நான் நடிகையாகப் போறேன்



சென்ற இதழ் தொடர்ச்சி...

பேக்கப் ஆகி தங்கியிருக்கும் அறைக்கு வந்தபோது மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. பல வருடங்களாகத் தொடரும் சமூக சாதிய அவலம். மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு வாரம் இங்கே இருக்கப் போகிறேன். அதற்குள் என்னால் என்ன செய்து விடமுடியும்... இந்தப் பிரச்சினைக்கு என்னதான்தீர்வு...?வாட்ஸ் அப்பில் இமேஜ் வந்ததற்கான ஐகான் தெரிந்தது.

அம்மாவிடமிருந்து வந்திருந்தது... விரலை அழுத்தினாள். அவள் போட்டோ உயிர்ப்பானது. சிறுவயதில் என்சிசியில் இருந்தபோது எடுத்த ஃபோட்டோ… யூனிஃபார்மில் இருந்த தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.செல்போனில் மிஸ்ட் கால் வர... எடுத்துப் பார்த்தாள். அறிமுகமில்லாத எண்.அடுத்த விநாடி அந்த எண்ணிலிருந்து வாட்ஸ்அப் தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஐகான் காட்டியது. ஒரு ஆடியோ ஃபைல் வந்து விழுந்தது. யோசிப்புடன் ஃபைலை ஓப்பன் செய்தாள்.

``ஏய்…’’ ஆண் குரலில் ஆபாச வார்த்தை. ஆணவ வார்த்தை. ``இந்த ஊர்ல யார் பள்ளிக்கூடம் போகணும்... யார் படிக்கணும்… எல்லாத்தையும் நாங்கதான் முடிவு பண்ணுவோம். இங்க நாங்க வச்சதுதான் சட்டம். அரசாங்கம்... போலீஸ்... நீ நடிக்கிறியே கலெக்டர் வேஷம்... அவரால எல்லாம் ஒரு ... புடுங்க முடியாது.

பல ஒரிஜினல் கலெக்டரையே பார்த்துட்டோம். நீ டூப்ளிகேட். உன்னால என்ன பண்ண முடியும்? நாங்க எல்லாம் கட்சி ஆளுங்க. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எங்கள ஒண்ணும் பண்ண முடியாது. நீ ஒரு நடிகை. உன்னால என்ன புடுங்க முடியும்? நீ எங்க போனாலும் கடைசில எங்ககிட்டதான் பிரச்னை வரும்… எங்களத் தாண்டி ஒருத்தன் ஒண்ணு பண்ண முடியாது. ஷூட்டிங் வந்தோமா... படத்துல நடிச்சோமான்னு இருக்கணும்… இல்ல...’’

திமிரும் ஆணவமும் கலந்து வந்து விழுந்தன. வார்த்தைகளில் இருந்த வெறுப்பும் கோபமும் அவளைக் கடுமையாகத் தாக்கின.
சுவர்ணா கட்டிலில் அமர்ந்தாள். அந்தப் பேச்சில் இருந்த வெறியும் திமிரும் அவளை நிலைகுலைய வைத்தன. கண்கள் கோபத்தில் சிவந்தன. பிபி ஏறியது. உடல் நடுங்கியது. அந்த மூன்று நாட்களில் உண்டாகும் உடல் உபாதையை விட மனதில் அதிகம் வலித்தது.

நாங்கள் சாதி வெறி பிடித்த அரசியல்வாதிகள்… ஒரு சினிமா நடிகையால் என்ன செய்து விட முடியும்? இதுதானே உங்கள் எண்ணம்… திமிர்... ஆணவம்…தண்ணீர் எடுத்துக் குடித்தாள். நிதானப்படுத்திக் கொண்டாள். லேப்டாப் எடுத்தாள். ஆன் செய்து முகநூல் பக்கத்திற்கு வந்தாள். கண்மூடி யோசித்தாள். விரல்கள் கீ போர்டில் நடனமாடத் தொடங்கின.

மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு...வார்த்தைகளைக் கோர்த்து கோர்த்து கவனமாக கம்போஸ் செய்யத் தொடங்கினாள். ஆடியோ ஃபைலில் இடம் பெற்றிருந்த வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாள். சுருக்கமாகச் செய்தி பதிந்து அதோடு அந்த ஆடியோ ஃபைலை இணைத்தாள். ஷேர் செய்தாள்.உள்துறை அமைச்சகம், பிரதமர் அலுவலகம், மனித உரிமைக் கமிஷன், ஐநா சபையின் யூனிசெஃப் பிரிவின் டுவிட்டர் பக்கம் அனைத்திற்கும் டேக் செய்தாள்.

பிறகு நீண்ட நேரம் யோசித்தபடி அறைக்குள் நடந்தாள். மனதிற்குள் எண்ணங்கள் ஓடின. என்னுடைய இந்த முயற்சிக்கு எந்த அளவில் நடவடிக்கை இருக்கும்… ஆடியோவில் பேசியது போலவே நடவடிக்கை இவர்களிடம் வந்து ஒன்றுமில்லாமல் முடிந்து விடுமோ… ஒரு கிராமத்தில் சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் இந்த உடற்கூறு யுத்தத்தில் சிறுமிகளை அநாதரவாக விடுவதா… பிறகு கலெக்டராக நடித்து என்ன பயன்…?
செல்போன் எடுத்தாள். மெஸேஜில் பதிந்தாள்.

யுனிசெஃப் அடுத்த சில நிமிடங்களில் தனது முகநூல் பக்கத்தில் நான்கு வரிகளில் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்க… சிறிது நேரத்தில் அரசாங்க இயந்திரம் பற்றிக் கொண்டது.தில்லியிலிருந்து தலைமைச் செயலாளருக்கு அவசர அழைப்பு வந்தது. அவர் காவல் துறைத் தலைவரை அழைத்தார். வடமண்டல ஐஜிக்கு தகவல் போனது. அவர் நேரடியாக எஸ்பியைத் தொடர்பு கொண்டார். நுண்ணறிவு போலீஸார் களத்தில் இறக்கப்பட்டார்கள்.

நள்ளிரவு நேரத்தில் வேதநல்லூர் கிராமத்திற்குள் பெரும் போலீஸ் படை புகுந்தது. மின்சாரத்தை நிறுத்தினார்கள். லைஃப் டார்ச் உபயத்தோடு ஆர்ஏஎஃப் எனப்படும் அதிரடிப் படையினர் கிராமத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். வீடு வீடாகப் புகுந்தார்கள். நுண்ணறிவுப் பிரிவு சுட்டிக்காட்டியிருந்த சிலருக்கு பிரம்பால் பின்புறத்தில் பொளேரென அடி விழுந்தது. சிலரைக் கைது செய்தார்கள். பலரை மிரட்டினார்கள்.
காலையில் கண்விழித்து ஜன்னல் வழியே சுவர்ணா வெளியில் பார்த்தபோது ஆச்சரியமானாள்..

கெஸ்ட் ஹவுஸைச் சுற்றி போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. ஆயுதமேந்திய போலீஸார் தெரு முழுதும் நின்றிருந்தார்கள். கண்ணுக்கெட்டிய  தூரம் வரை போலீஸ் ஜீப்புகளும் வேன்களும் நின்றிருந்தன.அறையை விட்டு வெளியே வந்தவளைப் பார்த்து இன்ஸ்பெக்டர் முன்னால் வந்தார். ``மேடம்… உங்களுக்கு பந்தோபஸ்து கொடுக்கச்சொல்லி உத்தரவு!’’``ஏன்..’’ ``ராத்திரி ஊர்ல ஒரு பிரச்னை. நீங்க டுவீட் போட்டிருந்தீங்களா... நாங்க விசாரணை பண்ணி சிலரை அரெஸ்ட் பண்ணினோம். அதனால உங்கமேல கிராமத்தைச் சேர்ந்த சில பேரு கோவமா இருக்காங்க…’’

சுவர்ணாவுக்குப் புரிந்தது. அறைக்கு வந்த ஆங்கிலப் பேப்பரைப் பிரித்தாள். இரண்டாம் பக்கத்தில் நான்கு பத்தியில் அவளது புகைப்படத்துடன் செய்தி.பிரபல நடிகை ஸ்வர்ணா டுவீட்டால் வேதநல்லூர் கிராமத்தில் சாதிய அவலம் களையப்பட்டது...

