ரத்த மகுடம்-55பிரமாண்டமான சரித்திரத் தொடர்

மனிதனுக்கு மிதமிஞ்சிய துணிவு ஏற்படுவதற்கு பெரும் சாதனை, பெரும் பயம், பெரும் ஏமாற்றம் ஆகிய மூன்றுமே காரணமாக அமைகின்றன.பெரும் சாதனைக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் வீரன், தன் லட்சியம் பூர்த்தி அடையும் தருவாயில் எதற்கும் துணிந்து விடுகிறான்.

பெரும் பயம் சூழ்ந்து ஏதாவது செயலில் இறங்கினால் மட்டுமே, தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் கோழையும் துணிவு கொள்கிறான்.எதிர்பார்த்த காரியங்கள் விபரீதமாகி பெரும் ஏமாற்றம் ஏற்பட்டு உணர்ச்சிகளைத் தடுமாற வைக்கும்போது அதிலிருந்து மீள மனிதனின் துணிவு கற்பனைக்கு அப்பாற்பட்டதாகிறது.அனந்தவர்மர் துணிவு பெற்றதற்கு இந்த மூன்றுமேதான் காரணம்.

அதனால்தான் தன் தம்பியும் சாளுக்கிய மன்னருமான விக்கிரமாதித்தரை விசாரணை செய்ய அமைச்சர் குழுவைக் கூட்ட முற்பட்டார்.எல்லா சாளுக்கிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இருக்கும் கர்வம், அனந்தவர்மருக்கும் உண்டு.

மாபெரும் சாதவாகனப் பேரரசில் சிற்றரசர்களாக, தாங்கள் அங்கம் வகித்தவர்கள்... வடக்கில் பெரும் சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த மவுரியர்களின் தெற்குப் படையெடுப்பை சாதவாகனர்கள் தடுத்து நிறுத்தினார்கள். என்றாலும் அதற்கான போரில் குறுநில மன்னர்களாக இருந்த தங்கள் மூதாதையர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்ற எண்ணம் எப்பொழுதுமே சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு உண்டு.

ஆணாகட்டும் பெண்ணாகட்டும்... தங்கள் குழந்தையை வளர்க்கும்போது சாளுக்கிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வீரக் கதைகளைத்தான் சொல்லிச் சொல்லி வளர்ப்பார்கள்.அனந்தவர்மரின் தந்தையான இரண்டாம் புலிகேசி பிறந்து தவழ்ந்து தடுமாறி நடக்கத் தொடங்கிய காலம் வரை வீரம் செறிந்த இந்தக் கதைகள்தான் வாதாபி அரண்மனை முழுக்க சுற்றிச் சுற்றி வந்தன.

ஆனால், அனந்தவர்மரும் சரி... அவரது தம்பியும் இப்போதைய சாளுக்கிய மன்னருமான விக்கிரமாதித்தரும் சரி... வளரத் தொடங்கிய காலத்தில் சாதவாகனர்களின் ஆட்சியில் தங்கள் மூதாதையர்கள் புரிந்த வீரச் செயல்கள் மட்டுமே கதைகளாகச் சொல்லப்படவில்லை.

கூடவே அவர்களது தந்தையான இரண்டாம் புலிகேசியின் வீரமும் உணர்ச்சிபூர்வமாக சொல்லப்பட்டது. பாணர்களால் அந்த வீரம் பாடலாக்கப்பட்டு சாளுக்கிய தேசம் முழுக்க எல்லா நேரங்களிலும் ஒலிக்கத் தொடங்கியது. எல்லா திருவிழாக்களிலும் இந்த வீரமே நாடகங்களாக, நாட்டியங்களாக அரங்கேற்றப்பட்டன.

சாதவாகனர்களின் காலத்தில் இன்று சாளுக்கியர்களாக தலை நிமிர்ந்து தனி அரசை நிறுவியவர்கள், குறுநில மன்னர்களில் ஒருவராகத்தான் இருந்தார்கள். எனவே வடக்கிலிருந்து வந்த படையெடுப்பை தக்காணத்தில் தடுத்து நிறுத்தியதன் முழுப் பெருமையையும் அவர்கள் அடைய முடியவில்லை.

