Family Tree-ஹாங்காங்கில் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டலை கட்டிய நிறுவனம்



சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஹாங்காங்கை கட்டமைத்ததில் முக்கியப்பங்கு வகிக்கும் நிறுவனம், ‘ஜார்டின் மத்தீசன் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட்’.சில்லறை வர்த்தகத்தில் ஜாம்பவானான ‘டெய்ரி ஃபார்ம்’, ஆட்டோமொபைல் துறையில் கொடிகட்டிப்பறக்கும் ‘ஆஸ்ட்ரா இன்டர்நேஷனல்’, ரியல் எஸ்டேட்டில் ராஜாவான ‘ஹாங்காங் லேண்ட்’, ஹாங்காங்கில் முதல்முறையாக ஐந்து நட்சத்திர ஹோட்டலை அறிமுகப்படுத்திய ‘மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டல் குரூப்’, ‘ஜார்டின் சைக்கிள் அண்ட் கேரேஜ்’, ‘ஜார்டின் மோட்டார்ஸ்’, ‘ஜார்டின் பசிபிக்’ ஆகிய துணை நிறுவனங்களை உள்ளடக்கிய மாபெரும் நிறுவன சாம்ராஜ்யம் இது.

நிதிச்சேவை, சூப்பர் மார்க்கெட், எஞ்சினியரிங், கட்டுமானம், சொத்து மேலாண்மை, ஆட்டோமொபைல், ஹோட்டல் என பல துறைகளில் ஆசியாவிலேயே முன்னணி வகிக்கும் நிறுவனமும் கூட. 189 வருடங்களாக இயங்கி வருகிறது. இதை நிர்வகிப்பது ‘கெஸ்விக் குடும்பம்’.

வில்லியம் ஜார்டின்

பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள். இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பெனி வியாபாரத்துக்காக இந்தியாவுக்குள் நுழைந்த காலம் அது. இன்னொரு பக்கம் இங்கிலாந்தும், சில நாடுகளும் சீனப் பேரரசுடன் முறைசாரா வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தன.
அப்போது இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் சீனப் பட்டுக்கும், தேயிலைக்கும் செம மவுசு. ஆனால், இங்கிலாந்துக்குத் தேயிலையையும் பட்டையும் ஏற்றுமதி செய்ய சீனப்பேரரசு ஆர்வம் காட்டவில்லை. இங்கிலாந்திலிருந்து கம்பளி ஆடைகளை மட்டுமே இறக்குமதி செய்தது. மட்டுமல்ல, வெளிநாட்டு வர்த்தகர்கள் சீனாவுக்குள் நுழைந்து வணிகம் செய்வது ரொம்பவே கடினமாக இருந்தது.

அப்படியிருந்தும் சில வணிகர்கள் சீனாவுக்குள் நுழைந்து முறைசாரா வர்த்தகம் செய்தனர். இதை அறிந்த சீனப்பேரரசு அயல்நாட்டு வணிகர்கள் சீனாவின் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கே தடைசெய்தது. இந்நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாறத் தொடங்கியது. காரணம், அபின். அந்தக் காலத்தில் அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் வலியை நீக்க அபின்தான் பயன்படுத்தப்பட்டது.

சிலர் அதை போதைக்காக பயன்படுத்த அபினின் புகழ் பரவியது. சீனப்பணக்காரர்கள் மத்தியில் அபினுக்கான தேவை எகிறியது. அதனால் வெளிநாட்டிலிருந்து அபினை இறக்குமதி செய்ய சீன வர்த்தகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர். தவிர, பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகுந்த மதிப்புமிக்க தனி கமோடிட்டியாக விஸ்வரூபம் எடுத்தது அபின்.

இந்நிலையில் சீனப்பேரரசு அபினுக்குத் தடை விதித்தது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் அபின் வர்த்தகத்துக்கு எந்தவித தடையும் இல்லை. ஆசியா முழுமைக்குமான அபின் வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது கிழக்கிந்தியக் கம்பெனி. எப்படியாவது சீனாவுக்குள் அபினைக் கொண்டுவர இங்கிலாந்து வணிகர்கள் திட்டமிட்டனர். கடத்தல் மட்டுமே அதற்கு ஒரே வழியாக இருந்தது. இறுதியாக கடத்தல் மூலம் சீனாவுக்குள் அபின் நுழைந்தது.

இந்தப் பின்னணியில்தான் மருத்துவரான வில்லியம் ஜார்டின் ஒரு தொழிலதிபராக உருவெடுத்தார்.ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு சிறு நகரத்தில் 1784ம் வருடம் பிறந்தார் வில்லியம் ஜார்டின். அவருடன் பிறந்தவர்கள் ஏழு பேர். வில்லியமிற்கு ஒன்பது வயதானபோது, தந்தை ஆண்ட்ரூ ஜார்டின் இறந்துவிட, குடும்பத்தின் பொருளாதாரம் நலிவடைந்தது.

