அதிமுக அரசின் அலட்சியமும் டெண்டர் முறைகேடுகளும் மக்களைத்தான் காவு வாங்குகின்றன...



தமிழகத்தின் நீளமான பாலம் ஒன்று மதுரையில் கட்டப்பட்டு வருகிறது. அதாவது ஏழரை கிமீ தூரம். இந்தப் பாலம்தான் கடந்த வாரம் தமிழ்நாட்டையே அதிர வைத்தது. காரணம், மதுரை நாராயணபுரம் அருகே இப்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து நொறுங்கியதில் உத்தரப்பிரதேச தொழிலாளி உயிரிழந்து, மேலும் ஒரு தொழிலாளி காயமடைந்திருக்கிறார்.
பெரும் உயர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும் இந்தச் சம்பவம் கடந்த அதிமுக ஆட்சியின் ஊழலை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

மதுரை துவங்கி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வரையிலும் உள்ள 35 கிமீ சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்றது. மொத்தம் ரூ.1,028 கோடியில் ஏழரை கிலோமீட்டருக்கு பறக்கும் பாலமும், தொடர்ந்து நத்தம் வரையில் நான்கு வழிச்சாலை விரிவாக்கமும் என திட்டமிடப்பட்டு 2018 செப்டம்பர் மாதம் பணிகள் தொடங்கிய நிலையில், இரண்டே ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு, இப்போது முழுமையாக மூன்றாண்டுகள் ஆகியும், பாலம் முழுமை பெறாமல் இருக்கிறது.

மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரையுள்ள ஏழரை கிமீ தூரத்திற்கு பறக்கும் பாலம் அமைக்க அதன் கட்டுமானத்திற்கு மட்டுமே ரூ. 612 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பாலத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக ரூ. 416 கோடியில் ஊமச்சிகுளம் முதல் நத்தம் வரை 28 கிமீ  தூரத்துக்கு நான்குவழிச்சாலை விரிவாக்கம் என ஒதுக்கப்பட்டது.ஊமச்சிகுளத்தில் பறக்கும் பாலம் முடிந்ததும், புதிய நான்கு வழிச்சாலை வழியாக கொட்டாம்பட்டி அருகே திருச்சி நான்கு வழிச்சாலையில் போய்ச் சேரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனவே இந்த பறக்கும் சாலை வழியாக செல்லும்போது திருச்சிக்கு 23 கிமீ பயண தூரமும், நேரமும் குறையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பாலம், சாலை விரிவாக்க பணிகள் தொடங்கிய பிறகே, பிரதமர் மோடி நாகர்கோவில் விழாவில் இப்பணிகளுக்கும் சேர்த்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். மதுரையிலிருந்து ஊமச்சிகுளம் வரையிலும் ஏழரை கிமீ தூரத்திற்கான இந்த பறக்கும் பாலத்திற்காக மொத்தம் 225 ஒற்றைத் தூண்கள் அமைக்கப்பட்டன. இதற்கென சிமெண்ட் சாலைக்கு பெருமை படைத்த நத்தம் சாலை உடைத்து பள்ளங்கள் தோண்டப்பட்டன.

 குஜராத்தைச் சேர்ந்த, மும்பையில் தலைமையகம் கொண்ட ஜேஎம்சி கம்பெனி, இந்தக் கட்டுமானப் பணிகளை ஏற்றிருக்கிறது. இந்தப் பாலப் பணியில் உள்ளூரைச் சேர்ந்த ஒற்றைத் தமிழரும் இல்லை. முழுக்க வடமாநில தொழிலாளர்கள்தான்.தூண்களின் மீது பொருத்து வதற்காக கான்கிரீட் கலவைகளைக் கொண்டு ஓரச் சிறகுகள், பாலத்தின் அடிப்பகுதிகள் ரெடிமேடாக மதுரை ஊமச்சிகுளம் அருகில் வடிவமைக்கப்பட்டு, பணி செய்யும் இடத்திற்கு பெரிய லாரிகளில் ஏற்றிக்கொண்டு வரப்பட்டன.

