கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-13



ஊமையை பேச வைக்கும் செந்தில் ஆண்டவன்!

காலை எட்டு மணிக்கே நாகராஜன் வீட்டுக்கு வந்துவிட்டாள் அவரது அண்ணன் மகள் சுவாதி. அந்த பரபரப்பை வழக்கம்போல் எதிர் வீட்டில் இருந்த கண்ணன் கவனித்து விட்டான். நிச்சயம் ஏதோ கஷ்டத்துக்கு தீர்வு கேட்கத்தான் சுவாதி வந்திருப்பாள் என அவன் உள்ளுணர்வு சொன்னது. உடனே ‘எதிர்வீட்டில் இருக்கும் தாத்தாவை பார்க்கப் போவதாக’ தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு ஓடி வந்தான்.

எதிர்பார்த்ததுபோலவே சுவாதிக்கு கஷ்டம்தான். பிறந்து ஐந்து வருடங்கள் ஆகியும் இன்னும் தன் குழந்தை ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்ற வருத்தம் அவளது முகத்தில் நன்கு தெரிந்தது.மவுனமாக, தான் தாத்தா என்றழைக்கும் நாகராஜனின் அருகில் சோபாவில் அமர்ந்தான்.

‘‘கவலைப்படாத சுவாதி... பேச்சு வராதுனு டாக்டர் சொல்லலையே? சிகிச்சை செஞ்சா பேச்சு வர வாய்ப்பு இருக்குனுதானே சொல்லி இருக்கார்? மருத்துவம் பார்த்துக்கிட்டே உங்க சித்தப்பா சொல்ற கோயிலுக்கும் போயிட்டு வா. கண்டிப்பா நல்லதே நடக்கும்...’’ என்றபடி சுவாதியை தோளோடு ஆதரவாக அணைத்து ஆறுதல் சொன்னாள் நாகராஜனின் மனைவியான ஆனந்தவல்லி.

‘‘சுவாதி, உன்ன பாக்கும் போது எனக்கு திருச்செந்தூர்ல நடந்த ஒரு அதிசயம் தான் ஞாபகம் வருது...’’ நம்பிக்கை தரும் குரலுடன் பேச்சை ஆரம்பித்தார் நாகராஜன்.‘‘என்ன அதிசயம் சித்தப்பா..?’’ சுவாதி கேட்டாள். ‘‘பல  வருஷங்களுக்கு முன்னாடி திருச்செந்தூர் கோயில்ல...’’ பக்தியோடு கைகளைக் குவித்து கதை சொல்ல ஆரம்பித்தார் நாகராஜன்.

‘‘அப்பனே! செந்தில் ஆண்டவா! உன் அருளால், சண்முகக் கவிராயனான எனக்கும், என் மனைவி சிவகாமிக்கும் பிறந்த தவப்புதல்வன் இவன்! பிறந்து ஐந்து வருடங்கள் ஆகியும் வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. பிள்ளை இல்லா குறை நீக்க பிள்ளை தந்த நீ... அந்தப் பிள்ளைக்கு பேசும் திறன் தர மறந்தாயோ?

போகட்டும், அது எங்கள் வினை என்று ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், முருகா... நானும் என் மனைவியும் இங்கு திருச்செந்தூரில் நாற்பத்தெட்டு நாட்கள் உண்ணாமல் உறங்காமல் விரதம் இருந்துமா உன் மனம் இரங்கவில்லை? எங்களிடம் இந்த பாரா முகம் ஏன்?
மனிதனுக்கு உற்ற துணை தெய்வம்தான். ஆனால், இப்போது அந்த தெய்வமே எங்களுக்கு கருணை செய்யவில்லை. இனி நாங்கள் வாழ்ந்து என்ன பயன்? இதோ இப்போதே நாங்கள் மூவரும் கடலில் விழுந்து உயிரை விடுகிறோம்!

