கதைக்குத் தேவைனா க்ளாமரா நடிப்பேன்...நிறைய டேக் வாங்கினப்ப அழுதேன்...



தகதக சம்மரில் குற்றால சாரலும், தென்காசி தூறலும் சென்னையிலும் சிலுசிலுத்தால் எப்படியிருக்கும்?

அப்படி ஒரு கலர்ஃபுல் காக்டெயிலாக ஜொலிஜொலித்தது சூர்யாவின் ‘என்ஜிகே’ பட ஹீரோயின்ஸ் ரகுல் ப்ரீத் சிங் - சாய்பல்லவி இருவரின் ஸ்வீட் சந்திப்பு.இடம்: அண்ணாசாலையிலுள்ள ஒரு ஸ்டார் ஹோட்டல்.ஆரம்பமே அன்புப் பிணைப்பும் பாசப் பட்டாசுமாகத் தெறிக்கிறது. ‘‘ஹாய்... nice to meet you again. நேத்துதான் உங்க இந்தி மூவி ‘தே தே பியார் தே’யை பார்த்தேன். you are rocking. கலக்கியிருக்கீங்க...’’ ஃப்ரெஷ் சிரிப்பில் ஒரு பொக்கே hug கொடுத்து ரகுலை வரவேற்ற சாய்பல்லவியிடம் வெட்கப் புன்னகை தெளிக்கிறார் ரகுல்.

‘‘ரியலி? தேங்க்ஸ். ஒரு விஷயம் தெரியுமா? அந்த மூவியின் கலெக்‌ஷன் மும்பையை விட இங்கே சென்னையிலும், ஹைதராபாத்திலும்தான் அதிகம்னு சொல்றாங்க. நீங்க சப்டைட்டிலோட பாத்தீங்களா?’’ என சிலிர்ப்பாக ரகுல் கேட்டதில், ‘இல்லையே’ என்பதையே ‘உச்’சில் கொட்டினார் சாய்.

புன்னகைத்த ரகுல், ‘‘அதுல டயலாக்ஸ்தான் ஸ்பெஷல்! நானும் யூடியூப்ல உங்க ‘ரவுடி பேபி...’ ஸாங் பாத்தேன். டான்ஸ்ல நீங்க செம ஸ்கோர் பண்றீங்க. கீப் ராக்கிங் girl...’’ என வஞ்சனை இல்லாமல் பதிலுக்கு புகழ்ந்த ரகுலிடம், மனம் திறந்தார் சாய்.

‘‘‘என்ஜிகே’ ஸ்பாட்டுல ரகுலை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்ப ரெண்டு பேருமே அவ்ளவா பேசிக்கல. செட்ல ரெண்டு பேருக்குமே டஃப் சீன்ஸ் ஷூட் போச்சு. அதனாலயே கொஞ்சம் நெர்வஸா இருந்தோம். இந்தப் படத்துல எங்க ரெண்டு பேருக்குமே கொஞ்சம் காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. அதோட ஷூட்டுக்குப் பிறகு மறுபடியும் ரகுலை இங்க மீட் பண்ணுனதுல மீ ஹேப்பி!’’ ஈகோ இல்லாமல் புகழ்ந்த சாய்பல்லவியை ஆச்சரிய லுக் விட்டபடி பார்த்த ரகுல், ‘என்ஜிகே’வுக்குள் லேண்ட் ஆனார்.

‘‘கார்த்தி சாரோட ‘தேவ்’, சூர்யா சாரோட ‘என்ஜிகே’ ரெண்டிலுமே ஒரே டைம்ல கமிட் ஆகி, ஷூட் போச்சு. ‘நந்த கோபாலன் குமரன்’ (‘என்.ஜி.கே.’) ரியலி நைஸ் ஃபிலிம். நான் செல்வா (செல்வராகவன்) சாரோட ரசிகை. அவரோட படங்கள் பிடிக்கும். ஆக்டரோட திறமையை வேறொரு புதுக்கோணத்துல வெளிக்கொண்டு வர்றதுல செல்வா சார் கிரேட்மேன்.  

