முதல்வர் பதவியும், 50 ஆண்டுகளாகத் தொடரும் ஆந்திராவின் ரத்த சரித்திரமும்!



போஸ்ட் மார்ட்டம்-6

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா, சீமாந்திரா என இரு மாநிலங்களாக இருக்கின்றன... என ஆரம்பித்தால் இருந்த இடத்தில் இருந்தே கல்லெடுத்து எறிவீர்கள்! ஸோ, தெரிந்த விஷயத்தை ஸ்கிப் செய்துவிட்டு மேட்டருக்கு செல்லலாம்.நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன் மாநிலத் தேர்தலும் இவ்விரு பகுதிகளில் நடைபெற்றது.

இதில் மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் ஜெயித்து சீமாந்திரா மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பு ஏற்கிறார் ‘ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்’ கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. அதுவும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசக் கட்சியை படுதோல்வி அடையச் செய்துவிட்டு.

இந்த வெற்றியை ‘ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்’ கட்சியின் தொண்டர்கள் மாநிலம் முழுக்கவே வெடி வைத்துக் கொண்டாடுகிறார்கள். ஏனெனில் அரசியல் தளத்தில் மிகப்பெரிய விஷயமாக ஜெகன்மோகன் ரெட்டியின் சக்சஸ் கருதப்படுகிறது.அதேநேரம் இந்த வெற்றிக்குப் பின்னால் 50 ஆண்டு காலமாகத் தொடரும் பழிவாங்கும் ரத்த சரித்திரமும் அடங்கியிருக்கிறது என்பதுதான் ஹைலைட்!

குருதி படிந்த இந்த வரலாற்றோடு இன்றைய மாவோயிஸ்ட் அமைப்புக்கும் தொடர்பிருக்கிறது என்பது நகைமுரண்!
மினி மகாபாரதம் என்னும் அளவுக்கு இந்தச் சரித்திரம் வெட்டும் குத்தும் நிரம்பியது. இந்த சரித்திர நிகழ்வுகளை எல்லாம் எண்ணற்ற தெலுங்குப் படங்களில் துண்டு துண்டாகப் பார்த்திருக்கலாம்.

என்றாலும் தொகுத்துப் பார்க்கும்போது ‘அடேங்கப்பா...’ என மலைப்பு ஏற்படுகிறது!மிகப்பெரிய க்ரைம் த்ரில்லர் ஸ்டோரிக்கான அடித்தளத்தைக் கொண்டிருக்கும் இந்த ரத்த வரலாற்றை மாஸ் ஆக ஓப்பன் செய்வதுதானே முறை?!அது 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி. நேரம் மதியம் 2.55.தெலுங்கானா, சீமாந்திரா என இரு மாநிலங்களாக பிரிக்கப்படாத ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தின் தலைநகரான அனந்தப்பூரில் இருக்கும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைமையகம்.

வரவிருக்கும் தேர்தல் குறித்து கட்சி ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து அம்மாவட்டச் செயலாளர் வெளியே வந்தார்.
கட்சித் தொண்டர்கள் இருபுறமும் நின்றபடி கைகூப்பி அவரை வணங்க... புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டே தன் காரை நோக்கிச் சென்றார்.
ஐந்து பேர்... ஐந்தே ஐந்து  பேர் அவருக்கு எதிரில் வந்து வணங்கினர்.பதில் வணக்கம் செலுத்தினார் அந்த மாவட்டச் செயலாளர்.

அது மட்டும்தான் அவருக்குத் தெரியும்.அடுத்த நொடி தோட்டாக்கள் அவர் உடல் எங்கும் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே சடலமானார். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அனந்தப்பூர் மாவட்டம் மட்டுமல்ல... மொத்த ஆந்திராவும் பற்றி எரிகிறது!காரணம், படுகொலை செய்யப்பட்டவர் தெலுங்கு தேசக் கட்சியின் அனந்தப்பூர் மாவட்ட செயலாளர் மட்டுமல்ல; அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர்.
மட்டுமல்ல, ஆந்திராவின் மிகப்பெரிய காட்ஃபாதர்! யெஸ். பரிதலா ரவிதான் அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்டார்!பெனுகுண்டா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான பரிதலா ரவி, அதே தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை எம்எல்ஏ ஆகப் பதவி வகித்தவர். அவரை எதிர்த்து ஒருவரும் அத்தொகுதியில் ஜெயித்ததில்லை.

