தலபுராணம் - எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை!



ரயில்நிலையம், அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம் என எழும்பூருக்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும், கூடுதல் சிறப்பைத் தருவது பாந்தியன் சாலையில் வீற்றிருக்கும் மகப்பேறு மருத்துவமனையே!1844ம் வருடம் ஜூலை 25ம் தேதி தொடங்கப்பட்ட இம்மருத்துவமனை இப்போது தன்னுடைய 175வது வருடத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அயர்லாந்தின் ரொடண்டா மகப்பேறு மருத்துவமனைதான் உலகில் பழமை வாய்ந்ததும் சிறப்பானதும் புகழ்பெற்றதுமாகும். அதற்கடுத்து சிறந்ததெனப் பெயர் பெற்றது எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைதான்.

பிரிட்டிஷ் இந்தியாவில் மட்டுமல்ல. ஆசியாவிலேயே படுக்கை வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட முதல் மகப்பேறு மருத்துவமனையும் இதுவே.
பிரிட்டிஷ் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பெண்களுக்கென்றே முதலில் தொடங்கப்பட்டது. பின்னரே, உள்ளூர் பெண்களுக்கும் மருத்துவம் பார்க்கப்பட்டது.

ஆரம்பத்தில், இன்ைறய எழும்பூர் ரயில் நிலையத்தை ஒட்டிய கூவம் நதியைப் பார்த்தபடி மருத்துவமனை அமைந்திருந்தது. அப்போது, ‘Madras Government Lying-in Hospital’ என அழைக்கப்பட்டது. இங்கே, இந்திய மருத்துவத்தில் பயிற்சி எடுத்த சிறந்த ஐரோப்பிய மருத்துவர்களே மருத்துவம் பார்த்து வந்தனர்.

முதல் நான்கு வருடங்கள் மருத்துவமனைக்கென கண்காணிப்பாளர் யாரும் இருக்கவில்லை. மருத்துவர்களின் குழுவால் மருத்துவமனை நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. பின்னர், 1848ம் வருடம் டாக்டர் டபிள்யு.எஸ்.தாம்சன் முதல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
ஆரம்பித்த முதல் வருடத்தில் மாதம் ஒன்றுக்கு ஒன்பது பிரசவங்கள் பார்க்கப்பட்டன. இது அடுத்த பத்து வருடங்களில் 740 என்றும், தொடர்ந்து 1865ம் வருடம் ஆயிரத்து 186 பிரசவங்களாகவும் அதிகரித்தது.

இதனால், வார்டுகள் நெருக்கடியைச் சந்தித்தன. குறிப்பாக, 1869 முதல் 1871 வருடக் காலகட்டங்களில் அதிக நெருக்கடி ஏற்பட்டது. இந்நேரம், மழைக்காலங்களில் கூவத்தில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் மருத்துவமனைக்குள் புகுந்தது.

இதனால், மருத்துவமனையின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்பட்டதுடன், கட்டடங்கள் இடிந்திடுமோ என்கிற அச்சமும் எல்லோர் மனதிலும் பதிந்தது. இதற்காகவே, புதிய கட்டடம் வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. புதிய கட்டடம் கட்ட பாந்தியன் சாலையில் சுமார் 16 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கட்டடத்தின் தோற்றம் பெண்ணின் இடுப்பெலும்பு போல வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. பின்னர், 1882ம் வருடம் கூவம் நதி அருகிலிருந்து பாந்தியன் சாலைக்கு மருத்துவமனை மாறியது.இப்போது, ‘அரசு மகப்பேறு  மற்றும் தாய் சேய் நல மருத்துவமனை’ எனப் பெயர் மாற்றமானது. அன்றிலிருந்து இன்று வரை அதே இடத்தில், பழமையான கட்டடங்கள் சூழச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இம்மருத்துவமனை.

இதற்கிடையே டாக்டர் தாம்சனுக்குப் பிறகு, 1852ம் வருடம் டாக்டர் ஜேம்ஸ் ஷா மருத்துவமனையின் கண்காணிப்பாளராக வந்து சேர்ந்தார். இவர், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பேறுகால மருத்துவ (Midwifery) பயிற்சியை இங்கு அளித்து வந்தார்.