அன்றாட உணவிற்கே கஷ்டப்பட வேண்டியிருந்ததால் பள்ளிப்படிப்பை விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் வில்லியம். அண்ணன் டேவிட் செய்த உதவியால் படிப்பைத் தொடர்ந்தார் வில்லியம். நன்றாகப் படித்து 19 வயதிலேயே மருத்துவராகிவிட்டார். ஊரே அறியும் அறுவை சிகிச்சை நிபுணராக புகழ்பெற, கிழக்கிந்தியக்கம்பெனியின் கப்பல்களில் மருத்துவராகப் பணிபுரியும் வாய்ப்பு வில்லியமைத்தேடி வந்தது. இந்த வேலைதான் வில்லியம் ஜார்டினின் வாழ்க்கையில் திருப்புமுனை.

வியாபாரம் சம்பந்தமாக லண்டன், சீனா, இந்தியாவுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்களில் அவருக்குப் பணி. வேலை நேரம்போக மீதி நேரத்தில் கப்பலில் கொண்டு செல்லப்படும் சரக்குகளைக் கவனிப்பதும், அங்கிருப்பவர்களிடம் உரையாடுவதும் அவரது வழக்கம்.

பருத்தி, பட்டு, தேயிலை, சர்க்கரை என ஏராளமான பொருட்கள் கப்பலில் இருந்தாலும் அபின் வர்த்தகம் பலமடங்கு லாபத்தை அள்ளிக்கொடுத்ததைக் கவனித்தார். அப்போதே அபின் வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் முளைவிட்டுவிட்டது. ஆனால், மருத்துவத் தொழிலை அவரால் விட முடியவில்லை.

காலங்கள் வேகமாக ஓடின. 14 வருடங்கள் திறமையாக பணிபுரிந்ததால் மருத்துவராக இருந்த கப்பலுக்கே உயர் அதிகாரியானார். அவரது பதவிக்காக கப்பலில் தனியாக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. அந்தப் பகுதியில் சரக்குகளை எடுத்துச்செல்லும் அளவுக்கு இடமிருந்தது. அதை அவர் பிசினஸ் அல்லது வேறு எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். எந்தவித நிபந்தனையும் இல்லை.

மருத்துவப்பணிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு முழுமூச்சாக பிசினஸில் இறங்கினார் வில்லியம் ஜார்டின். அவருக்கு பிசினஸ் ஆசையைத் தூண்டிய அபினைத்தான் முதலில் வர்த்தகம் செய்தார். அபினைத் தேடிச் சென்ற பயணத்தில் மத்தீசன் என்ற ஸ்காட்லாந்து பிசினஸ்மேனை சந்திக்க, இருவரும் கைகோர்த்தனர்.

1832ம் வருடம் சீனாவில் உள்ள கேன்டன் என்ற இடத்தில் உதயமானது ‘ஜார்டின், மத்தீசன் அண்ட் கோ’. நிறுவனம் ஆரம்பித்த காலத்தில் சீனாவில் தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி இருந்தது. உற்பத்தியான பொருட்களை விநியோகிக்க ஏராளமான வர்த்தகர்கள் முன்பே இருந்தனர். அதனால் புதிதாக வர்த்தகத் தொழில் தொடங்குபவர்களால் எந்தப் பொருளையும் விற்க முடியாத நிலை.

ஆனால், அபின் மட்டும் அங்கே கிடைக்கவில்லை. அபின் வணிகத்தை தடை செய்திருந்தாலும், அதை தடுத்து நிறுத்தி வைக்கும் அளவுக்கு சீனப்பேரரசிடம் திறன் இல்லை.

இச்சூழலை நன்றாகப் பயன்படுத்திய ‘ஜார்டின் மத்தீசன் அண்ட் கோ’, பிரிட்டிஷ் கப்பல்களின் மூலம் சீனாவுக்குள் அபினைக் கொண்டுவந்தது. யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக சீன வணிகர்களுக்கு அபினை விநியோகித்தது. குறுகிய காலத்திலேயே நினைத்துப்பார்க்க முடியாத லாபத்தை அள்ளியது ‘ஜார்டின் மத்தீசன் அண்ட் கோ’.

ஆனால், ஒரு கட்டத்தில் நிறுவனத்துக்குச் சொந்தமான மில்லியன் டாலர் மதிப்புடைய அபின் பறிமுதல் செய்யப்பட்டது. சீனாவில் நிறுவனம் நடத்த நெருக்கடி ஏற்பட, ஹாங்காங்குக்கு நகர்ந்தது ‘ஜார்டின் மத்தீசன்’. அங்கே அபின் விற்பனைக்கு எந்தத் தடையுமில்லை. பிறகு சீனாவில் நிலைமை சரியாக, அங்கிருந்த முக்கியத் துறைமுகங்களில் எல்லாம் வர்த்தக அலுவலகங்களைத் திறந்தது.

வர்த்தக பரிமாற்றங்களுக்காக  நீராவியில் இயங்கும் படகை அறிமுகப்படுத்தியது. அபினில் ஆரம்பித்த பிசினஸ் பருத்தி, தேயிலை, பட்டு என விரிவடைந்தது. ஜார்டினின் மரணத்துக்குப் பிறகு மத்தீசன் நிர்வாகப் பொறுப்பை ஏற்க, ஜார்டினின் வாரிசுகள் அவருக்கு உதவியாக இருந்தனர்.

