ஆப்ஸ் மற்றும் தொழில்நுட்ப விற்பனை  துறை ஆலோசகரா இருக்கேன். இசைத்துறைல முனைவர் பட்டம் பெறுபவர்களுக்கு வழிகாட்டியாவும் இருக்கேன்.  இதெல்லாத்தையும் விட கர்நாடக சங்கீத கச்சேரிகளோட ஆவண பாதுகாப்பாளரா இருக்கறதுதான் பிடிச்சிருக்கு.
30கள்ல டைகர் வரதாச்சாரியார், மைசூரைச் சேர்ந்த வாசுதேவாச்சார், பிடாரம் கிருஷ்ணப்பா, தேவராஜப்பா,  ஆந்திராவைச் சேர்ந்த ராளப்பள்ளி அனந்த கிருஷ்ண சர்மா, துவாரம் வெங்கடசாமி நாயுடு, கேரளாவைச் சேர்ந்த  பாலக்காடு ராமபாகவதர், செம்பை வைத்தியநாத பாகவதர்...

40கள்ல திருவிடைமருதூர் வீருசாமி பிள்ளை, டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, செம்பொனார் கோயில் சகோதரர்கள்,  காஞ்சிபுரம் நைனாபிள்ளை, டி.பாலசரஸ்வதி, பெங்களூரு தாயி, கோயமுத்தூர் தாயி...
50கள்ல மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்...
60கள்ல எம்.எம்.தண்டபாணி தேசிகர், பி.என்.பாலசுப்பிரமணியன், மதுரை மணி ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர்,  மதுரை சோமு...
70களுக்குப் பிறகு டி.ஆர்.மகாலிங்கம், பட்டம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி...னு ஆரம்பிச்சு இன்றைய  தலைமுறைகள் வரை தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னட மொழி பதிவுகள் என்கிட்ட இருக்கு...’’ என  பெருமையுடன் சொல்லும் நரசிம்மன் இப்போது மல்டி டிராக்கிங் முறையிலும் பாட்டு, இசைக் கருவிகள் என  தனித்தனியாக பதிவு செய்து வருகிறார்.

- ப்ரியா
 படங்கள் : ஆ.வின்சென்ட் பால்