மனிதகுலத்தை ஆசீர்வதிப்பதே காதல் தானே



சர்க்கஸ்ல மூணு வகை இருக்கு. ஒண்ணு பிரமாண்டமான விலங்குகளின் சாகஸங்கள் கொண்டது. அடுத்தது விலங்குகளே இல்லாம மனிதர்களின் வீரதீர விளையாட்டுகள் இடம்பெறுபவை.  மூணாவதாக உள்ள சர்க்கஸ் கொஞ்சம் வித்தியாசமானது. கூடாரமே இல்லாம தெருக்கூத்து மாதிரி சிம்பிளா இருக்கும். இதுல ரெண்டாவது வகைதான் என் கதைக்கான களம்!

பொதுவா எல்லாரோட வாழ்க்கையும் ஒருவகைல சர்க்கஸ் மாதிரிதான். காதல்ல இருந்து அத்தனை நிகழ்வுகளுமே  இங்கே சாகஸமாகத்தான் இருக்கு. ஸோ, கதையோட பின்னணி சர்க்கஸ்னாலும் அதை ஒரு குறியீடு போலதான் கையாண்டிருக்கேன்!’’ ரிலீஸ் பரபரப்பிலும் நிதானமாகப் பேசுகிறார் சரவண ராஜேந்திரன். புதுமுகங்கள் நடிக்கும் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் அறிமுக இயக்குநர். பாலுமகேந்திராவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்.

ட்ரெயிலரை பார்த்தா இளமை பொங்கும் காதல் அள்ளுதே..?

மகிழ்ச்சி. சினிமாவையும் காதலையும் பிரிக்க முடியாதே! ‘காதல் கோட்டை’ல இருந்து இப்போதைய டிரெண்டான லிவிங் டுகெதர் லவ் வரை சினிமால காதலைப் பத்தி  நிறையவே சொல்லியாச்சு. ‘புதுசா இவரு என்ன சொல்லிடப் போறார்’னு உங்களுக்குத் தோணும். அப்படி எனக்கும் தோணிச்சு! ஆனா, திட்டமிடாம வர்றதுதானே காதல்! அப்படி நானும் ராஜுமுருகனும் திட்டமிடாம உருவாக்கின கதைதான் இது. ‘ஜோக்கர்’ல ஒர்க் பண்ணும் போது டெவலப் பண்ணினோம். இப்ப அழகான காதலா கைகூடியிருக்கு.

காதல் மனித குலத்தையே ஆசீர்வதிக்கும். ஆனா, அந்த காதல்தான் ஒருத்தனை பிச்சைக்காரனாக்குது... இன்னொருத்தனை கொலை செய்யத்தூண்டுது! அது ஏன் என்பதற்கான விடை படத்துல இருக்கு.  1992 , 2010னு ரெண்டு காலகட்டங்கள்ல நடக்கும் கதை. ஹீரோயின் பெயர் மெஹந்தி. சர்க்கஸ் கம்பெனி நடத்துற பொண்ணு. ஹீரோ ஆடியோ கேசட் ரெக்கார்டிங் கடை நடத்தறவர். இவங்களுக்கிடைல உருவாகற காதல் சர்க்கஸ் சுவாரசியமானது. வட இந்திய ஆளுங்கதான் சர்க்கஸ் கம்பெனி நடத்துவாங்க. கதையும் அவங்கள சுத்திதான் நகருது.

ஹீரோ ரங்கராஜ், புதுமுகம். தவிர மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, வி.ஜே.விக்னேஷ்னு தெரிஞ்ச முகங்களும் உண்டு. ஹீரோயின் ஸ்வேதா திரிபாதி. அப்புறம் ஆங்கூர் விகல், சன்னி சார்லஸ்னு பாலிவுட் நடிகர்களையும் நடிக்க வச்சிருக்கோம்.  இந்தப் படத்தின் கதை, வசனத்தை ராஜுமுருகன் எழுதியிருக்கார். அவர் என் உடன் பிறந்த தம்பிங்கறதால, நீதான் இந்தப் படத்துக்கு வசனம் எழுதணும்னு நானும் அவர்கிட்ட கேட்டுக்கல. அதேபோல அவரும், ‘அண்ணன் படத்துக்கு கண்டிப்பா வசனம் எழுதுவேன்’னும் சொல்லி வரலை. தானாக அமைஞ்சது.  

