குழந்தை என்னும் வணிகம்!
மனித வாழ்வுக்கு என்ன பொருள் என்று கேட்டால் நமக்கு தீர்க்கமாகத் தெரிந்த ஒரே காரணம் மானுட சந்ததியைப் பெருக்குவது. மண்ணில் வாழும் ஒவ்வொரு உயிருமே தனது நீட்சியாக இந்த பூமியில் ஒரு புதிய உயிரை விடுத்துச் செல்லவே விரும்புகிறது. அதன் மூலம் தன் மரணத்துக்குப் பின்னும் இவ்வுலகோடு, தான் தொடர்பு கொண்டிருப்பதாக ஒரு திருப்தியும் நிம்மதியும் கொள்கிறது. அதிலும் இந்திய சமூகத்தில் குழந்தைப் பிறப்புக்கு இருக்கும் முக்கியத்துவம் மற்ற சமூகங்களை விடவும் அதிகம்.
 ஒரு குறிப்பிட்ட பருவம் எய்தியவுடன் ஆணோ பெண்ணோ திருமணம் செய்தே ஆகவேண்டும். அப்படித் திருமணம் ஆகிவிட்டால் ஒரே வருடத்தில் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்துவிட வேண்டும். கொஞ்சம் தாமதமானாலும் உறவுகள் தொடங்கி நண்பர்கள் வரை ‘என்னாச்சு?’ என்று கேட்டே நிம்மதியைப் பறித்துவிடுவார்கள்.
இப்படியான அழுத்தமான பண்பாட்டுச் சூழல் உள்ள ஒரு நாட்டில் இயற்கையாகக் குழந்தைப் பேறை அடையவியலாத தம்பதிகள் எதிர்கொள்ளும் அவமானங்களும் படும் மனவேதனைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அரச மரத்தைச் சுற்றுவது தொடங்கி அடுத்தவர் குழந்தையைத் தத்து எடுப்பது வரை அட்வைஸ் கொடுத்தே அலுக்கச் செய்துவிடுவார்கள்.
சமீபத்தில் திருப்பூரில் ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதைப் போல வயிற்றில் தலையணையைக் கட்டிக்கொண்டு நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் உண்மையை மறைக்க முடியாமல் தற்கொலை செய்து இறந்துள்ளார். இப்படியான செய்திகளை இப்போது அடிக்கடி பார்க்க முடிகிறது. தாய்மை அடைய முடியாத வெள்ளந்தியான பெண்களின் ஏக்கமும் சமூகம் அதற்குக் கொடுக்கும் அழுத்தமும் இருப்பதையே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.
ஐநாவின் அறிக்கை ஒன்று இந்தியாவின் மக்கள் தொகை பற்றிக் குறிப்பிடும்போது, இங்குள்ள மக்கள் தொகையில் சுமார் 15% பேர் வரை குழந்தைப் பேறு இல்லாமல் தவிப்பதாகச் சொல்லியுள்ளது. அதாவது, ஆறு இந்தியரில் ஒருவருக்கு இயற்கையான குழந்தைப் பேறு இல்லையாம். கடந்த 1975 - 80ம் ஆண்டுகளில் ஒரு பெண்ணுக்கு சராசரியாகப் பிறக்கச் சாத்தியமான குழந்தைப் பிறப்பு ஐந்து என்பதிலிருந்து 2015 - 20ம் ஆண்டுகளில் 2.5 என்று குறைந்துள்ளது. அதாவது, குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு 50% சரிவடைந்திருக்கிறது.
இப்படியே சென்றால் 2025 - 30ம் வருடத்தில் 2.1 என்ற விகிதத்துக்கு சரிவடைந்து 2045 - 50ம் ஆண்டுகளில் 1.86 என்றும் 2095 - 2100ல் 1.78 என்றும் வீழ்ச்சியடையும் என்று கவலை தெரிவிக்கிறது அந்த அறிக்கை. இதனால் எதிர்காலத்தில் இந்தியாவில் குழந்தை இல்லாதவர்களின் விகிதம் மிகவும் அதிகமாகிவிடும். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில்தான் இந்த குழந்தைப் பேறின்மை பிரச்னை அதிகம் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
குழந்தைப் பிறப்பு விகிதம் சரிவடையத் துவங்கியிருப்பதன் அறிகுறிதான் இப்போது நாடு முழுதும் புற்றீசல்கள்போல் பெருகியிருக்கும் செயற்கைக் கருவூட்டல் மையங்கள். செயற்கை கருவூட்டல், விந்து தானம், வாடகைத் தாய் போன்ற சொற்கள் எல்லாம் இன்று தமிழ் சமூகத்தில் இயல்பான ஓர் உரையாடலாக மாறிக்கொண்டிருக்கிறது. பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் தொடங்கி சின்னஞ்சிறிய கிளினிக்குகள் வரை இப்படியான மருத்துவம் கொடிகட்டிப் பறக்கிறது.
