படிச்சுக்கிட்டே மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கறேன்!



எப்பொழுதுமே நர்சரி கார்டனுக்குத் தனி மவுசுதான். ஏனெனில், இன்றைய வாழ்க்கைச் சூழலில் பலரும் வீட்டில் தோட்டம் அமைப்பதை பெரிதும் விரும்புகின்றனர். பழங்கள், காய்கறிகள், அலங்காரச்செடிகள் எனத் தங்கள் விருப்பம்போல் செடி, கொடிகளை வளர்த்து பயன்படுத்துகின்றனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் மாடித் தோட்டம் போட்டு பராமரிக்கின்றனர். இப்படி தோட்டம் அமைப்பதற்காகச் செடிகளை வாங்கும் இடமே நர்சரி கார்டன் எனப்படும் நாற்றங்கால் பண்ணை. இதைச் சிறப்பாகச் செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம்.

இதற்கோர் சிறந்த உதாரணமாக உருவாகி இருக்கிறார் கோவை மாணவி ஜினுமோள் ஜார்ஜ். இவரது நர்சரியில் குளோனிங், திசு வளர்ப்பு எனப் பல்வேறு தொழில்நுட்பங்களில் செடிகளை உருவாக்கி விவசாயிகளுக்கும் மக்களுக்கும் விற்பனை செய்து வருகிறார்.மட்டுமல்ல, பயனற்றுப் போன டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களில் பூச்செடிகளை வளர்க்கிறார்.

பிளாஸ்டிக் பாட்டில்களில் குடில் ஒன்றை வடிவமைத்திருக்கிறார்‘‘எனக்கு அப்பா ஜார்ஜ்தான் இன்ஸ்பிரேஷன். அவர் ஒரு தோட்டக்கலை நிபுணர். நர்சரி பண்ணை, மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம் அமைக்க ஆலோசனைகளும், அதை டிசைன் செய்தும் கொடுப்பவர். எனக்கு இந்த ஐடியாவைக் கொடுத்ததும் அவர்தான்...’’ உற்சாகமாகப் பேசும் ஜினுமோள் இப்போது எம்பிஏ இறுதியாண்டு மாணவி.

‘‘பி.காம் முடிச்சிட்டு தனியார் வங்கில வேலை பார்த்துட்டு இருந்தேன். வேலைப் பளு ரொம்ப அழுத்தம் கொடுத்துச்சு. வேலையை விட்டுட்டு எம்பிஏ படிக்க வந்தேன். இந்நேரம் ஏதாவது பண்ணலாமேனு தோணுச்சு. எனக்குத் தாவரங்கள் மேல அதீத ஆர்வம். இதைப் புரிஞ்சுகிட்ட அப்பா இந்த விஷயத்தை முன்வைச்சார். பெண்கள் தன்னம்பிக்கையா உலகத்தை எதிர்கொள்ளத் தயாரா இருக்கணும்னு சொன்னார். பெண் தொழில் முனைவோரா மிளிர இங்க நிறைய ஸ்கோப் இருக்குன்னார்.

அந்த நம்பிக்கைல ஒரு ஏக்கர் பரப்பில் இந்த நர்சரியை ஆரம்பிச்சேன். அலங்காரச் ெசடிகள், நாட்டுப்பழச்செடிகள், வனமரங்கள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த பழச்செடிகள், அழகுச்செடிகள்னு நிறைய போட்டோம். பழங்கள்ல கொய்யாவும், டிராகன் பழமும் குளோனிங் முறைல உற்பத்தி பண்ேறாம்.

அப்புறம், இந்த நர்சரியை உருவாக்கும்போது ஒரு ஐடியா தோணுச்சு. தேவையில்லாததுனு தூக்கி எறியப்படுற உபயோகமற்ற பொருட்களை வச்சு கார்டனை அழகுபடுத்தலாம்னு நினைச்சேன். அதனால, பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு குடில் அமைச்சேன். டயர்களைக் கட் பண்ணி அதுல செடிகள் வளர்த்தேன்.

நடுவுல அழகுக்காக சின்னதா ஒரு குளம் அமைச்சு, அதைச் சுத்தியும் பழைய டயர், டியூப்கள்ல செடிகள வச்சேன்.இந்தக் குளம் கூட அரிசி  கோணிப்பைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான்! அப்புறம் இந்த நர்சரி உருவாக்கும் போது கிடைச்ச பாறைகளை வைச்சு நீர்வீழ்ச்சி அமைச்சோம்.