ஆனா, செட்ல சார் செம டஃப் டாஸ்க் மாஸ்டர். ஸ்டிரிக்ட்டா இருப்பார். அதுவும் ‘த்ரீ செகண்ட் ரூல்ஸ்’ இன்னும் ஞாபகத்துல இருக்கு. அதாவது டயலாக்கை ஒரு வரி பேசி முடிச்சதும் மூணு செகண்ட் கேப் விட்டுட்டுதான் அடுத்த வரியை தொடரணும். முக்கியமா நாம பேசறப்ப கண் சிமிட்டக் கூடாது!இந்த ரூல்ஸை கடைப்பிடிக்க சிரமப்பட்டுட்டேன்! ஷாட்டுக்கு முன்னாடி வரை கண்கள் படபடக்கும். டேக் போறப்ப கண் சிமிட்டவே கூடாதுனு உறுதியா இருந்துகிட்டே கண்ணை சிமிட்டிடுவேன்!

இந்த ரிஸ்க் டைம்ல எல்லாம் உதவி இயக்குநர் பிரபா ரொம்ப ஹெல்ப்பா இருந்தார். சூர்யா சார்கிட்ட டயலாக் பேசும் சீனா இருந்தாலும் கூட பிரபா என் கண் எதிர்ல இருந்தாதான் டயலாக்ஸ் ஞாபகத்துல இருக்கும்!’’ கலகலக்கிறார் ரகுல்.‘‘தெலுங்குல நான் ஒரு படம் பண்ணிட்டிருந்தேன். அந்த டைம்லதான் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சார் கூப்பிட்டு இந்தக் கதையை கேட்கச் சொன்னார்...’’ என தன் டர்னை தொடர்ந்தார் சாய்பல்லவி.

‘‘செல்வா சார் கதை சொன்னதும் என் கேரக்டர் பிடிச்சுப் போச்சு. ரகுலும் இருக்காங்கனு சொன்னார். ரெண்டு ஹீரோயின்ஸ் என்றதும் நான் ஷாக் ஆகல. எங்க ரெண்டு பேருக்குமே நல்ல ஸ்கோப் இருந்ததால உடனே கமிட் ஆனேன்...’’ சாய் பல்லவி இப்படிச் சொன்னதும் ‘ஆம்’ என்பதுபோல் ரியாக்‌ஷன் கொடுத்தார் ரகுல்.

கண்சிமிட்டியபடியே சாய்பல்லவி தொடர்ந்தார்: ‘‘ஆனா இதுல ரகுலுக்கு சூர்யா சாரோட டூயட் இருக்கு. எனக்கு அது இல்லாதது வருத்தம்தான்! என்ன செய்ய... ஸ்கிரிப்ட்டுக்கு அது தேவைப்படல! ஸ்பாட்னாலே அது கோயில் மாதிரி டிசிப்ளினா இருக்கணும்னு செல்வா சார் எதிர்பார்ப்பார். விஷ் பண்றதுல ஆரம்பிச்சு செட்ல நிறைய ரூல்ஸ் இருக்கும். ஸ்பாட்டுல போனை யாரும் பயன்படுத்தக்கூடாதுனு கவனமா இருப்பார். ஒரு சீன்ல கோபமா டயலாக் பேசணும். அப்ப ‘மூச்சை இழுக்காம ஒரே மூச்சுல பேசுங்க’ன்னார்!

முதல்நாள் ஷூட்ல ஃபர்ஸ்ட் டேக்லயே ஷாட் ஓகே ஆனது எனக்கே ஆச்சரியம். ஆனா அந்த குஷி ரொம்ப நாள் நீடிக்கல. ஒருநாள் எனக்கும் சூர்யா சாருக்குமான காம்பினேஷன்ல டேக் ஓகே ஆகாம ரீடேக் போயிட்டே இருந்தது. அன்னிக்கு காலைல தொடங்கின ஷூட் நைட் பனிரெண்டு மணிக்குப் பிறகும் ஓகே ஆகலை. பதறிட்டேன்.