தனது ஓய்வுக்குப் பிறகு மத்தீசன் நிறுவனப் பொறுப்பை ஜார்டினின் வாரிசுகளுக்கே கொடுத்துவிட்டார். இந்நிலையில் வில்லியமின் சகோதரியின் மகள் தாமஸ் கெஸ்விக் என்பவரைத் திருமணம் செய்ய, கெஸ்விக்கின் குடும்பம் ‘ஜார்டின் மத்தீசனி’ல் முக்கிய அங்கமானது. தாமஸ் கெஸ்விக்கின் மகனான வில்லியன் கெஸ்விக் ஜப்பானில் ஓர் அலுவலகத்தைத் திறந்து நிர்வக்கிக்க ஆரம்பித்தார். பிறகு நிறுவனத்தின் முக்கிய ஆளுமையாக உருவெடுத்தார். இவருக்குப் பின் வந்த கெஸ்விக்கின் வாரிசுகள் ‘ஜார்டின் மத்தீசனை’ உலகின் முக்கிய 500 நிறுவனங்களில் ஒன்றாக வளர்த்தெடுத்துவிட்டனர்.

முக்கிய நிகழ்வுகள்

1834ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தகம் சீனாவில் முடிவுக்கு வந்தது. அதே ஆண்டில் தேயிலையை இங்கிலாந்துக்கு அனுப்பியது, ‘ஜார்டின் மத்தீசன்’.
1876ல் ஷாங்காய் நகரிலிருந்து வூசங் வரைக்கும் ரயில்பாதையைக் கட்டமைத்தது ‘ஜார்டின் மத்தீசன்’. இதுதான் சீனாவின் முதல் ரயில்பாதை. 1878ல் சீனாவில் சர்க்கரை சுத்திகரிப்பு நிலையத்தையும், ஹாங்காங்கில் ஐஸ் தயாரிக்கும் ஆலையையும் தொடங்கியது.

1880களில் சுரங்கத்தொழில், எஞ்சினியரிங், கிடங்கு, பருத்தி மில் என பல துறைகளில் கால்பதித்தது.1910ல் பிசினஸின் மையமாக ஷாங்காய் நகரம் மாறியது. சீனாவில் தொழில்துறைக்குத் தேவையான பொருட்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டத்தொடங்கியது நிறுவனம்.1923ல் ஷாங்காயில் ‘ஜார்டின் எஞ்சினியரிங் கம்பெனி’ என்ற துணை நிறுவனம் உதயமானது. சீனா மற்றும் ஹாங்காங்கின் உள்கட்டமைப்புக்குத் தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள், சேவையை வழங்கியதில் முக்கியப்பங்கு வகிக்கிறது இந்த துணை நிறுவனம்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1947ல் ஷாங்காயிலும், ஹாங்காங்கிலும் தனது இயக்கத்தைத் தொடங்கியது ‘ஜார்டின் மத்தீசன்’. சீனாவில் போருக்குப் பின் இயங்க ஆரம்பித்த முதல் நிறுவனம் என்ற பெருமையைத் தன்வசமாக்கியது. அத்துடன் ஜப்பானிலும் பிசினஸை உயிர்ப்பித்தது. கப்பலில் சரக்கு அனுப்பும் வேலைகளும் சூடுபிடித்தன. இதே ஆண்டில் ‘ஜார்டின் ஏர்வேஸ்’ பிறந்தது.

1980களில் ஆஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, தெற்கு ஆப்பிரிக்க நாடுகள், ஹாங்காங், இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, தாய்லாந்து, தாய்வான் என நாலாப்பக்கமும் கிளை பரப்பியது. அப்போதே நிறுவனத்தில் 37 ஆயிரம் பேர் வேலை செய்தனர்.

1982ல் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக ஹாங்காங் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் உருவாக்கப்பட்டது. 2000த்திலிருந்து பார்சிலோனா, பாரீஸ், சாண்டியாகோ, மிலன், பெய்ஜிங் உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களில் சொகுசு ஹோட்டல்களைத் திறந்தது ‘மாண்டரின் ஓரியண்டல்’.

2012ல் கம்போடியா மற்றும் பிலிப்பைன்ஸின் சந்தைக்குள் நுழைந்தது ‘டெய்ரி ஃபார்ம்’.2013ல் ஹாங்காங் முழுமைக்குமான கே.எஃப்.சியை ஃபிரான்ச்சைஸ் எடுத்தது ‘ஜார்டின் மத்தீசன்’.
இன்று ஹாங்காங்கில் தலைமையகம் இயங்கிவருகிறது. நிறுவனத்தில் சுமார் 4.64 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த பென் கெஸ்விக் சேர்மனாக உள்ளார். 2019ம் வருடத்தின் மொத்த வருமானம் 3,03,805 கோடி ரூபாய்!

த.சக்திவேல்