இக்கட்



கொரோனா லாக்டவுனை மையமாக வைத்து வரிசையாக படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதில் புதுவரவு, ‘இக்கட்’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது இந்த கன்னடப்படம். வாசுவும், ஜான்வியும் புதிதாக திருமணமான இளம் தம்பதிகள். கல்யாணமான முதல் நாளிலிருந்தே இருவருக்கும் அடிக்கடி வாய்த் தகராறு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாகி, விவாகரத்து செய்துகொள்ளும் முடிவுக்கு வருகின்றனர்.

இருவரும் ஒரு மனதாகப் பேசி விவாகரத்து செய்துகொள்ள நினைத்த அன்று மாலையில் இந்தியா முழுவதும் கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்படுகிறது. அடுத்த 21 நாட்களுக்கு வீட்டைவிட்டு யாருமே வெளியே வர முடியாத நிலை. விவாகரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் கூட 21 நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த லாக்டவுன் வாசு - ஜான்வி வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்பதே நகைச்சுவை திரைக்கதை.

புதிதாக திருமணம் செய்தவர்கள், திருமணம் செய்யப்போகிறவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இது. ஒரே வீட்டுக்குள் படத்தின் கதை நிகழ்ந்தாலும் எங்கேயும் சலிப்பு தட்டவில்லை. கதாபாத்திரங்களின் தேர்வு கச்சிதம். ஈசம் கானும், ஹசீன் கானும் இணைந்து இப்படத்தை இயக்கியிருக்கின்றனர்.