ஆனா, சூர்யா சாரும், செல்வா சாரும் ரொம்ப கூலா ‘அதை மறுநாள் எடுத்துக்கலாம்’னு சொல்லி பேக்கப் பண்ணிட்டாங்க! எனக்கு அழுகையே வந்துடுச்சு. அம்மாவுக்கு போன் பண்ணினேன். ‘இன்னிக்கு ஒரு சீன் எடுத்தாங்க. ரொம்ப டஃப்பான சீன். அதோட டேக் ஓகே ஆகல. அதே சீன் நாளைக்கு எடுக்கிறப்பவும் ஓகே ஆகலைனா வீட்டுக்கு கிளம்பி வந்துடறேம்மா’னு எமோஷனலா அழுதுகிட்டே சொன்னேன்.

மறுநாள் ஆச்சரியம் காத்திருந்தது. நான் நடிச்ச அந்த செகண்டே டேக் ஓகேனு டைரக்டர் சொன்னார்! ஒருவேளை நைட் நாம அம்மாகிட்ட அழுததை அவங்க செல்வா சார்கிட்ட சொல்லியிருப்பாங்கேளானு குழம்பினேன்!ஆனா, அப்படியெல்லாம் எதுவும் இல்ல! அவர் எதிர்பார்த்தா மாதிரி நான் நடிச்சதாலதான் டேக்கை ஓகே சொல்லியிருக்கார்! ரியலி செல்வா சார் கிரேட். பொறுமையா நிறைய கத்துக்கொடுத்தார். ஆக்ட்டிங்னா ரொம்ப சிம்பிள்னு புரிய வைச்சார்...’’ ஃபீலான சாய் பல்லவியின் கவனத்தை ‘‘ரவுடி பேபி ஸாங் செம ஹிட்டுல...’’ என திருப்பினார் ரகுல்.

சட்டென எமோஷனல் ஃபீலில் இருந்து விடுபட்ட சாய்பல்லவி புன்னகைத்தார். ‘‘தேங்க்ஸ் ரகுல்! நான் ரொம்பவே லக்கி. எதிர்பாராம கிடைச்ச சந்தோஷம் அது. அந்தப் பாட்டு இவ்ளோ பெரிய ஹிட்டாகும்னு நாங்க யாருமே எதிர்பார்க்கல. இவ்ளோ மில்லியன் ரீச் ஆனதில் அதில் உழைச்ச அத்தனை பேருக்குமே ஆச்சரியம்.

நடிக்க வர்றதுக்கு முன்னாடி பிரபுதேவா மாஸ்டர் எனக்கு டான்ஸ் ஸ்டெப்ஸ் கத்துக்குடுத்த அதே டான்ஸ் ஸ்டூடியோவுலதான் இப்ப ஒரு ஹீரோயினா ‘ரவுடி பேபி’க்கு பிராக்டீஸ் பண்ணினேன்!

மறக்கமுடியாத தருணம் அது. அதோட டான்ஸ் ரிகர்சல் அப்ப தனுஷ் சாரும் வந்திருந்து பிராக்டீஸுக்கு உதவினார். தனுஷ் சாரின் உதவி இல்லேனா அது இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காதுனு நினைக்கறேன்...’’ சிலிர்த்தவர், ‘‘ரகுல்... உங்க இன்ஸ்டா பக்கம் போனா, நீங்க ஃபிட்னஸ்லயும் கலக்கறீங்க. அதே டைம்ல ரசனையா வெரைட்டியாகவும் தேடிப்பிடிச்சு சாப்பிடறீங்க... எப்படி இது சாத்தியமாகுது..?’’ சாய்பல்லவி
ஆச்சர்யப்பட்டார்.

‘‘ஒருநாள் சாப்பிடாம கூட இருந்திடுவேன். ஆனா, ஃபிட்னஸ் ஒர்க் அவுட் பண்ணாம ஒருநாள் கூட இருக்க மாட்டேன். தெனமும் முக்கால்மணி நேரமாவது ஃபிட்னஸுக்கு செலவிடுவேன். அதே டைம்ல விரும்பினதையும் கேட்டு வாங்கிச் சாப்பிடுவேன்! அந்த உணவு
களின் கலோரீஸைப் போக்க அன்னிக்கே செமையா ஒர்க்கவுட்டும் பண்ணுவேன். என் உடல்வாகுக்கு செட் ஆகிடுச்சு...’’ என்ற ரகுலைப் பார்த்து புன்னகைத்தார் சாய்.