56 கொலை வழக்குகள், பல கொலை முயற்சி வழக்குகள், தேர்தல் முறைகேடுகள் சம்பந்தமான வழக்குகள்... என பரிதலா ரவியின் பயோடேட்டா நீளமானது.ஆனால், ஆதாரங்கள் ஏதும் கிடைக்காததால் எந்த வழக்கிலும் சட்டப்படி தண்டிக்கப்படாதவர்! பரிதலா ரவியின் மீது துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்த நொடி முதல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது வரை மாநிலம் முழுவதும் வன்முறைக் காட்சிகள் அரங்கேறின. எதிரிகள் தேடித் தேடி வேட்டையாடப்பட்டார்கள்.

இன்றைய தேதி வரை ஆந்திர வரலாற்றிலேயே வன்முறையால் அதிக அளவுக்கு பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதில் இரண்டாமிடம் இந்த நிகழ்ச்சிக்குத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் 80 கோடி ரூபாய் அளவில் பொதுச் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்த அசம்பாவிதங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் அப்போதைய ஆந்திர முதல்வரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜசேகர் ரெட்டிக்கு போதும் போதும் என்றாகி விட்டது. இந்த ராஜசேகர் ரெட்டிதான் இப்போது சீமாந்திராவின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை!

ரைட். விஷயத்துக்கு வருவோம். பரிதலா ரவியின் படுகொலைக்காக வேட்டையாடப்பட்ட ‘எதிரிகள்’ அனைவரும் ஆப்போசிட் கேம்பில் இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் இருந்தவர்கள்தான்.எனில், முதலிடத்தில் இருந்த முதன்மையான எதிரி..?
“அவனைத் தூக்குல போடு... இல்ல ஒரேயொரு நாள் பெயில்ல விடு. அவன் கதையை நாங்க முடிக்கறோம்!’’ பரிதலா ரவியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆக்ரோஷமாக பேட்டி கொடுத்தார்கள்.

அந்த முதன்மையான எதிரி யார் என்பது பரிதலா ரவியின் ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல... ஆந்திர மீடியாக்களுக்கும் தெரியும். அவ்வளவு ஏன்... ஆந்திர மக்களும் அறிவார்கள்!அந்த முதன்மையான எதிரி அப்போது இருந்தது ஐதராபாத்தில் உள்ள செர்லபள்ளி மத்திய சிறைச்சாலையில்! அதுவும் பலத்த பல அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு செல்லில்!

இப்படி சிறையில் இருக்கும் முதன்மையான எதிரியால் எப்படி தெலுங்கு தேசக் கட்சியின் அனந்தப்பூர் மாவட்டச் செயலாளரான பரிதலா ரவியை ஸ்கெட்ச் போட்டுக் கொன்றிருக்க முடியும்?நல்ல கேள்வி இல்லையா..?இதற்கான விடையை தெலுங்கு தேசக் கட்சி மட்டுமல்ல... ஆந்திர மீடியாவும் சொன்னது!

‘‘சிறையில் இருப்பவன் ஸ்கெட்ச் போட்டுத் தர ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிதான் (இப்போது சீமாந்திராவின் முதல்வராகப் பொறுப்பேற்றிருப்பவரேதான்!) அதை இம்மி பிசகாமல் நிறைவேற்றினார்..!’’ஜிலேபி பிழியாமல், கிசுகிசுவாகச் சொல்லாமல் நேரடியாக பெயரைச் சொல்லி தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவும் மற்ற கட்சித் தலைவர்களும் குற்றம்சாட்டினார்கள்.

“இல்லை...” என்று மறுத்த அப்போதைய முதல்வர் ராஜசேகர் ரெட்டி, “இதற்காக எந்த இடத்தில் தீக்குளிக்கச் சொன்னாலும் அக்னியில் இறங்கத் தயார்! என் மகன் ஜெகன்மோகன் ரெட்டி அப்படிப்பட்டவன் அல்ல!’’ என சத்தியம் செய்தார்.

சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி ஓர் ஆண்டுகூட ஆகாத நிலையில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டு ராஜசேகர் ரெட்டியின் மீது விழுந்தது. கொந்தளித்துப் போயிருந்த எதிர்க் கட்சியினரைச் சமாளிக்க உடனடியாக இக்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றினார்.
அத்துடன் கர்நாடக அரசுக்கும் போன் செய்தார்! காரணம், அப்போது அம்மாநிலத்தில்தான் உயிருக்குப் பயந்து ஜெகன்மோகன் ரெட்டி தங்கியிருந்தார்! மகனுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி ராஜசேகர் ரெட்டி கேட்டுக் கொண்டார்!

