எந்த தனியார் கம்பெனியும் ரூ.32க்கு கொள்முதல் செய்து ரூ.46க்கு விற்கலை!



* பால் விலை உயர்வுக்கு பின்னால் இருக்கும் அரசியல்

தமிழக அரசின் ஆவின் பால் விலை உயர்வு அறிவிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் கவலைக்குள்ளாகி உள்ளனர். லிட்டருக்கு ஆறு ரூபாய் என்பது அவர்களின் தலையில் கூடுதல் சுமையை ஏற்றியிருக்கிறது.  டயட், கிரீன் மேஜிக், நைஸ், பிரிமீயம் என நான்கு வகையான பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதில், கிரீன் மேஜிக் மற்றும் நைஸ் வகை பால் பாக்கெட்டுகளைத்தான் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

முன்பு இந்த கிரீன் மேஜிக்கின் விலை ஒரு லிட்டர் 41 ரூபாய் என்றாலும் கடைகளில் இரண்டு ரூபாய் அதிகமாக ரூ.43க்கே விற்பனை செய்யப்பட்டது. போலவே, நைஸ் பாக்கெட் 18 ரூபாய் என்றாலும் கடைகளில் ரூ.20க்கே விற்கப்பட்டது. இப்போது ஆறு ரூபாய் உயர்ந்துள்ளதால் இந்த கிரீன் மேஜிக் பாக்கெட்டின் விலை ரூ.41ல் இருந்து 47 ஆக உயர்ந்துள்ளது. இதனால், கடைகளில் இரண்டு ரூபாய் அதிகமாக ரூ.49க்கே கிடைக்கும். இதேபோல, நைஸ் 42 ரூபாயாக உயர்ந்தாலும் கடைகளில் ரூ.44 என விற்கப்படும்.

இந்தப் பால் உயர்வு அவசியம்தானா?  

‘‘கொள்முதல் விலை உயர்வு பால் உற்பத்தியாளர்களுக்கு ரொம்ப ரொம்ப அவசியம். ஆனா, இதை வச்சு அரசு மக்கள் மீது சுமையை ஏற்றியிருப்பது தேவையில்லாதது. இதுக்கெல்லாம் காரணம் ஆவின் நிறுவனத்தின் நிர்வாகச் சீர்கேடுகளும், முறைகேடுகளும்தான். அதைக் களைந்தாலே போதும்...’’ என்கின்றனர் பால் உற்பத்தியாளர்களும் முகவர்களும்!   ‘‘இப்ப, ஒரு லிட்டருக்கு நான்கு ரூபாய் கொள்முதல் விலையை உயர்த்துறேன்னு சொல்லிட்டு பொதுமக்களுக்கான விற்பனையை ஆறு ரூபாய் அரசு உயர்த்தி இருக்கு.

ஒரு நடுத்தரக் குடும்பம் நாள் ஒன்றுக்கு ரெண்டு பாக்கெட் வாங்கும்போது கூடுதலா பனிரெண்டு ரூபாய் கொடுக்க வேண்டி வரும். ஆக, மாசத்துக்கு 360 ரூபாய் அதிகரிக்கும். அதுவே, நிர்வாகச் சீர்கேடுகளைக் களைந்தால் விற்பனை விலையை உயர்த்தாமேலயே கொள்முதல் விலையை பத்து ரூபாய் அதிகரிக்கலாம். இல்லைன்னா, ஒரு லிட்டருக்கு அரசு நூறு ரூபாய் உயர்த்தினாலும் ஆவின் நஷ்டத்தில்தான் இயங்கும்...’’ என வருத்தமாக ஆரம்பித்தார் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத் தலைவர் பொன்னுச்சாமி.

‘‘ஒவ்வொரு முறையும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தும் போது பால் உற்பத்தியாளர்களை மட்டுமே அரசு கவனத்துல எடுத்துக்குது. ஆனா, மக்களுக்குக் கொண்டு சேர்க்குற எங்கள கவனத்துல எடுத்துக்குறதில்ல. கடந்த 18 வருஷங்களா பால் முகவர்களுக்கு கமிஷனா ஒரு லிட்டருக்கு 50 பைசாதான் தர்றாங்க. இதுக்குக் காரணம் ஆவின் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள். இவர்களிடம்தான் ஆவின் நிறுவனம் மொத்த பால் பாக்கெட்டையும் கொடுக்கும். அங்கிருந்து முகவர்களுக்கு வந்து கடைகளுக்குப் போகும்.

ஆனா, விநியோகஸ்தர்கள் இல்லாமல் நேரடியா முகவர்கள் மூலம் பால் பாக்கெட்கள சப்ளை செஞ்சா கூடுதல் விலையில விற்க வேண்டி இருக்காது. இந்த விநியோகஸ்தர்கள் முறை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்னு சில மாவட்டங்கள்ல மட்டும்தான் இருக்கு. மற்ற தமிழகப் பகுதிகளுக்கு முகவர்கள்கிட்ட அரசே நேரடியா விற்பனை செய்யுது. அந்த முகவர்கள் எத்தனை லிட்டர் பால் விற்பனை செய்யறாங்களோ அதற்கேற்ப கமிஷன். ஆவினின் ஒரு நாள் விற்பனை தமிழகம் முழுவதும் 25 லட்சம் லிட்டர். இதுல 13 லட்சம் லிட்டர் சென்னைலயே விற்பனை செய்யப்படுது.

