பகவான்-31



முப்பெரும் தேவியர்நாளொரு பிரச்னையும் பொழுதொரு போராட்டமுமாக ரஜனீஷ்புரம் கடுமையான அமெரிக்க அரசுத் தரப்பு மற்றும் உள்ளூர் எதிர்ப்புகளையும் மீறி வளர்ந்துகொண்டே இருந்தது.

இப்போது தோராயமாக ஐயாயிரம் சன்னியாசிகள் ரஜனீஷ்புரத்தில் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கியிருந்தனர். ரஜனீஷ்புரத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பது, தியானம் செய்வது என்பது மட்டுமே அவர்களது வாழ்வியல் செயல்பாடாக இருந்தது.

இந்த சன்னியாச வாழ்க்கை அவர்களைச் சலிப்படையச் செய்துவிடக் கூடாது என்பதில் பகவான் உறுதியாக இருந்தார். எனவே, அவர்களை மகிழ்விக்கும் விதமாக அவ்வப்போது விழாக்களும், கொண்டாட்டங்களும் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து நடக்குமாறு பார்த்துக் கொண்டார்.

இம்மாதிரி விழாக்களுக்கு உலகம் முழுக்க இருந்து தோராயமாக பதினைந்தாயிரம் விருந்தினர்கள் (பெரும் பணக்காரர்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லைதானே?) வருவார்கள். அவர்கள் ஒரு வாரத்திலிருந்து ஆறு வாரம் வரை தங்கி, பகவானின் அருளாசிகளைப் பெற்றுச் செல்வார்கள்.

பகவானுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் என்றால் விருப்பம் என்பதைப் புரிந்துகொண்டு, ஆளுக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் பரிசளிக்கத் தொடங்கினார்கள். ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பது என்பது அந்தஸ்தின் சின்னம். உங்களிடம் பெரும் பணம் இருக்கிறது என்பதால் மட்டுமே அந்தக் காரை வாங்கிவிட முடியாது. தங்களுடைய தயாரிப்பை யார் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சில வரையறைகளை வைத்திருந்தது. அதன்படி உலகின் மிகப்பிரபலமான, முக்கியமான ஆட்களுக்கு மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கிடைக்கும்.

ஒரு வண்டி கிடைப்பதே அவ்வளவு அரிது எனும்போது, ஒருகட்டத்தில் ஓஷோவிடம் 96 புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருந்தன என்றால், அவர் வாழ்ந்த காலத்தில் உலகின் மிக செல்வாக்கான மனிதராகத் திகழ்ந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒட்டுமொத்த ரஜனீஷ்புரத்தின் கட்டுப்பாட்டையும் தன்னிடமே வைத்திருந்தார் ஷீலா. பகவானுக்கே ஏதாவது தேவையென்றாலும் கூட அவர் ஷீலாவிடம்தான் கேட்க வேண்டியிருந்தது. பகவான் யாரைச் சந்திக்க வேண்டும், யாரைத் தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் முடிவெடுக்கக் கூடிய செல்வாக்கான இடத்தில் இருந்தார் ஷீலா.

ஷீலாவுக்கு நம்பிக்கையான இரண்டு உதவியாளர்கள் இருந்தார்கள். இவர் கட்டி வா என்றால், அவர்கள் வேரோடும் மண்ணோடும் வெட்டி வருவார்கள்.ஒருவர் வித்யா, தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த பேரழகி. ரஜனீஷ்புரத்தின் நிதியமைச்சர் என்று இவரைச் சொல்லலாம். கணக்கு, வழக்கு மொத்தமும் இவர் வசம்தான். ஷீலா எவ்வளவு பணம் கேட்டாலும் திரட்டித் தருவார். யாரிடம் கேட்பார், எப்படி கேட்பார் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது.

நிதி மேலாண்மை செய்பவர் என்பதால் கறாரானவர் என்று சொல்ல முடியாது. ஓரளவுக்கு ஊழலை அனுமதித்தார். அபரிமிதமான வளர்ச்சி, ஊழலின்றி சாத்தியமில்லை என்கிற அராஜகமான யதார்த்தத்தை உணர்ந்தவர். எப்போது பார்த்தாலும் ஆசிரமத்தில் ‘ஏ’ ஜோக் அடித்துக்கொண்டு, வாய் முழுக்க சிரிப்போடே வலம் வருவார். கிளாமரான இவரது டிரெஸ்ஸிங் சென்ஸுக்கு ரஜனீஷ்புரத்தில் மட்டுமின்றி, உலகம் முழுக்க பரவியிருந்த பகவானின் பணக்கார பக்தர்கள் பலரும் பெரும் ரசிகர்கள்!

அடுத்தவர் சவிதா. வித்யாவுக்கு நேரெதிர். ரஜனீஷ்புரத்தின் எச்.ஆர். என்று இவரைச் சொல்லலாம். செல்லமாக இவரை ‘ஹிட்லர்’ என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். கண்டிப்பும், கறாருமாக இருப்பார். முகத்தில் புன்னகையே இருக்காது. சிறு தவறுகளைக் கூட மன்னிக்க மாட்டார். எப்போதும் யாரையாவது திட்டிக்கொண்டே இருப்பார்.

நெருப்பு மாதிரி இருந்த வித்யாவிடம் யாரும் நெருங்கிப் பழக முடியாது. ஷீலாவைத் தவிர வேறு எவரிடமும் அவர் பணிவாகப் பேசி யாரும் பார்த்ததில்லை.ஷீலா தலைமையில் வித்யாவும், சவிதாவும் கிட்டத்தட்ட ஓர் அரசாங்கம் மாதிரி ரஜனீஷ்புரத்தை ஆண்டு வந்தார்கள். ரஜனீஷ்புரத்தின் ‘அவெஞ்ஜர்ஸ்’ என்று இம்மூவரையும் குறிப்பிடலாம். உலகம் முழுக்க ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்ட ஆன்மீக குருவான பகவானின் மகத்தான வெற்றிகளுக்குப் பின்னர் இவர்கள் மூவரின் மறைமுகப் பங்களிப்பு இருந்ததை மறுக்க முடியாது.

