தம்பி வேலைக்கு போய் கஷ்டப்பட்டதால நான் ஈஸியா இயக்குநர் ஆனேன்!



‘‘தமிழ் சினிமாவில் முறைப்பும் விறைப்புமான போலீஸ்னா பொதுவா ஹீரோக்களைத்தான் சொல்லுவோம். அந்தளவுக்கு அத்தனை கதாநாயகர்களுமே போலீஸா நடிச்சிருக்காங்க. ‘சிங்கம்’ போலீஸ் மாதிரி ஹீரோயின்கள்ல யாரை சொல்லலாம்னு யோசிச்சா, சட்டுனு யாரும் மைண்ட்ல வர மாட்டாங்க. அந்த நிலைமை இந்தப் படத்துக்குப் பிறகு மாறும்!

ஏன்னா, வரலட்சுமியை போலீஸ் கெட்டப்பில் பார்த்ததும், அவ்வளவு பர்ஃபெக்ட் லுக்ல அசத்தினாங்க. இங்க எமோஷனல் க்ரைம் த்ரில்லர் படங்கள்னாலே அது நகரத்துல நடக்கற கதையாகத்தான் வரிசைகட்டி வந்திருக்கு. ‘அஞ்சாதே’ மாதிரி ஒருசில படங்கள்தான் கிராமத்து பின்னணியில் உள்ள க்ரைம் ஜானரா கலக்கியிருக்கு. அந்த ரூட்டில் எங்க படமும் இருக்கும்...’’ நம்பிக்கையாக பேசுகிறார் ல.சி.சந்தானமூர்த்தி. வரலட்சுமியை  மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘டேனி’ படத்தின் அறிமுக இயக்குநர். ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் சீடர்.

‘‘இன்னிக்கு உங்க முன்னாடி ஓர் இயக்குநரா நான் நிற்க என் குடும்பத்தினரும், நண்பர்களும், ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா சாரும்தான் காரணம். அதர்வாவின் ‘சண்டி வீரன்’ படத்துலதான் பி.ஜி.முத்தையா சாரை சந்திச்சேன். அதுல அவர் கேமராமேன். நான் சற்குணம் சாரோட அசோசியேட். அப்புறம், பி.ஜி.முத்தையா சார் ‘ராஜா மந்திரி’ தயாரிச்சப்ப அதுல கோ - டைரக்டரா ஒர்க் பண்ற வாய்ப்பை கொடுத்தார். அவர் இயக்கின ‘மதுரை வீரன்’லயும் வேலை பார்த்தேன். ‘டேனி’க்கு முன்னாடி நான் வேறொரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியிருந்தேன்.

பல ஹீரோக்களுக்கும் அந்த ஸ்கிரிப்ட்டை சொல்ல முயற்சி பண்ணியிருக்கேன். ஒரு நல்ல கதையை காது கொடுத்து கேட்க எந்த ஹீரோவும் ரெடியா இல்ல. ஒருநாள் முத்தையா சாரை பார்த்தேன். என் போராட்டங்களை விசாரிச்சதோடு, என் கதை மீதும் அவர் நம்பிக்கை வச்சார். ‘இதை நானே தயாரிக்கறேன்’னு சொல்லி திரைக்கதையிலும் சேர்ந்து ஒர்க் பண்ணிக் கொடுத்தார். ஸ்கிரிப்ட் எழுதறதுல எனக்கு அனுபவம் குறைவு. அவர் பல வருஷ அனுபவசாலி. இந்தப் படத்துக்கு அவர் தயாரிப்பாளர் மட்டுமில்ல... என் குருவும்தான்...’’ தழுதழுக்கிறார் சந்தானமூர்த்தி.

யாரு அந்த ‘டேனி’?

போலீஸ் இன்ஸ்பெக்டரான வரலட்சுமியின் ஸ்டேஷனில் உள்ள மொப்ப நாய்தான் ‘டேனி’. வரூவின் கண்ட்ரோல்ல உள்ள ஒரு கிராமத்துல ஒரு க்ரைம் நடக்குது. அதுக்கு காரணமானவங்க யாருனு அவரால துப்பறிஞ்சு கண்டுபிடிக்க முடிஞ்சுதா என்பதை எமோஷனல் க்ரைமா சொல்லியிருக்கேன். இதை தஞ்சாவூர் வாழ்வியல்ல ஒரு க்ரைம் படம்னு சொல்லலாம். பெண்ணின் பாயிண்ட் ஆஃப் வியூவ்ல கதை இருக்கும். தஞ்சையின் சுற்றுவட்டார ஏரியாவில் நடக்கற கதை. அதனால அங்கயே படப்பிடிப்பும் நடத்தியிருக்கோம். அந்த ஸ்லாங் டயலாக்குகளை என்னுடன் சேர்ந்து பாரதிதம்பி எழுதியிருக்கார்.

வரலட்சுமி தவிர அனிதா சம்பத், வேல.ராமமூர்த்தி, சாயாஜி ஷிண்டே, ‘களவாணி 2’ வில்லன் துரை.சுதாகர், மதுரை ரமேஷ், ‘நான் மகான் அல்ல’ வினோத்னு பலரும் நடிச்சிருக்காங்க. ஒளிப்பதிவை ஆனந்தகுமார் செய்திருக்கார். இவர், பி.ஜி.எம்.சாரோட அசோசியேட். சந்தோஷ் தயாநிதி ரெண்டு பாடல்கள் இசையமைச்சிருக்கார். பின்னணி இசையை சாய்கார்த்தி பண்ணியிருக்கார். ‘அடி கருப்பு நிறத்தழகி..’ தனிக்கொடி இதுல பாடல்களை எழுதியிருக்கார். ‘லிசா’ எஸ்.என்.பாசில் எடிட்டிங்கை கவனிக்கறார்.

