இந்தியாவின் பெருமை



இந்தியா - பாகிஸ்தான் போர் பற்றிய சமீபத்திய இந்திப்படம், ‘புஜ்: த ப்ரைடு ஆஃப் இந்தியா’. ‘ஹாட்ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.எழுபதுகளின் ஆரம்பத்தில் படத்தின் கதை நிகழ்கிறது. ஒரு எதிர்பாராத நேரத்தில் குஜராத்தில் உள்ள புஜ் விமான தளத்தின் மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்துகிறது. இந்தத் தாக்குதலில் விமானப்படையைச் சேர்ந்த பலர் இறக்கின்றனர். விமான தளமே தரைமட்டமாகிறது. குறிப்பாக விமானம் ஓடும் தடம் சிதைவடைகிறது.  

அடுத்து பாகிஸ்தான் இராணுவம் புஜ்ஜைக் கைப்பற்றி, கட்ஜையும் பிடிக்க நினைக்கிறது. புஜ்ஜின் விமானம் ஓடும் தடத்தை சரி செய்தால் மட்டுமே வேறு இடத்தில் இருந்து இராணுவ வீரர்கள் அங்கே வர முடியும். இந்நிலையில் புஜ்ஜின் விமானப்படை அதிகாரி விஜய் கார்னிக் எடுத்த முடிவு எப்படி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது என்பதே திரைக்கதை.நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது இந்தப் படம்.

சஞ்சய் தத், அஜய் தேவ்கன், சோனாக்‌ஷி சின்ஹா என நட்சத்திரப் பட்டாளங்கள் நிறைந்திருந்தாலுமே கூட பாலிவுட் மசாலா வாசனையே வீசுகிறது. பெண்களின் மகத்துவத்தை பேசியதற்காக பாராட்டலாம்.ஆக்‌ஷன் பட விரும்பிகளுக்கு நல்ல விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் அபிஷேக் துதையா.