பகவான்



தாலியம் என்னும் விஷம்! தாலியத்துக்கு (thallium) சுவையில்லை. மணமில்லை. சந்தேகமே வராத அளவுக்கு கொலை செய்வதற்கு, கொலையாளிகள் தாலியம் பயன்படுத்து வார்கள். போஸ்ட்மார்ட்டத்தில் கூட அவ்வளவு சுலபமாக கண்டு பிடித்து விட முடியாது. விஷங்களுக்கெல்லாம் விஷம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மோசமான விஷம் இது.நிறமோ, மணமோ காட்டாமல் தண்ணீரோடு தண்ணீராக சுலபமாக கரைந்துவிடக் கூடியது. ஒரு மனிதனுக்கு தினமும் உணவில் 20 கிராம் அளவுக்கு கலந்து வழங்கப்படுமேயானால், வெகுவிரைவிலேயே அவனது ஜீரண உறுப்புகளை படிப்படியாக செயலிழக்கச் செய்யும். இரத்தத்தில் தாலியம் கலந்திருக்கிறது என்று தெரியவந்தால், டயாலிசிஸ் போன்ற மருத்துவ முறைகளின் மூலம் காப்பாற்ற வழியுண்டு. ஆனால், இது கலந்திருக்கிறது என்பதை சந்தேகித்து கண்டுபிடிப்பதுதான் கடினம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான காலக்கட்டத்தில் தாலியம், ஒரு நம்பகமான கொலைக்கருவியாக இருந்து வந்திருக்கிறது. எழுத்தாளர் அகதா கிறிஸ்டி, இந்த விஷத்தை வைத்து எழுதிய டிடெக்டிவ் நாவலான ‘The pale horse’ மிகவும் பிரபலமானது (தமிழில் ‘வெளிறிய குதிரை’ என்கிற பெயரில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது). ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ‘ஸ்பெக்டரி’ல் கூட தாலியம் வருகிறது.இணையத்தில் தேடிப் பாருங்கள். விஷங்களுக்கெல்லாம் விஷமான தாலியத்தால் கொல்லப்பட்டவர்கள் பட்டியல் மிகப்பெரிது.பொதுவாக எலிகளை, எறும்புகளைக் கொல்லுவதற்கு பயன்படுத்தப்பட்ட ரசாயனம் இது.

ஆனால், மனிதர்களைக் கொல்லுவதற்கும் சமூகவிரோதிகளால் பயன்படுத்தப்பட்ட நிலையில் 1970களின் வாக்கில் அமெரிக்கா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் இந்த இரசாயனத்தை, பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்திருக்கின்றன.பகவானின் வாழ்க்கையைச் சொல்லும் தொடரில், தாலியம் என்கிற கொடும் விஷத்தின் புராணம் பாடிக் கொண்டிருப்பதற்கு மன்னிக்கவும்.

தொடர்பு இருக்கிறது. ஏனெனில், பகவானுக்கே தாலியம் கொடுக்கப்பட்டிருக்கிறது!1989ன் தொடக்கத்தில் ஓஷோவின் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்து வந்தது.கொஞ்ச தூரம் நடந்தாலே அவருக்கு கடுமையாக வியர்த்துக் கொட்டியது. கடுமையாக மூச்சு வாங்கியது. எனவே அவர் வாக்கிங் செல்லும் புல்வெளிகளில் எல்லாம் ஏர்கூலர் வசதிகள் செய்யப்பட்டன.சரியாக உணவருந்த முடியவில்லை. கொஞ்சமாக எடுத்துக் கொண்டாலும் ஜீரமாகாமல் அவதிப்பட்டார். எப்போதுமே அவர் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

தொடர்ச்சியாக அவரது தலைமுடி கொட்டிக்கொண்டே இருந்தது. எலும்புகளும் செயலிழக்கத் தொடங்கின. உடலின் வலது பாகம் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழப்பதற்கான அறிகுறிகள் தோன்றின.உள்ளூர் மருத்துவர்கள் எவ்வளவோ பரிசோதனைகள் செய்தும், அவரது உடலுக்கு குறிப்பாக என்ன பிரச்னை என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை.எனவே, பகவானின் உடல் பரிசோதனை அறிக்கைகள் மேலதிக பரிசோதனைகளுக்காக இலண்டனுக்கு அனுப்பப்பட்டன.ஓஷோவின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கைகளை தீவிரமாக வாசித்த இலண்டன் மருத்துவர்கள், அவருக்கு கொடிய விஷமான தாலியம் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்தார்கள்.

அமெரிக்காவில் சிறையில் இருந்தபோது அவருக்கு தாலியம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொன்னார்கள். எனினும், யார் கொடுத்தார்களோ எதற்குக் கொடுத்தார்களோ என்பது இதுநாள் வரையிலும் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை.உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் பகவானுக்கு மாரடைப்பும் வந்தது. நெருங்கிய சீடர்கள் சிலரிடம், ’என்னுடைய நாட்களை எண்ணுங்கள்...’ என்று பூடகமாக புன்னகையோடு சொல்லிக் கொண்டிருந்தார். அவசர அவசரமாக, தான் சொல்ல இன்னும் மிச்சமிருக்கும் என்று அவர் கருதிய கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

உலகமயமாக்கல் வருவதற்கான அறிகுறிகள் அப்போதே தோன்ற ஆரம்பித்து விட்டன. பல்வேறு நாடுகளும், மக்களும் தங்கள் தனித்தன்மையை இழக்கக்கூடிய காலம் வரப்போகிறது என்பதை பகவானுமே உணர்ந்திருந்தார்.இந்தியாவில் ஊழல் பெரும் பிரச்னையாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது. குறிப்பாக கட்டுப்பாடுக்கு பேர் போன இராணுவத்திலேயே நடந்த போபர்ஸ் பீரங்கி ஊழல், நாட்டையே உலுக்கியிருந்தது. அது தவிர்த்து கல்வித்துறையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. ராமஜென்மபூமி பிரச்னை விஸ்வரூபம் எடுத்து, எப்போது வேண்டுமானாலும் இருதரப்பு மதத்தினரும் மோதி பல்லாயிரம் உயிர்கள் பலி வாங்கப்படும் சூழல் ஏற்பட்டிருந்தது.