சுமார் 22 வருடங்கள் Midwifery டீச்சராக இருந்தார். இவருக்குப் பிறகு கண்காணிப்பாளராக வந்த டாக்டர்கள் ஜே.ஐ.பால், ஏய்ட்கென், ஹாரிஸ், கர்னல் பிரான்ஃபுட், ஸ்டம்மர், சிம்ப்ஸன் ஆகியோர் இந்த மகப்பேறு மருத்துவமனையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவினர்.இதில், டாக்டர் கர்னல் பிரான்ஃபுட் காலத்திலேயே மருத்துவமனை பாந்தியன் சாலைக்கு வந்தது. இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்கு அவரின் பங்கு முக்கியமானது. இதனாலேயே அவர் பெயரில் ஒரு பிளாக் மருத்துவமனையில் திறக்கப்பட்டு இன்றும் செயல்பட்டு வருகிறது.

என்றாலும் இவருக்குப் பின்னர் வந்த டாக்டர் மேஜர் சர் ஜி.ஜி.கிஃப்பார்டு காலமே பொற்காலமாகும். ஏனெனில், அதுவரை பிரசவத்திற்காக வரும் பெண்கள் 24 மணி நேரத்திற்கு முன்பாக அனுமதிக்கப்படவில்லை. காரணம், செப்சிஸ் தொற்று நிலை. இதனால் கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல், இதயத்துடிப்பு அதிகரிப்பு, சுவாசக் கோளாறு உள்ளிட்டவை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாகிவிடும். அப்போது ஆன்டிபயாடிக் மருந்துகளும் இல்லை. சிசேரியன் செய்ய ஆன்டிபயாடிக் அவசியம்.

அதனால், இந்நிலை ஏற்பட்டவர்களைக் கவனிப்பதற்காகவே தனிக் கட்டடத்தை உருவாக்கியவர் கிஃப்பார்டு. அங்கேயே வெளிநோயாளிகள் பிரிவையும், உள்அனுமதி பிரிவையும் கொண்டு வந்தார். அதுவே, இன்றைய மகப்பேறு மருத்துவமனையின் நுழைவு வாயிலாகவும், வெளிநோயாளிகள் பிரிவாகவும் செயல்பட்டு வருகிறது.

இத்துடன் நிற்கவில்லை கிஃப்பார்டின் முயற்சி. மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்காக மியூசியமும் வகுப்பு அறையும் நிறுவத் தீர்மானித்தார். 1911ம் வருடம் அக்டோபர் 27ம் தேதி அன்றைய மாகாண கவர்னர் சர் ஆர்தர் லாலி இதற்கான கட்டடத்திற்கு அடிக்கல்லை நாட்டினார்.
இது கிஃப்பார்டு ஸ்கூல் என்றழைக்கப்பட்டது. இதில், மியூசியம், ஆடிட்டோரியம், மாணவர்கள் தங்கும் விடுதி ஆகியவை கொண்டு வரப்பட்டன. இன்றும் இந்தக் கட்டடத்தில் மியூசியம் இயங்கி வருகிறது.

இதில், அன்று இந்த மருத்துவமனையிலேயே பிறந்து இறந்த சிசுக்கள், குழந்தைகள் மற்றும் அறுவை சிகிச்சையினால் பாதிக்கப்பட்ட மகளிரிடம் இருந்து அகற்றப்பட்ட கர்ப்பப்பை மற்றும் சிைனப்பை ஆகியவற்றை பதப்படுத்திக் காட்சிப்படுத்தி உள்ளனர்.தவிர, அன்றைய மகப்பேறு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகளையும் வைத்துள்ளனர். இவை இன்றைய மருத்துவ மாணவ-மாணவிகளின் கல்விக்குப் பயன்பட்டு வருகின்றன.