படத்தின் டைரக்டர் வந்தார். ``மேடம்... இன்னும் பத்து நாள் இங்க ஷூட்டிங் நடத்தணும். நீங்க பாட்டுக்கு கொளுத்திப் போட்டுட்டீங்க. பத்திக்கிட்டு எரியுது… மீடியா கவனம் முழுக்க வேதநல்லூர் கிராமத்துலதான்...’’அமைதியாக காரில் ஏறினாள். கார் போகும்போது கவனித்தாள். சமூக நலத்துறையைச் சேர்ந்த இரண்டு வேன்கள் ஊருக்குள் வந்து கொண்டிருந்தன. தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த கார் ஒன்று போய்க் கொண்டிருந்ததுபடப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தார்கள்.

முதல் ஷாட் முடிந்ததும், பள்ளிக்கூடச் சிறுமிகள், ஊர் ஆட்கள் சில பேர் ஓடி வந்தார்கள். போலீஸாரின் தடுப்பை மீறி உள்ளே வந்தார்கள்.
``மேடம் தேங்க்ஸ் மேடம்… எங்களுக்கு நாப்கின் கொடுத்திருக்காங்க. ஸ்கூல்லேயும் ஸ்டாக் வச்சிருக்காங்க. இனிமேல மென்சஸ் நேரத்துல ஸ்கூலுக்கு வரலாம்னு சொல்லிட்டாங்க. ராத்திரி முழுக்க போலீஸ் ஊர்ல விசாரிச்சிச்சு மேடம்… பி.டி வாத்தியார டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க...’’
கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெரிய மனிதர்கள் அருகில் வந்தார்கள். மரியாதையாகக் கும்பிட்டார்கள். ``மேடம்... நாளைக்கு சுதந்திர தினம். ஸ்கூல்ல நீங்கதான் கொடியேத்தணும்..!’’

மாலை முன்னேரத்திலேயே படப்பிடிப்பு பேக்அப் ஆனது.``மேடம்... போலீஸ்ல முடிக்கச் சொல்லிட்டாங்க. நாளையோட ஷெட்யூல் பேக்கப் மேடம்…’’
சுவர்ணா அதிர்ச்சியானாள். ‘‘நம்ம பிளான்படி இன்னும் ஆறு நாள் இருக்கே...’’``ஊர்ப்பஞ்சாயத்துலேந்து இனிமே ஷூட்டிங் நடத்தக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க… ஊரை விட்டு நீங்க உடனே கெளம்பி ஆகணுமாம்… அதனால புரொட்யூஸர் முடிக்கச் சொல்லிட்டாரு. மேடம் பிரஸ்கிட்ட எதுவும் பேச வேணாம். புரொட்யூஸர் கவுன்சில்லேயும் நடிகர் சங்கத்துலேயும் உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்களாம். கவர்ண்மெண்டுலேந்து செம பிரஷராம்…’’சுவர்ணா யோசித்தாள்.

``கலெக்டரா நடிக்கறதுக்கு வாய்ப்புக் குடுத்தேன். நீங்க கலெக்டராவே மாறிட்டிங்க. ஆல் த பெஸ்ட். நீங்க இன்னைக்கே கூட சென்னைக்கு புறப்படலாம் மேடம்...’’``இல்ல, நாளைக்கு ஸ்கூல்ல கொடியேத்த வர்றேன்னு சொல்லியிருக்கேன்...’’டைரக்டர் தயங்கினார், பிறகு ``ஓகே மேடம். உங்க இஷ்டம்...’’படப்பிடிப்புத் தளத்திலிருந்து கெஸ்ட்ஹவுஸ் வரை சுவர்ணாவை போலீஸ் அரண் அமைத்து அழைத்துச்சென்றது.

