சன் டிவி ரிலீஸ்... குடும்பம் குடும்பமா எல்லோரும் பார்க்கப் போறாங்க ...துக்ளக் தர்பார் Exclusive



முதல் படம், அதிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக உலகமெங்கும் சன் டிவி பிரீமியர் என எங்கும் ‘துக்ளக் தர்பார்’ மயம். கொஞ்சம் படபடப்பு, கண்களின் எதிர்பார்ப்புகள் என பரீட்சை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்குக் காத்திருக்கும் மாணவர் போல் நமக்கு ஹாய் சொன்னார் இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள்.முதல் படம் ரிலீஸ், அதிலும் பெரிய ஹீரோ, பெரிய படம், நம்பர் ஒன் சேனலில் பிரீமியர்..? எப்படி இருக்கு இந்தத் தருணம்?

20 வருடங்கள் காத்திருப்புக்கு கிடைச்ச பலன். கனவு மாதிரி இருக்கு. ஆந்திரா சித்தூர்தான் எனக்கு சொந்த ஊர். படிப்புக்காக சென்னை வந்தேன். ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல சினிமா எடிட்டிங் படிச்சேன். அப்பறம் ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்துல அஸிஸ்டென்ட் டைரக்டரா வேலை செய்கிற வாய்ப்பு கிடைச்சது. முதல் படம் பெரிய ஹீரோ, பெரிய டீம்... நிறைய கத்துக்கற களமா அமைஞ்சது. அப்படியே சில படங்கள். அதன் பிறகுதான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பாலாஜி தரணிதரன் சார் கிட்ட சேர்ந்தேன்.

அவர்தான் படம் செய்யறது ஒரு தவம்னு சொல்லிக் கொடுத்தவர். நான் ஒரு பக்கமும் நிக்காம அலைஞ்சிட்டே இருப்பேன். அப்படிப்பட்டவனை ஒரு 15 நாட்கள் எதுவும் செய்யாம உட்கார வெச்சார். அந்த நேரம்தான் புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். எல்லாரும் வேலை செய்வாங்க. நான் சும்மா வேடிக்கை மட்டும் பார்க்கணும்.

பத்தாவது நாள் எனக்கு கதை எழுதணும்ங்கற ஆர்வம் வந்திடுச்சு. எழுத ஆரம்பிச்சேன். அப்பறம் நிறைய தேடல்கள், கதை சொல்லல்னு வாழ்க்கை போனதிலே, கொஞ்சம் வெறுப்பு, கோபம் தலை தூக்குச்சு. ஒரு கோபத்திலேதான் எழுதின கதையை ஓரமா வெச்சிட்டு புதுசா ஒரு ஒன்லைன் செய்தேன். அதை என் நண்பர் சதிஷ் கிட்ட சொன்னேன். அதுதான் ‘துக்ளக் தர்பார்’.
‘இந்த லைன் ஒர்க் அவுட் ஆகும்... எழுது’ன்னு என் நண்பர் சதிஷே ஆபீஸ் முதற்கொண்டு கொடுத்து வேலைய ஆரம்பிக்கச் சொன்னார்.விஜய் சேதுபதி நாயகனானது எப்படி? படத்தில் எத்தனை சேதுபதி?

 எத்தனை விஜய் சேதுபதினு படத்துல பாருங்க. கதை எழுத ஆரம்பிச்சேன். அப்படியே ஒண்ணு ரெண்டு பேருக்கு கதையும் சொன்னேன். ஆனா, சேது அண்ணாகிட்ட சொல்லவே இல்ல. அவர் என் கதை எல்லாம் கேட்பாரா என்கிற தயக்கம். ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார் என்னுடைய நல்ல நண்பர். அவர்தான் என்னை சேது அண்ணாகிட்ட கூட்டிட்டு போனார். ‘என்கிட்ட கதை சொல்ல என்ன தயக்கம்’னு சேது அண்ணா செல்லமா கோபப்பட்டார். கதை சொன்னேன். அவருக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது.

2020 கொரோனாவுக்கு முன்னாடி வேலை ஆரம்பிச்சோம். கொரோனா லாக்டவுனுக்கு இடையிலே திரும்ப ஷூட்டிங் தடைபட்டுச்சு. மறுபடியும் தளர்வுன்னு அறிவிச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா ஷூட் போனோம். தயாரிப்பாளர் லலித்குமார் சாருக்கு நன்றி சொல்லணும்.

