மலை போல் குவியும் குப்பைகளை என்ன செய்யலாம்..? செம்பூர் கற்றுத் தரும் பாடம்!



பாலிவுட்டின் கேட் வே என்றும், பல லட்சம் மக்கள் தொகையுடனும் பல கோடி கனவுகளுடனும் நாகரிகத்தின் அடையாளமாக மும்பை இருக்கிறது.  ஆனால், இந்த மெட்ரோ மாநகரத்தின் தீராத பிரச்னை மலை போல் குவியும் குப்பைகளும், நிரம்பி வழியும் குப்பைக் கிடங்குகளும்தான்.சில வருடங்களுக்கு முன், அங்கிருக்கும் ஒரு குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மும்பை நகராட்சி, குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த வீடுகள், அவர்கள் சேர்க்கும் குப்பைகளை அவர்களே தரம் பிரித்து, இயற்கை உரமாகவும் மறு சுழற்சிக்காகவும் அனுப்ப வேண்டும் என்ற விதியை நடைமுறைப்படுத்தியது.

இதையடுத்து மக்களிடையே கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மும்பை செம்பூர் பகுதியைச் சேர்ந்த ரோகித் செம்புர்கர், தன் பகுதியில் இருக்கும் 73 வீடுகளில் வசிக்கும் குடும்பங்களிடம் பேசியிருக்கிறார். இதன் பிறகு நடந்தவை அனைத்தும் மிராக்கிள். வீடுகளிலேயே மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து மாதம் 100 கிலோ இயற்கை உரம் தயாரித்துள்ளனர். இதை தங்கள் வீட்டுத் தோட்டத்தில் பயன்படுத்தியது போக மீதம் இருப்பதை தங்கள் வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் கொடுத்துள்ளனர்.

விளைவு... இப்போது 1500 கிலோ கழிவுகளை குப்பைக்கிடங்கிற்கு அனுப்பாமல் தடுத்துள்ளனர். ‘‘எங்கள் கேட்டட் கம்யூனிட்டியில் மொத்தம் 73 பங்களாக்கள் இருக்கின்றன. உண்மையில், மும்பை மாநகராட்சி அறிவிப்பிற்கு பல வருடங்கள் முன்னரே நாங்கள் இந்த இயற்கை உரத்தை தயாரிக்க ஆரம்பித்து விட்டோம். அதற்கு காரணம் என் தந்தைதான்...’’ உற்சாகத்துடன் பேசத் தொடங்குகிறார் ரோகித் செம்புர்கர். ‘‘அப்பாவின் பெயர், அருண் செம்புர்கர். அவர் ஒரு பொறியாளர். ஆனால், தோட்டக்கலை மீது அதீத ஆர்வமுள்ளவர். அவர் இருந்தவரை எங்கள் வீட்டிலிருந்து குப்பை என எதுவுமே வெளியில் சென்றது கிடையாது. பிளாஸ்டிக் கப்களில் கூட தாவரங்களை நட்டு வளர்ப்பார்.

வாரம்தோறும் சந்தைக்குச் சென்று அங்கிருக்கும் மீன் கழிவுகள், காய்கறிகளின் கழிவுகளை எல்லாம் வீட்டுக்கு எடுத்து வந்து அதை தோட்டத்தில் உரமாக மாற்றுவார். பக்கத்து வீடுகளிலிருக்கும் குப்பைகளைக் கூட சேர்த்து, அதில் ஏதாவது செடி வளர்த்து, அவர்களுக்கு பரிசாகக்கொடுப்பார். ஏன் இப்படி தேவையில்லாத வேலைகளை செய்கிறார் என்று தினமும் அவரை எங்கள் வீட்டில் திட்டுவார்கள்!2015ல் அவர் இறந்த பின்னர்தான், அவர் எதற்காக இவ்வளவு உழைத்தார் என்றே புரிந்தது...’’ உணர்ச்சியில் வார்த்தைகள் தடுமாறவே சற்று அமைதியானார் ரோகித் செம்புர்கர். பிறகு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார். ‘‘அப்பா இறந்த சில மாதங்களிலேயே வீட்டில் சேரும் குப்பையை என்ன செய்வது என தெரியாமல் விழித்தோம். அப்போதுதான் மும்பையின் குப்பைக் கிடங்குகள் எல்லாமே இடமில்லாமல் நிரம்பி வழிவது பற்றி கேள்விப்பட்டோம்.

உடனே அது பற்றிய செய்திகளை சேகரித்தேன். மும்பை மாநகராட்சி குறிப்பிட்ட வகை வீடுகளைக் கொண்ட சமூகத்துக்கு மட்டும் அவர்களே குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் விதியை கட்டாயப்படுத்தியிருந்தனர். நாங்கள் அந்த வகையில் வரவில்லை என்றாலும் சுற்றுப்புறத்திற்கு இது நன்மை விளைவிக்கும் என்பதால் அதை கடைப்பிடிக்க முடிவு செய்தோம்...’’ என்கிறார் ரோகித் செம்புர்கர். ஆனால், அதைச்செய்ய மூன்று மாதங்களாகி இருக்கிறது.

சரி... 1500 கிலோ கழிவுகளை குப்பைக் கிடங்கிற்குப் போகவிடாமல் எப்படி மறுசுழற்சி செய்தார்?