இந்தப் படத்தின் கதையை முதன்முதல்ல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாரின் அப்பா ஈஸ்வர் சார்கிட்டதான் சொன்னேன். இந்த புராஜெக்ட் டிசைனர் அவர்தான். அவரும் சரி, இணை தயாரிப்பாளர் வினீஷ் வேலாயுதன் சாரும் சரி, நல்ல சுதந்திரம் கொடுத்தாங்க. ‘மாநகரம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே., எடிட்டர் பிலோமின்ராஜ், ‘ஜோக்கர்’ ஆர்ட் டைரக்டர் சதீஷ்குமார், ஷான் ரோல்டன் இசைனு அருமையான டெக்னீஷியன் டீம் அமைஞ்சிருக்கு.  

உங்க  ஹீரோயின் ஸ்வேதா திரிபாதி பத்தி சொல்லுங்க?

இந்தில ஆறேழு படங்கள்ல நடிச்சிருக்கார். ‘பேட்ட’ வில்லன் நவாசுதீன் சித்திக் கூடயும் பாலிவுட்ல நடிச்சிருக்கார். அவர் நடிச்ச ‘மசான்’ நான் பிரமிச்ச படம். பிரமாதமான பர்ஃபாமர். சர்க்கஸ்ல உள்ள பொண்ணுக்கான லுக் அவரோட ப்ளஸ். அதேபோல ஹீரோ ரங்கராஜ், கோயமுத்தூர் பையன். கேட்டரிங் பிசினஸ்ல அசத்துறவர். இந்தப் படத்துக்காக நிஜ சர்க்கஸைத் தேடி நிறைய இடங்கள் டிராவல் பண்ணினோம்.

கேரளால ஓர் இடத்துல நாங்க எதிர்பார்த்த சர்க்கஸ் நடந்திட்டிருந்தது. குஜராத்தைச் சேர்ந்தவங்க. இந்தியா முழுவதும் டிராவல் பண்ற ஆட்கள்னால நம்ம பாஷை அத்தனையும் அவங்க பேசுறாங்க. அவங்கள அப்படியே அழைச்சுட்டு கொடைக்கானல்ல பனிரெண்டு நாட்கள் ஷூட் பண்ணிட்டு வந்தோம். திண்டுக்கல், மும்பை, மகாராஷ்டிரா, சகாரானு கதையும் நிறைய இடங்கள்ல பயணமாகும்.

முதல் பட இயக்குநருக்கான கேள்வி இது...

புரியது! பூர்வீகம் தஞ்சாவூர். நானும் யுகபாரதியும் ஊர்ல கலை, இலக்கிய விழாக்கள், கூட்டங்கள் நடத்திட்டிருந்தோம். ரெண்டு பேருமே ஒண்ணா சென்னைக்கு கிளம்பி வந்தோம். இங்க எங்களுக்கு சொந்த பந்தங்கள் யாருமில்ல. நண்பர் சுந்தரபுத்தன் அறைல தங்கினோம். நான் எம்.ஏ. முடிச்சிருந்ததால, பச்சையப்பாஸ்ல எம்.பிஃல் சேர்ந்தேன். அப்புறம் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளரா இருந்தேன். யுகபாரதி ‘ராஜரிஷி’, ‘கணையாழி’ பத்திரிகைகள்ல உதவி ஆசிரியரா வேலை பார்த்து மெல்ல மெல்ல பாடலாசிரியரானார்.

நான் பாலுமகேந்திரா சாரிடம் சேர்ந்தேன். கன்னட இயக்குநர் கே.எஸ்.ஆர்.தாஸ், கமலின் ‘விருமாண்டி’னு வேலை செய்த அனுபவமிருக்கு. என் முதல் படத்தை எப்பவோ இயக்கியிருக்கணும். சினிமால சில விஷயங்களுக்கு காரணம் சொல்லிட முடியாது. இப்ப காலம் கனிஞ்சிருக்கு. தாமதமா வந்தாலும் நல்ல கதையோடுதான் வர்றேன்!          

- மை. பாரதிராஜா