பின்னர், ஆபரேஷன் தியேட்டர் உருவாக்கப்பட்டது. இது கிஃப்பார்டு ஆபரேஷன் தியேட்டர் என அன்று அழைக்கப்பட்டது. இப்போதும் பயன்பாட்டில் உள்ள இதை ‘G’ தியேட்டர் எனச் சுருக்கமாகச் சொல்கின்றனர்.  பிறகு, முதுநிலை மாணவர்களுக்கான விடுதியும் உருவாக்கப்
பட்டது.

தொடர்ந்து கிஃப்பார்டின் காலத்திலேயே மருத்துவமனைக்கு எதிரே நர்ஸ்களுக்கென குவார்ட்டர்ஸும் கட்டப்பட்டது. இதன் நுழைவு வாயிலிலேயே ெமஸ் கட்டடம் அமைக்கப்பட்டது. நர்ஸ்கள் மருத்துவமனையில் பணி முடித்துத் திரும்பும்போது உணவருந்திவிட்டு குவார்ட்டர்ஸ் சென்று ஓய்வு எடுக்கும்படி அழகாக வடிவமைத்தனர்.

தற்போது இந்தக் குவார்ட்டர்ஸ் பாழடைந்துவிட்டன. என்றாலும் இன்று இதன் அருகிலேயே நர்ஸ்களுக்கான புதிய குவார்ட்டர்ஸ் செயல்பட்டு வருகிறது.இதற்கிடையே 1907ம் வருடம் உதவி கண்காணிப்பாளர் பதவி கொண்டு வரப்பட்டது. இந்நேரம், டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக நியமிக்கப்பட்டார். பின்னர், 1914ம் வருடம் ஹவுஸ் சர்ஜன் என்ற பதவியும் கொண்டு வரப்பட்டது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார்.

1917ம் வருடம் கிஃப்பார்டு இங்கிருந்து சென்றதும் மருத்துவர் கர்னல் ஹிங்ஸ்டன் கண்காணிப்பாளரானார். இவர் காலத்தில் சில வார்டுகளும், ஆபரேஷன் தியேட்டரும் கட்டடப்பட்டன. இதை ‘H’ பிளாக் எனக் குறிப்பிட்டனர்.இந்நேரம், இந்தியா, பர்மா, இலங்கை, மலேசியா மற்றும் தெற்காசியா நாடுகளிலிருந்து இங்கே படிப்பதற்காக மாணவர்களும் பயிற்சி மருத்துவர்களும்  வந்து சென்றனர்.

தவிர, லாகூர் மற்றும் லக்னோ பல்கலைக்கழக மாணவர்கள், ரங்கூன், ஐதராபாத், விசாகப்பட்டினம், பீகார், தஞ்சாவூர், மதுரை போன்ற நகர்களிலிருந்து வந்த மருத்துவப் பள்ளி மாணவர்கள், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து இங்கே பயிற்சி எடுத்தனர்.  

பிறகு மருத்துவர்கள் லெப்டினன்ட் கர்னல் பேட்டன் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிளம்ப்டர் ஆகியோர் கண்காணிப்பாளர்களாக   சிறப்பாகச் செயல்பட்டனர். 1929ம் வருடம் பிரசவத்திற்கு முன்பும், பிரசவத்திற்குப் பின்பும் என மகளிருக்கான தனித்தனி கட்டடங்கள் கட்டப்பட்டன. தவிர, செப்டிக் மற்றும் சந்தேகத்திற்கிடமான கேஸ்களும் பிரசவக் கட்டடத்தில் கொண்டு வரப்பட்டன. மொத்தத்தில் மருத்துவமனை மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

1930ம் வருடம் டாக்டர் லட்சுமணசாமி முதலியார் வழிகாட்டலில் முதுநிலைப் படிப்புகளும், டி.ஜி.ஓ கோர்ஸும் கொண்டு வரப்பட்டன. இந்நேரம், ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இப்போது மருத்துவமனையின் படுக்கை வசதி முந்நூறு ஆனது. வருடம் 6 ஆயிரத்து 500 பிரசவங்கள் நடந்தன.