காலம் உள்ளவரை பக்தர்களைக் கை விடாதவன் என்ற போலி புகழோடு நீ மட்டும் நன்றாக இரு!’’ திருச்செந்தூர் முருகன் முன்னிலையில் ஷண்முகக் கவிராயர் பொறிந்து தள்ளினார். பிறகு ஒரு நொடி கூட அங்கு நிற்கவில்லை. மனைவியையும் ஊமை மகனையும் அழைத்துக் கொண்டு கடலை நோக்கி நகர்ந்தார். சுற்றிலும் நின்றிருந்தவர்கள் செய்வதறியாது அதிர்ந்து நின்றனர்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது! ஒரு சின்னஞ்சிறு பாலகன் அவர்களை நோக்கி ஓடி வந்தான். அந்த மாய பாலகனின் இடையில் பட்டு வேட்டி மின்னியது. உடல் எங்கும் திருநீறு மணத்தது. அவனது கண்கள் அனைவரையும் வசீகரித்தன! அந்தக் குழந்தை உரிமையோடு வந்து கவிராயருடைய குழந்தையின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு சன்னதிக்கு விரைந்தது.

கவிராயரும் அவரது மனைவியும் ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் போல ஒன்றும் பேசாமல் அந்த இரண்டு குழந்தைகளின் பின் சென்றனர்.
சொல்லிவைத்தது போல அப்போதுதான் உச்சிகால பூஜை முடிந்து அர்ச்சகர் முருகனுக்கு ஆரத்தி காட்டினார். அப்போது செந்திலாண்டவனின் திருமுடியில் இருந்த ஒரு தாமரைப்பூ கீழே விழுந்தது.

அதை அந்த மாய பாலகன் கவிராயரின் குழந்தைக்குக் காட்டி, ‘‘சொல்லு... இப்போது சுவாமி தலையிலிருந்து என்ன விழுந்தது?’’ என்று அதிகாரத்தோடு கேட்டது!
‘‘...’’
‘‘ம்... உன்னால் முடியும்! சொல்! என்ன விழுந்தது?’’
‘‘ப்... பு... ப்... பூ!’’

‘‘ஆம்! அதேதான். பூ பூவாக பாடு! என்னைப் பாடு! தீந்தமிழ் சொற்களால் என்னைப் பாடு!’’ என்று சிரித்துக்கொண்டே அந்தக் குழந்தை சன்னதியை நோக்கி ஓடி செந்தில்நாதன் சிலையில் புகுந்து மறைந்தது!நிகழ்ந்தவை கனவா நனவா என்று கவிராயரும் அவரது மனைவியும் புரியாமல் விழித்தனர்.
அப்போது நிகழ்ந்தவை அனைத்தும் பூரண சத்தியம் என்று முரசு கொட்டி சொல்வது போல் அந்த ஊமைக் குழந்தை தேன் தமிழ் கானம் பாடத் தொடங்கியது!

‘‘பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும்... தேமேவு
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய்... ஆதிநடு’’

- என்று வெண்கல மணிக்குரலில் கந்தர் கலிவெண்பா என்ற கவிதையைப் பாடினான் கவிராயரின் ஊமை மகன்!வாய் திறந்து தன் குழந்தை ஒரு வார்த்தை பேசாதா என்று கவிராயர் எத்தனை நாட்கள் காத்திருந்தார்..? ஆனால், இன்றோ அவர் குழந்தை அறிஞர்கள் போற்றும் அளவிற்கு கவி பாடுகிறது!

கவிராயரும், சிவகாமி அம்மையும், கந்தனின் கருணையை எண்ணி எண்ணி வந்தனங்கள் செய்தனர்.‘‘யாரு சித்தப்பா அந்த மகான்..?’’ சுவாதி கேட்டாள்.அமைதியாக அமர்ந்திருந்த கண்ணனுக்குள்ளும் அதே கேள்வி.