சாதவாகனர்களுக்குக் கிடைத்தது போக எஞ்சிய புகழையே மற்ற குறுநில மன்னர்களுடன் சேர்ந்து சாளுக்கியர்களின் முன்னோர்களும் பங்கிட்டுக் கொண்டார்கள். ஆனால், இரண்டாம் புலிகேசியின் காலம் அப்படியல்ல.

குப்த சாம்ராஜ்ஜியத்தில் படைத்தலைவர்களில் ஒருவராக இருந்து பின்னால் தனி சாம்ராஜ்ஜியம் அமைத்த புஷ்யபூதி வம்சத்தைச் சேர்ந்த ஹர்ஷவர்த்த மாமன்னரை தக்காணத்தில் படுதோல்வி அடைய வைத்து வட பகுதிக்கே ஓட ஓட விரட்டிய வீரமும் புகழும் பெருமையும் முழுக்க முழுக்க இரண்டாம் புலிகேசிக்கு மட்டுமே உரியது.

வேறு யாரும் சாளுக்கியர்களின் இந்தப் புகழிலும் பெருமையிலும் பங்கு போட முடியாது என்ற எண்ணமே அளவுக்கு அதிகமான கர்வத்தை, அதுவும் நியாயமான அர்த்தத்தில் அனந்தவர்மருக்கும் விக்கிரமாதித்தருக்கும் அளித்திருந்தது.அப்படிப்பட்ட புகழையும் பெருமையையும் மங்கச் செய்யும் காரியங்கள் பல்லவ நாட்டில் அரங்கேறத் தொடங்கியபோது சாளுக்கியர்களுக்குள் சினம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

ஆம். நரசிம்மவர்ம பல்லவர் வாதாபியைத் தீக்கிரை ஆக்கி இரண்டாம் புலிகேசியைப் படுதோல்வி அடையச் செய்தார்... என கல்வெட்டில் பொறித்திருக்கிறார்கள்; சாசனம் எழுதி வைத்திருக்கிறார்கள்.இவை எல்லாம் எவ்வளவு கேவலம்... தங்கள் குலத்தை இதை விட அவமதிக்க முடியுமா..?
இதற்குப் பழிவாங்கத்தான் இரண்டாம் புலிகேசிக்குப் பின் சாளுக்கியர்களின் மன்னராகப் பதவியேற்ற விக்கிரமாதித்தர் படை திரட்டிக் கொண்டு வந்திருக்கிறார். ஒவ்வொரு சாளுக்கிய குடிமகனும் பெருமை கொள்ளும் தருணம் இது...

ஆனால், அந்தப் பெருமைக்கே களங்கம் ஏற்படுத்தும் செயலில் அல்லவா அதே விக்கிரமாதித்தர் இறங்கியிருக்கிறார்..? நரசிம்ம வர்மர் காலத்தில் பல்லவ படைகளுக்குத் தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இப்பொழுது நாயன்மார்களில் ஒருவராக அவரைத் தமிழகமே கொண்டாடுகிறது. ஆனால், அந்த சிவனடியார் வாதாபியில் புரிந்த அட்டூழியங்கள் கொஞ்சமா நஞ்சமா..? அந்தக் கொடூர செயல்களை எல்லாம் எப்படி ஒரு சாளுக்கியனால் மறக்க முடியும்..?

இப்பொழுது அந்த பரஞ்சோதிக்கு நிகராக அவரைப் போன்றே சோழ நாட்டைச் சேர்ந்த கரிகாலன், அதே பல்லவப் படையின் உப சேனாதிபதியாக விளங்குகிறான். வீரத்திலும் விவேகத்திலும் பரஞ்சோதிக்கு நிகரானவன் எனக் கொண்டாடப்படுகிறான். அப்படிப்பட்டவன் சாளுக்கியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட காஞ்சி மாநகரத்துக்குள் வந்துவிட்டுச் சென்றிருக்கிறான்... அவனுக்கு தக்க பாதுகாப்பு அளித்து காஞ்சியை விட்டு அவன் வெளியேற சாளுக்கிய மன்னரே உதவி புரிந்திருக்கிறார் என்றால்... இதை விட கேவலம் சாளுக்கிய வம்சத்துக்கு வேறென்ன இருக்கப் போகிறது..?
நினைக்க நினைக்க அனந்தவர்மருக்கு ரத்தம் கொதித்தது.

