இயற்கை எரிவாயுவுக்கு மாறி வரும் ஊட்டி பழங்குடிகள்!



சுற்றிலும் டீ தோட்டங்கள். நடுநடுவே ஓங்கி உயர்ந்த மரங்களுக்கிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிகின்றன வீடுகள். அதில், கொஞ்சம் செங்குத்தாக உள்ளிறங்கும் ஒற்றைப் பாதையில் இருக்கிறது வெள்ளச்சி பாட்டியின் வீடு.

வீட்டின் அருகிலேயே தொழுவம். மாடுகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்தார் பாட்டி. அவரின் மகன் குட்டன் மாட்டுச் சாணத்தைக் கரைத்து ஒரு தொட்டிக்குள் ஊற்றிக் கொண்டிருந்தார். ‘‘20 கிலோ சாணத்துக்கு 25 லிட்டர் தண்ணீர் ஊத்திக் கரைச்சுவிட்டா போதும். இன்னைய சமையலுக்கான பயோகேஸ் கிடைச்சிடும்!’’ என அறிவியல் பேசும் குட்டன், ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார்.

ஊட்டி மாவட்டம் கூடலூர் அருகே செருக்குன்னு என்கிற கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் பனியர் இனப் பழங்குடி மக்கள். இவர்கள் மட்டுமல்ல; கூடலூரைச் சுற்றி வாழும் மற்ற பனியர், குறும்பர், காட்டுநாயக்கர், கோத்தர் இனப் பழங்குடிகளும் இப்போது விறகு அடுப்பிலிருந்து பயோகேஸ் எனப்படும் இயற்கை எரிவாயுவுக்கு மாறி வருகின்றனர் என்பதே இப்போதைய ஹாட் டாபிக்! அடர்ந்த காடுகளில் இயற்கையோடு இயற்கையாக இம்மக்கள் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். காடுகள் அழியாமல் அதை உயிர்ப்புடன் ெபாக்கிஷமாகப் பாதுகாத்து வருபவர்களும் இவர்கள்தான்.

இப்போது காட்டின் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் தடுக்கவும், தங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ளவும் இந்த விஷயத்தை முன்னெடுத்துள்ளனர். இதன்மூலம், சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் அதிகப்படியான கார்பன் டை ஆக்ைஸடின் உமிழ்வைத் தடுத்துள்ளனர்.
‘‘முன்னாடி விறகு அடுப்புலதான் சமையல் எல்லாம்.

இதுக்காக, காட்டுக்குள்ள போய் விறகுகைளப் பொறுக்கிட்டு வருவோம். அப்ப, புலி, யானை அடிச்சு நிறைய பேர் இறந்திருக்காங்க. இதனால, விறகுக் கடைகள்ல காசுக்கு மொத்தமா வாங்கினோம். எங்க குடும்பத்துக்கு மட்டுமே மூணு மாசத்துக்கு விறகுக்காக மூவாயிரம் ரூபாய் செலவாகும். இப்ப பயோ கேஸ் திட்டத்தால செலவு மிச்சமாகியிருக்கு...’’ என உற்சாகத்துடன் சொல்கிறார் குட்டன்.

எப்படி இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது?... எனக் கேட்டால், ‘பழங்குடியினர் மற்றும் கிராமிய அபிவிருத்தி மைய அறக்கட்டளை’யின் தலைவர் ரங்கநாதனைக் கைகாட்டுகின்றனர். சுமார் நாற்பது வருடங்களாக இந்த மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வரும் அற்புத மனிதர்.

‘‘இதை எங்க அமைப்பு மட்டும் தனியா முன்னெடுத்து செயல்படுத்தல. இதுக்கு விதையைத் தூவியது ஐரோப்பிய பன்னாட்டு விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்தான். அவங்க ஃபவுண்டேஷன் வழியா இந்தத் திட்டத்தை செயல்படுத்திட்டு இருக்கோம். ஏர்பஸ் நிறுவனத்துடன் ஐநா வளர்ச்சித் திட்டம், மத்திய அரசின் சுற்றுச்சூழலுக்கான சிறிய மானியத் திட்டம், சுற்றுச்சூழல் கல்வி மையம், அப்புறம் எங்க அமைப்புனு எல்லோரும் கைகோர்த்து இந்த வேலை நடந்திட்டு இருக்கு.

கடந்த 2010ம் வருஷம் இந்தத் திட்டத்தை ஆரம்பிச்சோம். இந்தத் திட்டத்தோட நோக்கமே சுற்றுச்சூழலை பாதுகாக்கணும் என்பதுதான். பொதுவா, இந்த மக்கள் விறகு அடுப்புலதான் சமையல் செய்வாங்க.  அதிலிருந்து வெளியேறுகிற புகை, சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாதுனு நினைச்சோம்.

இதுக்கு மாற்று இயற்கை எரிவாயுதான். அதனால, மாட்டுச் சாணம் வழியா பயோகேஸ் உற்பத்தி பண்ணலாம்னு பேசினோம். ஒரு கொட்டகையும், ரெண்டு மாடுகளும், ஒரு பயோ பிளான்ட்டும் ேபாட்டுக் கொடுத்திட்டா, கேஸ் உற்பத்தி பண்ணி சமையலுக்கு பயன்படுத்தலாம்ங்கிறது கான்செப்ட். உடனே, இதுக்கான வழிவகைகளை ஏர்பஸ் நிறுவனம் செய்தது.