அதனாலதான் இந்த விநியோகஸ்தர்கள் முறையை இங்க மாற்ற முடியாதுனு சொல்றாங்க. அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கு கையூட்டுப் பணம் கொடுக்குற விருட்சமா இந்த விநியோகஸ்தர்கள் இருக்காங்க.இதனால, ஆண்டுக்கு ரூ.80 கோடி ரூபாய் வரை அரசுக்கு நஷ்டம் ஏற்படுது. நான் முகவர்கள் பக்கத்தை மட்டும் சுட்டிக் காட்டியிருக்கேன். இன்னும், கொள்முதல் உள்ளிட்ட மற்ற இடங்களிலும் நிறைய நிர்வாகச் சீர்கேடுகள் இருக்கு. இதையெல்லாம் சரி செய்தாலே ஆவினால் அதிக லாபம் பார்க்க முடியும்.

கடந்த அதிமுக தேர்தல் அறிக்கைல ஜெயலலிதா ஒரு லிட்டர் ஆவின் பாலை ரூ.25க்கு தர்றேன்னு சொன்னார். ஆனா, செய்யலை. தனியார் பால் விலையைவிட ஆவின் பாலின் விலை குறைவுனு பெருமிதமா சொன்னாங்க. ஆனா, இன்னைக்கு தனியாரைவிட ஆவினின் விலை அதிகம். இனி, பொதுமக்கள் ஆவின் பால் வாங்குறதை குறைப்பாங்க. முகவர்களும் வருமானம் இல்லாததால் பாக்கெட் வாங்குவதை குறைக்கவோ புறக்கணிக்கவோ செய்வாங்க. தவிர, பால் தொடர்புடைய மற்ற பொருட்களின் விலையும் ஏறும்...’’ வேதனையுடன் சொல்கிறார் பொன்னுச்சாமி.

பால் உற்பத்தியாளராகவும், விற்பனையாளராகவும் இருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த சசிதரணி வேறொரு கருத்தை முன்வைக்கிறார். ‘‘ரொம்ப நாட்களுக்குப் பிறகு இப்ப கொள்முதல் விலை ஏறியிருப்பது சந்தோஷம். ஆனா, இது போதாது. எங்ககிட்ட நாலு மாடு இருக்கு. இதுக்கு மாசத்துக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகுது. பால் விற்பனைனு பார்த்தா லிட்டர் 40 ரூபாய்க்குக் கொடுக்குறோம். அதே சொசைட்டில கொடுத்தா லிட்டர் முப்பது ரூபாய்தான் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு மாட்டுல இருந்து சுமார் 12 லிட்டர் பால் கிடைக்குது. ஆக, நாலு மாடுகள் மூலம் மாசத்துக்கு ரூ.42,000 வரை வருமானம் கிடைக்கும்.

ஆனா, செலவு போக மாசம் பத்தாயிரம் ரூபாயே நிற்கும். அதனால, கணக்குப் பார்த்தா வருமானம்னு எதுவுமே மிஞ்சாது. இப்படிதான் ஒரு பால் உற்பத்தி செய்கிற விவசாயியின் வாழ்க்கை போகுது.  விவசாயம், ஆடு, மாடுகள்னு பழகிட்டதால வேறு தொழிலுக்கும் எங்களால போக முடியலை. இப்ப இந்த நான்கு ரூபாய் ஏத்துறதால லாபம் இல்லை. ஆனா, சுமை கொஞ்சம் குறையும்...’’ என்கிறார் சசிதரணி.  நிறைவாக, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலப் பொருளாளரான சங்கர், ‘‘கடந்த ஐந்தாண்டுகளாக பால் விலையை உயர்த்தணும்னு கோரிக்கை வச்சிட்டு இருக்கோம்.

2014ல் கொள்முதல் விலையை ரூ.23ல இருந்து ரூ.28 ஆக ஏத்தினாங்க. அப்புறம், 2015ல் இருந்து மறுபடியும் போராடினோம். இப்ப, பத்து ரூபாய் ஏற்றச் சொல்லிக் கேட்டோம். ஆனா, பசுமாட்டுப் பால் 4 ரூபாயும், எருமை மாட்டுப்பால் 6 ரூபாயும் உயர்த்தியிருக்காங்க. இதுல எருமை மாட்டுப் பால் வரத்து ரொம்ப குறைவு. அதுக்கு ஏன் இவ்வளவு விலை உயர்வுனு தெரியல. தமிழகம் முழுவதும் மொத்தம் 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்றாங்க. இதுல 5 லட்சம் லிட்டர் பவுடரா மாறுது. இந்தப் பால் பவுடர் விற்பனை சரியாகப் போகல.

இந்த நஷ்டக் கணக்கை சமாளிக்க விற்பனை விலையை அதிகரிக்கறாங்க. கொள்முதல் செய்த பாலினை பவுடரா மாத்தாம முறையா வித்தாலே நஷ்டம் ஏற்படாது. 32 ரூபாய்க்கு வாங்குற பாலை மக்களுக்கு 35 ரூபாய்க்கு விற்கலாம். ஆனா, அரசு இதை எதையும் செய்றதில்ல. விற்பனையை அதிகரிக்க ஆவின் அதிகாரிகள் யாரும் களத்துல இறங்கறதேயில்ல. ஆனா, தனியார் நிறுவனங்கள் ரொம்ப வேகமா செயல்படறாங்க. எந்தத் தனியார் கம்பெனியும் 32 ரூபாய்க்கு கொள்முதல் செய்து 46 ரூபாய்க்கு விற்கல. ஆனா, அரசு இதை செய்யுது.இப்ப நாங்க குறைஞ்சது 35 ரூபாயாவது கொள்முதல் விலையை ஏற்றச் சொல்லி கேட்கறோம். அதாவது, ஏழு ரூபாய் கூட்டினால்தான் எங்க சுமை குறையும்!’’ என்கிறார் சங்கர்.

 பேராச்சி கண்ணன்