குஷ்பூ இட்லி சாப்பிட்டிருக்கீங்களா?



Face to Face வாசகர்கள் கேள்விகள் குஷ்பூ பதில்கள்

- எஸ்.கோபால், திருவண்ணாமலை.

இல்லை! இட்லினாலே பிடிக்காது. ஏன்னா, இட்லி சாப்பிட்டாலே உடம்பு சரியில்லாத டைம்ல ப்பிட்டிருக்கோமோனு தோணிடுது.  ஆனா, என் பெயர்ல ஒரு ஃபுட் வந்திருக்குனு கேள்விப்பட்டதும் சந்தோஷப்பட்டேன். பட், அதை யாருமே வாங்கிட்டு வந்து என் கண்ணுல காட்டலை! எப்படி அதை செய்யணும்னு கூட சொல்லித் தரலை!

இப்போதைய தமிழ் நடிகைகளில் சிறப்பாக நடிப்பவர் யார்? - கே.மணிகண்டன், திருச்சி.

நிறைய பேரை சொல்லலாம். சாய் பல்லவி ரொம்ப நல்லா நடிக்கறாங்க. சமந்தா, த்ரிஷானு ரொம்ப பிடிச்ச ஹீரோயின்ஸ் நிறைய பேர் இருக்காங்க.

மனைவி சொல்லே மந்திரம் என்று கணவனும், கணவனே கண்கண்ட தெய்வம் என்று மனைவியும் வாழ்ந்தால் குடும்பத்தில் பிரச்னை வராதுதானே? - ரா.புனிதவதி, பொள்ளாச்சி.

அப்படியா! அப்படி வாழ்ந்ததே கிடையாது. ஆனா, சந்தோஷமா இருக்கேன்!

திரையுலகில் நீங்கள் சந்தித்தவர்களில் அபூர்வமானவர் யார்? - வினோதினி, காஞ்சிபுரம்; பி.சாந்தா, மதுரை - 14.

ரெண்டு பேரை சொல்லலாம். ஒருத்தர் கே.பாலசந்தர் சார். இன்னொருத்தர் பாரதிராஜா சார். இவங்க ரெண்டு பேர் டைரக்‌ஷன்லயும் ஒரே டைம்ல நடிக்கற வாய்ப்பு கிடைச்சிருக்கு. அவங்களோட மேக்கிங்ஸ், சிந்தனை, நடிகர்கள்கிட்ட வேலை வாங்கும் பாங்கு... இதையெல்லாம் வேற யார்கிட்டயும் பார்த்ததில்ல. மேடைகள்ல என் பேச்சையோ, நிகழ்ச்சியையோ கே.பி.சார் பார்த்தார்னா, அடுத்த செகண்ட் அவர்கிட்ட இருந்து போன் வரும். அதுல பாராட்டும் இருக்கும்... ‘என்ன பேசியிருக்க நீ..? அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?’னு உரிமையா திட்டும் விழும். இப்ப அதையெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றேன். இளமைக்கு இன்னொரு அர்த்தம்னா அது பாரதிராஜா சார்தான். ஆனா, அவர் ரொம்ப குழந்தைத்தனம் மிக்கவர். அவர்கிட்ட நாம எதைச் சொன்னாலும் உடனே அதை ‘அப்படியா’னு கேட்டு நம்பிடுவார்! அப்புறம், அவருக்கு உண்மை தெரிய வரும்போது, ‘ஏய், என்ன ரீல்வுடறீயா?’னு கேட்கவும் செய்வார்!

கவிதைகள் பிடிக்குமா?- எம்.சேவுகப் பெருமாள், பெருமகளூர்.

பிடிக்கும். நல்ல கவிதைகள் கேட்டால் ரசிப்பேன். ஆனா, எழுத வராது.

ஒரு சூப்பர் பவர் உங்களுக்கு கிடைக்கும்னா என்ன பவர் கேட்பீங்க? - வெங்கடேஷ், சென்னை.

என் பசங்க என்ன யோசிக்கறாங்கனு கேட்பேன். அவங்க மைண்டை ரீட் பண்ண ஒரு பவர் கிடைச்சா நல்லாத்தான் இருக்கும். ஏன்னா, ரொம்ப யோசனையில் இருப்பாங்க!

எப்பவாவது ரூல்ஸை மீறினது உண்டா? - ஜெ.இந்திராணி, வேலூர்.

ரூல்ஸா? ஸ்கூல்ல மீறியிருக்கேன். சின்னக் குழந்தைங்க விளையாடுற இடத்துக்கு போகக் கூடாதும்பாங்க. அங்கதான் போவோம். அப்புறம், வேலை வேலைனு ஆகிடுச்சு. வேணும்னு ரூல்ஸை மீறினதும் உண்டு. பிருந்தா மாஸ்டரோட அம்மா உயிரோடு இருக்கும்போதுதான் அப்படி நடந்திருக்கு. நான், கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர், அனு பார்த்தசாரதினு எல்லாருமே ஃப்ரெண்ட்ஸ். நாங்க வெளிய எங்காவது ஷாப்பிங் கிளம்பினா, டைமுக்கு வீட்டுக்கு வரணும்னு அம்மே (பிருந்தா மாஸ்டரின் அம்மா) கண்டிப்பா சொல்லுவாங்க.