இரவு சாப்பாடு முடித்து, டிவி பார்த்தாள். ``காஞ்சிபுரம் மாவட்டத்துல வேதநல்லூர்ங்கற கிராமத்துல மாதவிலக்கு நேரத்துல ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளை பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாதுன்னு தடுத்திருக்காங்க. எழுபது வருட சுதந்திர இந்தியாவுல கிராமங்களுக்கு உண்மையாவே சுதந்திரம் கிடைச்சிருக்கா..? கிராமங்கள்ல தீண்டாமைக் கொடுமை ஒழிஞ்சிடுச்சா? இதப்பத்திதான் நாம இன்னைக்கு விவாதிக்கப்போறோம். சமூக நல ஆர்வலர் தாமோதரன்… வழக்கறிஞர் அருள்மொழி…  ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாஞ்சில் அன்பழகன்.... எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஆலந்தூர் சோமு நம்மோட இணைஞ்சிருக்காங்க....’’

இந்திய அளவில் தனது டுவிட்டருக்கும் ஃபேஸ்புக் பதிவுக்கும் ரெஸ்பான்ஸ் இருந்ததை சுவர்ணா மனதில் குறித்துக் கொண்டாள்.
தலையணையை மடியில் வைத்துக்கொண்டு டிவியில் ஆர்வமானபோது, ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு பெரும் சத்தத்துடன் அந்தக் கல் உள்ளே வந்து விழுந்தது. சுவர்ணாஅதிர்ந்தாள். லைட்டை ஆஃப் செய்தாள். படுக்கைக்குக் கீழே சரிந்தாள். சத்தம் கேட்டு போலீஸ் உள்ளே வந்தது. வெளியே தடதடவென சத்தம் கேட்டது.

சுவர்ணா செல்போன் எடுத்தாள். இன்ஸ்பெக்டர் நம்பர் போட்டாள். அவர் பேசுமுன்னே கடுமையான, குரலில் பேசினாள். ``எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு உங்கள் பாதுகாப்புக் குறைபாடே காரணம்… இதை உங்கள் மேலதிகாரிகளுக்குச் சொல்வேன்!’’
மறுமுனையில் இன்ஸ்பெக்டர் அதிர்வதை உணர்ந்தாள்.

பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்போனில் படபடத்தார். ``சாரி மேடம்... நீங்க உடனே சென்னைக்கு கெளம்பிடுங்க…’’
``இல்ல... போக மாட்டேன்...’’ உறுதியான குரலில் மறுத்தாள்.இரவு முழுதும் தூங்காமல் விழித்திருந்தாள். அவளுக்குள் பல எண்ணங்கள் அணிவகுத்தபடி இருந்தன. அச்சுறுத்தலையும் தாண்டி மனசுக்குள் ஒரு நிம்மதி படர்ந்தது. எதிர்வினை பலமாக இருக்கிறது. ஜெயித்து விட்டேன்.

விடிந்ததும் பரபரப்பானாள். கலெக்டர் புடவை கட்டிக் கொண்டாள். மேக்கப் தவிர்த்தாள். நெஞ்சில் தேசியக் கொடி குத்திக் கொண்டாள். டுவீட் போட்டது… எம்.பி பேசியது... கலெக்டர் பேசியது... ஆர்டிஓ வந்தது, போலீஸ் பந்தோபஸ்து கொடுக்கப்பட்டது, அறைக்குள் கல் வந்து விழுந்தது... ஆசிட் வீசப்பட்டது எல்லாம் மனதுக்குள் ஓடின.