‘‘அவர்தாம்மா   குமரகுருபரர்! இவர் மதுரைல மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடினப்ப அன்னை மீனாட்சியே ஒரு குட்டிப் பெண்ணா... பாலா திரிபுரசுந்தரி வடிவுல வந்து முத்து மாலையை பரிசா கொடுத்தா! ஒண்ணு தெரியுமா? இந்தில ‘இராம சரித மானசம்’ எழுதின துளசிதாசர் இந்த   குமரகுருபரரோட மாணவர்தான்! இவரோட ஞானத்துக்கு தில்லி பாதுஷாவே அடிமை ஆகிட்டார்னா பார்த்துக்க..!’’ நாகராஜன் குரலில் பெருமை.
‘‘இந்தப் புகழுக்கு எல்லாம் செந்திலாண்டவன்தான் காரணம் இல்லையா சித்தப்பா..?’’

‘‘அதுல என்ன சந்தேகம் சுவாதி..? அவரோட கருணைக்கு எல்லையே கிடையாது. இப்படித்தான் ஒரு தடவ திருச்செந்தூர்ல...’’
திருச்செந்தூர் கோயில் வாசல். நிம்மதியுடன் உறங்கிக் கொண்டிருந்தார் பகழிக்கூத்தர் என்ற தமிழ்ப்புலவர். நெடுநாட்களாகத் தீராத வயிற்று வலி தீர்ந்த சந்தோஷம்.

அவரது வயிற்று வலியைத் தீர்க்க முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். இனி தனக்கு செந்திலாண்டவனே கதி என்று அவனை நம்பி திருச்செந்தூருக்கு வந்தார்.செந்திலாண்டவனை வணங்கினார். அவனைக் குழந்தையாகப் பாவித்து திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடினார்.  

அவர் பிள்ளைத்தமிழ் பாடி முடித்ததுதான் தாமதம்... அவரது வயிற்று வலி பறந்தோடியது! அந்த மகிழ்ச்சியில்தான் அவர் உறங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, ‘‘இதோ இவன்தான் திருடன்! பிடியுங்கள் இவனை. செந்தில்முருகனின் மாணிக்கப் பதக்கத்தைத் திருடியது இவன்தான்... இதோ இவன் கழுத்தில் அது பளபளக்கிறது பாருங்கள்... கைது செய்யுங்கள் இவனை...’’ என்று உரக்க கத்திக்கொண்டு காவலர்கள் பகழிக்கூத்தரைச் சுற்றி வளைத்தனர்.

சத்தம் கேட்டு எழுந்த பகழிக்கூத்தர் ஒன்றும் புரியாமல் விழித்தார். அதற்குள் அந்நாட்டு மன்னன் அங்கு வந்துவிட்டான்.

‘‘அடேய் புலவா! உனக்கு ஆண்டவனின் பதக்கம் கேட்கிறதா..? பகலில் ஆண்டவன் மீது கவி பாடுவது... இரவில் அவனிடமே திருடுவது... நன்றாக இருக்கிறது உன் வேலை!’’ என்று மன்னன் கொக்கரித்தான். அருகில் இருந்த கோயில் பட்டர்கள் அதற்கு தூபம் போட்டனர். அவர்கள்தானே நேற்று இரவு முருகனுக்கு சாற்றிய மாணிக்கப் பதக்கம் காணவில்லை என்று அரசனிடம் புகார் தந்திருந்தார்கள்?

எல்லாரும் தன்னை திருடன் என்று சொல்லவே பகழிக்கூத்தருக்கு ஒன்றும் விளங்கவில்லை. சற்றே குனிந்து தன் மார்பைப் பார்த்தார். அவர்கள் சொன்ன அந்தப் பதக்கம் அங்கு மின்னியது! அதிர்ந்தார். யார் செய்த வேலை என்று புரியவில்லை. ‘‘அப்பனே முருகா! என் வயிற்று வலியைத் தீர்த்த நீதான் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்னை மீட்க வேண்டும்!’’ என்று மனமார செந்திலாண்டவனை வேண்டிக்கொண்டார்.
அப்போது, ‘‘இங்கு பகழிக் கூத்தர் என்பவர் யார்? என் பெயர் ‘காத்த பெருமாள் மூப்பனார்’. குலசேகரன் பட்டினத்தில் இருந்து வருகிறேன்...’’ என்றபடி ஒருவர் வந்தார்.