தமிழ் மண்ணை ஆளத் தொடங்கியதுமே எப்படி பல்லவர்களின் குணம் சாத்வீகமாக மாறியதோ, அப்படி தமிழ் மண்ணில் காலடி எடுத்து வைத்ததுமே சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் பழிவாங்கும் வெறியும் அடங்கிவிட்டதா..?அப்படித்தான் இருக்கவேண்டும் என அனந்தவர்மர் தீர்மானமாக நம்பினார்.

சாதவாகனப் பேரரசில் தங்களைப் போலவே சிற்றரசர்களாக இருந்தவர்கள்தான் பின்னாளில் பல்லவ சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்கள். அதுவரை சரி. ஆனால், ஆட்சி செய்யத் தொடங்கியபிறகு மூர்க்கத்துடன் பாய்ந்திருக்க வேண்டாமா..? சிவ பக்தியில் இப்படியா சாத்வீகமாக மாற வேண்டும்..? பூர்வீகத்தை கொஞ்சமாவது நினைத்துப் பார்த்திருக்கலாமே?

மாபெரும் பேரரசாகத்தான் சாதவாகனர்கள் திகழ்ந்தார்கள். தக்காணத்தையே தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்தார்கள். ஆனால், தமிழகத்தில் அவர்களால் காலடி எடுத்து வைக்க முடிந்ததா..? சோழர்களும் பாண்டியர்களுமாக அல்லவா இந்த நிலப்
பரப்பையே பங்கு போட்டு காலம் காலமாக ஆண்டு வருகிறார்கள்..?

சாதவாகனர்கள் சார்பில் எத்தனை போர்கள் நடந்திருக்கும்..? பல்லவர்களின் மூதாதையர்களும் அல்லவா அந்த யுத்தங்களில் எல்லாம் பங்கேற்று மடிந்தார்கள்..? இதையெல்லாம் நினைத்துப் பார்த்திருந்தால் பல்லவ சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்ததுமே தமிழகத்தை முழுமையாகத் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து சாதவாகனர்களின் காலத்து ஆசையை நிறைவேற்றியிருப்பார்களே..! எதையும் செய்யாமல், மலைகளைக் குடைந்து குடைவரைகளையும் கோயில்களையும் அல்லவா எழுப்பி வருகிறார்கள்..?

இதற்கெல்லாம் பாடம் கற்பிக்கத்தானே சாளுக்கிய மன்னராக பொறுப்பேற்றதும் இரண்டாம் புலிகேசி படை திரட்டி வந்தார்..? அவருக்குக் கிடைத்தது தோல்விதானே..? அத்தோல்விக்கு பழிவாங்குவதுதானே முறை..? அதுதானே சாதவாகனர்களின் ஆன்மாவையும் சாந்தி அடைய வைக்கும்..?
நினைக்க நினைக்க அனந்தவர்மருக்கு தன் தம்பியின் மீது கோபமும் ஆத்திரமும் அதிகரித்தது.

மாபெரும் வீரன் என தன்னைத்தானே விக்கிரமாதித்தர் பறைசாற்றிக் கொண்டதால்தான் சாளுக்கிய தேசத்து அறிஞர்களும் அமைச்சர் பிரதானிகளும் மணிமுடியை அவனுக்கு சூட்டினார்கள். நாடகமாடி, அண்ணனான தன்னை விட அவனே ராஜ தந்திரம் அறிந்தவன் என்ற பிம்பத்தை உருவாக்கினான்.

இப்பொழுது அவை அனைத்தும் பொய்... வெறும் மாயை என வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. எந்த அறிஞர் குழாமும் அமைச்சர் பிரதானிகளும் அவனை மன்னராக ஏற்றார்களோ அதே குழுவினர் முன் விக்கிரமாதித்தர் வீரனல்ல... கோழை என தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.
சாளுக்கிய மன்னராக, தான் முடிசூடுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பல்லவர்களை வேரோடு நசுக்குவது... அதுதான் தன் தந்தையான இரண்டாம் புலிகேசிக்கு, தான் செலுத்தும் மகத்தான அஞ்சலியாக இருக்கும்...