இந்த ஓரச் சிறகை, பாலத்தின் அடிப்பகுதிகளை, பாலத்தின் தூண்கள் மீது ‘ஹைட்ராலிக் இயந்திர’ உதவியில் ராட்சத கிரேன் மூலம் தொழிலாளர்கள் பொருத்தி இணைக்கின்றனர்.
இப்படி தல்லாகுளம் துவங்கி ரேஸ்கோர்ஸ் காலனி முடியும் வரையும், நாராயணபுரம் துவங்கி ஊமச்சிகுளம் வரையும் தூண்களில் இணைக்கும் பணிகள் இரு கட்டமாக நடந்து வந்தன.
இந்த பறக்கும் பாலத்தின் துவக்கமாக 3 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை சொக்கிகுளம் பிடிஆர் சிலையில் இருந்து கோகலே சாலையில் ஒன்று; அழகர்கோவில் சாலையில் மாநகராட்சி ஈகோ பார்க் அருகில் இருந்து மற்றொன்று; மாவட்ட நீதிமன்றம் நோக்கிய சாலையில் மாநகராட்சி வாயில் அருகில் இருந்து இன்னொன்று.

பாலத்திற்காக மாநகராட்சி காம்பவுண்டு சுவர் இடிக்கப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டது. ரோட்டோர மரங்கள் அனைத்தும் காவு  வாங்கப்பட்டன.  நாராயணபுரத்தில் ஒரு தொன்மையான கோயிலையே இடிக்கும் நிலை ஏற்பட்டபோது, பகுதி மக்கள் எதிர்த்துப் போராடினர். இதனையடுத்து நவீன தொழில் நுட்பத்தில், கீழே சக்கரங்கள் பொருத்தி அப்படியே ரோட்டை விட்டு கோயில் கட்டடத்தையே நகர்த்தி வைத்த ‘கட்டுமான அதிசயமும்’ அரங்கேறியது.

ஒரு சாதனை பாலத்திற்காக எண்ணற்ற துயரங்களை பொதுமக்கள் அனுபவித்தபோதும், ஒரு போக்குவரத்து வசதியைப் பார்த்து விடலாம் என்ற ஆர்வத்தில் இருந்தனர்.
இந்த நேரத்தில்தான் கடந்த ஆகஸ்ட் 28 மாலை 4.30 மணிக்கு இந்த ஏழரை கிமீ தூர பாலத்தில் நாராயணபுரம் - ஐயர் பங்களா இடையே அமைக்கப்பட்டிருந்த இறங்கு பாலத்தில் அந்த பயங்கர சத்தத்தை அனைவரும் கேட்டனர்.

ஹைட்ராலிக் இயந்திரம் பொருத்திய ராட்சத கிரேன் மூலம் தூண்கள் மீது பாலத்தை பொருத்தும் பணியை மேலிருந்தபடி சரோஜிங் குமார் என்பவரும் கீழிருந்து ஆகாஷ் சிங் என்பவரும் ஒழுங்குபடுத்தி வந்தனர். இவர்கள் இருவருமே வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சரோஜிங் குமாருக்கு வயது 23, ஆகாஷ் சிங்குக்கு வயது 26. இந்நிலையில் யாருமே எதிர்பாராத நிலையில், பயங்கர சத்தத்துடன் இரு தூண்களுக்கு நடுவில் - 100 அடி தூரத்திற்கு இந்த பாலம் சரிந்து விழுந்தது. கீழே நிறுத்தி வைத்திருந்த ஏராளமான இரும்புத் தூண்கள் உடைந்து நொறுங்கி விழுந்தன. ஒரு போர்க்களப்பகுதியாகவே இவ்விடம் மாறிப்போனது.

