இது ஓவிய போட்டோகிராஃபி!



பெயிண்டிங் வேறு போட்டோகிராபி வேறு. இரண்டையும் இணைத்தால் அதன் முடிவு எப்படி இருக்கும்?
இதோ... இப்படித்தான் இருக்கும் என சமூக வலைத்தளங்களை தனது ஸ்பெஷல் எஃபெக்ட் போட்டோகிராபிகளால் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார் ஹர்ஷத் ஜீ.
கேலண்டர் போட்டோ ஆல்பம் போல் வேப்பிலைக்காரி, கிருஷ்ணர், பாலாம்பிகா, வெங்கடாசலபதி, பழங்கால மன்னர்கள், ஸ்பார்ட்டன், கால பைரவர் என தத்ரூபமாக ஜொலிக்கிறார்கள்.
‘‘சென்னைதான் எனக்கு சொந்த ஊர். சின்ன வயசுலயே ஓவியம் மேல ஆர்வம். நல்லாவும் வரைவேன். மெல்ல மெல்ல ஓவியம் போலவே போட்டோ எடுக்கற டெக்னிக் மேலயும் ஆர்வம் அதிகமாச்சு.

லயோலா கல்லூரியிலே விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சேன். எனக்கு ஐடி வேலை. கொரோனா டைம்ல ஒர்க் ஃபிரம் ஹோம். அப்பதான் என்னையும் என் வீட்டையும் சுத்தி வர நிறைய நேரம் கிடைச்சது. அப்பதான் இந்த கார்ட் போர்ட் எல்லாம் கண்ல பட்டுச்சு. அதுதான் எனக்கு கிடைச்ச முதல் ஸ்பார்க். அப்பா ரிடையர்டு போஸ்ட்மேன்.
அடிப்படையிலேயே வீட்டிலே எல்லோருக்கும் ஆன்மீக நாட்டம் அதிகம். இந்துத்துவம்னுலாம் கிடையாது. எல்லா முறைகளிலும் இருக்கற அறிவியலையும் நிறைய சேர்த்து படிச்சிருக்கேன். அதை எல்லாம் என் போட்டோக்கள்ல கொண்டு வர நினைச்சேன்...’’ என்னும் ஹர்ஷத் ஜீ, பயன்படுத்தியிருக்கும் அத்தனை நகைகளும் கைகளால் செய்யப்பட்டவை.

‘‘எங்க போட்டோஷூட் குழு கூட என் குடும்பம்தான். சின்ன வயதிலே இருந்தே கடவுள்களை எல்லாம் பெயிண்டிங்ல வரைஞ்சிட்டே இருப்பேன். அந்த மாதிரி மாடல்களைக் கொண்டு அப்படியே ஓவியம் மாதிரியான போட்டோக்கள் உருவாக்க நினைச்சேன். இதிலே அந்த கார்ட் போர்டுகளுக்குதான் பெரிய பங்கு.  போட்டோஷூட் பிளான் போட்டதும் எனக்கு சவாலா இருந்ததே இந்த நகைகள்தான். ஏன்னா கவரிங் நகைக் கடைகள், ஏன் சினிமா ஆர்ட் டிபார்ட்மென்ட்ல கூட பழங்கால நகைகள் கிடைக்கலை. அதனால கார்ட் போர்டை பயன்படுத்தி கைகளாலேயே நகைகள் உருவாக்கினேன்.

அதாவது தஞ்சாவூர் பெயிண்டிங்ல நகைகள் பிரதானமா இருப்பதை பார்க்கலாம். அந்த மெதட்தான் இந்த ஷூட்லயும் பயன்படுத்தியிருக்கோம். இதிலே போட்டோ மட்டும் இல்லை, வீடியோக்கள், ஜிப், கிளிப் இதெல்லாம் கூட இருக்கும். அதனால் அந்த பவர், ஸ்பெஷல் எஃபெக்டுகள் எல்லாம் கூட வீடியோக்கள்ல பார்க்கலாம். ஒவ்வொரு கடவுள் ஷூட் அப்பவும் முறைப்படி பூஜை செய்துதான் ஷூட் தொடங்கினோம். வேப்பிலைக்காரி அம்மன் கெட்டப்பை நடிகையான நம்ம ரேகா மேடத்தை வெச்சு எடுத்தோம். அவங்க கிறிஸ்டியன். ஆனாலும் எங்க பூஜையிலே கலந்துக்கிட்டு, கிரீடத்தை தொட்டு வணங்கி வாங்கிக்கிட்டாங்க.

மாடல்கள் மேலே கடவுள்கள் வேஷம் போட்டு கலங்கப்படுத்துறதா இந்த ஓவிய போட்டோஷூட்டை சிலர் விமர்சிக்கிறாங்க. ஆனா, நம்ம இந்து மதப்படி கல்லைக் கூட நாம தெய்வமா பார்த்தா அது தெய்வம்தானே! அப்படித்தான் இந்த போட்டோக்களும் கடவுள்னு நினைச்சா கடவுள், கலைன்னு நினைச்சா கலை. அவங்க அவங்க விருப்பம்.

ஆடி மாத ஸ்பெஷலா நாங்க வேப்பிலைக்காரி அம்மன் ஷூட் எடுத்தோம். வேப்பிலைக்கும், ஆடி மாசத்துக்கும் அவ்வளவு தொடர்பு இருக்கு. மருத்துவமா அறிவியலா, இப்படி நிறைய சொல்லலாம். என்னுடைய அடுத்த ஷூட்கள்ல நம்ம வழிபாட்டு முறைகள்ல இருக்கற அறிவியலையும் சேர்த்து வெளியிடலாம்னு இருக்கேன்...’’ உற்சாகமாகச் சொல்கிறார்
ஹர்ஷத் ஜீ.

ஷாலினி நியூட்டன்