என்ன சொல்றார் வரூ..?

படத்துல அவங்க கேரக்டர் பெயர் குந்தவை. நல்ல மனுஷி. ஒரு ஆக்ட்ரஸ்னு அவங்கள சிம்பிளா சொல்லிட முடியாது. ஸ்கிரிப்ட் நாலேஜ், டைரக்‌ஷன்னு அத்தனை ஏரியாக்கள்லயும் பிச்சு உதறுறாங்க. இயக்குநர் அவதாரம் எடுத்தாலும் அதில் ஆச்சரியமில்ல. சக மனிதர்களோடு அவ்ளோ எளிதா பழகுறாங்க. படப்பிடிப்பு நடந்த தஞ்சாவூர் பகுதி மக்கள்கிட்ட நல்லா பழகினாங்க. ஒருநாள்ல முப்பது தடவையாவது ‘சாப்ட்டீங்களா’னு அக்கறையா விசாரிப்பாங்க. ஸ்பாட்டுல ஒருநாள் எனக்கு உடம்பு சரியில்லாமப் போயிடுச்சு. இதைக் கேள்விப்பட்டு எனக்கு மருந்து மாத்திரையெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. ‘ஹெல்த்தை பார்த்துக்குங்க சார்’ம்பாங்க. ஒவ்வொரு ஷெட்யூல் ஷூட் முடியும் நாள்லயும் அத்தனை பேருக்கும் மட்டன் பிரியாணி ஆர்டர் பண்ணிடுவாங்க. மறுபடியும் அவங்களோட படம் ஒர்க் பண்ணணும்னு தோண வைச்சிடுவாங்க.

உங்களைப் பத்தி சொல்லுங்க..?

என்னைப் பத்தி சொல்றதை விட, என் குடும்பத்தைப் பத்தி நிறைய சொல்ல விரும்பறேன். எங்க பூர்வீகம் பட்டுக்கோட்டை பக்கம் அத்திவெட்டி. விவசாயக் கிராமம். சின்ன வயசுலயே அப்பா கிடையாது. அம்மா லலிதா, பாட்டி லட்சுமி, என் தம்பி வீரபோஸ் இவங்கதான் என்னை வளர்த்தாங்க. எனக்கு விபரம் தெரிஞ்ச வயசுல இருந்து இலக்கியங்கள்ல ஆழமான ஈடுபாடு. அந்த பார்வை ஒரு பண்பாட்டுத் தளத்தை நோக்கி நகர்த்த ஆரம்பிச்சது. என் குடும்பத்திலேயே முதல் தலைமுறை சினிமாக்காரன் நான்தான். ‘உன்னால இயக்குநரா வர முடியும்’னு சொல்லி என்னை என் குடும்பம் சென்னைக்கு அனுப்பி வச்சாலும் இன்ஜினீியரான என் தம்பிதான் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து என்னை பார்த்துக்கிட்டான்!அவன் வெளிநாட்டுக்கு வேலைக்குப்போய் எனக்கு பணம் அனுப்பி வச்சான். நான் சோர்ந்த நேரங்கள்ல எல்லாம் எனக்கு தோள் கொடுத்தவனும் அவன்தான். அவன் இல்லேனா நான் இயக்குநராகியிருக்க முடியாது.

என் மனைவி மேகலா, என் குழந்தைகள் மகிழினி - பூவிளம்,என் தம்பியின் மனைவி, அவன் குழந்தைகள்னு அத்தனை பேருமே ‘சீக்கிரமே நான் இயக்குநராகிடணும்’னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டே இருந்தாங்க.என்னை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தினவங்க ஊடக நண்பர்கள்தான். இதுக்கு முன்னாடி நான் பத்திரிகை, சேனல்கள்ல வேலை பார்த்திருக்கேன். என்னைச் சுத்தியுள்ள ஊடக நண்பர்களாலதான் சினிமாவுல என்னால தாக்குப் பிடிக்க முடிஞ்சிருக்கு. நான் டைரக்டர் ஆனதுல அம்மாவுக்கு சந்தோஷம்.

ஊர் மக்களும் என்னை பெருமையா பார்க்கறாங்க. ‘இவன் வேலைவெட்டிக்கே போகாம சினிமா சினிமானு சுத்துறானே... இவன் உதவாக்கரையாச்சே...’னு என்னை ஏளனம் பண்ணி உதாசீனப்படுத்தினவங்க கூட ‘சென்னைக்குப் போய் சாதிச்சிட்டீயப்பா’னு சொல்லி அன்புமழை பொழியறாங்க. சந்தோஷமா இருக்கு. அவங்க எல்லோர் நம்பிக்கையையும் காப்பாத்துற மாதிரி ஒரு படம் பண்ணிட்டேன். இந்த ‘டேனி’ உங்களுக்கும் பிடிச்ச ஒரு படமா இருக்கும்னு நம்புறேன்!

* மை.பாரதிராஜா