இதெல்லாம் ஒருபக்கம் நடக்க... பரிதலா ரவியைச் சுட்டுக் கொல்ல ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த சூத்திரதாரி - முதன்மையான எதிரி - யார் என்ற வினா எழுகிறதல்லவா?இதற்கான ஒன் அண்ட் ஒன்லி ஆன்சர், மட்டலச்செருவு சூர்யநாராயண ரெட்டி என்கிற சூரி!
இவர்தான் ஐதராபாத்தில் உள்ள செர்லபள்ளி மத்திய சிறையில் பல அடுக்குகள் பாதுகாப்பு கொண்ட செல்லில் இருந்தவர்!இந்த சூரிக்கும் பரிதலா ரவிக்கும் என்ன பகை..? ஜெகன்மோகன் ரெட்டி இதில் எப்படி வந்தார்..?

இதற்கான பதில்கள் அனைத்தும் தெலுங்கானா போராட்டத்தில் இருந்து தொடங்குகிறது!ம்ஹூம். சமீபத்தில் நடந்தவை அல்ல. சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தெலுங்கானா பகுதியில் கொழுந்து விட்டு எரிந்த விவசாயிகளின் போராட்டத்தில் இருந்தே தொடங்குகிறது!

அதற்காக பூர்வீக சரித்திரத்தை எல்லாம் விவரித்து தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம்.நேரடியாக 1971ம் ஆண்டுக்கு ஜம்ப் ஆகலாம்!

ஆந்திர மாநில அரசியலில் வன்முறைக்குப் பெயர் பெற்ற மாவட்டங்கள் என அனந்தப்பூர், கடப்பா, கர்னூல், சித்தூர் ஆகிய நான்கையும் சொல்லலாம். நிலத்தால் இந்த நான்குமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ளவை. குறிப்பாக அனந்தப்பூரும் சித்தூரும் கர்நாடக மாநிலத்தின் எல்லையாகவும் இருப்பவை!ராயலசீமா என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நான்கு மாவட்டங்களும்தான் பண்ணை அடிமைக் கொடுமைகளுக்கு பெயர் போனவை.

பண்ணையார்களின் கொடுமைகளால் விவசாயிகள் தினம் தினம் செத்துப் பிழைத்தார்கள். அன்றைய ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காலத்தில் இருந்து இக்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வந்தன; வருகின்றன. சீனப் போரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எனக் கட்சி பிளவுபட்டதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இந்த ராயலசீமா பகுதிகள் வந்தன; விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்ந்தன.

1967ல் அன்றைய மேற்கு வங்கம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி கிராமத்தில் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற அறிவிப்புடன் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டார்கள்.இந்த எழுச்சியை ஒடுக்க அப்போது மேற்கு வங்க மாநிலத்தில் கூட்டணி அரசில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயன்றது.

இதை எதிர்த்தும் கண்டித்தும், நக்சல்பாரி உழவர் எழுச்சியை நாடு முழுக்க அமல்படுத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பலர் இந்தியா முழுக்க பிரிந்து தனிக் கட்சி தொடங்கினார்கள். தங்கள் கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்றும் பெயர் வைத்தார்கள்.

இக்கட்சியைச் சேர்ந்தவர்கள் நக்சலைட்டுகள் என அரசால் அழைக்கப்பட்டனர்; அழைக்கப்பட்டும் வருகின்றனர்.இந்த நக்சலைட் அமைப்பு ராயலசீமா பகுதியில் வலுவாகக் கால் ஊன்றியது. பின்னாளில் மக்கள் யுத்தக் குழு... இப்போது மாவோயிஸ்ட் கட்சி... என்றெல்லாம் அழைக்கப்படும் அமைப்பின் ஆரம்பக் காலம் அது.

பண்ணையார்களுக்கு எதிரான அழித்தொழிப்பு நடவடிக்கைகள் முதல் உழவர்களின் நலனுக்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ராயலசீமா பகுதியில் செய்து வந்தார்கள்.இந்த நக்சலைட் அமைப்பின் ராயலசீமா பகுதித் தலைவர்களில் ஒருவராக ராமுலு இருந்தார். இந்த ராமுலு வேறு யாருமல்ல... பரிதலா ரவியின் அப்பாதான்!  

(தொடரும்)

கே.என். சிவராமன்