அலோபதி என்று இல்லாமல் சித்தா, ஆயுர்வேதம் என பாரம்பரிய மருத்துவர்களும் இந்த குழந்தைப் பேறு வைத்தியத்தில் களமிறங்கி தங்களால் இயன்றதைக் கல்லா கட்டுகிறார்கள்.செயற்கை கருவூட்டல் என்பதும் டெஸ்ட் ட்யூப் பேபி என்பதும் நவீன விஞ்ஞானம் நமக்குக் கையளித்திருக்கும் அற்புதக் கொடை. குழந்தையற்ற தம்பதிகளுக்கு ஒரு சிசுவைக் கையளிக்கும் புனிதமான சேவை.
ஆனால், இன்று குழந்தையின்மை என்பதை மிகப் பெரிய வணிகம் என்று யூகித்துதான் பல பகாசுர நிறுவனங்கள் களத்தில் இறங்கியிருக்கின்றன. இப்படியான நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களை(?)ப் பிடித்துத் தருவது முதல் வாடகைத் தாய் ஏற்பாடு செய்து தருவது வரை எல்லா வேலைகளுக்கும் இடைத்தரகர்கள் உருவாகிவிட்டிருக்கிறார்கள்.
மருத்துவமனைக்கு ஒரு ஷேர், வாடகைத் தாய்க்கு ஒரு ஷேர், புரோக்கருக்கு ஒரு ஷேர் என்று கனஜோராக நடக்கிறது இந்த அபாயகரமான வணிகம். விஷயம் வெளியே பரவி போலீஸ் வந்தால் அவர்களுக்கும் ஒரு ஷேர் கொடுத்தால் போச்சு என்பதுதான் இவர்களின் துணிச்சலுக்குக் காரணம்.இன்னொருபுறம் நேர்மையான முறையில் இந்த சேவையை வழங்கிவரும் நிறுவனங்களும் இருக்கவே இருக்கின்றன.
ஆனால், இங்கு போய் சிகிச்சை பெற்று ஒரு குழந்தைக்குத் தாயாவது என்பது அனைத்துப் பெண்களுக்கும் கட்டுப்படியாகும் செலவல்ல. இங்கு சர்வசாதாரணமாக ஒரு லட்சம் ரூபாயில் தொடங்கி இருபத்தைந்து லட்சம் வரை செலவாகிறது. எத்தனை செலவானாலும் பரவாயில்லை, எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேட்கும் தம்பதிகள் இங்கு அதிகமாக இருக்கும் வரை இந்த மருத்துவம் இப்படித்தான் இருக்கும்.
மருத்துவமனைகள் அடிக்கும் பகல் கொள்ளை இப்படி என்றால் இன்னொரு புறம் இந்தக் குழந்தைப் பேறின்மை என்னும் சமூக அவமானம்தான் குழந்தைகள் கடத்தலுக்கு ஆணி வேராகவும் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் நாள்தோறும் பத்து குழந்தைகள் காணாமல் போகின்றன என்று சொல்கிறது மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை ஒன்று. இதில் பெரும்பாலான குழந்தைகள் திரும்பக் கிடைத்தாலும் சராசரியாக மாதம்தோறும் ஏழு குழந்தைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு மட்டும் 991 குழந்தைகள் காணாமல் போய் அதில் 932 குழந்தைகளை மட்டுமே மீட்டிருக்கிறார்கள். எஞ்சிய குழந்தைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்கிறது ட்ராக்மிஸ்ஸிங்சைல்டு என்ற தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளம். இப்படியான சூழலில்தான் குழந்தைக் கடத்தலில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவது நடந்துகொண்டிருக்கிறது.
நமது நாட்டில் சட்டப்படி குழந்தைகளைத் தத்து எடுக்க நடைமுறைகள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகவே குழந்தைகளைப் பெற விரும்புகிறார்கள். ஆண் குழந்தை என்றால் பத்து லட்சம், பெண் குழந்தை என்றால் ஐந்து லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார் குழந்தைக் கடத்தலில் ஈடுபடும் பெண் ஒருவர்.
பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளில்தான் இப்படியான குழந்தைக் கடத்தல் நடக்கிறது. குழந்தை பிறந்த தருணத்தில் தாய் மற்றும் குழந்தைகளின் அருகே ஆண்கள் யாரும் இருக்கக்கூடாது என்ற சூழலில் போதிய பாதுகாப்பும் இருக்காது என்பதால் இப்படியான சூழலை கடத்தல்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
சட்டப்படி ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதற்கு இன்று போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்றால் சட்டரீதியான வழிமுறைகளை நாடுவதே சிறந்தது என்பதை உணராத வரை இத்தகைய குழந்தைக் கடத்தலைத் தடுப்பதும் இயலாத காரியம்தான்.l
இளங்கோ கிருஷ்ணன்
|