ஒரு புது இயக்குநர் மாதிரி என்னை நடத்தாம அவ்ளோ இடம் கொடுத்தார். இத்தனைக்கும் அவர் இந்தப் படம் கூடவே ‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’னு பெரிய இயக்குநர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் செய்திட்டு இருந்தார். அவருக்கு எல்லாரும் படைப்பாளிகள்தான். என்னை நம்பினதுக்கு அவருக்கு நன்றி.

விஜய் சேதுபதி-  பார்த்திபன்... இந்த காம்போ ஏற்கனவே பெரிய ஹிட் கொடுத்த காம்போ... ‘துக்ளக் தர்பார்’ படத்தில் இந்தக் காம்போ மேஜிக் எப்படி வந்திருக்கு?பார்த்திபன் சார் இந்தப் படத்துக்குள்ள வந்ததே ஒரு மேஜிக்தான். ‘எனக்கு எங்கேயும் பார்த்திபன் சார் தெரியக் கூடாது’ன்னு அவர்கிட்டசொன்னேன். சிரிச்சுகிட்டே ஸ்கிரிப்ட்டை படிச்சவர், உடனே ஓகே சொன்னார். நான் என்ன எதிர்பார்த்தனோ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கார். இந்தக் கேரக்டருக்கு முதல்ல தேர்வானவர் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்.

சேது அண்ணா... ஓ மை காட்! நம்ம ஒண்ணு யோசிச்சுகதை எழுதுவோம்... அதை நாம நினைச்சதைவிட மாஸ் லெவல்ல கொண்டு போக அவரால்தான் முடியும். என்னதான் குழுவுக்கு கேப்டன்னாலும் புது இயக்குநர் என்கிற தடுமாற்றம் சில இடங்கள்ல உண்டாகும். அப்ப நம்மள ‘டெல்லி... நல்லா இருக்கு டெல்லி...’ அப்படின்னு கட்டிப்பிடிச்சு ஒரு உற்சாகம் கொடுப்பார் பாருங்க... சான்சே இல்ல. அவரால்தான் இந்தப் படம் இன்னைக்கு மாஸ் ஆகியிருக்கு!

கலர்ஃபுல்லா ராஷி கண்ணா, மஞ்சிமானு ரெண்டு நாயகிகள்...
மூணாவதா என் நட்பின் காரணமா காயத்ரி ஒரு சின்ன கெஸ்ட் ரோல் கூட செய்திருக்காங்க. நாயகிகள் ரெண்டு பேரும் அவங்க அவங்க போர்ஷன்கள் கேட்டாங்க... நடிச்சாங்க. அவ்ளோதான். செம புரொஃபஷனல். எனக்கு ஏன் இவ்ளோ கம்மி சீன், அவங்களுக்கு ஏன் இவ்ளோ சீன்ஸ்னு ரெண்டு பேருமே கேட்கலை.
‘துக்ளக் தர்பார்’ பெயரே வித்தியாசமா இருக்கே...

பழைய துக்ளக் மன்னன் கேரக்டர் எனக்குப் பிடிக்கும். அதை மனசிலே வெச்சிட்டு இந்தப் பெயர் வெச்சேன். இதுல அரசியல் இருக்கு, அரசியல்வாதி இருக்காங்க. ஆனா, எதுவும் சர்ச்சையா இருக்காது. பொழுதுபோக்கான, குடும்பங்கள் பார்க்கக் கூடிய படம். நையாண்டி என்கிற கான்செப்ட்டை மட்டுமே மனசிலே வெச்சி எடுத்திருக்கேன். ‘காப்பிக் கொட்டை கண்ணுக் காரி...’ பாடல் எங்கே எப்படி உருவாச்சு?

நான் அ, ஆ வரிசை எழுத்து வருகிற மாதிரி ஒரே எழுத்து அடிப்படையிலே பாடல் கேட்டேன். படத்திலே ராஷி கண்ணா பெயர் காமாட்சி. மதன் கார்க்கிதான் ‘க, கா வரிசைல போனா இன்னமும் ஸ்பெஷலா இருக்கும்’னு சொன்னார். அப்படிதான் ‘கா, கா, கி, கீ , காப்பிக் கொட்டை கண்ணுக் காரி...’ அமைஞ்சது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, என் நீண்ட நாள் நண்பர். படத்திலே வேலை செய்த அத்தனை பேரும் அவங்க அவங்க பகுதியை சிறப்பா செய்திருக்காங்க. ஒரு புது டீம்ல வேலை செய்த மாதிரியே இல்ல.20 வருட தேடல்ல சினிமா என்ன சொல்லிக் கொடுத்திருக்கு?

