இந்தக் கைப்பையின் விலை சுமார் ரூ.1.50 லட்சம்!



ஹாலிவுட் பிரபலங்களின் விருப்பமான ஃபேஷன் ஹவுஸ், ‘பாலன்சியாகா’. 100 வருடங்களுக்கு மேலாக பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இயங்கிவருகிறது. ஒவ்வொரு வருடமும் புதுவிதமான ஃபேஷன் பொருட்களை அறிமுகம் செய்து அசத்துவது ‘பால்ன்சியாகா’வின் தனித்துவம்.
அந்த வகையில் இந்த வருடம் ஒரு கைப்பையை அறிமுகம் செய்துள்ளது. இளம் கால்நடையின் தோலினால், இயந்திரத்தின் உதவியில்லாமல் கைகளாலேயே இந்தக் கைப்பையைத் தயாரித்திருக்கின்றனர். இந்த டிசைனை உருவாக்குவதற்கு முன்பு நூற்றுக்கணக்கான டிசைன்களை சோதனை செய்துள்ளனர்.

படத்தில் நீங்கள் பார்க்கும் டிசைனே சிறப்பானது என்று ‘பாலன்சியாகா’வின் டிசைனர்கள் இறுதி முடிவுக்கு வந்து, கைப்பையை இணையத்திலும் அறிமுகம் செய்துவிட்டனர்.
‘பாலன்சியாகா’வின் ஆன்லைன் தளத்தில் விற்பனைக்காக காத்திருக்கும் ஒரு கைப்பையின் விலை 2090 டாலர். அதாவது சுமார் 1.50 லட்ச ரூபாய். விஷயம் இதுவல்ல. ‘‘இந்த மாதிரியான பை இந்தியர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கிறது. இதில்தான் மளிகைப்பொருட்களை வாங்குவார்கள்...’’ என்று இந்தக் கைப்பையை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

த.சக்திவேல்