சமூக நீதியா? சம நீதியா? பராசக்தி to நேர்கொண்ட பார்வை



‘‘சினிமா சமூக மாற்றங்களை உருவாக்குமா எனத் தெரியாது. ஆனால், சமூக விழிப்புணர்வுக்கு சினிமா ஒரு வாகனமாக இருந்து செயலாற்றும் என்பது உறுதி. இதோ இந்த உலகம் உள்ளது. இதில் இன்னின்ன சந்தர்ப்பங்கள் உள்ளன என கூறப்பட வேண்டும். படங்கள் அனுபவங்களைத் தரவேண்டும். வாழ்க்கையின் ஊடாக பிரவேசித்து உணர்ச்சிகளையோ அல்லது அறிவையோ தரவேண்டும்...’’ என ஆழப் பதிகிற விதத்தில் சொன்னார் இயக்குநர் ஷ்யாம் பெனகல். இதுதான் உண்மை. தமிழ் சினிமாவில் சமூக நீதியின் மீதான பார்வை அடிக்கடி மறுபரிசீலனைக்கு வந்துகொண்டேயிருக்கிறது.

‘மெட்ராஸ்’, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்கள் சில அடிப்படைகளைத் துல்லியமாக ப்பேச முயன்றன. சமூக நீதியை தமிழ் சினிமாவில் முனைப்போடு கொண்டுவரவேண்டுமென்பது படைப்பாளிகள் பலருக்கும் விருப்பம். சகல ஆசைகளும், சகல மீறல்களும் உள்ளவனே மனிதன். நம் எதிர்பார்ப்பு சிமிழுக்குள் அவன் அடங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு வன்முறை. அப்படிப்பட்ட மக்களுக்கு சினிமாவில் நல்லதை லாவகமாக மட்டுமே சொல்ல முடியும். கடந்த காலங்களில் அதற்கான புரிதல்கள் நடந்திருக்கின்றன.

அதற்கான விஷயங்கள் தமிழ் சினிமாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆண் - பெண் உறவுச்சிக்கலில் சில புரிதல்களை ‘நேர்கொண்ட பார்வை’ சமீபத்தில் வழிமொழிந்திருக்கிறது. சமூக நீதியோ, சம நீதியோ தமிழ் சினிமாவில் ‘பராசக்தி’ தொட்டு ‘நேர்கொண்ட பார்வை’ காலம் வரை எந்த விதமான மாற்றங்களைப் பதிவு செய்திருக்கிறது..? அறிய சில ஆளுமைகளையும் சம்பந்தப்பட்டவர்களையும் அணுகினோம். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ‘‘சமூக நீதிக்கான குரலின் முக்கியத்துவத்தை எழுத்தாளர்களும், கலைஞர்களும், சமூகப்போராளிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் அரிதாகவே சமூக நீதி குறித்த கவனமும் உரையாடலும் உருவாகிறது. அப்போது கூடப் பெரிய கதாநாயகர்களின் வழியாகவே இக்கருத்துகள் பேசப்படுகின்றன. கருத்தியல் என்ற அளவில் இவை மக்களைச் போய்ச் சென்றடையும் என்றபோதும் ஆழ்ந்த பாதிப்பினை உருவாக்குமா என்றால் அது கேள்விக்குறியே. திராவிட இயக்கம் தன் கொள்கைகளை முன்னிலைப்படுத்தித் திரைப்படங்களை உருவாக்கிய போது அதில் சமூக நீதிக்கான கருத்துகள் அழுத்தமாக வெளிப்பட்டன. அதன் சிறந்த உதாரணம் ‘பராசக்தி’.