“எங்கள் உறுப்பினர்கள் பல பயிற்சி முகாம்களுக்குச் சென்று மறுசுழற்சி பற்றியும் அது குறித்த தொழில்நுட்பங்கள் குறித்தும் கற்றுக் கொண்டனர். உண்மையில் எங்கள் மீது திணிக்கப்பட்டதாக இதை நாங்கள் பார்க்கவில்லை. இதனால் ஏற்படும் நன்மைகளே எங்கள் கண்முன்னால் விரிந்தன. பல இடங்களுக்கும் சென்று, அங்கு மக்கள் நிறுவியிருந்த இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரங்களைப் பார்த்தோம். சில இயந்திரங்கள்அதிக இடத்தை அடைத்துக் கொண்டிருந்தன, சில இயந்திரங்கள்அதிக விலையுடன் இருந்தன. அதனால் எங்கள் வீடுகளுக்கு தகுந்த இயந்திரங்களை உறுதிப்படுத்தவே பல மாதங்களை எடுத்துக்கொண்டோம்.

ஒரே முறை செய்யப்போகும் முதலீடு என்பதால் கவனத்துடன் செயல்பட்டோம். அப்போதுதான் மோனிஷா நர்கி எங்களுக்கு அறிமுகமானார். அவர் RUR GreenLife என்ற சமூக - சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர். அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் அவரேதான். அவரது குழுவில் இருப்பவர்கள் நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைத் துறையில் படித்து பட்டம் பெற்றவர்கள். அதனால் அவர்கள் ஆலோசனைப்படி மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் இயந்திரங்களைப் பொருத்தி, அதில் கிடைக்கும் உரத்தை எங்கள் தோட்டத்தில் பயன்படுத்தி வாழை, பப்பாளி மரங்களை வளர்த்து வருகிறோம்...” என்கிறார் ரோகித் செம்புர்கர்.

இதை புன்னகையுடன் கேட்டுவிட்டு பேசத் தொடங்கினார் மோனிஷா நர்கி. “செம்பூர் பகுதி மக்களுக்கு நாங்கள் அமைத்துக்கொடுத்த கழிவு மேலாண்மை எங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. ஒரு வார காலத்துக்கு எங்கள் குழுவிலிருந்து தினமும் அவர்கள் இடத்திற்கு சென்றோம். ஒவ்வொரு வீடும் எவ்வளவு கழிவுகளை தினமும் வெளியேற்றுகின்றனர் என்று ஆராய்ந்தோம். இதன்பிறகே எந்த வகையான கழிவு மேலாண்மைத் திட்டம் அவர்களுக்கு உகந்தது என்று முடிவு செய்தோம்.அந்த வகையில் செம்பூர் மக்களுக்கு நாங்கள் ஒரு Shredderஐப் பரிந்துரைத்தோம்.

அவர்களிடம் பெரிய தோட்டமிருந்தது. கீழே விழும் இலைகள், கிளைகளை எல்லாம் சேகரித்து உரமாக மாற்றிப் பயன்படுத்தினால் வளமான மரங்கள் வளரும். இதை அப்படியே செயல்படுத்தினோம். அதேபோல் அங்கிருக்கும் 73 வீடுகளில் வசிப்பவர்களில் ஆர்வமுள்ள சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ‘க்ரீன் சேம்பியன்ஸ்’ ஆக மாற்றினோம்! கழிவு மேலாண்மையில் ஆர்வமுள்ள அவர்கள், தினமும் இந்தத் திட்டத்தை இப்போது மேற்பார்வையிடுகிறார்கள். சந்தேகம் ஏற்படும்போது எங்களைத் தொடர்பு கொள்கிறார்கள். கழிவு மேலாண்மை இயந்தி ரங்களைப் பொருத்தும்வரைதான் பலகட்ட ஆராய்ச்சிகள்.

அதன் பிறகு மறுசுழற்சி சுலபம். முதலில் மக்கள் தங்கள் வீட்டிலேயே மட்கும் குப்பை, மட்காத குப்பை என குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும். எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது இந்த விஷயம்தான். ஒரு வாரம் ஆர்வமாக குப்பைகளை தரம் பிரிக்கும் மக்கள் அடுத்து சோர்ந்து போவார்கள். அதனால் தொடர்ந்து அவர்களுக்கு இது பழக்கமாகும் வரை பயிற்சி கொடுத்தோம். சமையலறைக் குப்பைகளைத் தாண்டி மட்கும் குப்பையில், வெட்டப்பட்ட இலைகள், கிளைகளும் அடங்கும். இந்த மட்கும் குப்பைகளை, உரம் தயாரிக்கும் இயந்திரத்தில் சேர்த்ததும், அது தன் வேலையை கச்சிதமாகச் செய்துவிடும்.

இந்த உரம் தயாரிக்கவே பிரத்தியேகமான ஒரு தொழிலாளியை, செம்பூர் மக்கள் நியமித்துள்ளனர். அவர், தரம் பிரித்த கழிவுகளை மேலும் ஒரு முறை சரிபார்த்து, அதை உரமாக மாற்றும் இயந்திரத்தில் சேர்ப்பார். இந்த செயல்முறையை அடுத்து, இயற்கை உரம் 4 - 5 வாரங்களுக்குள் தயாராகிவிடும். இதன் மூலம் மாதம் 100 கிலோ வரை உரம் கிடைக்கும்; கிடைக்கிறது...’’ என்கிறார் மோனிஷா நர்கி.மும்பையைப் போல் சென்னையிலும் குப்பைக்கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுகிறது. தலைக்கு மேல் வெள்ளம் செல்வதற்கு முன்னர் கழிவு மேலாண்மையை நம் பகுதிகளில் அமல்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்!  

ஸ்வேதா கண்ணன்