Bio Data-கிச்சன் கேஸ் சிலிண்டர்
 பெயர் : கிச்சன் கேஸ் சிலிண்டர்.
சிலிண்டரில் நிரப்பப்படும் கேஸின் பெயர்: லிக்விஃபைடு பெட்ரோலியம் கேஸ் ((liquefied petroleum gas). சுருக்கமாக எல்பிஜி. புரொபேனும், பியூடேனும் கலந்த கலவைதான் இந்த எல்பிஜி.
இயற்கையாக இதற்கு மணமும், வண்ணமும் கிடையாது. ஒருவேளை சிலிண்டரிலிருந்து எல்பிஜி கசிந்தால் அதை அடையாளம் காண்பதற்காக எத்தில் மெர்காப்டன் எனும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இதுவே எல்பிஜிக்கு ஒரு வாசனையைத் தருகிறது.
 வரலாறு : அமெரிக்காவைச் சேர்ந்த வேதியியல் விஞ்ஞானி வால்டர் ஸ்னிலிங் என்பவரால் 1912ம் வருடம் எல்பிஜி கண்டுபிடிக்கப்பட்டது. எல்பிஜியின் முக்கிய மூலப்பொருளான புரொபேனைக் கண்டுபிடித்ததால் ‘புரொபேனின் தந்தை’ என்று இவர் அழைக்கப்படுகிறார். பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப்பின் பெட்ரோலியத்தின் மூலப்பொருட்களில் எல்பிஜி வாயு இருப்பதை அவர் கண்டறிந்தார். அத்துடன் அந்த வாயு திரவு நிலைக்கு மாறுவதையும், அதை ஒரு அழுத்தத்தின் கீழ் சேமித்து வைத்து பயன்படுத்த முடியும் என்பதையும் கண்டுபிடித்தார்.
 1912ம் வருடமே எல்பிஜியை சமையலுக்குப் பயன்படுத்துவதற்காக கேஸ் ஸ்டவ் கண்டுபிடிக்கப்பட்டது. எல்பிஜி கேஸ் சிலிண்டரை சமையலுக்குப் பயன்படுத்த மக்கள் முன்வரவில்லை. அதனால் கார்கள் இயங்க அந்த சிலிண்டர்கள் பயன்பட்டன. ஒருசிலர் மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்தினர். 1932ம் வருடம் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தபோதுதான் எல்பிஜியைப் பயன்படுத்தி சமைப்பதும், தண்ணீரை சூடுபண்ணுவதும் பரவலானது.
 முதல் எல்பிஜி தயாரிப்பாளர்: அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான ஃப்ராங்க் பிலிப்ஸ்தான் உலகின் முதல் எல்பிஜி தயாரிப்பாளர். கொனோகோ பிலிப்ஸ் என்ற ஆயில் நிறுவனத்தின் நிறுவனர் இவர். 1913ம் வருடம் எல்பிஜிக்கான தயாரிப்பு உரிமத்தை வால்டர் ஸ்னிலிங்கிடமிருந்து 50 ஆயிரம் டாலர்களுக்கு வாங்கினார் ஃப்ராங்க்.
வாடிக்கையாளர்கள் : கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தின் கணக்குப்படி இந்தியாவில் 29.11 கோடிப்பேர் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர். உலகளவில் சுமார் 200 கோடிப்பேர். சுமார் 150க்கும் அதிகமான நாடுகளில் பெரும்பாலான மக்கள் சமையல் செய்ய கேஸ் சிலிண்டரையே பயன்படுத்துகின்றனர்.
விலை : ஏப்ரல் மாதத்திலிருந்து சென்னையில் வீட்டுப் பயன்பாட்டுக்கு வாங்கப்படும் 14.2 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டரின் விலை ரூ.965.50க்கு அதிகரித்துவிட்டது. வணிகக் காரணங்களுக்காக சென்னையில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டரின் விலை ரூ.2406.00 ஆக எகிறிவிட்டது.
நுகர்வு மற்றும் உற்பத்தி : எல்பிஜியை நுகர்வதில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா நான்காமிடத்திலும் உள்ளது. உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா எட்டாமிடத்திலும் உள்ளது.
வளர்ச்சி : இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சமையலுக்காக கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3 முதல் 4 சதவீதம் வரை வளர்ந்துகொண்டே செல்கிறது.
இந்தியா : இந்திய சமையலறைகளுக்கு நவீன சமையல் முறையை, அதாவது சமையல் எரிவாயு சிலிண்டரைக் கொண்டு வரும் நோக்கில் 1964ல் ‘இண்டேன்’ என்ற பிராண்ட் உருவாக்கப்பட்டது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் ‘இண்டேன்’. உலகளவில் எல்பிஜியை உற்பத்தி செய்வதில் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனம் இது.
அக்டோபர் 22, 1965ம் தேதியன்று கொல்கத்தாவில் முதல் முறையாக ஒரு வாடிக்கையாளருக்கு கேஸ் கனெக்ஷனைக் கொடுத்தது ‘இண்டேன்’. அப்போது கேஸ் சிலிண்டர் என்பது மக்களுக்கு ரொம்பவே புதிதானது. வெடித்து விடுமோ என்ற பயத்தில் கேஸ் சிலிண்டரை வாங்க யாருமே முன்வரவில்லை.
ஆரம்ப நாட்களில் ரொம்பவே கடினப்பட்டு 2000 வாடிக்கையாளர்களைத் திரட்டியது ‘இண்டேன்’. இன்று இந்தியாவில் 16 கோடி சமையலையறைகளை ‘இண்டேன்’ கேஸ் சிலிண்டர்தான் அலங்கரிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நொடியும் புதிதாக கேஸ் கனெக்ஷனைக் கொடுக்கும் நிறுவனமும் ‘இண்டேன்’தான். தினமும் 20 லட்சம் சிலிண்டர்களை டெலிவரி செய்கிறது. வகைகள் : தொலை தூர கிராமங்கள், மலைப்பகுதிகளில் பயன்படுத்த 5 கிலோ சிலிண்டரும், பொதுவான மக்கள் பயன்பாட்டுக்கு 14.2 கிலோ சிலிண்டரும், வணிகப்பயன்பாட்டுக்கு 19 கிலோ சிலிண்டரும், சமையலைத் தவிர்த்து தொழில்துறைப் பயன்பாட்டுக்கு 47.5 கிலோ சிலிண்டரும் கிடைக்கின்றன.
சிறப்பு : உலகளவில் 95 சதவீத சமையல் கலைஞர்கள் சமையல் எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்தி சமைக்கவே விரும்புகின்றனர். மற்ற எதையும்விட தேவையான அளவு வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும், அதிகரிக்கவும் சமையல் எரிவாயு சிலிண்டரில் எளிதாக இருக்கிறது என்கின்றனர். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வது சுலபம். பெட்ரோல், டீசல், மின்சாரத்தைவிட குறைவாகவே பசுமைக்குடில் வாயுவை வெளியேற்றுகிறது எல்பிஜி. கேஸ் சிலிண்டரின் பயன்பாடு அதிகரித்ததும் விறகுக்காக மரம் வெட்டுவது கணிசமாகக் குறைந்துள்ளது. 45 கிலோ எல்பிஜி 500 கிலோ விறகுக்குச் சமமானது.
த.சக்திவேல்
|