சமூக மாற்றத்தை நோக்கி தமிழக மக்களைப் ‘பராசக்தி’ தூண்டியது என்பதே நிஜம்.கேரளத்தில், வங்கத்தில் உள்ளது போல தமிழில் அரசியல் சினிமா இல்லை. அரசியல்வாதிகளை விமர்சனம் செய்யும் திரைப்படங்களை அரசியல் சினிமா எனக் கூற முடியாது. அதிகாரத்தைக் கேள்வி கேட்கும், சமூகப் பிரச்னைகளின் வேர்களைக் கண்டறிந்து உண்மையை வெளிப்படுத்தும், அரசியலின் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் அரசியல் திரைப்படங்களின் தேவை இன்று அதிகமுள்ளது. தமிழ் சினிமா அதை நோக்கி நகர வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில்தான் வெளிப்படையாகப் பெண்ணுரிமை, தலித் அரசியல், புரையோடிப்போன கல்விச் சூழல், விவசாயிகளின் தற்கொலை உள்ளிட்ட பிரச்னைகள் தமிழ் சினிமாவில் இடம்பெறத் துவங்கியுள்ளன. இதை வரவேற்கலாம். ஆனால், இவை மேலோட்டமாக பிரச்னைகளைப் பேசினவே தவிர, அழுத்தமாக சுட்டிக்காட்டவில்லை.சில ஆண்டுகளுக்கு முன்னால் மராத்தியில் வெளியான ‘ஃபேன்ட்ரி’, ‘கோர்ட்’ போன்ற படங்களுக்கு நிகராக தமிழில் திரைப்படங்கள் உருவாகவில்லை.

சமீபத்தில் இந்தியில் வெளியான ‘ஆர்ட்டிகள் 15’ நேரடியாக சமகால அரசியலை, சாதிய ஒடுக்குமுறையை, பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பேசுகிறது. இதுபோன்ற துணிச்சலான முயற்சிகள் தமிழில் வரவேண்டும்...’’ என தெளிவாகக் கூறுகிறார்.இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும் விதம் வேறுவித சிந்தனைக்கு நம்மை அழைக்கிறது. ‘‘தமிழ் சினிமாவில் சமூக நீதி பேசப்பட்டிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால்… இன்னும் சமநீதியே பேசப்படவில்லை என்பது தெளிவாகிறது. சமநீதி என்பது சக பெண்பாலருக்கு நம் சமூகத்தில் சமமாக இருக்க கொடுக்க வேண்டிய இடம்.

‘பராசக்தி’ தொடங்கி ‘நேர்கொண்ட பார்வை’ வரை பேசினால், பெண்களுக்கு ஏன் இந்த அநீதி இழைக்கப்படுகிறது என யோசித்தால் கடைசியாக ‘விதி’ என்கிற படம்தான் முப்பது வருஷங்களுக்கு முன்னால் பேசியது. அந்த ‘விதி’யிலும் மிகப்பெரிய கற்புக்கரசி, ஒழுக்கமாக வாழ்ந்த ஒருத்தி காதலனுக்காக தன்னை ஒப்புக்கொடுத்தாள். அவளுக்கு அநீதி இழைக்கப்பட்டது. அதற்கு கற்புக்கரசியாகப் போராடுவதுதான் இதற்கு முன்னாடி இருந்திருக்கு. அதைவிட ‘நேர்கொண்ட பார்வை’ ஒருபடி மேலே ஏறி வந்ததற்குக் காரணம் அது தமிழில் சிந்திக்கப்பட்டது இல்லை.

இந்தியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், இப்போது அதுதான் சரி. அப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணுக்கு சமநீதி கிடைத்தால் சமூக நீதி பின்னால் வரக்கூடும். ‘பரியேறும் பெருமாள்’ பேசியிருக்கே என்றால் அது பிரசாரம் கூடுதலாக இருக்கிற விஷயமாக வந்திருக்கு. சாதிப் பெருமையைப் பேசுகிற படங்கள் இதற்கு முன்னால் இயல்பான தோற்றத்தோட வந்திருக்கு. ஆனால், சாதி மறுப்பைப் பேசின படம் பிரசாரத் தொனியில்தான் வந்திருக்கு. முதலில் பெண்ணுக்கான சமநீதி சொல்லுகிற படங்கள் அதிகமாக வெளிவரணும்.