அதே நேரம் பகவான் குறித்த எதிர்மறையான விமர்சனங்களுக்கும் நூறு சதவிகிதம் இவர்களே காரணம். ஓர் ஆன்மீக நிறுவனத்தை, கார்ப்பரேட் கம்பெனி மாதிரி இரக்கமேயில்லாமல் லாபநோக்கத்தில் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

நிர்வாகத்தில் கில்லிகளாக இருந்தாலும் அடிப்படையான ஆன்மீகம் மாதிரி விஷயங்களில் இந்த ‘அவெஞ்ஜர்ஸ்’ கொஞ்சம் மக்குகளாகத்தான் இருந்தார்கள். எனவேதான் சன்னியாசிகளில் தீர்த்தர்களும், சோமேந்திரர்களும் இந்த முப்பெரும் தேவியரை மதிக்கவே மாட்டார்கள்.
சன்னியாசிகளில் தீர்த்தர்களும், சோமேந்திரர்களும் சம்திங் ஸ்பெஷல். பக்தர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் சிகிச்சை அளிக்கக் கூடிய நிபுணர்கள்.

தீர்த்தர்களிலும், சோமேந்திரர்களிலும் சிலர் பக்தர்களிடம் செல்வாக்காக விளங்கினார்கள். ஷீலாவைக் காட்டிலும் யாருக்கு செல்வாக்கு உயர்கிறதென்றாலும் அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இல்லாததையும், பொல்லாததையும் பகவான் காதில் போட்டு, அவர்களை ஆசிரமத்தை விட்டே வெளியேற்றி விடுவார்.

ஆனால் -வெளியே வேறு மாதிரி சொல்வார் ஷீலா.“பகவான் தன்னை மட்டுமே மாஸ்டர் என்று கருதுகிறார். வேறு யாருக்கும் சின்ன புகழ் கிடைப்பதைக் கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சின்னக் குழந்தை போல நடந்து கொள்கிறார்...”ஷீலாவின் இந்த உள்குத்து வேலைகள் எல்லாம் சில தீவிர விசுவாசிகள் மூலமாக பகவானின் காதிலும் விழுந்தன.

விவகாரத்தை முள்ளில் பட்ட சேலையாகத்தான் கையாள வேண்டும் என்று ரஜனீஷ் கருதினார்.ஏனெனில் -ரஜனீஷ்புரத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும், செயல்பாடுகளும் தெரிந்தோ தெரியாமலோ இந்த முப்பெரும் தேவியரின் கட்டுப்பாட்டில் இருந்தன.ஒரு முக்கியமான கூட்டத்தை பகவான் அவரது வீட்டில் கூட்டினார்.ரஜனீஷ்புரத்தின் அத்தனை முக்கிய பிரமுகர்களும் கூடியிருந்தனர்.தீர்க்கமான பார்வையோடு பகவான் பேச ஆரம்பித்தார்.

“முக்கியமான சில விஷயங்களைப் பேசுவதற்காக உங்களையெல்லாம் அழைத்திருக்கிறேன். கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்...” என்று சொல்லிவிட்டு ஷீலாவை நோக்கிச் சொன்னார்.“ஷீலா! நீ நம்முடைய ரஜனீஷ்புரத்தையும், அதில் வாழ்பவர்களையும் கவனித்துக் கொள்ளும் கடமையில் இருக்கிறாய். வித்யாவும், ஷீலாவும் அதற்கு உதவுகிறார்கள். இது சுலபமான வேலை அல்ல. நாம் புதிய சமுதாயத்தை உருவாக்கும் பணியில் இருக்கிறோம். நிறைய பேர் இந்த முயற்சிகளை சீர்குலைக்கும் வகையில் பிரச்னை செய்வார்கள்.

ஆனால், நம் நோக்கத்தை நோக்கியே நாம் செயல்பட வேண்டும். ரஜனீஷ்புரம், சீரும் சிறப்புமாகச் செயல்படுவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் என்னுடைய கருத்துகள் மக்களைச் சென்று சேருவதும். நீங்கள் என் கருத்துகளையும், ரஜனீஷ்புரத்தையும் காக்க வேண்டும். அதற்கு எதிராக நானே நின்றாலும் கூட…”சொல்லிவிட்டு அவர் ஷீலாவைப் பார்த்த பார்வையில், எனக்கு எல்லாமுமே தெரியும் என்கிற பொருள் இருந்தது..

அதாவது, என்னை வைத்துதான் நீங்கள், இந்த ரஜனீஷ்புரம், சமூகம் என்பதெல்லாம், எனக்கு மீறி யாருமில்லை என்பதைத் தெளிவாக உணர்த்தினார் பகவான்.ஷீலாவுக்கு அவரது பேச்சின் பொருள் புரிந்தது. பகவானை மீறிய ஆளுமையாக, தான் உருவெடுப்பதை அவர் விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டார்.

இனிமேல் ரஜனீஷ்புரத்தில் முன்பிருந்ததைப் போல, தான் செல்வாக்கு செலுத்த முடியாது என்கிற நிதர்சனத்தை உணர்ந்தார். பல் பிடுங்கப்பட்ட பாம்பாக தன்னை உலவவிடப் போகிறார்கள் என்று அச்சப்பட்டார்.அடுத்தடுத்து நடந்த சம்பவங்களும் ஷீலா அச்சப்பட்டபடியே நடக்கத் தொடங்கின.

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்