ஆகாஷ் சிங் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி இறந்து போக, சரோஜிங் குமார் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர். அதிர்ஷ்டவசமாக, லேசான காயங்களுடன் இவர்கள் உயிர் தப்பினர்.  இந்த விபத்திற்குப் பிறகு நடந்த விசாரணையில் ‘உரிய பயிற்சிக்குரிய தொழிலாளர்கள் பயன்படுத்தப்படவில்லை’ என்பதும்; ஹைட்ராலிக் இயந்திரம் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் அனைத்துமே ‘அறுதப்பழசு’ என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவந்திருக்கிறது.  

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கும் முன்னதாகவே பாலத்தைத் திறக்க கடந்த அதிமுக அரசு திட்டமிட்டது. அதற்காக ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரின் அலட்சியப்போக்குக்கும், ஒப்பந்ததாரரின் குறைபாடுகளுக்கும் துணை நின்றது. இதன் விளைவுதான் இப்போதைய உயிர்ப்பலி. மேம்பாலக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் திட்ட இயக்குனர் பிரதீப் ஜெயின், பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் இயந்திர ஒப்பந்ததாரர் பாஸ்கரன் மற்றும் பணியாளர்கள், ஒப்பந்ததாரர், பணி மேற்பார்வையாளர் உள்ளிட்ட மேலும் சிலர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். அரசின் அலட்சியமும் டெண்டர் முறைகேடுகளும் மக்களைத்தான் காவு வாங்குகின்றன என்பதற்கு இச்சம்பவம் சமீபத்திய உதாரணம்.

இருவர்தான் வேலையில் இருந்தோம்!

‘‘மொத்தம் 3 பேர் வேலை பார்ப்போம். அன்று ஒருவர் லீவு என்பதால் 2 பேர்தான் வேலையில் இருந்தோம். மற்ற பகுதிகளில் 20 பேர் வரை வேலையில் இருந்தனர். இங்க ஹைட்ராலிக் மெஷின் வெடித்ததால், பிடிமானமின்றி சிமெண்ட் பாலத் தூண்பகுதி கீழே விழுந்தது. நான் மேலே நின்றிருந்ததால் கீழே விழுந்தேன்...’’ என்கிறார் உயிர் தப்பியுள்ள சரோஜிங் குமார்.

இரு கேள்விகள்

‘‘இரு விஷயங்களை கவனப்படுத்த வேண்டும். ஒன்று, இந்த வேலை நடந்து கொண்டு இருந்தபொழுது இரண்டு பேர் மட்டுமே பணியில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இவ்வளவு பெரிய பணியில் இரண்டு பேர் மட்டுமே இருந்ததாகக் கூறுவது சந்தேகத்தை எழுப்புகிறது. மிகக்குறைந்த தொழிலாளர்களை ஈடுபத்தியதுதான் விபத்துக்கு காரணமா?
இரண்டாவது, தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா?இதற்கான பதிலை அறிய முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும்...’’ என்கிறார் மதுரை எம் பி சு.வெங்கடேசன்

தற்காலிகமாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன

பாலத்தின் இடிபாடுகளை தமிழ்நாட்டு அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, எ.வ.வேலு ஆகியோர் பார்வையிட்டனர்.  ‘‘பாலத்தின் மொத்த தூரத்தில் 5.9 கிலோ மீட்டர் அளவுக்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. 120 டன் எடை கொண்ட பாலச் சுவரை 200 டன் திறன் கொண்ட ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் தூக்கி கட்டமைக்க வேண்டும். ஆனால், 120 டன் திறன் கொண்ட ஹைட்ராலிக் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த நிறுவனம் பாதுகாப்பற்ற முறையில், பொறியாளரை நியமிக்காமல் தொழிலாளரை மட்டுமே கொண்டு பணியை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறையை முறையாக கவனிக்காமல் விதிகள் மீறப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் மூலம் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு பொறியாளர் இல்லாமல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த திருச்சி என்ஐடி பேராசிரியர் பாஸ்கரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு விசாரணை நடத்தி வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை பாலப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்...’’ என்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

செய்தி: செ.அபுதாகிர்

படங்கள்: வெற்றி, நிவேதன், ஜெயப்பிரகாஷ்