பார்க்க செல்வந்தர் போல் இருந்தார். கையில் தங்கத் தட்டு இருந்தது. அதில் பல உயர்ந்த பரிசுப் பொருட்கள் மின்னின. காத்தபெருமாளைச் சுட்டு விடுவது போல் மன்னன் பார்த்தான். ‘‘இந்தத் திருடனின் கூட்டுக் களவாணி நீதானா? இவனையும் கைது செய்யுங்கள்!’’
கட்டளையை ஏற்று காவலர்கள் வேகமாக அவரை நோக்கி வந்தனர்.

அப்போது அந்த செல்வந்தன் பேசத் தொடங்கினான். ‘‘மன்னா! இந்த மாணிக்கப் பதக்கத்தினால் எனக்கு ஆகப்போவது எதுவும் இல்லை. இதைப்போல கோடி கோடியாக என்னிடம் இருக்கிறது! செல்வத்தால் மதி இழக்காமல் நித்தம் செந்தில் கந்தனை நெஞ்சில் வைத்து பூஜித்து வருகிறேன்! அதன் பயனாக நேற்று செந்திலாண்டவர் என் கனவில் வந்தார்.

‘என் பக்தன் பகழிக்கூத்தன் செந்தமிழில் பிள்ளைத்தமிழ் பாடினான். ஆனால், அவனுக்கு யாருமே பரிசு தந்து கவுரவிக்கவில்லை. உன்னிடமோ செல்வம் கொட்டிக்கிடக்கிறது! ஆகவே நீ அவனுக்கு பரிசுகள் தந்து கவுரவப்படுத்து. ஆனால், நீ சென்று அவனுக்கு பரிசுகள் தரும் வரை என்னால் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. எனவே என் கழுத்தில் இருக்கும் மாணிக்க மாலையை அவனுக்கு அணிவித்து விட்டேன்! நாளை நீயும் அவனை கவுரவிக்க வேண்டும்..!’ என்றார்.

அதன்படியே குலசேகரன் பட்டினத்திலிருந்து இங்கு வந்தேன். முருகன் சொன்னது போலவே இவரது கழுத்தில் பதக்கம் இருக்கிறது!’’இப்படி அந்த செல்வந்தர் சொன்னதும் மன்னன் குழம்பினான். நம்புவதா வேண்டாமா? யோசித்தான்.உடனே ‘‘வேந்தே! காத்த பெருமாள் மூப்பனார் சொல்வது முற்றிலும் உண்மை! கூத்தனுக்கு நானே பதக்கம் அணிவித்தேன்!’’ என்று சன்னதியில் இருந்து அசரீரி ஒலித்தது.

முருகனின் குரலைக் கேட்டதும் மன்னன் கூத்தரை, தான் கவுரவிக்காமல் விட்டது பெரும் தவறு என்று உணர்ந்து வருந்தினான். மற்றவர்கள் முருகன் அருளை எண்ணி எண்ணி மெய் மறந்தனர்.

‘‘பகழிக்கூத்தருக்கு வயத்து வலியைப் போக்க மட்டுமில்ல, அவருக்கு பரிசு கொடுக்கவும் செந்திலாண்டவர் என்னமா நாடகம் ஆடிட்டார் பார்த்தியா சுவாதி..? அது மட்டுமா... பாஞ்சாலங்குறிச்சி மன்னரான வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கைல திருச்செந்தூர் முருகன் பண்ணின அதிசயங்கள் இருக்கே... அதையும் சொல்றேன்...’’ என்றபடி நாகராஜன் ஆரம்பித்தார்...

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்