அதற்கான வழிமுறைகளைப் பார்க்கணும். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு...’’ என்கிறார்.‘நேர்கொண்ட பார்வை’ கொண்ட சாராம்சம், அதை தமிழில் கொண்டு வருவதற்கான உத்வேகம் பற்றி இயக்குநர் ஹெச்.வினோத்திடம் கேட்டோம்.‘‘ரொம்ப நாளாகவே பெண்கள் இதைச் செய்யணும், செய்யக்கூடாதுன்னு சில விஷயங்கள் இருக்கு. பெண்கள் நிறையப் படிச்சு சிந்திக்கிறாங்க. வேலைக்குப் போய் சமமா சிந்திக்கிறவங்களைப் பார்க்கிறாங்க. இன்னும் அவர்கள் தாமதமாக வந்தால் விசாரணை செய்வது, சிரித்துப்பேசினால் திட்டுவது, ஆண்களோடு சகஜமாகப் பேசினால் ‘அயிட்டம்’ என்பதெல்லாம் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

இந்தப் படத்தோட விஷயமே ஒரு பெண்ணோட ஒப்புதல் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பதுதான். அந்தப்பெண் எப்படிப்பட்டவராகவும் இருந்து விட்டுப் போகட்டும். சரி, தப்பு அவங்க பிரச்னை. கோர்ட்டுக்கு குற்றம் நடந்ததா, இல்லையா என்று சொல்கிற வேலைதான். இதில் பொதுப்புத்தியின் அடிப்படையில், யூகங்களின் அடிப்படையில் ஒரு குற்றம் சாட்டுகிறார்கள். பப்ளிக் பிராசிக்யூட்டர் கேட்கத் தயங்கும் கேள்விகளையே ஹீரோ கேட்கிறார். தொடர்ச்சியெல்லாம் படம் பார்த்தவர்கள் அறிந்ததுதான்.இங்கே பெண் புனிதர் ஆக்கப்படுவதும், கடவுள் ஆக்குப்படுவதும் என எதுவுமே வேண்டாம்.

ெபண், பெண்ணாக இருந்தாலே போதும். நீங்கள் அனுபவிக்கிற அதே சுதந்திரங்கள் பெண்ணுக்கும் வேணும். நீ ஒண்ணு செய்யும்போது அது சரி, அதையே அந்தப் பொண்ணு பண்ணும்போது தப்புன்னு சொல்றது தப்பு. நீங்க பண்ணும்போது தப்புன்னா, அந்தப்பொண்ணு பண்ணினாலும் தப்பு. இங்கே சாதிக்கு சமூகநீதி பேசுகிற மாதிரி, பெண்களுக்கும் அவசியம் பேசணும். அதை அறிவு சார்ந்த ஊடகமும், எழுத்தாளர்களும் விவாதிக்கணும். சினிமாவும் இதை உரக்கப் பேசணும். இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ... இதுதான் அடுத்த ஜெனரேஷன். இனி இப்படித்தான் நடக்கும்.

‘No means No’னு புரிஞ்சுக்கிட்டு அதைப் பின்பற்றணும். இதுதான் சரி. தொடர்ந்து பெண்களை ஏமாத்தி அடிமையாக வைச்சிருக்கிறது இனிமேல் நடக்காது. இதை பெண்களும் புரிஞ்சிக்க ஆரம்பிக்கணும்...’’ என்கிறார்.நிலைமைகள் மாறுகின்றன. புனிதங்கள் கரையேறு கின்றன. சமூக நீதியும், சம நீதியும் கிடைக்கிற காலத்திற்கான விடியல்கள் தென்படுகின்றன. ‘மெட்ராஸ்’, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்கள் சில அடிப்படைகளைத் துல்லியமாகப் பேச முன்றன. சமூக நீதியை தமிழ் சினிமாவில் முனைப்போடு கொண்டு வரவேண்டுமென்பது படைப்பாளிகள் பலருக்கும் விருப்பம்.

உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ... இதுதான் அடுத்த ஜெனரேஷன். இனி இப்படித்தான் நடக்கும். ‘No means No’னு புரிஞ்சுக்கிட்டு அதைப் பின்பற்றணும். இதுதான் சரி. தொடர்ந்து பெண்களை ஏமாத்தி அடிமையாக வைச்சிருக்கிறது இனிமேல் நடக்காது. கடந்த பத்தாண்டுகளில்தான் வெளிப்படையாகப் பெண்ணுரிமை, தலித் அரசியல், புரையோடிப்போன கல்விச் சூழல், விவசாயிகளின் தற்கொலை உள்ளிட்ட பிரச்னைகள் தமிழ் சினிமாவில் இடம்பெறத் துவங்கியுள்ளன.

நா.கதிர்வேலன்