முடிவுக்கு வந்த அனந்தவர்மர், கங்க இளவரசனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஓலையை திரும்பவும் எடுத்துப் படித்தார்.
இம்முறையும் அவர் நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் பூத்தன; படர்ந்தன; பரவின.இனம் புரியாத வெறுப்பு தன் தம்பியான விக்கிரமாதித்தர் மேல் அவருக்கு ஏற்பட்டது. என்ன காரியம் செய்துவிட்டான்... சிவகாமியின் உடல் மர்மம் வெளிப்பட்டால் சாளுக்கியர்களின் கனவே அஸ்தமித்துவிடுமே...எங்கு... என்ன நிலையில் சிவகாமி இருக்கிறாள்..?

சிவகாமியின் முகத்தையே கரிகாலன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்னமும் அவளுக்கு மயக்கம் தெளியவில்லை.
இப்பொழுதுதான் அவளைப் பார்க்கவே அவனுக்கு மருத்துவச்சி அனுமதி அளித்திருந்தாள். அதற்கான காரணத்தையும் அவன் அறிவான். அறிய வேண்டும் என்பதற்காகவே அவள் மார்பில் கச்சையும் இடுப்பில் துணியும் இப்பொழுது கட்டப்பட்டிருந்தன.

வந்தது முதல் சிவகாமி பரிபூரணமாகப் படுத்திருந்தாள். அவள் மேனியெங்கும் பச்சிலை பூசப்பட்டு மருத்துவச்சியின் முழு கண்காணிப்பில் இருந்தாள்.
இன்று காலைதான் அவள் உடலில் அம்பு பாய்ந்த காயங்கள் ஓரளவு ஆறத் தொடங்கியிருப்பதாகச் சொன்னாள். கூடவே இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை என்றும்.

சிவகாமியின் கன்னங்களை மெல்ல கரிகாலன் தடவினான். ‘‘மூன்று நாழிகையாக முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாயே... அலுக்கவில்லையா..?’’ கேட்டபடியே வந்தாள் மருத்துவச்சி.‘‘எப்பொழுது இவள் கண் திறப்பாள்..?’’‘‘தெரியாது!’’ சட்டென மருத்துவச்சி பதில் அளித்தாள்.
‘‘என்ன சொல்கிறீர்கள்..? அதுதான் அம்பு பாய்ந்த காயங்களுக்கு உரிய களிம்பை பூசியிருக்கிறீர்களே... பிறகென்ன..?’’

‘‘பிரச்னையே அதுதான் கரிகாலா...’’ அமைதியாக அவனைப் பெயர் சொல்லி அழைத்தாள் அந்த மருத்துவச்சி. ‘‘புரியவில்லை அம்மா...’’‘‘கரிகாலா... உன் தாய்க்கே பிரசவம் பார்த்தவள் நான்... வாள் காயங்களுக்கும் அம்பு தைத்ததற்கும் என்ன களிம்பு, பச்சிலை பூச வேண்டும் என எனக்கு நன்றாகத் தெரியும்...’’

‘‘அதனால்தானே இங்கு அவளைச் சுமந்து வந்தேன்..?’’
‘‘அதனால்தானே உண்மை தெரிந்து திகைத்து நிற்கிறேன்!’’
‘‘சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் அம்மா...’’

‘‘கரிகாலா... உடலில் ஏற்பட்ட காயங்களுக்குத்தான் இதுவரை சிகிச்சை அளித்திருக்கிறேன்...’’
‘‘சிவகாமியின் உடலில்தானே அம்மா
அம்புகள் பாய்ந்திருக்கின்றன..?’’
‘‘இல்லை!’’ அழுத்தமாகச் சொன்னாள் மருத்துவச்சி.

கரிகாலன் அதிர்ந்தான். மருத்துவச்சி என்ன சொல்கிறாள்..?
‘‘சிவகாமி என்னும் இந்தப் பெண்ணுக்கு ஓர் உடல் அல்ல... இரு உடல்கள் இருக்கின்றன!’’

(தொடரும்)  

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்