மீண்டும் காசேதான் கடவுளடா!



ஒரு படம் எடுத்து முடிப்பதே பெரும் சவாலாக மாறியுள்ள இக்காலகட்டத்தில் ‘தள்ளிப் போகாதே’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘காசேதான் கடவுளடா’ என வரிசையாக மூன்று படங் களை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ஆர்.கண்ணன். சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன் நடித்த ‘காசேதான் கடவுளடா’ படத்துக்கும் உங்கள் இயக்கத்தில்  சிவா நடிக்கும் ரீமேக் படத்துக்கும் என்ன வித்தியாசம்?

அந்தப் படம் கறுப்பு வெள்ளை. இது கலர் படம். அதில் இருந்த என்டர்டெயின்மென்ட், கிளாசிக் லுக் அப்படியே இருக்கும். பிரசன்டேஷன் இப்போதைய டிரெண்டுக்கு இருக்கும். லக்ஷ்மிக்கு அதுல கர்ச்சீப் கொடுத்திருந்தால் இதில் ப்ரியாவுக்கு மாஸ்க் கொடுத்திருப்போம். ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘கலகலப்பு’, ‘தமிழ்ப் படம்’ வரிசையில் இது கம்ப்ளீட் காமெடி படமாக பேசப்படும்.

முத்துராமன் கேரக்டருக்கு சிவாதான் பொருத்தமாக இருப்பார் என்று எப்படித் தோன்றியது? இது காமெடி படம். சீரியஸ் ரோல் பண்ற ஹீரோக்களைப் பொருத்திப் பார்க்க முடியாது. பொருத்தினாலும் அது கதைக்கு வெளியேதான் இருக்கும். இந்த மாதிரி கதைகளுக்கு சந்தானம், சிவா பொருத்தமாக இருப்பார்கள்.

இந்தப் படம் பற்றி சிவாவிடம் சொன்னதுமே ‘பண்ணலாம்’னு செம ஜாலியானார். அவர் மாதிரியே எல்லாரும் இந்தப் படம் பற்றி சொன்னதுமே ‘பண்றோம்’னு சொல்லிட்டாங்க.
ரீமேக் படங்கள் பண்றது எனக்கு புதுசு இல்லை. ‘கண்டேன் காதலை’ முதல் இப்போ ‘நின்னுக்கோரி’னு தெலுங்கு படத்தை ‘தள்ளிப் போகாதே’னு செய்திருப்பது வரை நிறைய பண்ணியிருக்கிறேன். அதனால் கரெக்ட்டா பண்ணமுடியும் என்ற கான்ஃபிடன்ட் இருந்தது.

இது எனது 11வது படம். பத்து படத்தோட மெச்சூரிட்டி இதுல இருக்கு. ஏவி.எம்.நிறுவனத்திடம் ரைட்ஸ் கேட்டபோது வாழ்த்துதலோடு கொடுத்தாங்க. சிவாவுக்கு சேலஞ்சிங்கான ரோல். படத்தோட ஹீரோ மாதிரி இல்லாமல் உதவி இயக்குநர் போல் எல்லாவிதத்திலும் உதவியா இருந்தார். ஈகோ  பார்க்கமாட்டார். இந்தப் படத்தை எப்படியாவது சக்சஸ் பண்ண வேண்டும் என்று அவர் ஆபீஸுக்கு நானும் என் ஆபீஸுக்கு அவரும் வருவதும் போவதுமாக வெறித்தனமா உழைச்சிருக்கிறோம்.

ப்ரியா ஆனந்த் ஏற்கனவே என் படத்துல நடிச்சிருக்கிறார். இதுல லக்ஷ்மி மேடம் நடிச்ச கேரக்டர் பண்றார். இந்தக் கதைக்கு அழகைவிட நடிக்கத் தெரிஞ்ச ஹீரோயின் தேவைப்பட்டார். அதுல லக்ஷ்மி மேடம் கலக்கியிருப்பார். ரீ-கிரியேட் பண்ணும்போது எக்ஸ்பீரியன்ஸ் ஆர்ட்டிஸ்ட் தேவைப்படுவாங்க. மொழி தெரியாத ஆர்ட்டிஸ்ட்ஸ் செட்டாக மாட்டார்கள். ஒரிஜினல் படத்தை ப்ரியா பலமுறை பார்த்துள்ளார். அதனால் ரெஸ்பான்ஸிபிலிட்டியோடு நடிச்சார்.

