சகல நோய்களையும் தீர்க்கும் உத்தமர்!சகல நோய்களையும் தீர்க்கும் உத்தமர்!



*கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள் : 25

ஹிருத்தாப நாசினி குளக்கரையில் சாலிஹோத்திர முனிவர் தவத்தில் இருந்தார். அவரது இதழ்கள் சதா நாராயண நாமத்தை ஜபித்தபடியே இருந்தன. அவரது தவ வலிமையால் அவர் ஞான சூரியனைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த தை அமாவாசையில் அங்கு வந்து சேர்ந்தவர் அவர். ஹிருத்தாபநாசினி குளத்தின் மகிமையை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தவுடன் அங்கேயே தங்கி தவம் புரிய ஆரம்பித்து விட்டார். அன்று முதல் இன்று வரை இரண்டு ஆண்டுகளாக, உணவையும் நீரையும் அறவே ஒதுக்கி அருந்தவம் செய்கிறார்.

இடையில், சென்ற ஆண்டு தை அமாவாசையன்று தவம் கலைத்து கண்விழித்தார். தான், உண்பதற்காக அருகில் இருந்தவர்களிடம் பிட்சை எடுத்து உணவு சமைத்தார். ஆனால், வயதான ஒருவர் பசி என்று கேட்கவே, தான் வைத்திருந்த அனைத்து உணவையும் அவருக்கே அளித்துவிட்டு மீண்டும்  தவத்தில் ஆழ்ந்துவிட்டார். ஒரு வருடம் ஒரு நொடி போல ஓடிவிட்டது. அடுத்த தை அமாவாசையும் வந்துவிட்டது.

மெல்ல அந்த முனிபுங்கவர் கண்களைத் திறந்தார். உணவைத்துறந்து தவமியற்றிய களைப்போ சோர்வோ அவரிடம் தென்படவே இல்லை. கம்பீரமாக நடந்து சென்று பிட்சை வாங்கி உணவை சமைத்து முடித்தார். மனதால் கோவிந்தனை பிரார்த்தனை செய்து அவனுக்கு, தான் சமைத்த உணவை நிவேதனம் செய்தார். முன்பெல்லாம் ஒரு அதிதிக்கு விருந்தளித்துவிட்டே உண்பார்கள். முனிவரும் அதன்படி அதிதிக்காக காத்திருந்தார். அப்போது, ‘‘சுவாமி! பசி காதை அடைக்கிறது. உண்பதற்கு சிறிதளவு உணவு கிடைக்குமா? தங்கள் வம்சமே நீடூழி வாழும் சுவாமி!’’ என்ற குரல் கேட்டது.

குரல் வந்த திக்கை நோக்கி முனிவர் திரும்பினார். அங்கு முதுமையால் உடல் தள்ளாடியபடி வயதான ஒருவர் நின்று கொண்டிருந்தார். கண்களில் அசாத்திய தேஜஸ். நெற்றியில் கோபி சந்தனம் மின்னியது. கருநீல நிறத்தில் இருந்த அவரது தேகம் நீலமணி மலையைப் போல மிளிர்ந்தது. அந்த முதியவரைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் சாலிஹோத்திரரின் கண்கள் விரிந்தன. ‘‘சுவாமி! நீங்கள்தானே சென்ற வருடமும் இதே தை அமாவாசையில் என்னிடம் வந்து உணவருந்தியது? தாங்கள் அன்று வயிறார உண்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி இன்னமும் என் மனதிலிருந்து நீங்கவில்லை...’’

‘‘அந்த நிகழ்வு தங்களுக்கு இன்னமும் நினைவில் உள்ளதா? மிக்க மகிழ்ச்சி! வருடா வருடம் தை அமாவாசையன்று இந்தக் குளத்தில் நான் நீராடுவது வழக்கம். அப்படி நீராட வந்த எனக்கு சென்ற வருடமும் நீங்கள்தான் உணவளித்தீர்கள். இந்த வருடமும் நீங்கள்தான் உணவளிக்கப் போகிறீர்கள். தங்களைப் போன்ற ஒரு மாமுனிவரிடம் உண்பது மாபெரும் பாக்கியம் அல்லவா?’’ என்றபடி அந்த முதியவர் புன்னகைத்தார்.சாலிஹோத்திர முனிவர் சற்றும் தாமதிக்காமல் அந்த முதியவரை ஆசனத்தில் அமர வைத்தார். தலைவாழை இலை பரப்பி, அதில், தான் சமைத்த எளிமையான உணவை  குறையாத அன்போடு பரிமாறினார். அந்த முதியவர் அமுதத்தைக் கண்டது போல் மகிழ்ந்து அந்த உணவை அள்ளி அள்ளி விழுங்கினார். ‘‘அன்பரே! தாங்கள் எனக்கு அளித்தது போல் சுவையான உணவை இதற்கு முன் நான் எங்குமே சாப்பிட்டதில்லை. அதன் சுவை எனது நாவில் ஒட்டிக்கொண்டது. கருணை கூர்ந்து மேலும் சற்று பரிமாறுங்கள்...’’
 
