Truecaller வைத்திருக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய தகவல்களின் விலை ரூபாய் ஒரு லட்சம்!
நவீன டெக்னாலஜி நமக்கு எவ்வளவுக்கு எவ்வளவு சவுகர்யங்களை உருவாக்கித் தருகிறதோ அதே அளவுக்கு ரிஸ்க்கையும் கொண்டு வந்துவிடுகிறது. இன்று செல்போன் இல்லாத ஆட்களே இல்லை என்னும் அளவுக்கு தலைக்கு ஒரு செல்போன் என்றாகிப் போனது. அதிலும் ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.
 புழக்கத்தில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் பெரும்பாலானவற்றில் ட்ரூகாலர் ஆப் பயன்பாட்டில் இருக்கிறது.பஞ்சாயத்தே அதுதான்! ட்ரூ காலர் நிறுவனம் தன் வாடிக்கையாளர்கள், அதாவது தங்களது ஆப்பை பயன்படுத்துபவர்களின் தகவல்களை எல்லாம் உருவி அதை இணையதள நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
ஆண்ட்ராய்டு போன் ஒருவரிடம் இருப்பது பலவகைகளில் பயனுள்ளது. இருந்த இடத்தில் இருந்தபடியே கரண்ட் பில் கட்டுவதில் தொடங்கி பால் கணக்கை பைசல் செய்வது, உணவை ஆர்டர் செய்வது, பயணத்துக்கு வாகனத்தை ஏற்பாடு செய்வது என எல்லா வேலைக்கும் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
இந்த நவீன ஆண்ட்ராய்டு மற்றும் ஸ்மார்ட் போன்களில் பணம் தொடர்பான நடவடிக்கைகள் செய்வது பாதுகாப்பானதல்ல என அடிக்கடி சில நிபுணர்கள் சொல்வார்கள். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற நிறுவனங்களில் நாம் அனுப்பும் செய்திகளை அவர்கள் தங்களுக்கான டேட்டாவாக பதிந்து அதை வணிக நிறுவனங்களுக்கும் ஏஜென்சிகளுக்கும் விற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது எழும்.
அப்படித்தான் இந்த ட்ரூ காலர் ஆப் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நமது ஊரில் ட்ரூகாலர் ஆப் பயன்படுத்துவது சிலருக்கு பெருமிதமான விஷயம். ட்ரூகாலர் உங்கள் மொபைலில் இருந்தால் ஏதாவது அறியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலும் அது யார் எனக் கண்டறிய முடியும் என்பது இந்த ஆப்பின் சிறப்பு.
யார் என்று அறிந்துகொண்டால் அழைப்பை ஏற்பதை முடிவு செய்வது எளிது என்பதால் பலர் இந்த ஆப்பை வைத்திருக்கிறார்கள். ட்ரூகாலர் ஆப்புக்கு உலகம் முழுதும் 14 கோடி பயன்பாட்டாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 70% பேர் வரை இந்தியர்கள் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்!
ஸ்வீடனைச் சேர்ந்த இந்த் ட்ரூகாலர் ஆப் நிறுவனம் தங்களது ஆப்பை பயன்படுத்துபவர்களின் மொபைலில் இருந்து காண்டாக்ட் லிஸ்ட், அவர்களின் வசிப்பிடம் ஆகிய தகவல்களையும் அவர்களது தனிப்பட்ட மெசேஜ்களையும் உருவியுள்ளது என்கிறார்கள். இப்படி உருவிய தகவல்களை டார்க் வெப் என்ற நிறுவனத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார்களாம். இதுவே, வெளிநாட்டு வாழ் இந்தியர் என்றால் அந்த தகவல்களுக்காக இருபது லட்சம் வரை பெற்றிருக்கிறார்களாம்.
ட்ரூகாலர் நிறுவனம் வெறுமனே அழைப்பை கண்டுபிடிக்கும் வசதியை மட்டும் செய்து தருவதில்லை. அதில் இப்போது ட்ரூகாலர் பே போன்ற நிதி சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இதன் வாடிக்கையாளர்கள் தங்களது நிதி தொடர்பான அந்தரங்கங்கள் வெளிப்பட்டுவிட்டனவோ என்ற பீதியில் இருக்கிறார்கள்.
ட்ரூ காலர் நிறுவனம் இந்தத் தகவல்களை மறுத்துள்ளது. ‘‘இப்படி ஒரு புகார் எங்கள் கவனத்துக்கு வந்தது. ஆனால், எந்தவிதமான சென்சிடிவ் பயனாளர் தகவல்களும் வெளிப்படுத்தப்படவில்லை என்று உறுதியாகச் சொல்கிறோம்.
குறிப்பாக, நிதி சார்ந்த தகவல்கள் எதுவுமே கசியவில்லை!’’ என சத்தியம் செய்கிறது. ‘‘எங்கள் ஆட்கள் இதை தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி கசியவிடப்பட்டதாகச் சொல்லப்படும் டேட்டாக்களில் பேரளவு எங்களது ட்ரூகாலர் டேட்டாவுடன் பொருந்தவில்லை!’’ என்கிறார்கள். எனில் சிறிய அளவில் பொருந்திப் போகிறதா என்பது பயனீட்டாளர்களின் கேள்வி. நிறுவனத்தின் பதிலில் மக்களுக்கு இன்னமும் திருப்தி இல்லை என்பதே உண்மை.இடம் இருக்கிறதே என்று கண்ட கண்ட ஆப்களையும் டவுன்லோடு செய்துகொண்டால் இப்படித்தான் நம் அந்தரங்கத்தை யாரோ விலை பேசி விற்பார்கள். இந்த புதிய நூற்றாண்டின் வாழ்க்கைமுறை அப்படி!
எனவே, அவசியமானதை மட்டும் மொபைலில் வைத்திருங்கள். யாரென்று தெரியாமல் ஒரே ஒரு விநாடி தடுமாறுவதற்கு பயந்து ஆப்களை தரவிறக்கினால் அதுவே பின்னாளில் பெரிய ஆப்பாக மாறிவிடும்!எச்சரிக்கை!
என்.யுவதி
|