‘‘நிஜமாகவே நீங்க லக்கி. நானும் ரெகுலரா ஜிம்முக்கு போவேன். ஆனா, fitness freak இல்ல. ஃபிட்னஸ்ல எத்தனை வெரைட்டி ஆஃப் ஒர்க் அவுட்ஸ் இருக்குனு உங்க இன்ஸ்டா பக்கம் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கறேன்! நான் எல்லாம் சாப்பிட்டதும் ஒருமணி நேரமாவது தூங்கணும்னுதான் நினைப்பேன்!’’ வெட்கத்துடன் புன்னகைத்தார் சாய்பல்லவி.

அதுவரை பொறுமையாக இருந்த நம் போட்டோகிராபர், ‘‘இந்தில வந்த ‘தே தே பியார் தே’ல செம க்ளாமரா நடிச்சிருக்கீங்க. ஆனா, தமிழ்ல மட்டும் ஓரவஞ்சனை பண்றீங்களே..?’’ என ரகுலை சீண்டினார்.கோபப்படாமல் பொறுமையாக பதில் அளித்தார் ரகுல். ‘‘அந்தக் கதைக்கு அப்படி ஒரு க்ளாமர் தேவைப்பட்டுச்சு. அதனால அப்படி பண்ணினேன். ஏதாவது ஒரு இண்டஸ்ட்ரீல க்ளாமராக நடிச்சா மத்த இண்டஸ்ட்ரீலயும் இப்படி கேட்கத்தான் செய்யறாங்க.

‘தேவ்’ல நான் மாடர்ன் காஸ்ட்யூம்லதானே நடிச்சிருந்தேன்? கதைக்கு என்ன தேவையோ அதன்படி எல்லா இண்டஸ்ட்ரீலயும் நடிக்கத்தான் செய்யறேன்!’’ என்ற ரகுல் சூர்யா குறித்து பேச ஆரம்பித்தார். ‘‘அவர் ரொம்பவே சிம்பிள். அமேஸிங் எனர்ஜி அவர்கிட்ட அள்ளுது. ஒரு ஸ்டார் மாதிரியே பழகமாட்டார். அவ்ளோ எளிமை. சில சீன்ஸ் அப்ப செல்வா சார் கோபப்பட்டார். அப்ப சூர்யா சார்தான் எங்களை கம்ஃபர்டபிளா பார்த்துக்கிட்டார்.

இத்தனை வருடங்களா அவர் இண்டஸ்ட்ரீயில இருந்தும் ரொம்பவே டிசிப்ளினா இருக்கார். ஒர்க்கை ரசிச்சு பண்ணினாத்தான் அப்படி ஒரு டிசிப்ளின் வரும். பத்து டேக் போனாலே சாய் சொன்னா மாதிரி நான் அழுதுடுவேன். ஆனா, 16வது டேக் போறப்பவும் முதல் டேக் மாதிரியே எனர்ஜியோடு சூர்யா சார் இருக்கார்!’’ என்று ரகுல் சொன்னதும் அவரிடமும் சாய் பல்லவியிடமும், சூர்யா - கார்த்தி இருவரில் யார் பெஸ்ட் என்று கேட்டோம்.

‘‘பாஸ்! நான் இன்னும் கார்த்தி சார் கூட நடிக்கலை. நடிச்சபிறகு உங்க கேள்விக்கு பதில் சொல்றேன்!’’ பட்டென்று சொன்னார் சாய் பல்லவி.
‘‘அம்மா பெஸ்ட்டா... அப்பா பெஸ்ட்டானு கேட்டா நீங்க யாரைச் சொல்வீங்க? சிரமமில்லையா? அப்படித்தான் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்றதும் கஷ்டம்! ரெண்டுபேருமே அவங்க அவங்க ஒர்க்ல சின்ஸியர்...’’ என ரகுல் சொல்ல... ‘‘சூப்பர் ஆன்சர்...’’ என கட்டை விரலை உயர்த்தினார் சாய் பல்லவி!

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்