‘‘தாராளமாக! நீங்கள் எவ்வளவு வேண்டுமோ உண்ணலாம். சங்கோஜம் இல்லாமல் கேட்டு வாங்கி உண்ணுங்கள். இதை தங்களது இல்லம் போல பாவியுங்கள்...’’ என்றபடி  சாலிஹோத்திர முனிவர் சற்றும் முகம் சுளிக்காமல் இன்முகத்தோடு, தான் சமைத்திருந்த மொத்த உணவையும் - சென்ற வருடம் அளித்தது போல இந்த வருடமும் - அவருக்கு அளித்து விட்டார். ‘‘முனிவரே! தங்கள் கருணையால் வயிறார உண்டேன். மிக்க மகிழ்ச்சி. வெகு தூரம் நடந்து வந்த களைப்பு... ஓய்வெடுக்க விரும்புகிறேன். தங்களது இல்லத்தில் எவ்வுள்ளில் (எந்த இடத்தில்) நான் ஓய்வெடுக்கலாம்?’’ கேட்டார் அந்த முதியவர்.‘‘இந்த ஏழையின் இல்லத்தை தங்களது இல்லத்தை போல பாவியுங்கள். இதோ இவ்வுள்ளிலேயே (இந்த இடத்திலேயே) சயனிக்கலாம்...’’ என்று சாலிஹோத்திர முனிவர் சொன்னதுதான் தாமதம்.

எங்கிருந்தோ ஓர் ஆயிரம் தலை நாகம் வந்து அந்த இடத்தில் சுருண்டு ஒரு படுக்கையைப் போல படுத்துக் கொண்டது!அந்த முதியவர் ஒரு மர்மப் புன்னகைப் பூத்தார். அந்த ஆயிரம் தலை நாகம் மீது சற்றும் பயமில்லாமல் சென்று சயனித்தார். சாலிஹோத்திர முனிவருக்கு, தான் காண்பது கனவா இல்லை நனவா என்றே புரியவில்லை. இரு கைகளாலும் தனது கண்களைக் கசக்கிக் கொண்டார். மீண்டும் அவர் அந்த முதியவரைப் பார்த்தபோது அங்கு முதியவர் இல்லை! சங்கு சக்கரத்தை கையில் ஏந்தியபடி சாட்சாத் அந்த பரந்தாமன் அவருக்கு சேவை சாதித்த வண்ணம் இருந்தார்!ஒய்யாரமாக அவர் அந்த ஆதிசேஷன் மீது சயனித்திருந்த விதமே மனதை கொள்ளையடித்தது. ஆதிசேஷன் என்னும் சிப்பியில் துயிலும் முத்தைப் போல இருந்தார் நம்பெருமான்.

அவரது திருக்கரங்களில் ஒன்று ஞான முத்திரை காட்டி, மெய்ஞானத்தை உபதேசித்துக் கொண்டிருந்தது. உபதேசம் பெறுவது வேறு யாருமில்லை, அவரது திரு உந்தித்தாமரையில் இருக்கும் பிரம்மன்தான்!பல கோடி ஆண்டுகள் தவம் செய்தாலும் பெற முடியாத பிரம்ம ஞானத்தை நொடியில், ஞான முத்திரை காட்டி உணர்த்திய கேசவனின் கருணையை எண்ணி நான்முகன் வியந்தார். உடன் தனது எட்டு கரங்களையும் பக்தியோடு குவித்தார். பக்தியின் பெருக்கால் அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. பிரம்மன் தனக்குக் கிடைத்த உபதேசத்தால் மகிழ்ந்தவண்ணம் இருக்க... சாலிஹோத்திர முனிவர் தனக்குக் கிடைத்த காட்சியை எண்ணி புல்லரித்துப் போனார். மெய்ப்பொருளான ஆதிமூலனுக்கும் அவரது கருணைக்கும் மண்டியிட்டார்.