நிறைய கத்துக்கொடுத்திருக்கு, கத்துக் கொடுத்திட்டும் இருக்கு. சினிமா கடல். இந்த இருபது வருட தேடல்ல எனக்கு மிகப்பெரிய பரிசா அமைஞ்சது என் மனைவி ஜான்சிதான். பள்ளிக் கால தோழி, என் ஸ்கூல் பிரின்சிபல் பொண்ணு. என்னை எப்படி பிடிச்சு காதலிச்சாங்கனு தெரியலை. அவங்களே என்னைக் கண்டுபிடிச்சு இதை சொல்லவும் செய்தாங்க.

கையிலே வேலை கூட இல்லாதவனை கல்யாணம் செய்துகிட்டு ஒரு நாளும் யோசிக்காம எனக்கான செலவுக்கும் சேர்த்து வேலைக்குப் போன மனுஷி. ஐடி வேலையிலே இருக்காங்க. எதுவும் கேட்காம தினமும் 300 ரூபாய் டேபிள்ல வெச்சுட்டு போவாங்க. இந்தப் படம் ரிலீஸ்னு சொன்னாகூட அலட்டிக்காம ஒரு ஸ்மைல்ல கடந்து போனாங்க.

ஆனால், பிரேம் கிட்ட என்னைப் பத்தி நிறைய கேட்பாங்க. அவங்களுடைய கேள்விகள் எந்த வேளையிலும் என்னை இடைஞ்சல் செய்திடக் கூடாதுங்கறதுல அவ்ளோ தெளிவா இருந்தாங்க.

நான் குழந்தைகள், குடும்பம் எதையும் சரிவரப் பார்க்கலை. என் சினிமா, என் தேடல்னுதான் இருப்பேன். ஆனா, எக்காலத்திலும் என்னை கேள்வி கேட்டதே இல்லை. குறிப்பா என் மாமனார். ஒரு வேலையும் இல்லாத பையன நம்பி பொண்ணக் கொடுக்கறதெல்லாம் எக்காலத்திலும் சாத்தியம் இல்லை. இந்தப் படம் அவங்களுக்குதான் மிகப்பெரிய அன்பளிப்பா நான் கொடுக்க நினைக்கிறேன். எங்களுக்கு ரெண்டு  மகள்கள்-தியா, கிரிஷா. என் மனைவிக்கு மிகப்பெரிய நன்றி சொல்லணும்.

சன் டிவி ரிலீஸ் என எப்போது முடிவானது?லலித்குமார் சார்தான் சொன்னார், ஆரம்பத்திலே முதல் படம் தியேட்டர் ரிலீஸ் இல்லையேன்னு தோணுச்சு. ஆனா, இப்ப சன் டிவி மூலமா கடைக்கோடி ரசிகன் வரை பார்க்கப் போறாங்க. மேலும் அதே நாள்ல நெட்பிளிக்ஸ்லயும் ரிலீஸ். சன் டிவி ரிலீஸ்னால குடும்பம் குடும்பமா எல்லோரும் பார்க்கப் போறாங்க. இது இன்னமும் சந்தோஷமா இருக்கு.  அடுத்த படம் என்ன கதை ?

ஆக்‌ஷன்தான். இந்தப் படத்தைப் பார்த்து முடிச்ச கையோடு அடுத்த படத்துக்கு சைன் பண்ண வெச்சார் லலித் சார். மாயாஜாலம் மாதிரி இருக்கு. நடிகர்கள், மற்ற டெக்னீஷியன்கள் எல்லாமே விரைவில் அறிவிப்பு வரும். அப்பறம் என்னுடைய முதல் காதல் கதை இன்னமும் வெயிட்டிங்தான். நிச்சயம் சரியான தருணம் வரும்போது அந்தக் கதை படமா வெளியாகும். அந்தக் கதை தனக்கு ரொம்பப் பிடிச்ச கதைன்னு சேது அண்ணா கூட ‘96’ பட விழாவிலே சொல்லியிருந்தார். நிச்சயம் ஒரு தனித்துவமான காதல் கதையா அது இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!

ஷாலினி நியூட்டன்