கோட்டையும் சட்டப் பேரவையும்



*தல புராணம்

இந்த ஆகஸ்ட் 22ம் தேதியுடன் சென்னை உருவாகி 380 வருடங்கள் ஆகின்றன. சென்னையின் வரலாறு என்பது இன்று தலைமைச் செயலகமாகக் காட்சியளிக்கும் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து தொடங்குகிறது. ஏற்கனவே, கோட்டை உருவான வரலாறு பற்றி முதல் அத்தியாயத்தில் சொல்லியிருந்தோம். கோட்டையினுள் இருக்கும் சில பழமையான கட்டடங்கள் பற்றிக் கூட ஆங்காங்கே வெவ்வேறு அத்தியாயங்களில் குறிப்பிட்டுள்ளோம். இப்போது புனித ஜார்ஜ் கோட்டை சட்டப் பேரவையாக உருவெடுத்த வரலாறு பற்றிப்பார்ப்போம்.

அதற்குமுன் கோட்டையின் ஆரம்பக் காலம் பற்றியும், உள்ளிருக்கும் புனித மேரி தேவாலயம், ஃபோர்ட் மியூசியம், கிளைவ் ஹவுஸ் பற்றியும் கொஞ்சம் பார்த்துவிடலாம். 1639ம் வருடம் ஃபிரான்சிஸ் டேயும், ஆண்ட்ரூ கோகனும் இந்த இடத்திற்கு வந்தபோது சுற்றிலும் பனை மரங்களும் பனை ஓலைகளால் வேயப்பட்ட மீனவர்களின் குடிசைகளுமே இருந்தன. அப்போது இந்தப் பகுதியை ஆண்ட பூந்தமல்லி நாயக்கர் தமர்ல வெங்கடாத்ரி இங்கே ஒரு கோட்டையை உருவாக்கிக் கொள்ளவும், வணிகம் செய்யவும் ஒப்பந்தம் அளித்தார். இதன்பிறகு டேயும், கோகனும் ஆர்மகானில் இருந்த கோட்டையைத் தகர்த்துவிட்டு ‘ஈகிள்’, ‘யூனிட்டி’ என்ற இரண்டு கப்பல்களில் 1640ம் வருடம் பிப்ரவரி 20ம் தேதி மெட்ராஸை அடைந்தனர்.

இதில் ேட, கோகன் தவிர்த்து ஒரு மருத்துவரும், பீரங்கி இயக்குபவரும், ஒரு தச்சரும், சில எழுத்தர்களும், கப்பலுக்கு தலா 25 பேர் என ஐம்பது ஊழியர்களும் மெட்ராஸ் வந்திறங்கினர்.கூவம் நதி அருகே இருந்த மணல் திட்டை, கோட்டை கட்டுவதற்கான இடமாக முன்பே தேர்ந்தெடுத்திருந்தார் ஃபிரான்சிஸ் டே.ஆரம்பத்தில் கம்பெனியின் கோட்டை மிகச் சிறியதாகவே கட்டப்பட்டது. இதைச் சுற்றி நான்கு பக்கமும் சுற்றுச் சுவர்கள் எழுப்பப்பட்டன. இதன் பிறகே கோட்டையின் இருபுறமும் ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன. 1640ம் வருடம் ஏப்ரல் 23ம் அன்று கட்டடப் பணி முடிந்தது.

 அதாவது இரண்டு மாதங்களில் பணிகள் முடிந்தன. அதுவரை மூங்கில் மற்றும் பனை மர குடிசைகளில் ஆங்கிலேயர்கள் தங்கினர்.  கட்டடப் பணிகள் முடிக்கப்பட்ட ஏப்ரல் 23ம் தேதி என்பது புனித ஜார்ஜ் தினம் என்பதால் கோட்டைக்குப் ‘புனித ஜார்ஜ் கோட்டை’ எனப் பெயர் சூட்டப்பட்டது.ஆனால், இதில் குடியேற்றப் பகுதிகளும் இன்னும் பிற கட்டடங்களும் 1650லேயே முழுமையாக நிறைவடைந்தன. இதற்கு இடையில் கோட்டையைச் சுற்றி சாந்தோமிலிருந்து வந்த போர்த்துகீசியர்கள் உள்ளிட்ட ஐரோப்பியர்கள் குடியேறினர்.

