ஏ டாக்’ஸ் ஜர்னி



குடும்பத்துடன் கண்டுகளிக்க ஓர் அசத்தலான ஆங்கிலப்படம், ‘ஏ டாக்’ஸ் ஜர்னி’. ‘சோனி லிவ்’வில் பார்க்கலாம். மகன் இறந்துவிட, மருமகள் குளோரியா, பேத்தி சிஜே, மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் ஈத்தன்.
குடும்பத்தில் ஒருவரைப் போல பெய்லி என்ற நாயும் இவர்களுடன் வசிக்கிறது. சிஜே மற்றும் ஈத்தனுடன் வெகு இணக்கமாக இருக்கிறது பெய்லி. குளோரியாவுக்கோ பெய்லியைக் கண்டால் சுத்தமாகப் பிடிப்பதில்லை. அத்துடன் சிஜேவை அழைத்துக்கொண்டு தனிக்குடித்தனம் செல்ல ஆயத்தமாக இருக்கிறாள்.

இந்நிலையில் பெய்லியின் வயிற்றில் ஒரு கட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார் ஈத்தன். இன்னொரு பக்கம் சிஜேவை அழைத்துக்கொண்டு  நகரத்துக்குக் கிளம்பிவிடுகிறாள் குளோரியா.

பேத்தியின் பிரிவும், பெய்லியின் மரணமும் ஈத்தனை நிலைகுலைய வைக்கிறது. மரணத்துக்கு முன் பெய்லியிடம் சிஜேவைப் பத்திரமாக பார்த்துக்கச் சொல்லி வேண்டுகோள் வைக்கிறார் ஈத்தன்.

இறந்த பிறகும் பெய்லி எப்படி சிஜேவைக் கவனித்துக்கொள்கிறது என்பதே மேஜிக்கல் திரைக்கதை. ஒரு செல்லப்பிராணிக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை நேர்த்தியாக செதுக்கியிருக்கிறது இந்தப் படம். மனதை நெகிழ்த்தும் இப்படத்தின் இயக்குநர் கெய்ல் மாங்குஸோ.
         
தொகுப்பு: த.சக்திவேல்