இங்குள்ள பழங்குடிகள், சமூகத்துல ரொம்ப பின்தங்கினவங்க. இவங்களுக்கு மாடுகள் வாங்கவும், கொட்டகை அமைக்கவும், பயோ பிளான்ட் போட்டுக்கவும் வீட்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் செலவு பண்ணினோம். இப்ப பத்து கிராமங்கள்ல 53 பயோ பிளான்ட்டுகள் போட்டிருக்கோம். ஆக, 53 குடும்பங்கள் இந்த பயோ கேஸ் வழியா சமையல் செய்திட்டு இருக்காங்க.

அதுமட்டுமில்ல; இந்த மாடுகள்ல இருந்து கிடைக்கிற பாலை விற்பனை செய்து தங்கள் வருமானத்தையும் இவங்க பெருக்கிக்கிறாங்க. ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஏழு லிட்டர் வரை பால் கிடைக்கும்...’’ என்றவர், வெள்ளேரி கிராமத்திலுள்ள ஒரு பயோ பிளான்ட்டைக் காட்டினார்.

‘‘இந்தக் கொட்டகையில இருக்கிற இரண்டு மாடுகளின் சாணத்தை எடுத்து, அந்தத் தொட்டியில் போட்டு நீர் ஊற்றி கரைச்சு விட வேண்டியது. மாட்டின் சிறுநீரும் இதுல நேரடியா சேர்ற மாதிரி வச்சிடுறோம். இந்தத் தொட்டிக்கு அடியில பயோ பிளான்ட் இருக்கு. அதுக்குள்ள கரைக்கப்பட்ட சாணம் போய் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுது.

அந்த வாயு, இந்த டியூப் வழியா நேரடியா வீட்டின் அடுப்புக்குப் போயிடும். இதன்மூலம் காலையில ரெண்டரை மணி நேரம், மாலையில ரெண்டரை மணி நேரம்னு ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் அடுப்பைப் பயன்படுத்தலாம். தேவைப்பட்டா கூடுதலா நீர் ஊற்றி அரைமணி நேரம் கேஸ் எடுக்கலாம்.

இதுவே அவங்களுக்குப் போனதுமானதா இருக்கு. இந்தச் செயல்முறை முடிஞ்சதும் அந்தக் கழிவுகள் வெளியேறி இயற்கை உரமா மாறிடும். அதை இங்குள்ள செடிகள், வாழைத் தோப்புகளுக்குப் போட்டுக்கிறாங்க. தவிர, அந்த இயற்கை உரத்தை விற்பனையும் செய்றாங்க. ஆக, ஒரு திட்டம் மூலம் பல பயன்களை இந்த மக்கள் அடையறாங்க...’’ என்ற ரங்கநாதனைத் தொடர்ந்தார் ஏர்பஸ் ஃபவுண்டேஷனின் சர்வதேச இயக்குநர் ஹனியா தபெத்.

‘‘வெறுமனே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டும் எங்க நோக்கமா இருக்கல. இந்த மக்களின் வாழ்வாதாரமும் முன்னேறணும்ங்கிறது எங்க குறிக்கோள்ல ஒண்ணு. இதுக்காக உலகம் முழுவதும் உள்ள ஏர் பஸ் பணியாளர்கள் இங்க வந்து பார்வையிட்டு தங்கள் பங்களிப்பைச் செய்தாங்க. இப்ப இந்தத் திட்டத்தை இன்னும் மூணு வருஷம் விரிவுபடுத்தி, மேலும்  சில பயோகேஸ் பிளான்ட் போடப் போறோம்...’’ எனப் பெருமையுடன் குறிப்பிட்டார்.  

‘‘இப்ப, பயோ கேஸ் பிளான்ட் போட்டபிறகு விறகு பயன்படுத்துறது ரொம்ப குறைஞ்சிருக்கு. ஒருவேளை பயோகேஸ் இல்லைன்னா, இவங்க கடந்த பத்து வருஷத்துல மட்டும் ஒன்பது லட்சம் கிலோ விறகு பயன்படுத்தியிருப்பாங்க. அப்ப, கார்பன் டை ஆக்ஸைடும் அதிகப்படியா வெளியேறியிருக்கும். ஆனா, இத்திட்டத்தால எல்லாமே மாறியிருக்கு.

தவிர, கடந்த பத்து வருஷத்துல பயோகேஸ் பிளான்ட் போடப்பட்ட மொத்த வீடுகள்ல பால் விற்பனை மூலம் சுமார் 58 லட்சம் ரூபாயும், மாட்டுச் சாணம் மூலம் சுமார் 2 லட்சம் ரூபாயும் வருமானம் ஈட்டப்பட்டிருக்கு.

இதுல, மாடுகளுக்கான தீவனம், எரிவாயு பராமரிப்புச் செலவு எல்லாம் போக நிகர லாபம்னு பார்த்தா 37 லட்சம் ரூபாய் கிடைச்சிருக்கு. இன்னும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துறதால சீக்கிரமே மேலும் நிறைய பழங்குடி மக்கள் பயனடையப் போறாங்க!’’ நம்பிக்கை பொங்க முடித்தார் ரங்கநாதன்.                              

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்