நடிகை என்கிற வட்டத்தைத் தாண்டி இது எளிய மக்களின் உரிமைக்கான போராட்டமாக அவளுக்குள் தோன்றியது. தன்னை இப்படி மாற்றிய அந்த சக்தியைப் பற்றி யோசித்தாள். புரியவில்லை. இந்த கலெக்டர் வேஷமோ... இருபது நாட்களாக அந்த கேரக்டராகவே வாழ்ந்தது தனக்குள் ஒரு தனித்துவத்தை, தைரியத்தை ஏற்படுத்தி விட்டதோ... ஒரு சாதாரண நடிகை என்கிற உணர்வைத் தாண்டி சமூக அக்கறை, சக மனிதருக்கு இழைக்கப்படும் அவலத்திற்கு எதிராக கொதித்தெழவேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்தி விட்டதோ…

பெரும் பாதுகாப்புடன் ஸ்கூல் நோக்கி வந்தாள். தன்னைச் சுற்றி வந்த போலீஸ் படையை பெருமிதத்தோடு கவனித்தாள். அம்மாவின் கனவு நனவாகி விட்டது. பள்ளிக் குழந்தைகளோடு கிராமம் மொத்தமும் மைதானத்தில் திரண்டிருந்தது. அவளைப் பார்த்ததும் ஆரவாரித்தது. கையசைத்தது.
வானம் தொட்டிருந்த கொடிக் கம்பத்தை பெருமிதமாகப் பார்த்தாள். தலைமையாசிரியர் தேசியக்கொடியின் கயிற்றை எடுத்துக்கொடுக்க சுவர்ணா கொடியேற்றினாள்தேசியக் கொடி அங்குலம் அங்குலமாக மேலேறியது.

``ஜனங்களும் மனங்களும் இரண்டற...’’ தேசீய கீதத்தை மாணவ மாணவிகள் கோரஸாக தமிழில் பாடினார்கள்.தேசியக் கொடி காற்றில் படபடக்க... ``மேடம் நீங்க கெளம்பலாம்…’’ எஸ்பி அருகில் வந்து படபடத்தார்.கம்பெனி காரில் சுவர்ணா ஏறப்போக… ``மேடம்... ப்ளீஸ்... இந்த ஜீப்புல வாங்க. காஞ்சிபுரம் வரைக்கும் இதுல உங்கள அழைச்சிட்டுப் போகச் சொல்லி இன்ஸ்ட்ரக்சன். உங்க வீடு வரைக்கும் உங்களுக்கு பந்தோபஸ்து குடுக்கச் சொல்லி இருக்காங்க. உங்க சென்னை வீட்டுலேயும் உங்களுக்கு போலீஸ் எஸ்கார்ட் போடச்சொல்லி உத்தரவு மேடம்…’’
சுவர்ணா சைரன் பொருத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப்பில் ஏறி அமர்ந்தாள். வேதநல்லூர் கிராமத்தைப் பார்த்தாள். ஜீப் மெல்ல நகர்ந்தது.

``மேடம்...’’
குரல் கேட்டுத் திரும்பினாள். அந்த நான்கு சிறுமிகளும் நெஞ்சில் குத்திய கொடியோடு அவளைப் பார்த்து நெற்றியில் கை வைத்து சிரித்தபடி விஷ் செய்தார்கள்.சுவர்ணா அவர்களைப் பார்த்துச் சிரித்தாள். ``ஒரு நிமிஷம்...’’ஜீப் நின்றது. சிறுமிகள் அருகே வந்தார்கள். போலீஸார் ஜீப்பைச் சூழ்ந்து நின்று கொள்ள, உள்ளிருந்தபடியே சுவர்ணா அவர்களைப் பார்த்தாள்.

மற்ற பெண்கள் வெட்கப்பட்டு தயங்கி நிற்க… நால்வரில் சற்று உயரமாகவும் வாளிப்பாகவும் இருந்த பெண் நெருங்கி வந்து கை கொடுத்தாள். ``கலக்கிட்டிங்க மேடம்…’’சுவர்ணா சிரித்தாள். ``தேங்க்ஸ்… உன் பேரென்ன..? என்ன படிக்கிறே..?’’
``நிறைமதி... டென்த் படிக்கறேன். மேடம்... நேத்து நைட்டு உங்க ரூம்ல கல் எறிஞ்சது நாங்கதான்...’’
சுவர்ணா முறைத்தாள்.