மனோரமா வேடத்துல ஊர்வசி மேடம் பண்றாங்க. ஆச்சி மாதிரியான ஆளுமைக்கு ரீபிளேஸ் பண்ணும்போது நடிக்கிறவங்க இயல்பாகவே கேரக்டருக்கு பொறுப்பு ஏற்று சிறந்த நடிப்பை வழங்கிவிடுவார்கள். ஊர்வசி மேடம் தேர்ந்தெடுத்த நடிகை. அவருடன் வேலை செய்வது எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட். படம் முடியும்போது ‘எப்போது டேட் கேட்டாலும் நான் ரெடியாக இருக்கிறேன்’ என்றார். இந்த வார்த்தையைக் கேட்க அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

தேங்காய் சீனிவாசன் கேரக்டர் பண்ணியிருக்கும் யோகி பாபு அதிக கவனத்தோடு பண்ணியிருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்ட கேரக்டருக்கு சிவாங்கி. இவர்களோடு கருணாகரன், சின்னத்திரை பிரபலம் புகழ், தலைவாசல் விஜய், மனோபாலா ஆகியோரும் இருக்கிறார்கள். காஸ்டிங் சரியாக அமைந்தாலே அந்தக் கதை அடுத்த லெவலுக்கு போய்
விடும். ‘காசேதான் கடவுளடா’ மாதிரியான ஹிட் படத்துக்குரிய  மரியாதையை எவ்விதத்திலும் கெடுக்கக்கூடாது என்பதில் அனைவரும் தெளிவாக இருந்தோம்.
சிங்கிள் ஷெட்யூல்ல முடிச்சிட்டீங்க போல?

35  நாளில் படப்பிடிப்பை முடிச்சிட்டோம். சென்னையில்தான் முழு படப்பிடிப்பும் நடந்தது. இதுல நடிச்ச 18 ஆர்ட்டிஸ்ட்ஸும் பிஸியானவங்க. எல்லாருக்கும் நிறைய கமிட்மென்ட்ஸ் இருக்கு. அவர்களை விட்டுவிட்டால் மீண்டும் அசெம்பிள் பண்ணுவது கஷ்டம். சினிமாவில் ஆரம்பிச்சிட்டா ஒரே கட்டமா முடிச்சிடணும்.

இல்லைன்னா நிம்மதி போய்விடும். எங்ககிட்ட பேப்பர் ஒர்க் கரெக்ட்டா இருந்ததால் எல்லாம் சாத்தியமானது. தயாரிப்பாளராக இருப்பதால் எனக்கே அது பயணுள்ளதாஇருந்தது. பெரும்பாலும் நான் இயக்கிய படங்கள் எல்லாமே 35, 40 நாட்களுக்குள்ள முடிஞ்சதுதான். ‘கண்டேன் காதலை’, ‘ஜெயம் கொண்டான்’ படங்களை குறுகிய நாட்களில் எடுத்தேன்.

அதுக்கு காரணம் எனக்கு பாடம் நடத்திய என்னுடைய ஆசான் மணிரத்னம் சார். அவர் படங்களில் எல்லாமே ப்ரேமுக்குள் இருக்கும். ஒரு முத்து கூட ப்ரேமுக்கு வெளியே இருக்காது. தேவையில்லாத செலவுகளைக் குறைத்து தேவையானதைச் செய்வார். 10 வருடம் அங்கு கற்ற பாடங்கள் எனக்கு உதவியாக இருந்தது.