ஆனா, அம்மேகிட்ட திட்டு வாங்கணும்னு வேணும்னே லேட்டா வீட்டுக்குப் போவோம். அம்மே எங்கள செமையா திட்டுவாங்க. அமிர்தமா இனிக்கும்! பத்து மணிக்குள் ரிட்டர்ன் ஆகணும்னு சொல்வாங்க. நாங்க பதினொன்றரைக்கு போவோம். அவங்க கதவை பூட்டிட்டு, வெளிய நிற்பாங்க. கெஞ்சிக் கூத்தாடி அவங்க மனசை மாத்திட்டு வீட்டுக்குள்ள போவோம். மறக்க முடியாத தருணங்கள்!

‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அந்த பெற்றோரின் ஓட்டுரிமையைப் பறிக்கவேண்டும்...’ என்று மத்திய கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் கூறியிருக்காரே?- பவானி, பெங்களூரு.

பாஜகவில் யார் என்ன சொன்னாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதுல விட்டிடணும். நாமிருவர் நமக்கிருவர் காலம் போய், நாமிருவர் நமக்கொருவர் என்கிற காலம் வந்திடுச்சு. ஆனா, கிராமப்புறங்களில் அது கடவுள் கொடுத்த வரம்னு இன்னமும் குழந்தைகளை வரிசையா பெத்துக்கிட்டுத்தான் இருக்காங்க. அதுவும் சில இடங்கள்ல ஆண் குழந்தை வேணும்னு அதிக குழந்தைகள் பெத்துக்கறாங்க.

கிரிராஜ்சிங் எந்த வகையில் சொன்னார்னு தெரியல. ஆனா, பொருளாதார ரீதியா பார்க்கும்போது, அதிக குழந்தைகள் பெத்துக்கிட்டா நம்மால வளர்க்க முடியுமானு பார்க்கணும். அவங்க ஆசைப்படுற படிப்பை அவங்களுக்கு கொடுக்கணும். நமக்கிருக்கற வருமானத்துல அவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்க முடியுமானு யோசிக்கறது அவசியம். அம்பானியே மூணு குழந்தைகளோடு நிறுத்திட்டார். அதிலும் ஒரு பிரசவம், ரெட்டைக் குழந்தைங்க!

கலைஞர் இல்லாத திமுக, ஜெயலலிதா இல்லாத அதிமுக - ஒப்பிட முடியுமா? - எம்.அந்தோணிபாபு, திருநெல்வேலி.

ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. தமிழ்நாட்டின் மிகச்சிறந்த தலைவர் டாக்டர் கலைஞர். அவர் இல்லாத தமிழகத்தைப் பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. கலைஞர் இல்லாத திமுகனு சொல்லும்போது, தந்தை ஸ்தானத்தில் இருக்கற ஒரு தலைவர் இல்லைனு எல்லார்க்கும் ஒரு வருத்தம் இருக்கும். ஆனா, திமுகவின் மிகப்பெரிய ப்ளஸ்ஸா தலைவர் இடத்துல ஸ்டாலின் அவர்கள் இருக்காங்க. ஆனா, அதிமுகவுல அப்படி கிடையாது. எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதாம்மா இருக்காங்கனு சொன்னாங்க. ஜெயலலிதாம்மா போனதுக்குப் பிறகு யாருமே இல்ல!

நீங்கள் முதன்முதலில் தயாரித்த ‘கிரி’ பட அனுபவம் ப்ளீஸ்? - த.அரிகிருஷ்ணன், திருவண்ணாமலை.

கஷ்டப்பட்டு சம்பாதிச்சதைப்போட்டு படம் எடுக்கறதால பெரிய ரிஸ்க்கா தெரிஞ்சது. இதை மனசுல வச்ச சுந்தர்.சி. ஒவ்வொரு ஃபிரேமையும் பார்த்து பார்த்து எடுத்தார். அந்தப் படத்துக்கு கம்ப்ளீட் கிரெடிட் அவருக்குத்தான் கொடுக்கணும். திட்டமிட்ட பட்ஜெட்டிற்குள் படத்தை எடுத்தோம். அதுக்காக பட்ஜெட்டை காம்ப்ரமைஸ் பண்ணி எடுத்தோம்னு சொல்ல முடியாது. பாட்டு ஷூட் பண்ண ஃபாரீனுக்கும் போயிருந்தோம். அதுல காமெடி உட்பட எல்லாமே நல்லா வந்திருந்தது. படமும் செம ஹிட் ஆச்சு. ‘அவ்னி சினி மேக்ஸு’க்கும் நல்ல பெயரை ‘கிரி’ வாங்கிக் கொடுத்தது.

(பதில்கள் தொடரும்)