``சாரி மேடம்…. உங்க மேல ஆசிட் அடிக்க பிளான் போட்டிருந்தாங்க. உங்கள அலர்ட் பண்ணத்தான் அதமாதிரி பண்ணினோம்…’’
``அப்படியா..?’’``உங்கள ஸ்கூல்ல கொடியேத்த விடக்கூடாதுன்னு ஊர்ல சில பேரு முடிவு பண்ணியிருந்தாங்க. ஆனா, நீங்க துணிச்சலா இங்கேயிருந்து சாதிச்சிட்டிங்க மேடம்…’’சுவர்ணா சிரித்தாள். ``ஓகே... நல்லா படிக்கணும்… பெரிய கலெக்டராகணும்...’’

நிறைமதி சிரித்தாள். அழுத்தம் திருத்தமாகப் பேசினாள். ``பல கலெக்டர் வந்து போயிட்டாங்க மேடம். அவங்களாலயெல்லாம் ஒண்ணும் பண்ண முடியல. நீங்கதான் சாதிச்சிருக்கீங்க… அதனால நான் உங்கள மாதிரி நடிகையாகப் போறேன்..!’’ என்றாள்.
சுவர்ணா சிரித்தாள்.       

தம்ஸ் அப் கேர்ள்!

ஆமாம். லேட்டஸ்ட் தம்ஸ் அப் குளிர்பான விளம்பரத்தில் மகேஷ்பாபுவுடன் நடித்திருப்பவர் இவர்தான். பெயர், திவா தவான். நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர். என்றாலும் இப்போது வசிப்பது மும்பையில். ஃபேஷன் ஷோக்களில் ரேம்ப் வாக் நடந்தபடி மாடலிங்கும் செய்து வருகிறார். விரைவில் படங்களில் நடிக்கப் போகிறார்... தமிழுக்கும் வரப் போகிறார். இப்போதைக்கு இந்த பிட் போதும்!

கொதிக்கும் இன்ஸ்டா!

பின்னே... இப்படியொரு படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டால் இன்ஸ்டாவே கொதிக்கத்தானே செய்யும்! அதனால்தான் சூட்டோடு சூடாக 10 லட்சம் லைக்ஸை தாண்டி இப்படம் எட்டுத் திசையிலும் பரவிக் கொண்டிருக்கிறது. அம்மணியின் பெயர் தீக்‌ஷா பட்டாணி. சல்மான் கான் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘பாரத்’ இந்திப் படத்தில் நடித்திருக்கிறார். ஷூட்டிங் இல்லாத மற்ற நேரங்களில் இப்படி ‘இன்னர்’ ஹீட்டை இன்ஸ்டாவில் கிளப்பிக் கொண்டிருக்கிறார்!

கடைசி கட்டத் தாக்குதல்!

வேறு எப்படி தலைப்பு வைக்க..? சாகும் காலத்தில் சங்கரா சங்கரா என்பது போல் இப்போது இப்படியொரு போஸில் போட்டோ ஷூட் எடுத்து இணையத்தில் உலவ விட்டிருக்கிறார் காஜல் அகர்வால். இதன் வழியாக வாய்ப்புகள் அதிகரித்து இன்னும் ஒரு ரவுண்ட் அவர் வந்தால் மகிழ்ச்சிதான்!

ரூ.100 கோடியில் ரகுல்?

அதிர்ச்சி வேண்டாம். அஜய்தேவ்கன் ஜோடியாக ‘De De Pyaar De’ இந்திப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் இதுதான் அவருக்கு முதல் படம். இந்தப் படம் வெற்றியா இல்லையா என்ற விவாதம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், தோல்வி அல்ல என்பது மட்டும் நிச்சயம். இந்நிலையில் இப்படம் ரூ.100 கோடி வசூல் இலக்கைக் கடந்துவிட்டதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆக... தலைப்பை படியுங்கள்!

திருவாரூர் பாபு