இவை அனைத்தையும் விட தனிமனித முன்னேற்றமே மிகவும் முக்கியமானது என்பதை ஓஷோ திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். மக்களில் ஒவ்வொருவரும் தம்மை முன்னேற்றிக் கொள்வதின் மூலமாகவே நாட்டின், உலகின் மற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியுமென யதார்த்தமாக அவர் நம்பினார்.சோஷலிஸ ரஷ்யா துண்டு துண்டாக சிதறக்கூடிய சூழலை அவர் கவலையுடன் கண்டார். ரஷ்ய அதிபர் கோர்பச்சேவ், அமெரிக்காவின் சதிக்கு, தான் அறியாமலேயே பலியாகி விட்டதாக கருத்து தெரிவித்தார்.உலக அரசியல் எக்கேடாவது கெட்டுப் போகட்டும், மக்கள் கவனமாக இருந்து தங்களைத் தாங்களே காத்துக் கொள்வதற்கு தயாராக இருங்கள் என்று எச்சரித்தார்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய அவரது கூற்று, எவ்வளவு துல்லியமானது என்பதை இப்போது நம்மால் உணரமுடியும். அன்று விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார். சித்தம் போக்கு சிவன் போக்கு என்று இருந்தவர்கள் எல்லாம் அரசாங்கங்கள் செயற்கையாக உருவாக்கிய பிரச்னைகளுக்கு பலியாகினர்.‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ பத்திரிகை, ஓஷோவின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவருக்காக ஒரு சிறப்பிதழைக் கொண்டு வந்தது. ‘I ran india’ என்கிற தலைப்பில் அவ்விதழில் அட்டைப்படக் கட்டுரை எழுதினார் பகவான். இந்தியா எதிர்கொள்ள இருக்கக் கூடிய பிரச்னைகளை தன்னுடைய கூர்மையான அறிவுத்திறனால் முன்கூட்டியே உணர்ந்து, அக்கட்டுரையில் மக்களை எச்சரித்தார் ஓஷோ. அக்கட்டுரையிலேயே தன்னுடைய இடம் வரலாற்றில் என்னவாக இருக்கும் என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டி இருந்தார்.

“என்னை சிந்தனையாளன் என்று சிலர் நினைக்கின்றனர். சிலரோ ஆன்மீகத்தோடு தொடர்பு படுத்திப் பார்க்கின்றனர். இந்த இருதரப்புமே எனக்கு ஏதோ சக்தி இருப்பதாக ஒப்புக் கொள்கின்றனர். என் கொள்கைகள்தான் மக்களை ஈர்க்கக்கூடிய எனது சக்தி. வாழ்க்கையை புதிய கோணத்தில் என்னால் பார்க்க முடிகிறது. முக்கியமல்லாதது என்று மற்றவர்கள் கருதி தவிர்க்கும் விஷயங்களைப் பேசுபவனாக நான் இருக்கிறேன்...” என்று ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’யில் தன்னைப் பற்றிய அறிமுகத்தை அவர் தந்தார்.அதுநாள் வரை ஓஷோவைப் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தவர்கள் பலரும், இக்கட்டுரைக்குப் பின்னால் அவரது தேவையை உணர்ந்தார்கள்.ஆனாலும், என்ன செய்ய? Too late!(தரிசனம் தருவார்)  

Richman Guru

பணக்காரர்களைத்தான் தன்னுடைய சீடர்களாக சேர்த்துக் கொள்வார் என்பது ஓஷோ தன் சமகாலத்தில் மிக அதிகமாக எதிர்கொள்ள நேர்ந்த குற்றச்சாட்டு.இதை ஓஷோ ஒருநாளும் மறுத்ததில்லை. பணக்காரர்களால்தான் விரைவில் மனமாற்றம் கொள்ள முடியும் என்று அவர் நம்பினார். அவர்களுக்கு தேவைக்கு அதிகமாகவே அனைத்தும் கிடைத்து விட்டதால் ஒருமாதிரி துறவு மனப்பான்மைக்கு தயாராக இருப்பார்கள் என்று கருதினார். புத்தர், மகாவீரர், கிருஷ்ணர், ராமர் என்று அனைவருமே பணக்காரர்கள்தான் என்பதையும் தன் கூற்றுக்கு ஆதரவாக சுட்டிக் காட்டினார்.

“பணக்காரர்களுக்கு அனைத்துத் தேவைகளும் பூர்த்தி அடைந்த நிலையில், நிம்மதிக்காக மட்டுமே என்னிடம் வருகிறார்கள். ஏழைகளுக்கோ குடும்பச் சுமையும், பொருளாதாரத் தேவைகளும் தொடர்ந்து விரட்டிக் கொண்டிருக்கும் வரை அவர்கள் ஆன்மீகம் குறித்து நினைக்கவோ, ஈடுபடவோ இயலாது...” என்கிறார் ரஜனீஷ்.

யுவகிருஷ்ணா
ஓவியம்: அரஸ்