தொடர்ந்து 1939ம் வருடம் டாக்டர் லட்சுமணசாமி முதலியார் மருத்துவமனையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர், ஹிங்ஸ்டன் காலத்திலேயே உதவி கண்காணிப்பாளராக இருந்து வந்தார். இவரே மெட்ராஸ் மகப்பேறு மருத்துவமனையின் முதல் இந்தியக் கண்காணிப்பாளர் ஆவார்.

தவிர, தென்னிந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் நோயியல் கழகத்தின் முதல் தலைவரும் இவர்தான். இவருக்குப் பிறகு, தாமஸ், பிரபு ஆகியோர் கண்காணிப்பாளர்களாக வந்தனர். இதில், பிரபு காலத்தில் இந்தியா சுதந்திரம் பெற்றது.பின்னர், டாக்டர் கே.கே.தம்பன் கண்காணிப்பாளராக வந்தார். பெண்களுக்கான எல்லா மருத்துவமும் பார்க்கப்பட்டன.  

1949ம் வருடம் டாக்டர் தம்பன் காலத்தில் மதர் அண்ட் பேபி வார்டு கட்டப்பட்டது. இதற்கு, பாவ்நகர் மகாராணி சாஹிப் அடிக்கல் நாட்டினார். இன்றும் இந்த பிளாக் பாவ்நகர் பிளாக் என்றே அழைக்கப்படுகிறது.1952ம் வருடம் மகப்பேறு மகளிர் நோயியல் நிலையமாக  இந்திய அரசு  தரம் உயர்த்தியது. இதனால், இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டது. முதல் இயக்குநரானார் டாக்டர் கே.ேக.தம்பன்.

இதன்பிறகான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் இன்றைய மருத்துவமனையின் இயக்குநரும் கண்காணிப்பாளருமான டாக்டர் ஷோபா.
“1956ம் வருஷம் முதுநிலை கோர்ஸுக்கான விடுதி கட்டப்பட்டது. அதற்கடுத்து, குறைப் பிரசவக் குழந்தைகளுக்கான யூனிட் வந்தது. 1960ம் வருஷம் குழந்தைகள் மருத்துவமனை தொடங்கி வேலைப் பளுவை குறைச்சிருக்காங்க. இப்ப குழந்தைகள் மருத்துவமனை தனியா போயிட்டாலும் இங்க புதிதாகப் பிறக்கிற குழந்தைகளைப் பராமரிக்க எல்லா வசதிகளும் இருக்கு.

இப்ப மெயின் பிளாக் ஏ.எல்.முதலியார் பெயர்ல ஐந்தடுக்கு கட்டடமா புதிதாக கட்டப்பட்டிருக்கு. இதுல மகப்பேறு சம்பந்தப்பட்ட எல்லா வசதிகளும் இருக்கு. எங்க மருத்துவமனையின் சிறப்புன்னா பல இடங்கள்ல இருந்து குணப்படுத்த முடியாத கேஸ்களையும், அதிக ரிஸ்க் உள்ள தாய்மார்களையும் பரிந்துரையின் பேர்ல இங்க அனுப்புவாங்க. அதை கையாள்கிற  சிறந்த மருத்துவர்களும் செவிலியர்களும் இங்க இருக்காங்க.

அப்புறம், ஒரு கிலோ, தொண்ணூறு கிராம்னு குழந்தைகள் பிறக்கும். அதுக்கான கேர் யூனிட் இங்க நல்ல முறையில் செயல்பட்டுட்டு வருது. அந்த யூனிட் டீம் நிறைய குழந்தைகளைக் காப்பாத்திக் கொடுத்திருக்கு. இப்ப எல்லாத் துறைகளிலும் சேர்த்து 78 மருத்துவர்கள் இங்க பணியாற்றாங்க. 1075 படுக்கை வசதி உள்ளது. ஒரு மாசத்துக்கு ஆயிரத்து 500 பிரசவம் நடக்குது. ஒருநாளைக்கு பழைய, புதிய நோயாளிகள்னு சுமார் எண்ணூறு பேர் வரை வர்றாங்க...’’ என்றார் டாக்டர் ஷோபா.                       

பேராச்சி கண்ணன்

ஆர்.சந்திரசேகர்

ராஜா