இந்தக் குடியிருப்புகளைச் சுற்றியும் ஒரு புறக்கோட்டைச் சுவர் எழுப்பபட்டது. இதை 1666ம் வருடம் கம்பெனியின் முகவராக இருந்த ஆரோன் பேக்கர் என்பவர் கட்டி முடித்தார்.இதற்கு வடக்குப் பக்கமாக நெசவாளர்கள், வரைகலைஞர்கள்என உள்ளூர்வாசிகள் குடியேறினர். பின்னர், இந்தியர்கள் இருந்த பகுதி கருப்பர் நகரம் என்றும், ஐரோப்பியர்கள் இருந்த பகுதி வெள்ளையர் நகரம் என்றும் அழைக்கப்பட்டது. இப்படியாக இருந்த முதல் குடியேற்றப் பகுதிகளைக் கிழக்கிந்தியக் கம்பெனியின் மருத்துவரான ஜான் ஃப்ரையரின் வரைபடத்தில் பார்க்க முடிகிறது. அதில், கோட்டையின் அமைப்பு கூம்பு வடிவில் முகலாயர் கட்டட பாணியில் உள்ளது. இது ‘கவர்னர் ஹவுஸ்’ என அழைக்கப்பட்டது. வடக்குப் பக்கமாக ஒரு தேவாலயம் காணப்படுகிறது. கோட்டையைச் சுற்றிலும் வீடுகள் உள்ளன. வடக்கே இந்தியர்களின் குடியிருப்புகள் இருப்பதையும் அந்த வரைபடம் மூலம் அறிய முடிகிறது.

இந்நிலையில், 1678ம் வருடம் ஆங்கிலேயர்கள் தங்களுக்கென ஒரு தேவாலயத்தைக் கட்டத் தொடங்கினர். இதன் பெயர் செயின்ட் மேரிஸ் சர்ச்! அப்போது ஸ்டேரேன்ஷாம் மாஸ்டர் கவர்னராக இருந்தார். Lady’s Day அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான டிசைனை தயாரித்து கட்டியவர் கோட்டையின் பீரங்கி இயக்கத்தில் நிபுணராகவிளங்கிய எட்வர்ட் ஃபவுல். அன்று பீரங்கி இயக்குபவர்கள் எஞ்சினியர்களாகவும் இருந்தனர். சுமார் 86 அடி நீளமும், 56 அடி அகலமும் கொண்டு அழகான கோபுரத்துடன் குண்டுகள் துளைக்காத வகையில் புல்லட் புரூஃப் தேவாலயமாகக் கட்டினார் எட்வர்ட். இரண்டு வருடங்கள் கழித்து 1680ம் வருடம் பணிகள் முடிக்கப்பட்டு வழிபாடு தொடங்கியது. இதுவே, ஆங்கிலேயர்கள் இந்தியாவில் எழுப்பிய முதல் ஆங்கிலிகன் தேவாலயம். இன்றும் தலைமைச் செயலகத்தில் இந்த தேவாலயம் செயல்பட்டு வருகிறது.

இதில்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமைத் தளபதியாக விளங்கிய ராபர்ட் கிளைவ்வின் திருமணமும், மெட்ராஸ் கவர்னராக இருந்த எலிஹூ யேல் திருமணமும் நடைபெற்றன. மட்டுமல்ல; இன்றும் இந்த சர்ச்சின் பலிபீடத்தின் பின்னே ரபேலின் ‘கடைசி விருந்து’ ஓவியம் உள்ளது. இதை வரைந்தவர் யாரென்று தெரியவில்லை. இதனை பிரிட்டிஷார் 1761ல் பாண்டிச்சேரியிலிருந்து கொண்டு வந்ததாக குறிப்புகள் சொல்கின்றன. இப்போது இந்த சர்ச்சின் உள்ளே மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கல்லறைகள் இருக்கின்றன. இதில், மெட்ராஸ் கவர்னராக இருந்த சர் தாமஸ் மன்றோவின் கல்லறையும் ஒன்று. ெதாடர்ந்து 1693ம் வருடம் பழைய கோட்டை மாளிகை இடிக்கப்பட்டு கிழக்குப் பக்கமாக புதிய கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.

