அஜித்தை எதிர்த்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் பேரன்!



சென்ற வாரத்தின் சென்சேஷன்… ‘நேர் கொண்ட பார்வை’தான். பெண்களுக்கு பிரச்னை ஏற்படுத்திய ‘நால்வர் அணி’யில் அதிகம் பார்வை விழுந்தது சுஜித் ஷங்கர் மேல்தான். அவர் மிஸ் ஆகாத டைமிங்கில் பேசிய மிரட்டலுக்கு, வெடிச்சிரிப்புக்கு, அலப்பறைக்கு டபுள் ஓகே சொன்னார்கள் ரசிகர்கள்.

உங்கள் நடிப்புக்கு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா பின்புலமோ…

என் ஆர்வமெல்லாம் 2000ம் ஆண்டில் இருந்து  நாடகத்தின் மீதுதான் இருந்தது. ரொம்பவும் உயிரா நான் புழங்கும் இடம். எந்த பொய்யான பாவனைகளும் இல்லாமல் அசலான உணர்ச்சிகளோடு இங்கே இருக்கவேண்டும். பல தலைமுறைகளாக நம்மை பாதித்து வருகிறது நாடகம். அதை முக்கியமாக நான் எடுத்துக் கொள்வதில் அதிக சந்தோஷமே அடைகிறேன். என் முன்னோர்கள் வழியில் இன்னும் பலவிதங்களில் நாடகங்களின் போக்கை திசை திருப்பலாம் என செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இவ்வளவு பிரியப்பட்ட நாடகத்தை விட்டு சினிமாவிற்கு எப்படி வந்தீர்கள்..?

வந்த வாய்ப்பையெல்லாம் ஏற்றுக்கொள்வது கிடையாது. ஆக்டிங் என்கிற விஷயம் உங்களுடைய செருப்பை நான் போட்டுட்டு நடந்தால், எங்கே அது உங்களைக் கடிக்குதோ, அது எங்கேன்னு தெரிஞ்சு அதே வலியை நான் வெளிப்படுத்தணும். அதுதான் நடிப்பு.என்னை மாதிரி வந்தவனுக்கு, காத்துக்கிட்டே இருந்தவனுக்கு ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் வரும் பாருங்க, அதை செய்துகிட்டு இருக்கேன். மற்ற எல்லாத் தொழிலை விடவும் நடிப்பு கஷ்டமானது. நடிப்பை லைட்டாக எடுத்துக்கிட்டுகூட பண்ணலாம். ஆனால், எனக்கு அப்படி பண்ணத் தெரியாது. கேரக்டரில் முடிந்த அளவு ஈடுபாடு வைக்கிறேன் பாருங்க... அதுதான் என்னை இதுவரைக்கும் காப்பாத்திட்டு வருது.

எப்படி ‘நேர் கொண்ட பார்வை’க்கு வந்தீங்க?

என்னோட சில படங்களை வினோத் பார்த்திருக்கார். என்னை தேடிக்கிட்டே இருந்திருக்கார். அப்ப ஒரு படம் முடிக்கிற ஸ்டேஜில் இருந்தேன். ‘தீரன் அதிகாரம் ஒன்று’க்காக கேட்டார். ‘ஸாரி பிரதர்’னு சொல்லிட்டேன். அப்புறமும் விடாமல், இந்தப்படத்திற்குக் கேட்டார். வந்திட்டேன். நல்ல பக்குவத்தை இந்தப்படம் சொல்லித் தருது. கெட்டவனாக நடிச்சாவது, நல்லதை சொல்றதுக்கு துணையாக இருப்போம்னு நடிச்சேன். வந்து பார்த்தால் இந்த அஜித் சார் அவ்வளவு நல்ல மனுஷனாக இருக்கார். கூட இருக்கிற ஒவ்வொரு சமயமும் எதிராளி மேல அக்கறைதான். நான் இப்படி யாரையும் பார்த்ததில்லை. நல்ல படம் வந்தால், உள்ளே இருந்து உயிரை எடுத்துக்கிட்டு வர்றமாதிரி கேரக்டர் வந்தால் கண்டிப்பாக மறுபடியும் தமிழில் நடிப்பேன்.

தமிழ் சினிமாவை எப்படிப் பார்க்கிறீங்க:-

மம்மூட்டி, மோகன்லால் மாதிரி நல்ல நிலையான இடத்தில நிறையப்பேர் இங்கே இருக்கிறதைப் பார்க்கிறேன். அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ்னு பல ரகமாய் நடிகர்கள் இங்கே இருக்காங்க. விஜய் சேதுபதியை குறிப்பா எனக்குப் பிடிக்கும்.

கேரளாவிற்கும் தில்லிக்குமா பறந்துக்கிட்டு இருக்கீங்க…

சினிமாவில் நடிக்க கேரளாவிற்கு வருவேன். நாடகத்திற்கு தில்லி போயிடுவேன். சினிமாவிற்காக நாடகத்தை விடமுடியாதே! நான் என்னிக்கும் ரேஸ்ல கலந்து கிட்டதே கிடையாது. நடிப்பு எனக்கு விளையாட்டு இல்லை. ஆக்டரா ஒரு கேரக்டரை காப்பாத்தி ஆகணும் என்பதில் துடியாக இருப்பேன். அதில் எப்பவும் சமாதானம் செய்துக்கிறது கிடையாது.

பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டின் பேரன் என்பதில் பெருமை கொள்வீர்களா..?

நான் அதையெல்லாம் வெளியே சொல்லிக்க மாட்டேன்! சமயங்களில் அவரின் பேரன்னு சொல்லிக்க கூச்சமா கூட இருக்கும். ‘‘அப்படியா’’னு கேட்டால் ஒரு புன்சிரிப்போடு போயிடுவேன். தாத்தா வாழ்ந்த பொது வாழ்க்கை, அர்ப்பணிப்பு, மக்கள் மேலான அக்கறை எல்லாம் கொள்ளாமல் அவரோட பேரன்ங்கிற விஷயத்தில் மட்டும் என்ன பெருமை! நல்லது. எனக்கு சந்தோஷம்தான். அவர் எடுத்து வைச்சிருக்கிற உயர்ந்த இடத்திற்கு நான் நியாயம் செய்யணுமே… பார்க்கலாம்            

* நா.கதிர்வேலன்