அவரது பரவச நிலையைக் கண்ட மதுசூதனன், தானும் பரவசம் அடைந்தார். ‘‘அன்பனே சாலிஹோத்திரா! உன் தவமும் ஜீவகாருண்யமும் என்னை மயக்கிவிட்டது. தன்னலம் பாராத உன் கருணை உள்ளத்திற்கு இந்த வையகத்தையே விலையாகத் தரலாம். இந்த உன் குணம் உன்னை பிரம்மனை விட உயர்ந்தவனாக மாற்றிவிட்டது. ஆகவே, அந்த நான்முகனுக்கு வெறும் மவுன உபதேசம் மட்டும்தான். உனக்கோ இதோ ஸ்பரிச தீட்சையே தருகிறேன்...’’ என்றபடி தனது பொற்கரத்தை முனிவரின் சிரத்தில் வைத்தார் அந்த மாயவன். முனிவருக்கோ அவரது திருக்கரங்கள் பஞ்சுப் பொதி போல மென்மையாகவும் பனிக்கட்டியைப் போல இதமாகவும் இருந்தது.

இந்த தளிர்க்கரங்கள் எப்படி மது, முரன், நரகன், இராவணன், கம்சன்... என பல கொடிய அசுரர்களை மாய்த்தது என்று வியந்தார். அவரது பொற்கரங்கள் பட்டவுடனே அனைத்து இன்பமும் ஞானமும் முனிவர் அடைந்தார் என்பதை சொல்லவும் வேண்டுமா? முனிவரின் இன்பத்தை இன்னும் பன்மடங்காக்க மாதவன் மலர் வாய் திறந்து பேசினார்.‘‘அப்பனே! சாலிஹோத்திரா! நான் எவ்வுள்ளில் கிடப்பது என்று உன்னிடம் கேட்டு பின் இந்த இடத்தில் சயனித்ததால் இந்த இடம் இனி ‘திரு எவ்வுள்ளூர்’ என்று பக்தர்களால் அன்போடு அழைப்படும்! காலம் உள்ளவரை உனக்கு அருளிய இந்த கோலத்துடன் அடியவர்களுக்கு என்றும் சேவை சாதிப்பேன்.

தை அமாவாசையன்று என்னை வந்து சேவிப்பவர்கள் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபடுவார்கள். மனிதர்கள் இந்த திவ்ய தேசத்தில் இருக்கும் என்னைக் கண்ட மாத்திரத்தில் அல்லது இங்கிருக்கும் என்னை நினைத்த மாத்திரத்தில் அனைத்து நோயிலிருந்தும் குணமாவார்கள். பிறவிப் பிணிக்கும் பிறந்த பின் வரும் பிணிக்கும் அருமருந்தாக இங்கு நான் கோயில் கொள்ளப் போகிறேன். இவை அனைத்திற்கும் காரணமாக இருந்த நீ வாழ்க. ஆசிகள்!’’ ‘‘இப்படி சாலிஹோத்திர முனிவருக்கு அருள் பண்ண வந்தவர்தான் திருவள்ளூர் வீரராகவ பெருமாள்! திரு எவ்வுள்ளூர் என்ற பேருதான் காலப்போக்குல திருவள்ளூர்னு ஆகிடுச்சு...’’ சொல்லி முடித்த நாகராஜனின் கண்களில் நீர்த் துளிகள். ‘‘அப்ப சாமிய அடைய பெரிய பூஜையோ புனஸ்காரமோ பண்ணத் தேவையில்ல. நம்ம சக மனிதர்கள் கிட்ட உதவியா நடந்துக்கிட்டாலே போதும். பெருமாள் தானாவே நம்மைத் தேடி வந்து அருள் செய்வார். சரிதானே தாத்தா?’’ அருகில் வந்து கண்ணன் கேட்டான்.

அவனை அள்ளி அணைத்தபடி, ‘‘சரியா சொல்லிட்ட கண்ணா...’’ என்றார் நாகராஜன். இதையெல்லாம் பார்த்த கமலா, வயிற்றுவலியை மறந்து தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தையை தட்டிக் கொடுத்தபடியே, ‘‘மாமா! பெருமாள் இருந்தா தாயாரும் இருப்பாங்களே... திருவள்ளூர்ல யாரு மாமா தாயார்?’’ என்று கேட்டாள்.தொண்டை நாடு. செல்வச் செழிப்புக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. மக்கள் அனைவரும் ஆனந்த வெள்ளத்தில் நீந்தியபடியே வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்தனைக்கும் காரணம் அந்த நாட்டின் மன்னனான தர்மசேனனின் மகள் வசுமதிதான். அவள் வந்தபின்புதான் இத்தனை செழிப்பும் வந்தது. அரசனும் அரசியும் அவள் மீது உயிரையே வைத்திருந்தனர். அதனால்தானோ என்னவோ வசுமதி யாரைக் கை காட்டினாலும் அவனையே அவளுக்கு மணம்முடித்து வைப்பதாக மன்னன் அறிவித்து விட்டான்! (கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்