 இதற்கு இரண்டு வருடங்களானது. இதன்பிறகு 1710ம் வருடம் தாமஸ் பிட் காலத்தில் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் மெட்ராஸ் நகரின் வரைபடம் வெளியானது. இதில், கவர்னர் ஹவுஸ், தங்கசாலை, டவுன் ஹால், புதிய மருத்துவமனை, ஆங்கிலேயர்கள் சர்ச், போர்த்துகீசியர்கள் சர்ச், ஜேம்ஸ் தெரு, சார்லஸ் ெதரு, செயின்ட் தாமஸ் தெரு, காப்பாளர் வீடு, பரேடு இடம் எனப் பல இடங்களைப் பார்க்க முடிகிறது. இதில், போர்த்துகீசியர்கள் 1642ம் வருடமே இங்கே குடியேறியபோது ஒரு சர்ச்சை கட்டியிருந்தனர். தவிர, கருப்பர் நகரம், முத்தயால்பேட்டை, பொத்தநாயக்கன்பேட்டை போன்ற இடங்களும் இந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்பிறகு, 1740ம் வருடம் ஜோசப் ஸ்மித் என்கிற எஞ்சினியர் பாதுகாப்புகள் நிறைந்த கோட்டையாக உருவாக்கும் திட்டத்தை முன்வைத்தார். ஆனால், உடனடியாக அந்தப் பணி தொடங்கவில்லை.

1746 முதல் 1749 வரை பிரஞ்சு முற்றுகையிட்ட பிறகே கோட்டையைப் பலப்படுத்தும் பணிகள் தொடங்கின. அதில், சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, கருப்பர் நகரின் சில பகுதிகள் இடிக்கப்பட்டன. வடக்கு மற்றும் தெற்குப் பக்க கோட்டைச் சுவரில் கொஞ்சம் சரிவை ஏற்படுத்தி பீரங்கியிலிருந்து தாக்கும் வண்ணம் வடிவமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கு பெஞ்சமின் ராபின்ஸ் என்கிறவரை தலைமை எஞ்சினியராக போட்டனர். அவர் ஸ்மித்தின் திட்டத்தை ஏற்றுக் கொண்டு பணியைத் தொடங்கினார். ஆனால், 1752ல் அவர் காலமானார்.இவரின் டிசைன் ப்ரோஹியர் மற்றும் கால் என்பவர்களால்  மேற்கொள்ளப்பட்டு 1755ல் பணிகள் தொடங்கின. இதில் முக்கியமாக வடக்குப் பக்கத்திலிருந்து கோட்டையின் பின்புறமாக ஓடிய எழும்பூர் நதி திருப்பிவிடப்பட்டது.

மேற்குப் பக்கமாக மூன்று புதிய கொத்தளங்கள் கட்டப்பட்டன. சுமார் இரண்டு வருடங்கள் 4 ஆயிரம் தொழிலாளர்களால் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. 1758ல் மீண்டும் பிரஞ்சுப் படையை வழிநடத்திய லாலி மெட்ராஸை முற்றுகையிட்டார். இதனால், பணிகள் சுணங்கின. ஓராண்டுக்குப் பின்னர் கருப்பர் நகர் முற்றிலும் அழிக்கப்பட்டு முத்தயால்பேட்டைக்கும், பெத்தநாயக்கன்பேட்டைக்கும் குடியிருப்புகள் நகர்த்தப்பட்டன. இந்தப் பகுதி புதிய கருப்பர் நகரம் என்றழைக்கப்பட்டது.