முழு ஸ்கிப்ரிட் முடித்துவிட்டு அதை எக்ஸிகியூட் பண்ணி அதுக்கு சரியான லொகேஷன், பொருத்தமான நடிகர்கள், அப்புறம்தான் ஷூட். ஒரு போர்க்களத்துக்குச் செல்வது போன்று ஆயத்த வேலைகள் மணி சாரிடம் இருக்கும். ஷூட்டிங் போன பிறகு பேப்பர் ஒர்க் இருக்கவே இருக்காது. எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கும்.
‘ஜம்புலிங்கமே ஜடாதரா...’ பாடல் எவர்கிரீன் ஹிட்டாச்சே?

அந்தப் பாடலை அப்படியே ரீமிக்ஸ் பண்ணியிருக்கிறோம். என்.கண்ணன் மியூசிக். ‘தமிழ்ப் படம் - 2’ பண்ணியவர். ‘காசேதான் கடவுளடா...’ பாடலும் கலக்கலா வந்திருக்கு. வாலி சார் வரிகளில் மியூசிக் வேற லெவல். இந்தப் படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க ஒளிப்பதிவாளர் பிரசன்னகுமார் பெரிய உதவி செய்தார்.

‘அட்டகத்தி’, ‘பீட்சா’ பண்ணிய லியோ ஜான் பால் எடிட்டிங். ஸ்டண்ட் சில்வா பெரிய மாஸ்டர். என்னுடன் ஐந்தாறு படம் பண்ணிட்டார். ஆர்ட் டைரக்‌ஷன் ராஜ்குமார். பெரிய பணக்கார வீடு, ஹை டெக் லாக்கர் ரூம்னு செட் ஒர்க்ல அவருடைய வித்தை பேசப்படும். மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி. இணைந்து தயாரிச்சிருக்காங்க.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கு எது தூண்டுதலாக இருந்தது?கதைக்கரு. படம் பார்த்தபோது பளார்னு அறைந்த மாதிரி இருந்தது. வீட்ல இருக்கும் பெண்களை சாதாரணமாக நினைக்கிறவர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம். எல்லா ஆண்களும் பார்க்கணும்னு ரைட்ஸ் வாங்கி பண்ணியிருக்கிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவிச்சந்திரன் நடிக்கிறார்கள்.

‘தள்ளிப் போகாதே’ ரொம்ப தள்ளிப் போகிறதே?
கொரோனா வந்ததால் தள்ளிப்போனது. இப்போது தியேட்டர் திறந்துட்டாங்க. சீக்கிரமா தியேட்டருக்கு வர்றோம். அருமையான காதல் படம். ‘மெளன ராகம்’ மாதிரி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ‘பூமராங்’படத்துக்குப் பிறகு நானும் அதர்வாவும் சேர்ந்து பண்ணிய படம். அதர்வா நடிப்பு பேசப்படும்.

எனக்கும் ‘கண்டேன் காதலை’ படத்துக்குப் பிறகு இது லவ் படமாக இருக்கும். இப்போது நான் இயக்கியுள்ள மூன்று படங்களும் பெரிய வெற்றிப் படங்களா வரும். படம் பார்த்த நம்பிக்கையில் உதிர்க்கும் வார்த்தை இது. ஹாட்ரிக் நிச்சயம்.
2008 லிருந்து தொடர்ந்து படம் பண்ணுகிறேன். கடின உழைப்பு, தயாரிப்பு நலனை மனதில் வைத்து படம் பண்ணுகிறேன்.

பெரிய லாபம் தரவில்லையென்றாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதில்லை. என்னுடைய படங்களில் டெலீட் சீன் எதுவும் இருக்காது. தொடர்ந்து படம் பண்ணுவது பெரிய விஷயம். என்னுடைய  உழைப்பு நேர்மையாக இருக்கிறது. என் மீதான வெளிச்சம் குறைவாக இருக்கலாம். ஒரு நாள் வெளிச்சம் பிரகாசமாகும். தனிப்பட்ட விதத்துல நான் சாஃப்ட் பெர்சன். அதிரும்படி பேசமாட்டேன். என்னுடைய பிள்ளைகளுடன் இப்போது அதிக நேரம் செலவழிக்கிறேன். முன்பு அப்படி இல்லை.  

எஸ்.ராஜா