இப்ப, பாட்டில்களாலான இந்தக் குடில்தான் நிர்வாக அறை. இதையெல்லாம் பார்த்திட்டு இங்க வர்ற நிறைய பேர் பாராட்டுறது சந்தோஷமா இருக்கு. பிசினஸ் நல்லா பிக்அப் ஆகியிருக்கு. இப்ப பத்து பெண் பணியாளர்களுக்கு வேலை கொடுத்திருக்கேன். மாசம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை என்னால வருமானம் ஈட்ட முடியுது...’’ என சந்தோஷமாகப் பேசியவரைத் தொடர்ந்தார் தந்தை ஜார்ஜ்.

‘‘நான் தோட்டக்கலை பத்தியெல்லாம் படிக்கல. நிறைய பயணம் செய்வேன். அப்படி பயணப்படுற போதுதான் தோட்டக்கலையை தெரிஞ்சுகிட்டேன். பிறகு, வெளிநாடுகளுக்குப் போய் பார்த்துட்டு வந்து அதுபோல இங்க என்ன செய்யலாம்னு பார்ப்பேன்.

அப்படி, ஆரம்பத்துல ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல இருந்து பேரீச்சம் செடி இறக்குமதி செஞ்சு பிளான்ட்டேஷன் பண்ணிக் கொடுத்திட்டு இருந்தேன். அப்புறம் நர்சரி கார்டன், வீட்டுத் தோட்டம் அமைக்கிற கன்சல்டன்ட்டா மாறினேன். இப்ப நிறைய ஊர்கள்ல என்னோட வேலை நடந்திட்டு இருக்கு.

சமீபத்துல, அல்ட்ரா ஹை டென்சிட்டி பிளான்டிங்குக்கான ஆலோசனை நல்லா போயிட்டு இருக்கு. அதாவது, பத்து ஏக்கர்ல அமைக்க வேண்டிய தோட்டத்தை ஒரு ஏக்கர்ல அதே அளவு செடிகளோட அமைக்கலாம். அதுக்கு அல்ட்ரா ஹை டென்சிட்டி பிளான்டிங்னு பெயர். இதை நாகர்கோவில்ல ஒரு வாடிக்கையாளருக்குச் செய்திட்டு இருக்கேன்.

என் பொண் ணை ஒரு பெண் தொழில்முனைவோரா ஆக்கணும்னுதான் அவளுக்கும் என்னோட ஆலோசனைகளை வழங்கினேன். அவளே அதை புரிஞ்சுகிட்டு சிறப்பா செய்ய ஆரம்பிச்சிட்டா. ரொம்ப ஹேப்பியா இருக்கு...’’ நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஜார்ஜ்.
சரி, மற்ற நர்சரிக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்று ஜினுமோளிடமே கேட்டோம்.

‘‘பொதுவா நர்சரிகள்ல செடிகளை உருவாக்க மாட்டாங்க. வெளியிலிருந்து வாங்கி விற்பாங்க. ஆனா, எங்க நர்சரியில செடிகளை உருவாக்கறோம். மேல சொன்ன மாதிரி குளோனிங்  முறைல வெரைட்டியான கொய்யாச்  செடிகளையும், டிராகன் பழச்செடிகளையும் உருவாக்கிட்டு இருக்கேன். பேரீச்சம் செடிகளைத் திசு வளர்ப்பு மூலம் உற்பத்தி செய்ய லேப் ஒண்ணை ெரடி பண்ணிட்டு வர்றேன்.

ஏன்னா, பேரீச்சம் செடியின் ஒரு கன்னோட விலை 4 ஆயிரம் ரூபாய். இவ்வளவு விலைக்கு வித்தா விவசாயிங்க வாங்கமாட்டாங்க. அதனால லேப்ல செடியை உருவாக்கி குறைஞ்ச விலைக்குக் கொடுக்கலாம்னு இருக்கேன்.

இந்தத் திசு வளர்ப்புக்காக மைசூர்ல பயிற்சியும் முடிச்சிருக்கேன். பிறகு, இலைகளைக் கொண்டு செடிகளை உற்பத்தி பண்ற ஐடியாவும் இருக்கு. எல்லாவற்றுக்கும் ஒரே காரணம்தான்.

வெளியிலிருந்து செடிகளை வாங்கி வளர்த்து விற்பனை செய்றதைவிட இங்கே உற்பத்தி செய்யும்போது நமக்கும் செலவு மிச்சம், வாடிக்கையாளருக்கும் குறைஞ்ச விலையில கொடுக்கலாம்...’’ என்ற ஜினுமோள், ‘‘இந்தத் தொழில்ல இன்னும் நிறைய விஷயங்கள் படிக்க வேண்டியிருக்கு. இப்போதைக்கு இதை இன்னும் டெவலப் பண்ற முயற்சியில ஓடிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரமே அப்பா நினைச்ச மாதிரி ஒரு சக்சஸான பிசினஸ் உமனா நிச்சயம் வருவேன்!’’ என்கிறார் நம்பிக்கையுடன்.

பேராச்சி கண்ணன்