இந்தப் புதிய கருப்பர் நகரையும் பாதுகாக்க முடிவெடுத்து சுமார் ஐந்தரை கிமீ தூரம் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டது. தவிர, எதிரிகளைத் தாக்குவதற்கு பீரங்கிகள் வைக்க வசதியாக 17 கொத்தளங்களும் அமைக்கப்பட்டன. இதை பால் பென்பீல்டு என்ற கம்பெனியின் கான்ட்ராக்டர் கட்டினார். இப்படி பாதுகாப்பிற்காக சுவர் எழுப்பியதால் கம்பெனிக்குச் செலவு அதிகரித்தது. இதை ஈடுகட்ட மக்களிடம் இருந்து வரி வசூலிக்க தீர்மானிக்கப்பட்டது. இதனால், அந்தச் சுவரையொட்டிய சாலை வால்டாக்ஸ் ரோடு எனப்பட்டது. ஆனால், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, வரி வசூலிக்கப்படவில்லை. இருந்தும் அதை வால்டாக்ஸ் ரோடு என்றே மக்கள் அழைத்தனர்.இன்றும் கூட இந்தச் சுவரின் ஒரு பகுதி ஸ்டான்லி மருத்துவமனை அருகே மாடிப் பூங்காவாகக் காட்சியளிக்கிறது.

பின்னர், 1783 வரை மேஜர் கால் மற்றும் கர்னல் ரோஸ் என்பவர்களால் கோட்டை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது. அதுவே இன்றைய தலைமைச் செயலகமாக உள்ளது.இன்று கோட்டையில் தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள், கவுன்சில் சேம்பர், ஆயுதக்கிடங்கு, கிளைவ் ஹவுஸ், படை வீரர்கள் தங்கும் இல்லம், கோட்டை மியூசியம் உள்ளிட்டவை இருக்கின்றன. ஆரம்பத்தில் தலைமைச் செயலகத்தின் தென்பக்கமாக உள்ள செயின்ட் தாமஸ் தெருவில் கர்னல்கள், மேஜர்கள் மற்றும் பிற கவுன்சில் உறுப்பினர்கள் வசித்தனர். இந்தத் தெரு ஸ்நோப் அலே என்ற புனைப்பெயரில் அழைக்கப்படுகிறது. இன்று இதில் கடைசியாக ஒரு வீடு மட்டும் இடிந்த நிலையில் காணப்படுகிறது. இதன்பிறகு, சர்ச்சிற்குப் பின்புறம் உள்ள கிளைவ் ஹவுஸ். ஆரம்பத்தில் இது அட்மிரால்டி ஹவுஸ் என அழைக்கப்பட்டது. ஏனெனில், கடற்படைக்கான நீதிமன்றம் இங்கே செயல்பட்டதே!

இது 1753ல் ராபர்ட் கிளைவ்வின் வீடாக இருந்துள்ளது. பின்னர், இரண்டாம் ராபர்ட் கிளைவ்வின் வீடாகவும் இருந்தது. இதற்கிடையே கவர்னரின் நகர இல்லமாகவும் இந்த இடம் செயல்பட்டது.பிறகு, இரண்டாம் கிளைவ்வின் காலத்தில் விருந்தினர் மாளிகையாக மாறியது. தற்போது கிளைவ் ஹவுஸில் இந்தியத் தொல்லியல் துறை செயல்பட்டு வருகிறது.தென்மேற்குப் பக்கத்திலுள்ள ஆயுதக்கிடகு 1772ல் ஜான் சல்லிவனால் கட்டப்பட்டது. இதை கர்னல் பேட்ரிக் ரோஸ் வடிவமைத்தார். இன்று இதை ராணுவ எஞ்சினியரிங் சர்வீஸஸ் பயன்படுத்தி வருகிறது.

1756ல் கட்டப்பட்டது கிங்ஸ் பேராக்ஸ் கட்டடம். இது இருநூற்றாண்டுகளாக கிங் ரெஜிமென்ட் தங்குமிடமாகவும், பிரிட்டிஷ் பட்டாலியனுக்கான இடமாகவும் இருந்தது. தற்போது ராணுவ கேன்டீனாக உள்ளது. இதேபோல் 1790ல் வணிகத்திற்காகக் கட்டப்பட்ட எக்ஸ்சேஞ்ச் கட்டடம் இன்று கோட்டை மியூசியமாகக் காட்சியளிக்கிறது. இதன் மேல்தளத்தில்தான் முதல் லைட்ஹவுஸ் செயல்பட்டது. இப்படியாக இன்று கோட்டையினுள் பழைய கட்டடங்கள் எஞ்சியுள்ளன. இதில் சட்டப் பேரவை எப்போது வந்தது? அடுத்த வாரம் பார்ப்போம்.

*பேராச்சி கண்ணன்
படங்கள் :ராஜா